May 06 2012

இன்று மட்டும் இரண்டு காட்சிகள்

Published by under Uncategorized


பத்து வருஷங்களுக்கு முன் தொழில் நிமித்தம் சீனாவுக்குப் போனபோது ஒரு மாலைப்பொழுதில், சக வேலையாட்களோடு சென்ற நிகழ்வு சீனர்களின் கலை, பண்பாட்டு அம்சங்களைத் தழுவி அமைக்கப்பட்ட நடனங்களைத் தாங்கியிருந்தது. அந்த இரண்டு மணி நேர நிகழ்வில் சீனர்கள் தங்களின் வரலாற்றை, வாழ்வியலை தம் பாரம்பரிய இசைக்கருவிகளின் துணையோடு நடனங்களாகக் கொடுத்த போது சொக்கிப் போனேன் நான். அதற்குப் பின்னான தாய்லாந்து, மலேசிய, கம்போடியப் பயணங்களில் தவறாது அந்த நாட்டின் கலாச்சார நடன நிகழ்வுகளைக் காண வேண்டும் என்ற முனைப்பை அமுல்ப்படுத்திக் கொண்டேன். அவற்றைப் பார்த்ததோடு அந்த நடனங்களின் பரிமாணங்களைப் பற்றியும் முன்னர் எழுதியிருக்கின்றேன். நான் சென்று வந்த ஆசிய நாடுகளிலே தத்தமது நாடுகளில் நிரந்தரமாக ஒரு கலாச்சார அமைப்பை நிறுவி நாள் தோறும் இரண்டு காட்சிகளாகத் தம் கலாச்சார நடனங்களை நிதமும் கொடுத்து வருகின்றார்கள். இதன் மூலம் அந்த நாடுகளுக்குச் சுற்றுலான் நோக்கில் சென்று வரும் பயணிகளுக்குக் குறித்த நாடுகளின் பண்பாட்டு விழுமியத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அரச சார்பான அமைப்புக்கள் மட்டுமன்றி, கம்போடியா போன்ற நாடுகளிலே தனியாரும் இந்த முயற்சியில் இறங்கியிருக்கின்றார்கள். அதாவது பெரும் உணவகங்களில் நீண்ட கொட்டில்கள் அமைக்கப்பட்டு முன்னே பாரிய மேடை அமைக்கப்பட்டு அங்கே நடன நிகழ்வு நடந்து கொண்டிருக்க, அந்த நாட்டு இரவு உணவை ரசித்தவாறே பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்.

இந்த நிலையில் சிட்னியில் சீன நடன அமைப்பு ஒன்று பெரும் எடுப்பிலான நிகழ்வை நடத்தப் போகின்றது என்றபோது கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த எண்ணினேன். Shen Yun என்ற நடன நிகழ்வு சிட்னியில் Capital Theatre இல் ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் மே 6 ஆம் திகதி வரை தினமும் இரண்டு காட்சிகளாக அமைக்கப்பட்டிருந்தது. மே 5 ஆம் திகதிக்கு நுளைவுச் சீட்டை வாங்கி வைத்துக் கொண்டேன். ஒரு மணி நேரம் முன்னதாகவே நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் போய்க் காத்திருக்கிறேன். சாரை சாரையாக மக்கள் வருகின்றார்கள், சிட்னியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த அரங்கத்துப் படையெடுத்தோரில் பெரும்பாலானோர் முதிய பிராயத்தில் இருக்கும் வெள்ளையர்கள், கால்வாசி சீனர்கள். மதியம் இரண்டுமணிக்குச் சொல்லிவைத்தாற் போல ஆரம்பித்தது நிகழ்வு, இடையில் இருபது நிமிட இடைவேளை (இருபது நிமிடம் என்றால் இருபது நிமிடம் தான்) நான்கு முப்பது மணி வரை அரங்கத்தில் இருந்தோரை இருக்கைகளில் கட்டிப்போட்டது இந்த நிகழ்வு.

Shen Yun என்றால் தெய்வத்தன்மை பொருந்திய அழகியலை நடனத்தின் மூலம் வெளிப்படுத்துதல் என்று பொருள்படும். 5000 ஆண்டுகள் பழமை பொருந்திய சீனர்களின் கலாச்சாரத்தை சீனக்கம்யூனிசம் தின்று விழுங்கிய நிலையில் இவற்றை மீள நிறுவ நடனங்களின் மூலம் வெளிப்படுத்திப் புத்துயிர் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டு இந்த Shen Yun Performing Arts என்ற அமைப்பு தென் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த சீனர்களால் அமைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த அமைப்பு வருடம் தோறும் நிகழ்த்தும் நடனங்கள் தனித்துவமானவை என்றாலும் அவற்றின் அடி நாதமாக விளங்குவது, தாம் கட்டிக்காத்துப் போற்றி வாழ்ந்த தமது தொன்மைத்தைத் கிளறும் முயற்சியே. இந்த அமைப்பில் 200 பேர்வரை தேர்ந்தெடுத்த கலைஞர்கள் இருக்கின்றார்கள். சீனாவில் இந்த நிகழ்வு தடைசெய்யப்பட்ட நிலையில் இதுவரை 130 நகரங்களில் அரங்கேறிய நிகழ்வு தொடர்ந்தும் பயணிக்கின்றது. எடுத்துக் கொண்ட கொள்கையும், அதைச் சிறப்பாக நடத்தவேண்டும் என்ற கருத்தொருமித்த கூட்டும் இருந்தால் இப்படியான உயரிய இலக்கை அடையலாம் என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்தப் புலம்பெயர் சீனர்களின் Shen Yun.


திறமானதொரு படைப்பை எடுத்துக் கொள்வது மட்டுமன்றித் தகுந்த அரங்கமும் கிடைத்தால் பாதி வெற்றி. அதை சிட்னியின் Capital Theatre உறுதி செய்தது. அரங்கத்தின் உள்ளமைப்பே ஏதோவொரு அரண்மனையில் நிலாவொளியில் அமர்ந்து மேலே நட்சத்திரக் கூட்டங்கள் கண்காணிக்கச் சுற்றிவரக் கொத்தளங்களில் சிற்பச் செதுக்குகளுமாக அமைய இருக்கும் அந்தச் சூழ்நிலையே இப்படியான படைப்பை மனம் ஒன்றித்து ரசிக்க வைக்கின்றது. சொன்ன நேரத்துக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கின்றது. வெள்ளையர் ஒருவர் ஆங்கிலத்திலும், சீனப்பெண்மணி சீனத்திலுமாக நச்சென்ற வர்ணனைகளை வழங்கி வழிவிட ஒவ்வொரு நிகழ்வும் அரங்கேறுகின்றன. அரங்கத்துக்கும் மேடைக்கும் இடையில் உள்ளே மறைப்பான அடித்தளம் அந்தத் தளத்திலே முப்பதுக்கும் மேற்பட்ட வாத்தியக் கலைஞர்கள் நேரடியாக இசை வழங்க, மேடைக்குப் பின் புறம் பெருந்திரை அங்கே அரங்கத்திற்கு எடுத்து வரமுடியாத அம்சங்கள் நகரும் காட்சிகளாக,அந்தக் காட்சிகள் அப்படியே மெல்ல மெல்ல மேடையிலே உள்வாங்கப்பட்டு காட்சியில் தோன்றிய மாந்தர்கள் மேடையிலே கலை படைக்கின்றார்கள். ஒவ்வொரு நடனமும் 5000 ஆண்டு பழமை வாய்ந்த சீனக் கலாச்சாரத்தின் கூறுகளை இனங்காட்டுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் முப்பதுக்கும் மேற்பட்ட சீன இளையோரும், யுவதிகளும் எல்லோருமே ஒரே அச்சில் வார்க்கப்பட்டது மாதிரி அளவிலும் உருவ அமைப்பிலும். ஒரு கணினி இயந்திரத்தின் மூலம் உருவாக்கப்பட்ட எந்திர மனிதர்கள் சொன்ன கட்டளைக் கேற்ப ஒரே நேரத்தில் அபிநயிக்கும் அனுபவம் அங்கே.


Falun Gong என்ற தனிமனித மேம்பாட்டு நெறி 1992 ஆம் ஆண்டில் Li Hongzhi என்ற போதகரால் ஏற்படுத்தப்பட்டது. தனி மனித ஒழுக்கங்களும், நெறிமுறைகளுமே உலகில் குற்றச் செயல்களைத் தடுக்க வல்லன என்ற நோக்கில் பல்வேறு நெறிமுறை சார்ந்த ஒழுக்க நடைமுறைகளோடு அமைக்கப்பட்ட இதன் செயல்வடிவம் சீன அரசுக்குக் கண்குத்திப் பாம்பாகத் தோன்றவே 1999 இல் தடை செய்து விட்டது. இன்று Li Hongzhi அமெரிக்காவில் வாழ்கின்றார். அவரின் போதனைகளைப் பின்பற்றுவோர் உலகில் தத்தம் நாடுகளில் அமைப்புக்களை நிறுவி ஒரே குடையின் கீழ் பணியாற்றுகின்றனர். சீனா மட்டும் விதிவிலக்கு, அங்கு இந்த Falun Gong நெறி சட்டவிரோதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இதைப் பின்பற்றுவோர் கடூழியச் சிறை மற்றும், தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

ஒவ்வொரு நடனமும் சீன தேசத்தின் பாரம்பரியம், வரலாறு பேசும் கதைகளாக, காட்சிகளாக விரிகின்றன. முன்னே நேரடியாக வாத்திய விருந்து முழங்க விதவிதமான நிற ஆடை அலங்காரங்களோடு தோன்றி ஆடும் நடன மாந்தர் எல்லோருடைய அசைவுகளிலும் நேர்த்தி, இந்த நேர்த்திக்கு அடிப்படை சுயகட்டுப்பாட்டோடு சொல்ல வந்த விடயத்தைக் கொடுக்கும் அந்தப் பாங்கு. நடனத்தில் வெளிப்படும் அனாயாசமான வித்தைகள் இந்த நடனக்காரர்கள் கழைக்கூத்தாடிகளாவும் தம்மைக் காட்டுகின்றனர். அவர்களின் உடல்வலிகள் தெரியாது சிரித்துப் பகிரும் நாட்டியத்தில் தாம் படைப்பில் கொண்டுள்ள காதலின் மேன்மை வெளிப்படுகின்றது. நடனங்கள் ஓய்வெடுக்க இடையில் பியானோ வாத்தியம் பின்னிசைக்க தேர்ந்த சீனப்பாடகர் ஒருவர் பாடுகின்றார். பின்னே ஒளித்திரையில் பாடலின் அர்த்தம் வெளிப்படுகின்றது.

நமக்கான அடையாளத்தைப் புதிதாகத் தேடவேண்டியதில்லை. இருந்ததை மீளவும் புத்துயிர் கொடுத்து இனங்காட்டவேண்டியதே நம் பணி இது ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பொருந்தும். இந்த நோக்கைக் கச்சிதமாகப் பின்பற்றியே Falun Gong நெறியைப் பின்பற்றுவோர் இத்தகு கலாச்சார நிகழ்வுகள் மூலம் தம் அடையாளத்தைக் காட்டுகின்றார். திறமையும் அதைக்கொடுக்கும் ஆற்றலும் எல்லோருக்கும் உண்டு ஆனால் அதைக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையும் இன்ன பிற சாக்குகளும் அவற்றைக் கொண்டு வராமல் அமுக்கிவிடும். அதைக் கடந்து கொடுக்கும் படைப்பை மொழி, நாடு கடந்து எல்லோருமே ஏற்றுக் கொள்வர் என்ற வெற்றித் தத்துவத்தை இவர்கள் நிரூபித்திருக்கின்றார்கள்.
சமரசம் கடந்து கொடுக்கும் படைப்பு காலத்தை வென்று நிற்கும். Shen Yun அடுத்த முறை உங்கள் ஊரில் வந்தால் தவறவிடாதீர்கள், வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய கலைப்படைப்பு இது.

0000000000000000000000000000000000000000000000000000000

கஹானி என்ற ஹிந்திப்படத்தின் போஸ்டரைப் பார்த்ததோடு சரி, இதுவும் பத்தோடு பதினொறாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் படம் வெளிவந்து ஒரு சில நாட்களுக்குள் பாரபட்சமில்லாமல் இந்தப் படம் குறித்த நேர்மையான விமர்சனங்கள் வந்த போது சிட்னியை விட்டே கஹானி போய்விட்டது. சரி ஆங்கில சப் டைட்டிலோடு வரும் தரமான பிரதிக்காகக் காத்திருப்போம் என்று நினைத்தபோது கடந்த வாரம் கிட்டிய கஹானி தான் இரண்டாவது காட்சி.

ஒருமுறை நடிகர் மம்முட்டி விழா மேடை ஒன்றில் “ஹிந்திப்படங்கள் மட்டும் தான் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை அல்ல, வேற்று மொழிகளும் சினிமா படைக்கின்றன அவற்றையும் உலகம் கண்டுகொள்ளவேண்டும்” என்ற ரீதியிலான ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவரின் ஆதங்கம் நியாயமானது என்றாலும் இப்போதுள்ள இந்திய சினிமாவின் போக்கைப் பார்த்தால் மற்றைய மொழிகள் எவ்வளவு தூரம் தனித்துவமாகத் தம் படைப்புக்களை இனங்காட்டுகின்றன என்பது முன்னே நிற்கும் கேள்விக்குறி. தமிழ்சினிமா இன்றைக்கு எதிர்கால முதல்வர்களைப் படைக்கும் பஞ்ச் ஹீரோக்கள் படையோடு முன்னிற்க, தொண்ணூறுகளின் முற்பகுதி வரை செழுமையான, யதார்த்தபூர்வமான கதைக்களங்களைக் கொண்டு திரைக்கதை படைத்த மலையாள சினிமாவின் முகமும் இப்போது கோரத்தாண்டவம். மம்முட்டி, மோகன்லால் மட்டுமன்றி புதிதாக வந்திருக்கும் நண்டு, சிண்டுக்களும் இளைய தளபதிகளாக வரவே முனைப்புக் கொண்டிருக்கின்றனர். ஆங்காங்கே வரும் ஒரு சில படங்கள் திருஷ்டி கழிப்புக்கள். இந்த நிலையில் ஹிந்தி சினிமா உலகம் என்னதான் மசாலா படங்களை அள்ளி எறிந்தாலும், அவற்றுக்கு நிகராகப் புதிய புதிய கதைக்களங்களோடும் கருவோடும் வருகின்ற படங்கள் மசாலா சினிமாக்களையே ஓரங்கட்டி மக்கள் மத்தியில் எடுபடுகின்றன. ஹிந்தி சினிமாவுக்குக் கிட்டியுள்ள மிகப்பெரிய உலக சந்தை என்பது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பது ஒருபக்கம், இன்னொரு பக்கம் இப்படியான புதிய உத்திகளோடு வருகின்ற படைப்புக்களுக்கு மக்கள் கொடுக்கும் அதீத ஆதரவு என்பது இன்னும் இன்னும் படைப்பாளியை நம்பிக்கை கொள்ள வைக்கின்ற இன்னொரு காரணம்.

“எனது கணவரைக் காணவில்லை, கண்டு பிடித்துக் கொடுக்கவும்” நிறைமாதக் கர்ப்பிணியாக கொல்கத்தா விமான நிலையத்தில் இறங்கும் வித்யா பாக்க்ஷி (வித்யா பாலன்) என்ற இளம் பெண் நேரே பொலிஸ் நிலையம் சென்று கொடுக்கும் புகாரோடு ஆரம்பிக்கிறது படம். அந்நிய நிலம், புதிய மனிதர்கள், தன்னைச் சுற்றிப் பின் தொடரும் அபாய முடிச்சு, இவற்றோடு தனி ஆளாக லண்டனில் இருந்து வந்த வித்யா பாக்க்ஷி என்ற இந்த இளம் பெண் மர்ம முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்க்க அவிழ்க்க அவை இன்னொரு திசை நோக்கிப் பயணித்து ஈற்றில், இதுவாக இருக்குமோ என்று ஒரு முடிவை எடுத்து நிற்கும் பார்வையாளரின் முடிவைப் பூச்சியமாக்கி இன்னொரு திசையில் இறக்குகிறது கஹானி என்ற இந்தப் படம். வித்யா பாக்க்ஷி சந்திக்கும் மனிதர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று முடிவு வரை அனுமானிக்க முடியாத அளவுக்குக் கண்கட்டு வித்தை நடத்தியிருக்கிறது இப்படம்.
தமிழில் மர்மப்படங்கள் பல வந்திருக்கின்றன. அதே கண்கள் படத்தை அந்தக் காலத்தில் ரூபவாஹினி அருமை பெருமையாகப் போட்டபோது படம் கொடுத்த மர்மத்தில் பக்கத்து வீட்டு மாமி இரவில் நடமாடவே பயந்து தன்னை ஊரடங்குச் சட்டத்தில் அமுல்படுத்திக் கொண்டவர். இன்னும் பல படங்கள் மேஜர் சுந்தர்ராஜன் வகையறா போன்ற வில்லங்கமான வில்லன்களை இருட்டறைக்குள் வைத்து மர்மம் என்று சொல்லி வந்தவை. ஆனால் ஒரு மர்மப் படம் என்றால் என்ன என்பதை மிகவும் நேர்த்தியான வகையில் புதிய உத்திகளோடு பாடம் எடுக்கின்றது இந்த கஹானி.

ஆண்டவன் உலகில் சில விஷயங்களைப் படைக்கும் போது அவை இயற்கைக்கு எதிராக மாறும்போது மீண்டும் அவன் தன் சக்தியை அனுப்பி தீயவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்படுகின்றது” இதுதான் கதையின் அடிநாதம். கொல்கத்தா என்ற கதைக்களனைத் தேர்ந்தெடுத்துப் படத்தை இயக்கியதற்குப் பின்னால் உள்ள நேர்த்தியான காரணத்தில் ஒன்று கொல்கத்தா சார்ந்த மேற்கு வங்கம் மாகாளியைக் குலதெய்வமாகப் போற்றித் துதிக்கும் சமூகத்தைக் கொண்டது. இந்தப் படத்தின் காட்சிகள் மெல்ல மெல்ல தேர்ந்தெடுத்த கதைக்களனை நியாயம் செய்வதாக அமைவது ஒரு தேர்ந்தெடுத்த இயக்குனரின் வெற்றியின் அணிகலன்களில் ஒன்று. இந்தப் படத்தை இயக்கியதோடு கதையின் உருவாக்கத்திலும், தயாரிப்பிலும் துணை நின்றவர் Sujoy Ghosh என்ற இயக்குனர்.
இப்படியான மர்ம முடிச்சுக்களோடு நகரும் கதையில் பார்வையாளனைச் சமரசம் செய்வதற்குப் பல வழிகளைத் தேடுவார்கள், அவ்வ்வ் வகையறா நகைச்சுவைகளும், நாலு பாட்டு அதில் ஒன்று சோகம், இன்னொறு டிஸ்கோ என்று கலந்து கட்டி ஈற்றில் படத்தை ஒரு வழி பண்ணி விடுவார்கள். ஆனால் இந்தவிதமான எந்தவொரு சமரசங்களையும் இயக்குனர் ஏற்படுத்தவில்லை. விஷால் சேகர் இரட்டையர்களின் பின்னணி இசை மட்டுமே படத்துக்குப் பயன்பட்டிருக்கிறது. தேவையான நேரத்தில் வாத்தியங்களுக்கு ஓய்வு கொடுத்து இருப்பது கூட ஒரு நல்ல இசையின் அடையாளம். 128 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு இந்திய சினிமாவில் மாமூலான எந்தவொரு விஷயத்தையும் உள் நுளைக்காமல் படம் பண்ண முடியும் என்ற உண்மையையும் காட்டி நிற்கின்றது இப்படம்.

ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா கூறியிருந்தார், ஒரு நல்ல சினிமாவின் முக்கிய பாத்திரங்கள் படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே ஏதோவொரு வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அவற்றை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும் என்று. இந்தப் படத்திலும் அந்த உத்தி கையாளப்பட்டிருக்கின்றது. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் வந்து போகும் பாத்திரங்கள் அவை பார்வையாளனுக்கு எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தாது பின்னர் மர்மம் விலகும் போது முக்கியமானவர்களாக காட்டப்பட்டிருக்கும் புத்திசாலித்தனம் வெளிப்படுகின்றது. கொல்கத்தா நகரத்தின் மாந்தர்கள், வாழும் சூழ்நிலை எல்லாமே அப்படியே அள்ளி எடுக்கப்பட்டிருக்கின்றன மிகையில்லாமல்.

The Dirty Picture படம் வித்யா பாலனுக்கு ஒரு பெரிய கொடை என்று தான் சொல்லவேண்டும், அந்தப் படத்தின் மூலம் தேசிய விருதைக் கடந்த ஆண்டு தட்டிக்கொண்ட அவர் தனக்குக் கிடைத்த விருதை நியாயப்படுத்த, அடுத்து வந்த கஹானியைப் பயன்படுத்தியிருக்குமாற்போல அமைந்திருக்கின்றது இந்தப் படத்தில் அவரின் நடிப்பு. சொல்லப் போனால் படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை வித்யா பாலனை விலத்தி எடுக்கப்பட்ட காட்சிகள் மிகச் சில, மற்ற எல்லாமே முடிவிடம் நோக்கிய அவரின் பயணமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றது. கணவனைத் தொலைத்த ஒரு நிறைமாதக் கர்ப்பிணியின் கவலை, ஆற்றாமை, சமூகம் மீதான கோபம் எல்லாமே வித்யா பாக்க்ஷி என்ற பெண்ணாக வார்த்தெடுக்கப்பட்டிருக்கின்றார் இவர். படத்தில் இவரோடு பயணிக்கும் ஒவ்வொரு பாத்திரங்களும் குறிப்பாக Parambrata Chatterjee, Nawazuddin Siddiqui ஆகியோரும் நேர்த்தியான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

எட்டுக் கோடியில் எடுக்கப்பட்ட படம் இன்று 104 கோடியை வசூலித்ததாகச் சொல்லப்படுகின்றது. இப்படியான படங்களுக்கு திரை ரசிகர்கள் கொடுக்கும் பெரும் விருதாக இதை எடுத்துக் கொள்ள வேண்டியது தான். எந்த விதமான செயற்கைச் சாயமும் இன்றித் தான் சொல்ல வந்த கருத்தைத் திருத்தமாகச் சொல்லி முடிக்கிறது கஹானி. கஹானி என்றால் கதை என்று அர்த்தம் ஆமாம், ரசிகர்களுக்குக் கதைவிடாது சொல்லும் கதை சொல்லிகள் என்றும் தோற்பதில்லை.

No responses yet

Mar 18 2012

“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என் மேடைப்பகிர்வு

Published by under Uncategorized

நேற்று மாலை சிட்னியில்
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்களின் சங்க காலமும் சங்க இலக்கியங்களும் என்ற நூல் தமிழ், ஆங்கிலப்பதிப்புக்களும், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற உரைச்சித்திர இறுவட்டு வெளியீடும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எழுத்தாளர் மாத்தளை சோமு தலைமையேற்று நடத்த, மூத்த எழுத்தாளர் எஸ்.பொ என்ற எஸ்.பொன்னுத்துரை வாழ்த்துரையைப் பகிர்ந்தார். திரு.திருந்தகுமார் அவர்கள் நூல்களுக்கான அறிமுகவுரையை நிகழ்த்த, என் பொறுப்பில் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற உரைச்சித்திர இறுவட்டுக் குறித்த அறிமுக உரையை நிகழ்த்தும் பணி கிட்டியது. நேற்று நான் மேடையில் வழங்கிய அந்தப் பகிர்வை இங்கே எழுத்தில் தருகின்றேன்.


இந்த விழாவின் நாயகர் ஶ்ரீகந்தராஜா அண்ணன் அவர்களுக்கும், என்னோடு நூல்வெளியீட்டு விழாவில் உரை நிகழ்த்த வந்திருக்கும் அன்பர்களுக்கும் அவையோருக்கும் என் பணிவு கலந்த வணக்கங்கள்

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்கின்ற உரைச்சித்திரம் குறித்த எனது பகிர்வைக் கொடுக்கவேண்டும் என்று ஶ்ரீகந்தராஜா அண்ணர் உரிமையோடு கேட்டுக்கொண்டார். இந்த உரிமை இன்று நேற்றல்ல
15 வருஷங்களுக்கு முன்பே எடுத்துக் கொண்டார். அப்போது அவர் ஈழத்தமிழ்ச் சங்கம் மெல்பனில்
தலைவராக இருந்தார்.  மெல்பணிலே நான் பல்கலைக்கழக மாணவனாகப் பயின்று கொண்டிருந்த காலத்தில் தமிழ் மீது எனக்கிருந்த காதலை உணர்ந்து, ஈழத்தமிழ்ச் சங்கம் நடத்தும் முத்தமிழ் விழாவில் முதன்முதலில்
பட்டிமன்ற மேடைகளில் ஏறச் செய்தார். கடந்தமுறை சிட்னியில் நடந்த அவரது தமிழகப் பயணம் குறித்த நூல் வெளியீட்டிலும் கூட என்னைப் பங்கேற்கச் செய்தார். அதன் தொடர்ச்சியே இந்த விழாவிலும் என்னை அவர் தேர்ந்தெடுத்தது.

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற இந்த உரைச்சித்திரத்துக்கு என்னுடைய பகிர்வை வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கின்றேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் ஓடக்கூடிய இந்த உரைச் சித்திரம்
என்பது எமது புலம்பெயர் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயம் என்பேன். காரணம் இன்றைய யுகம் காலிலே சக்கரம் போட்டுக்கொண்டு ஓடிப்பாய்கின்ற காலம். ஒரு புத்தகத்தை எடுத்து ஆற அமர வாசிக்கும் பழக்கம் மெல்ல மெல்ல
அருகிக் கொண்டு போகின்ற அபாயமும் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த  வேளை இப்படியான ஒலிச்சித்திரங்களின் வரவு என்பது எமது இலக்கியங்கள் தேடிப் போட்ட புதுச்சட்டை என்பேன்.

இன்றைக்கு இலக்கியங்கள் மெல்ல மெல்ல ஒலிச்சித்திரங்கள் என்ற புதிய பரிமாணத்தில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. உதாரணமாக நமது ஈழத்து எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகள் போன்றவை
இவ்வாறு வந்திருக்கின்றன. அண்மையில் கூட சிட்னியில் வாழ்ந்து வரும் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களின் இலங்கையில் தமிழர் என்ற வரலாற்று ஆவண நூலை ஊடகர் அப்துல் ஜபார் அவர்களின் குரல் வழியாக
ஒலிப்பகிர்வாக வெளியியிட்டிருக்கின்றார்.  இன்னும் தமிழகத்தின் பல்வேறு எழுத்தாளர்களது படைப்புக்களும் ஒலிப்புத்தகமாக வந்திருக்கின்றன என்ற அளவில் எனக்கு இவற்றின் மீது மெல்லிய ஈர்ப்பும் கவனமும்
உண்டு.  காரணம், இந்தவகையான வடிவம் என்பது நாம் எங்கு சென்றாலும் எந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் ஒருபக்கத்தில் சீடி ஒலிக்க, காதுகளுக்கு மட்டும் வேலையைக் கொடுத்து விட்டால் போதும்.

அந்த வகையில் நமது பாடும் மீன் சிறீ கந்தராஜா அண்ணரது “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்னும் உரைச்சித்திரத்தைக் கேட்டு அனுபவித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒருமணி நேரம் 54 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒலிச்சித்திரம் இது. இது எதைப்பற்றிப் பேசப்போகின்றது என்பதைத் தலைப்பே சொல்லி விடுகின்றதே. ஐம்பெருங்காப்பியங்களில் தலையாய காப்பியமாகப் போற்றப்படுகின்ற
“சிலப்பதிகாரம்” பற்றியது.  இந்தச் சிலப்பதிகாரம் கோவலன் என்கிற சாதாரண குடிமகனின் சரிதமாக எழுதப்பட்டதால் குடிமக்கள் காப்பியம் என்று போற்றப்பட்டது. சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி இளங்கோவடிகளால்
ஆக்கப்பெற்றது. சிலப்பதிகாரம் என்னும் போது நம் எல்லோருக்கும் கோவலன், கண்ணகி, மாதவி போன்ற கதாபாத்திரங்களையும், அந்தக் காப்பியம் சொல்லும் செய்தியும் தெரிந்திருக்கின்றது. ஆனால் இந்தக் காப்பியம்
ஆக்கப்பட்ட வரலாற்றில் இருந்து இந்தக் காப்பியத்தின் நிறைவு வரையான முழுமையான ஒரு பார்வையைத் தருகின்றது. இந்த முயற்சியின் மூலம் ஏற்கனவே இந்தக் காப்பியம் குறித்து அறிந்தவர்களுக்கு விடுபட்ட
பல செய்திகளைக் கொடுத்திருப்பதோடு, இன்னொரு முக்கியமான பணியொன்றைச் செய்திருக்கின்றது. அது என்னவென்றால், எமது இளைய சமுதாயத்தினருக்கு இந்தக் காப்பியத்தின் சிறப்பை இனி இந்த
இறுவட்டைக் காட்டியே முடித்து விடலாம். ஒரு பையனையோ, பிள்ளையையோ இருத்திக் கதை சொல்லி நிரப்புவது போன்ற பாங்கிலேயே எனக்கு இந்த உரைச்சித்திரத்தைக் கேட்டபோது உணரமுடிந்தது.

எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை சொல்லியிருந்தார், என்னதான் பெரிய எழுத்தாளாராக இருந்தாலும் எனக்கு மேடையைக் கண்டால் உதறலெடுத்து விடும் என்று. ஆனால் ஶ்ரீகந்த ராஜா அவர்களைப் பொறுத்தவரையில்
இந்த விஷயத்தில் விதிவிலக்கை அளிக்கவேண்டும். ஒரு நல்ல கவிஞராக மட்டுமன்றி மேடையில் அனைவரையும் கவரக்கூடிய ஆற்றொழுக்கான பேச்சு வல்லமையும் கொண்டு திகழ்வதோடு, அவர் வானொலி ஊடகத்தையும்
விட்டுவைக்கவில்லை.  இன்றைக்கு வானொலி ஊடகம் என்பது நம்மில் பலருக்கு எட்டாக் கனியல்ல, கையில் கிடைத்த பூமாலை தான். வானலை என்பது ஒரு நல்ல படைப்பாளியால் கேட்டுக்கொண்டிருக்கின்ற
நேயர்கள் நெஞ்சில் ஆக்கபூர்வமான பல விஷயங்களைப் பதிய வைக்கும் என்பதை அவர் கண்டிப்பாக உணர்ந்திருக்கின்றார். அவர் தாயகத்தில் இருந்த காலத்தில் வானொலி என்ற ஊடகத்தில் அவரின் பங்களிப்பை
நான் அறியேன். ஆனால் இந்தப் புலம்பெயர் சூழலில் இந்த வானலையைத் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். அதனால் பயன் நேயர்களாகிய நமக்குத் தான்.

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற காப்பியம் பற்றிப் பேசவந்து, கா,பி அவர்கள் ஶ்ரீகந்தராஜா காப்பியம் பாடுகிறாரே என்று நீங்கள் எண்ணவேண்டாம். இதை நான் சொல்ல வந்ததற்குக் காரணம். ஶ்ரீகந்தராஜா அவர்கள் பெற்ற
ஆழ்ந்த தமிழ்ப்புலமை, ஆற்றொழுக்கான பேச்சு வல்லமை இவை தவிர, ஒரு ஒலி ஊடகத்திலே தமிழை எப்படிக்கையாள வேண்டும் என்ற கச்சிதமும் தெரிந்திருக்கின்றது. அதன் சான்று தான் இந்த நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்.
உரைச்சித்திரம் ஆரம்பித்த கணம் முதல் முடிவுப் புள்ளி வரை என் ஹெட்போனில் பொருத்தித் தான் இதனைக் கேட்டேன். ஏனென்றால் இந்த ஒலிச் சித்திரம் கொடுத்திருகும் உணர்வலைகளைத் துல்லியமாகக் கணித்துக் கொள்ளவே.
அதிலிருந்து உணர்ந்த பல விஷயங்கள் தான் இந்த ஒலிச்சித்திரத்துக்கான பலமாக அமைந்துள்ளன.
ஒன்று, தொடக்கத்தில் இருந்து ஒலிச்சித்திரம் முடியும் வரை ஒரு சீரான ஒலி அளவோடு தன்னுடய குரலைச் சமமான போக்கில் வைத்துக் கொடுத்திருக்கின்றார்.
அப்படியென்றால் பாடல்களை விலத்திக் கிட்டத்தட்டஒன்றரை மணி நேரம் இவருடைய குரல் தொடர்ந்து இயங்கியிருக்க வேண்டும்.  ஒலியைத் தகுந்த ஏற்ற இறக்கங்களோடு கொடுத்திருக்கின்றார்.
இவருடைய எழுத்துப் பகிர்வை எடுத்து வேறொருவர் உரைச்சித்திரமாக ஆக்கியிருந்தால் இவ்வளவு உணர்வுபூர்வமாக வந்திருக்குமா என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
இரண்டாவது அம்சம், பாடல்கள். இந்த ஒலிச்சித்திரத்தில் வரும் முக்கிய திருப்பங்களிலே பாடல்களும் துணை நிற்கின்றன. அதிலும் ஆச்சரியம் தரத்தக்க விஷயம் என்னவென்றால் என்னுடைய பத்தாண்டு கழிந்த ஊடக
வாழ்விலேயே கேட்காத அரிய பாடல்களைப் பொருத்தியிருக்கின்றார், கூடவே நமக்கெல்லாம் அறிந்த தெரிந்த ஏதோவொரு ஜனரஞ்சகப் படத்துக்காக எழுதப்பட்ட பாடலையும் கைப்பிடித்துக் கொண்டு வந்து
பற்ற வைத்திருக்கின்றார். இப்படியான உரைச்சித்திரத்துக்குப் பாடல்கள் அவசியமா என்பவர்கள், உரைச்சித்திரத்தைக் கேட்ட பின்னர் தமது கருத்தை மாற்றிக் கொள்வார்கள்.

ஏனோதானோவென்று ஒரு ஒலிவாங்கியின் முன்பு ஏண்டா எடுப்பாகச் செய்யாமல் ஒரு நல்ல ஆவணப்படுத்தலைச் செய்யவேண்டும் என்ற முனைப்பு இந்தத் தரமான ஒலிச்சித்திரத்தைக் கொண்டு வந்ததில் இருந்து தெரிகின்றது.
மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்புத் தாங்கிய தென் தமிழீழத்தில் பத்தினித் தெய்வமாம் கண்ணகி அம்மன் வழிபாடு  காலாகாலத்துக்கும் மேலோங்கி நிற்கின்றது.
அந்தப் பின்புலத்தில் இருந்து வந்த பாடுமீன் ஶ்ரீகந்தராஜா அவர்களது
இந்த உரைச்சித்திரமும் பத்தினித் தெய்வ வழிபாட்டின் மூலத்தைச் சொல்லி நிறைவாக்கி அவர்களது ஊர்ப்பற்றையும் காட்டிவிட்டார்.  ஒருமுறை வானலையில் தென் தமிழீழத்தில் நிலவும் பத்தினித்தெய்வ வழிபாட்டைப்
பற்றி என்னோடு ஶ்ரீகந்தராஜா அவர்கள் பகிர்ந்து கொண்ட ஒலிப்ப்கிர்வை இன்றும் பாதுகாப்பாக வைத்திருக்கின்றேன்.

திங்களே போற்றுதும் திங்களே போற்றுதும் என்று நிறையும் கணங்களில் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன.  சிலப்பதிகாரம் என்ற இந்தக் காப்பியத்தின் சிறப்பை எல்லாத்தரப்பு ரசிகர்களின் நெஞ்சை அள்ளும் வகையில்
கொடுத்துத் தன் படைப்பில் ஒரு வெற்றியைப் பொறித்திருக்கின்றார் இவர். இது போதாது, இதுதான் ஆரம்பம், பாடுமீன் ஶ்ரீகந்தராஜா அவர்கள் தனக்குக் கிடைத்திருக்கும் வானலை வளத்தைப் பயன்படுத்தி நம் தமிழ்
இலக்கியங்களைத் தன் பார்வையிலே இவ்வாறான ஒலி ஆவணங்களாகக் கொண்டு வரவேண்டும். இந்த முயற்சியை இவர் தொடர்ந்தாரேயானால் எமது தமிழுலகம் காலாகாலத்துக்கும் அவரை என்றென்றும் நினைவில்
வைத்து நேசிக்கும்.

விழாப்படங்கள் நன்றி: தமிழ்முரசு அவுஸ்திரேலியா

3 responses so far

Feb 11 2012

சிட்னியில் நிகழ்ந்த "பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலத்திற்கு"

Published by under Uncategorized

நேற்றைய சனிக்கிழமை மாலைப்பொழுது செந்தமிழும்,சைவமும் கலந்த செவிக்குணவு வாய்த்த மணித்துளிகளோடு கழிந்தது. சனிக்கிழமை மாலை என்பது நம் தமிழர் மரபுப்படி விருந்துண்டு கழித்து இலங்கைப்பிரச்சனையில் இருந்து சூடான் வரைக்கும், சிவாஜியில் இருந்து சிம்பு காலம் வரைக்கும் அலசி ஆராய்ந்து பேசி மகிழ்வது அல்லது அந்த வாரம் வந்த படங்களைச் சூட்டோடு சூடாக இரண்டு டொலர் டிவிடியில் பார்த்து முடிப்பது போன்ற இன்னோரன்ன அரும்பணிகளுக்காக ஒதுக்கப்படுவது.

இப்படியானதொரு கலாச்சாரச் சூழலில் உலக சைவப்பேரவை ஆஸ்திரேலியக் கிளை நிகழ்த்திய “பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலம் வரை” என்ற நிகழ்வை அமைத்த ஏற்பாட்டாளர்களும் அவ்விதமே எண்ணத்தலைப்பட்டு ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப்பாடசாலையின் ஒரு சிறு வகுப்புக் கூடத்தை இந்த நிகழ்ச்சிக்காக எடுத்திருந்தனர். ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கைப்படி ஒரு இருபது பேர் வந்தாலே பெருங்கூட்டம் என்ற நிலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அன்பர்கள் குழுமி, வகுப்பறையை நெருக்கியவாறு கூட்டம் களைகட்ட, ஏழுமணிக்கு ஆரம்பமாக வேண்டிய நிகழ்வு சம்பிரதாயப்படி மாலை 7.20 இற்கு ஆரம்பமாகியது. இரவு ஒன்பது மணிக்கு முடியவேண்டிய நிகழ்வு 10.30 மணி வரை ஒரு செல்போன் அழைப்பொலி கேட்டாலே பூகம்பம் வந்தது போன்ற அமைதியோடு, வந்திருந்த அனைத்து அன்பர்களும் தமிழின்பமும், பக்திச் சுவையும் கலந்த அந்த மாலைப்பொழுதைப் பெருவிருப்போடு கழித்தனர்.

உலக சைவப்பேரவை ஆஸ்திரேலியக் கிளை சிட்னியில் இருக்கும் நூற்றுச் சொச்சம் தமிழ் அமைப்புக்களில் மிகவும் சின்னது. ஆனால் என்ன மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பதற்குச் சான்றாக இந்த “பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலம்” என்ற நிகழ்ச்சியை நேர்த்தியோடு வழங்கிய அவர்களின் செயற்திறனைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
செல்வி யாகவி.சோமசுந்தரம் தேவாரத்தோடு நிகழ்வை ஆரம்பிக்க, தொடர்ந்து திரு. கணபதிப்பிள்ளை தம்பதியினர் மங்கல விளக்கேற்றி, கடந்த ஆண்டில் இருந்து சமீபம் வரை தமிழுக்கும் சைவத்துக்கும் உழைத்த ஆன்றோர்களின் மறைவுக்கு அஞ்சலி நிகழ்த்தும் விதமாக எல்லோரும் ஒன்று கூடிக் “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” பாடி மனமாரப்பிரார்த்தித்தோம்.

உலக சைவப்பேரவையின் துணைத்தலைவர் திரு.பொ.இளங்கோ வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மறைந்த சைவப்பெரியார்கள் குறித்த அஞ்சலிப்பகிர்வு அமைந்தது. திரு மா. அருச்சுனமணி அவர்கள் சைவப்பெரியார் கு.வைத்தியநாதன் அவர்கள் பற்றிப் பேசும் போது அவர் வாழும் காலம் முழுதும் சைவத்துக்குச் செய்த பணியைச் சுருக்கமாகவும் அழகாகவும் சொல்லி வைத்தார். கடந்த 2010 ஆம் ஆண்டில் கனடாவில் நிகழ்ந்த உலக சைவப்பேரவை நிகழ்வில் கு.வைத்தியநாதன் அவர்களைச் சந்தித்தபோது கண்டிப்பாக ஆஸ்திரேலியா வருவேன் அழையுங்கள் என்று சொன்ன கு.வைத்தியநாதன் ஐயா அவர்களின் இழப்பைப் பேரிழப்பாகக் கருதுவதோடு, சிட்னியில் சைவ சித்தாந்த வகுப்புக்களை நடத்துவதற்கு முதலில் கு.வைத்தியநாதன் அவர்களையே அணுகியதாகவும் ஆனால் அப்போது அவரது உடல் நலம் குன்றியிருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னார். கு.வைத்தியநாதன் அவர்கள் சைவ சித்தாந்த வகுப்பைக் கொடுக்கும் அனுபவத்தைத் தான் தமிழகம் சென்று பார்த்த போது முன்னூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் மாணவர்களாகக் கூடியிருக்க, ஆறேழு மணித்தியாலங்கள் அவர் கொடுக்கும் அழகான பொருள் பொதிந்த விளக்கங்கள் சிறப்பு மிகுந்தவை, பலர் ஆறேழு வருடங்களாக இந்த இனிய அனுபவத்தைப் பெறுவதற்காகவே மீண்டும் மீண்டும் இவ்வகுப்புக்களில் சேர்ந்து கொள்வார்கள் என்றபோது கு.வைத்தியநாதன் அவர்களின் இழப்பின் கனத்தைப் புரிய முடிந்தது.

அடுத்து தூத்துக்குடி சண்முகவேல் என்ற சைவப்பெரியார் குறித்து அதே இடத்தில் இருந்து வந்த அன்பர் திரு மா.நாராயணன் தம் அஞ்சலிப்பகிர்வை வழங்கியிருந்தார். இந்த நிகழ்வின் விழா நாயகர் திரு மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள் செய்து கொண்டிருக்கும் பெரும்பணியான இணையத்தில் தேவாரப்பதிகங்களைத் திரட்டும் பணியில் தூத்துக்குடி சண்முகவேல் அவர்களின் முனைப்பும், பங்களிப்பும் பின்னர் இது இசைவடிவத் தளமாக மாறுவதற்கான பணியாக இருந்ததையும் குறிப்பிட்டிருந்தார்.

தருமபுரம் சுவாமிநாதன் அவர்களின் பெயரை அறியாதோர் பலர் இருக்கக் கூடும் ஆனால் அந்தப் பெரியாரின் கணீர்க்குரலில் பதிந்து ஆலயங்கள் தோறும் பரவும் தேவாரப்பாடல்களின் குரலுக்குச் சொந்தக்காரர்.தருமபுரம் சுவாமிநாதன்
அவர்கள் கடந்த ஆண்டு இறையடி சேர்ந்தார், அவர் குறித்த அஞ்சலியைப் பாடல்களைப் பாடிப் பகிர்ந்தார் திரு வனதேவா அவர்கள்.

அஞ்சலிப் பகிர்வுகளைத் தொடர்ந்து ஹோம்புஷ் சைவப்பாடசாலை இளநிலை மாணவர்கள் வந்து திருமுறை இசைக்கச் சபையோரும் சேர்ந்து பாடிப் பரவசம் கொண்டனர்.
இந்த நிகழ்வின் நாயகர் திரு.மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்கள் தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிக்கொண்டிருக்கும் பெரும் பணியைத் தம் கவித்திறத்தால் பாடி அவருக்கு ஒரு வாழ்த்துப் பா இனை சட்டம் இட்டுப் பகிர்ந்து சிறப்பித்திருந்தார் நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பேரனார் டாக்டர் பாரதி இளமுருகனார்.

தமிழிற்கும் சைவத்திற்கும் அளப்பரிய தொண்டாற்றி
உயர்ந்த பெரியார்
திரு, மறவன்புலவு க சச்சிதானந்தன் அவர்களுக்கு
உலக சைவப்பேரவை (அவுஸ்திரேலியா)
சிட்னியில் அளித்த பாராட்டு விழாவின்போது வழங்கப்பெற்ற
வாழ்த்துப்பா – 11 02 2012

அருட்குணங்கள் அத்தனையும் உன்னிற் பொலிய
அகத்தொழிரும் அழகெல்லாம் முகத்திற் கொண்டோய்!
இருந்ததமிழ்த் திருமறையை நீயும் பிற
இனத்தவரும் பயின்றவற்றின் பயனைப் பெற
தெருட்சியதன் முதிர்ச்சியினால் தடைகள் வென்று
சீர்பொங்கத் திருவருளால் மின்னம் பலத்தில்
திரட்டிவகுத் தேற்றிநின்ற சச்சிதா னந்தா!
சிட்னிசைவப் பேரவையும் வாழ்த்த வாழி!

அந்தமிலெம் மந்திரமாம் திரு மறைகள்
அத்தனைக்கும் இசைகூட்டி வரலா றுடனே
விந்தையென வியனுலகம் விதந்து வக்க
வித்தகனே பலமொழியிற் கேட்க வைத்தாய்!
சுந்தரனே வடிவமைத்து மின்னம்ப லத்திற்
தொகுத்தளித்தாய்! தூயபணி என்றும் வாழி!
சந்ததமும் சைவருன்னைத் தினமும் போற்றச்
சச்சிதா னந்தாநீ வாழி! வாழி!

எண்ணமதைச் செப்பனிட்டுச் செயலுந் தீட்டி
ஈரைந்து ஆண்டாக அறிஞர் கூட்டிக்
கண்ணனைய பதிணெண்ணா யிரம்பா டல்கள்
களிப்போடு சைவர்கள் இல்லந் தோறும்
பண்ணமுதாய்த் தினங்கேட்டு மகிழ வைத்தாய்!
பலன்கருதாச் சேவைக்குக் கைமா றுண்டோ?
தண்ணொளிசேர் பிறையடி வரதஞ் சேர்க்கத்
தகைமைசேர் வித்துவனே வாழி! வாழி!

முறையாக முத்தமிழோ டுயர்சைவ மோங்க
மூபத்து ஆண்டாக இந்தி யாவில்
நிறைவான பதிப்பகமாய்க் ்காந்த ளகத்தை்
நிறுவிநறுஞ் சேவையினால் உயர்ந்தாய்! இந்தத்
துறைதனிலே உனக்கிணையே இல்லை யென்று
தூயபுக ழாரம்பலர் சூட்டக் கண்டோம்
பிறையடி மன்றுளாடி அருளப்பா ரதியும்
பெரிதுவந்து வாழ்த்துவளே வாழி! வாழி!,

“வாழ்க வளமுடன்்”

சிட்னிவாழ் சைவப் பெருமக்கள்

இயற்றியவர் – பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி


திரு மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள், “பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலம் வரை” என்ற விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வை கணினித் திரையைப் பெருந்திரைக்குக் கடத்தியவாறே, தேவாரத் திருப்பதிகங்கள் தோன்றிய காலத்தில் இருந்து பின்னர் நம்பியாண்டார் நம்பி ராஜ ராஜ சோழனிடம் சிதம்பரத்தில் செல்லரித்துக் கிடக்கும் தேவாரப்பதிகங்களைத்திரட்டக் கோரிய வரலாற்றினைக் கதை விளக்கப் படங்களோடுச் சுவையாகப் பகிரத் தொடங்கினார். சிதம்பரத்திலே தீட்சதர்கள் இந்தப் பணிக்கு முட்டுக்கட்டை போட, தனக்கு இருக்கும் அரச பலத்தைப் பிரயோகிக்காமல் புத்தி சாதுர்யத்தால் இந்தப் பணியை நிறைவேற்றிய ராஜராஜ சோழனின் அறிவுத்திறனைச் சொல்லியதோடு தமிழ் மன்னர்களில் இவ்வளவு தூரம் தமிழுக்கும் சைவத்துக்கும் அவன் ஆற்றிய பணி எவ்வளவு உயரியது என்பதைத் தக்க ஆதாரங்களோடு சொன்னார். தொடந்து சேக்கிழார் சுவாமிகளின் பணியை விதந்தது பகிர்ந்து நிறைவாக இணையமூடாகத் தேவாரப் பதிகங்களைத் திரட்டி உலகெங்கும் வாழும் அன்பர்களின் தேவைக்காகக் கொடுக்கும் பணியை விரிவாக விளக்கினார் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள்.

தேவாரம் http://www.thevaaram.org/ என்ற இணையத்தளத்தின் பங்களிப்பைப் பொறுத்தவரையில் தமிழோடு, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம், பர்மிய, தாய் உள்ளிட்ட மொழிகளோடு பன்னிரு திருமுறைகளைத் திரட்டிச் சேமித்து வைத்திருக்கும் ஒரு அரிய தளம். இது எமது அடுத்த தலைமுறைக்கும், தமிழைத் தாய் மொழியைக் கொண்டிராதவர்களுக்கும், ஏன் நம் எல்லோருக்குமே பண்ணோடு பொருள் அறிந்து பாட வழிவகுக்கின்றது. மேலும் ஆலயங்கள் குறித்த விளக்க உள்ளீடுகளும், தேவாரங்களைத் தேடும் தேடுபொறிகளும் இந்தத் தளத்தில் இருப்பது வெகுசிறப்பு, காலத்தின் தேவைகளுக்கேற்பத் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்தும் மேலும் விரிவாக்கியும் தன் பணியைச் செய்து வருகின்றது இந்தத் தளம்.

தேவாரம் என்ற தளத்தை ஆரம்பித்து வெறுமனே எழுத்துருவில் பன்னிரு பதிகங்களைத் திரட்டி வந்த நிலையில், தூத்துகுடி சைவ சித்தாந்த சபையில் சைவப் பெரியார் திரு. சண்முகவேல் அவர்கள் அறிமுகப்படுத்த திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள், இந்தத் தளம் குறித்து விளக்கிக் கொண்டிருந்த போது இந்தத் தளத்தில் பாடலுண்டு, பொருளுண்டு ஆனால் இசை இல்லையே என்று அங்கு வந்திருந்த பிரபாகர் என்ற அன்பர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாராம். அதற்குப் பொருளாதாரத் தேவை

இருக்கும் என்றபோது உடனடியாகவே பிரபாகர் என்ற தூத்துக்குடி உப்பள அதிபர் உடனேயே ரூபா ஐந்தாயிரம் கொடுத்து, குரலிசையைச் சேர்க்கும் பணியைச் செய்ய கால்கோளாக அமைந்ததாம்.
திரு. பிரபாகர் அவரது துணைவியார், மகனோடு உப்பு வணிகர், அவர், அவரது துணைவியார், அவரது திரு மகனார் யாவரது பங்களிப்பால் தேவாரம் தளத்தில் 24 பண்களுக்கும் உரிய மாதிரிப் பாடல்கள் சேர்ந்தன.
இன்று 15,500 திருமுறைப் பாடல்களுக்குக் குரலிசையைத் தேவாரம் தளத்தில் சேர்க்கவும், 18268 பாடல்களைக்கும் குரலிசை சேர்க்குமாறான முயற்சிக்கும், சைவப் பெரியார் திரு. சண்முகவேல் அவர்கள் வழிகாட்டலில் திரு. பிரபாகர் விதைத்தார் என்று சொன்ன மறவன்புலவு சச்சித்தானந்தம் அவர்கள் தொடர்ந்து தருமபுரம் சுவாமிநாதன் அவர்கள் தேவாரம் தளத்துக்குக் கொடுத்த பெரும் பங்களிப்பை விளக்கிச் சொன்னார்.
இந்த நிகழ்வில் அஞ்சலிப்பகிர்வில் பேசப்பட்ட மறைந்த சைவப்பெரியார்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பையும், அவர்கள் தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய முக்கிய பங்களிப்பைச் சொல்லிவைத்தார். >தேவாரத்திருப்பதிகங்கள் தமிழின் 247 எழுத்துக்களைக் கடந்து எந்தவொரு பிற மொழிச் சொற்களும் ஊடுருவாத சிறப்புக் கொண்டவை. இந்தப் பதிகங்கள் வெறும் சைவ சமயம் சார்ந்த பக்தி இலக்கியங்கள் என்ற எல்லையைக் கடந்து பொதுவான தமிழ் இலக்கியங்களாக எடுத்து நோக்க வேண்டும் என்று உதாரண விளக்கங்களோடு சொன்னார். தேவாரத்திருப்பதிகங்கள் காலத்துக்குக் காலம் எதிர் நோக்கிய சவால்களை வரலாற்று விளக்கங்களோடு எடுத்துச் சொன்னார்.

நம்மை ஆக்கிரமிக்கும் மன அழுத்தத்துக்கு மருந்தாக “நாமார்க்கும் குடியல்லோம்” என்ற பதிகம் எவ்வளவு தூரம் அருமருந்தாக அமைகின்றது என்று அவர் சொல்லும் போது அதை உய்த்துணர்ந்து கொள்ள முடிந்தது,

ஹோம்புஷ் சைவப்பாடசாலை முது நிலை மாணவர்களின் பண்ணிசை விருந்து தொடர்ந்தது.

தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவ வகை செய்யும் தேவாரம் இணையத் தளத்தின் சிறப்பையும் புலம்பெயர்ந்த நம் வாழ்வில் அதன் தேவை குறித்தும் திரு எஸ்.வேலுப்பிள்ளை
(ஓபன் தமிழர் கழகம்), முனைவர் பாலு விஜய் (தமிழ் இலக்கியப்பேரவை), திரு அனகன் பாபு (தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம்), திரு அண்ணாமலை சுந்தரம் (பாலர் மலர் தமிழ்க்கல்விக் கழகம்), எழுத்தாளர் மாத்தளை சோமு ஆகியோர் சுருக்கமாகவும் நிறைவாகவும் தம் கருத்துக்களைப் பகிர்ந்து சிறப்பித்திருந்தனர்.

தேவாரம் இணையத்தளம் காலத்துக் காலம் தொழில் நுட்பமும், தேவையும் எழும்போது அவற்றை உள்வாங்கி எழுத்துரு வடிவில் இருந்து ஒலி வடிவாகித் தற்போது செல்லிடப்பேசியில் இருந்து அப்ளிகேசனாக தருவிக்கும் பெரும் பணிக்கான பணத்தேவை குறித்தும் பேசப்பட்டது. இந்த நிகழ்வுக்காக வந்திருந்த அன்பர்கள் தம்மால் இயன்ற
பணத்தொகையைக் கொடுத்துச் சிறப்பித்திருந்தனர்.

திருமதி கலா அனந்த சயனன் நன்றி நவில, சைவ மரபுப்படி தேவாரம், திருப்புராணத்தைச் சபையோர் ஒன்று கூடிப் பாடிப் பிரார்த்தித்து நிறைவாகி செவிக்கும், விழிக்கும் மனத்துக்கும் பெரும் விருந்தாக அமைய, ஆங்கே சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று சைவ அமுது படைத்துச் சிறப்பித்தனர். இப்படியான நிறைவானதொரு நிகழ்வு இன்னும் வாய்க்கவேண்டும் என்ற உணர்வோடு கலைந்தோம். உலக சைவப்பேரவை சிட்னிக் கிளையின் அரும்பணி தொடரட்டும்.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்

3 responses so far

Oct 08 2011

திருடப்பட்ட தலைமுறை (Stolen Generation)..!

Published by under Uncategorized


ஓவ்வொரு பூர்வீக குடிமக்களுக்கும் நேரும் அவலம் தான் அவுஸ்திரேலிய ஆதிப்பழங்குடியினரைப்(Aborigines) பொறுத்தவரை அப்போது நிகழ்ந்தது. தாமுண்டு தம் வாழ்வுண்டு என்று இயறகையோடு இயற்கையாக வாழ்ந்தவர்களை காடுகளை அழிப்பது போல வந்தேறு குடிகளான காலனித்துவ ஆதிக்கம் கொண்ட வெள்ளையர்கள் வேட்டையாடிது மாறாவடு கொண்ட வரலாறு.

சுமார் 70 ஆயிரம் வருடங்கள் தொன்மை வரலாற்றைக் கொண்ட இந்தப் பூர்வகுடிகளுக்கு நிரந்தரச் சனி தொற்றியது 1788 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனித்துவமாக மாறும் நாளில் இருந்து தொடங்கியது. ஆரம்பத்தில் கொடும் கொள்ளைக்கார, கொலையாளிக் கைதிகளை பிரிட்டனில் இருந்து நாடு கடத்தும் திறந்த வெளிச்சிறையாகவே இந்த நாடு பயன்பட்டது. தமக்கென்று வாழ்வை நதிக்கரையோரங்களிலும், உணவுப் பயிர்களை அண்டிய பகுதிகளிலும் அமைத்துக் கொண்ட பூர்வகுடிகளைப் பலவந்த வெளியேற்றல்கள் துப்பாக்கி முனையில் தான் நடாத்த வேண்டி ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான பூர்வகுடிகள் கங்காருக்கள் போல வேட்டையாடப்பட்டனர். இந்தக் காலனித்துவம் நிகழ்ந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 750,000 பூர்வ குடிகள் வாழ்ந்திருந்தார்கள் என்பது காலக் கணக்கெடுப்பு சொல்லும் செய்தி.


ஜனவரி 1, 1901 ஆம் ஆண்டு பொதுநலவாய அமைப்பு சார்ந்த அவுஸ்திரேலியா (Commonwealth of Australia) என்று இந்த நாடு மாற்றப்பட்டபோதும் கூட இந்தப் பூர்வகுடிகள் தேசிய கணக்கெடுப்பில் அடங்காதவாறு சட்டம் இயற்றப்பட்டதோடு இவர்களை Fauna (நாட்டின் பூர்வ பிராணிகள்) என்ற வகையிலேயே அடக்கினார்கள்.


1910 ஆம் ஆண்டிலிருந்து 1970 ஆம் ஆண்டு வரை சுமார் 100,000 வரையிலான சிறுவர்கள் பொலிசாரினாலும், சமூக நலசேவையாளர்கள் என்று சொல்லப்படுபவர்களாலும் தம் குடும்பங்களில் இருந்து பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். இச்சிறுவர்களில் பெரும்பான்மையோர் ஐந்து வயதுக்குக் கீழேயானவர்கள். அப்போது இந்தக் கொடு செயலைத் தடுக்க சட்டமேதும் கிடையாது. அவுஸ்திரேலிய பூர்வ குடி என்ற முகவரி மட்டும் இருந்தால் போதும், மற்றதெல்லாம் தானாக நடக்கும்.

இவ்வாறு தம் குடும்பங்களில் இருந்தும் நிரந்தரமாக, பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட சிறுவர்கள் கிறீஸ்தவ தேவாலயங்களிலும், சமூக நல அமைப்பு என்று சொல்லப்படும் அமைப்புக்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர். சிலர் வெள்ளையின மக்களின் தத்தெடுப்புக்கு ஆளானார்கள். இதுவரை இயற்கையோடு வாழ்ந்து தமக்குப் பிடித்த உணவை மட்டும் உண்டு வந்த இவர்களுக்கு அட்டவணைப் பிரகாரம் உணவு என்னும் பெயரில் ஏதோவெல்லாம் கிடைத்தது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அபலைகள் கூட உண்டு. அடிப்படைக் கல்வியாவது கிடைக்குமென்றால் அதுவும் இல்லை. காடு, கழனிகளுக்கான வேலையாட்கள் தான் உற்பத்தியாயினர்.

இவர்களைத் தான் ‘Stolen Generations’ அதாவது திருடப்பட்ட தலைமுறை என்று அடையாளம் இட்டு இன்று வரை அல்ல என்றுமே மாறா வடு முத்திரை பதிக்கப்பட்டுவிட்டது.

அடுத்ததாக ஆதிப்பழங்குடியோடு கலந்து பிறப்பெடுத்த ஐரோப்பிய கலவைக் குழந்தைகள் தான் அதிகளவு இலக்கு வைக்கப்பட்டனர். 1937 ஆம் ஆண்டளவில் அவுஸ்திரேலிய பூர்வகுடிகளோடு கலந்து பிறந்த ஐரோப்பியக் கலப்பினக் குழந்தைகளைப் பலவந்தமாகப் பிரித்தெடுத்து அரசின் மேற்பார்வையில் வாழவைக்கும் நடைமுறையும் பாய்ந்தது. இந்தக் கொடூரம் 1970 ஆம் ஆண்டு வரை பூர்வகுடிச்சனத்தொகையில் 10% இலிருந்து 30% வீதமாக இருந்திருக்கின்றது.

இதன்மூலம் இந்த நாட்டுக்கு வந்து காலனித்துவ அரசு அமைத்துக்கொண்டவர்கள் சாதிக்க நினைத்தது இது தான்:

1. இரண்டு மூன்று தலைமுறைக்கு தொடரும் இவ்வாறான பிரித்தெடுத்து வளர்த்தல் என்னும் முறைமை “பூர்வ குடிகள்” என்ற சமுதாயமே இல்லை என்ற நிலைக்கு மாற்றமுடியும்.

2. பூர்வகுடிகளின் பேச்சு வழக்கையும், சடங்குகளையும் இல்லாதொழித்தல்

இந்த நோக்கங்களை அமுல்படுத்த அப்போதிருந்த ஆட்சியாளர்கள் பகீரதப்பிரயத்தனம் கொண்டு உழைத்தார்கள். பிள்ளைகளைத் தேடி ஓடி வரும் பெற்றோர்கள் அடித்துத் துரத்தப்பட்டார்கள். சில பிள்ளைகள் இந்த நாட்டிலேயே இல்லாமல் எங்கோ ஒரு இன்னொரு காலணி நாட்டுக்குத் தொலைந்து போயினர். இதை Rabbit-Proof Fence என்ற ஆங்கிலப் படமும் காட்சிப்படுத்தியிருக்கின்றது.

இன்று வரை தமது கலாச்சார வேர்களைத் தொலைத்தும், இயல்பு வாழ்வைத் தொலைத்தும் தற்கொலை, போதைக்கு அடிமையாதல் மன அழுத்தம், சட்டவிரோத நடவடிக்கைகள், என்று திசைமாறிய கங்காருக்கள் ஆகிவிட்டனர் இந்தச் சமுதாயத்தவர்.


காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை அல்லவா? தொடர்ந்த நூற்றாண்டுக் கொடுமைகளுக்கு எல்லை போடுமாற் போல மனித உரிமைவாதிகள், மற்றும் பூர்வகுடிகளில் நன்கு படித்துத் தேறிய புலமையாளர்களின் தொடர்ந்த கண்டனக் குரல் வேகவேகமாக, இன்னும் பலமாக ஒலிக்கத் தொடங்கியது.அதன் பலனாகத் தோன்றியதே 1995 ஆம் ஆண்டில் நிகழ்ந்த Bringing them Home’ என்ற விசாரணை நிகழ்வு.Federal Attorney-General, Michael Lavarch என்பவரின் மேற்பார்வையில் மே 11, 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் பூர்வகுடிகளைப் பிரித்தெடுத்துச் சின்னாபின்னப்படுத்திய வரலாற்றின் சாட்சியமாக 700 பக்க அறிக்கையில் 26 மே 1997 ஆம் ஆண்டு தேசிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை பூர்வகுடித் தலைமுறை ஒன்றுக்கு நிகழ்ந்த பல கோரமான உண்மைகளை ஆவணப்படுத்தியது. இந்த ஆவணப்பிரகாரம் 54 பரிந்துரைகளை வழங்கியிருந்ததும் அதில் மூன்று முக்கிய பரிந்துரைகளாவன:

1. அவுஸ்திரேலிய பூர்வீகச் சமூகத்துக்கான வாழ்வைச் சீரமைக்கும் நிதிக்கொடுப்பனவு முறைமையை ஏற்படுத்தல்.

2. பலவந்தமான பிரித்தெடுப்புக்கு ஆளான தலைமுறைக்கு Van Boven பரிந்துரைத்த மனித நேயச் செயற் திட்டப்பரிந்துரைகளின் படி புனர்வாழ்வு அமைப்பை ஏற்படுத்தல். ( Wikipedia: Theo van Boven (born 1934) is a Dutch jurist and professor emeritus in international law.In 1977 he was appointed director of the United Nations’ Division for Human Rights. From 1986 to 1991, he was the UN’s Special Rapporteur on the Right to Reparation to Victims of Gross Violations of Human Rights and, from 2001 to 2004, Special Rapporteur on Torture)

3. அவுஸ்திரேலிய தேசிய மற்றும் மாநிலப்பாராளுமன்றுகள் தமது முன்னோர்கள் சட்ட ரீதியாகவும், கட்டளைப் பிரகாரமும் செய்த இப்படியான வரலாற்றுத் தவறுகளை ஏற்று அதிகாரபூர்வமான மன்னிப்பைப் பகிர்தல்.

இந்தப் பரிந்துரை குறித்த மேலதிக வாசிப்புக்கு Bringing them Home

இதன் பிரகாரம் அவுஸ்திரேலிய மாநிலப் பாராளுமன்ற முதல்வர்கள் இவ்வாறு தம் அனுதாபத்தையும், பொதுமன்னிப்பையும் விடுத்திருந்தனர்.

நியூ சவுத் வேல்ஸ்

“apologises unreservedly to the Aboriginal people of Australia for the systematic separation of generations of Aboriginal children from their parents, families and communities” – Mr Bob Carr, Premier of New South Wales, 18 June 1997

விக்டோரியா

“That this House apologises to the Aboriginal people on behalf of all Victorians for the past policies under which Aboriginal children were removed from their families and expresses deep regret at the hurt and distress this has caused and reaffirms its support for reconciliation between all Australians” – Mr Jeff Kennett, Premier of Victoria, 17 September 1997

மேற்குறித்த மாநிலங்கள் உட்பட அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலப் பாராளுமன்றுகள் தமது முந்திய வழித்தோன்றல்களின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்றன.

ஆனால் அப்போது பிரதமராக இருந்த Mr John Howard, 26 August 1999 Motion of Reconciliation என்ற அடிப்படையில்
“deep and sincere regret that indigenous Australians suffered injustices under the practices of past generations, and for the hurt and trauma that many indigenous people continue to feel as a consequence of those practices.” என்று தமது அரசின் சார்பிலான அறிக்கையை விடுத்திருந்தார். இந்த வார்த்தைப் பிரயோகம் “unreserved apology” அதாவது எல்லை கடந்த மன்னிப்பாக இருக்க வேண்டும் என்று அப்போதய எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்த தொழிற்கட்சித் தலைவர் Kim Beazley இன் எண்ணம் அப்போது நிறைவேறாது போயிற்று.


கடந்த 24 நவம்பர் 2007 நீண்டதொரு வனவாசத்தின் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட Kevin Rudd தலைமையிலான தொழிற்கட்சி அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதியாக “சம்பிரதாயபூர்வமான பொது மன்னிப்பை” இந்தத் திருடப்பட்ட சமுதாயத்துக்குக் கொடுப்பது என்று வாக்களித்தது. தற்போதய அவுஸ்திரேலியப் பிரதமர் Kevin Rudd இந்தச் சம்பிரதாயபூர்வமான பொது மன்னிப்பு எப்படி அமையவேண்டும் என்று பூர்வகுடிகளின் தலைவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுத்திருப்பதாகக் கூறியிருக்கின்றார்.
இவ்வாரம் பெப்ரவரி 13 ஆம் திகதி, புதன் கிழமை, அவுஸ்திரேலிய தேசிய பாராளுமன்றில் வைத்து காலை 9 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது.

இந்த அரசு இப்படியானதொரு செயற்பாட்டில் இறங்கியிருப்பது உண்மையில் பாராட்டப்படவேண்டிய விடயம். ஆனால் வெறும் வெற்றுக் காகித மன்னிப்புக்கள் அடுத்த தேர்தலுக்கான வாக்கு வங்கிக்கான முதலீடாக மட்டுமே அமையும். உளப்பூர்வமான, நேர்மையான அரசாக இருக்கும் பட்சத்தில் இந்தத் தொலைந்த தலைமுறைக்கு நிரந்தரமான இழப்பீட்டுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். கூடவே அமெரிக்காவின் அடியாளாக இருந்து மற்றைய நாடுகளின் இறைமைக்குள் மூக்கை நுளைத்து அவுஸ்திரேலியா எல்லை கடந்த நாடுகள் மீதான எல்லை கடந்த பயங்கரவாதத்தை நிறுத்தி அந்தந்த நாடுகளில் நிமிஷத்துக்கு நிமிஷம் திருடப்பட்டு வரும் மனித உரிமைகளையும் காக்க முன்வர வேண்டும். இவையெல்லாம் செய்தால் மன்னிப்பே தேவையில்லை, மண்டியிட்டு வணங்குவார்கள் அம்மக்கள்.

அவுஸ்திரேலியப் பிரதமர் Kevin Rudd இன்று பாராளுமன்றத்தில் கோரிய பொதுமன்னிப்பின் ஒளிப்பகிர்வு

பிரதமரின் இந்தச் சம்பிரதாயபூர்வ மன்னிப்புக் கேட்டலில் அடங்கியிருக்கும் அம்சங்கள் இவை தான்:

“Today we honour the Indigenous peoples of this land, the oldest continuing cultures in human history.

“We reflect on their past mistreatment.

“We reflect in particular on the mistreatment of those who were stolen generations – this blemished chapter in our nation’s history.

“The time has now come for the nation to turn a new page in Australia’s history by righting the wrongs of the past and so moving forward with confidence to the future.

“We apologise for the laws and policies of successive Parliaments and governments that have inflicted profound grief, suffering and loss on these our fellow Australians.

“We apologise especially for the removal of Aboriginal and Torres Strait Islander children from their families, their communities and their country.

“For the pain, suffering and hurt of these stolen generations, their descendants and for their families left behind, we say sorry.

“To the mothers and the fathers, the brothers and the sisters, for the breaking up of families and communities, we say sorry.

“And for the indignity and degradation thus inflicted on a proud people and a proud culture, we say sorry.

“We the Parliament of Australia respectfully request that this apology be received in the spirit in which it is offered as part of the healing of the nation.

“For the future we take heart; resolving that this new page in the history of our great continent can now be written.

“We today take this first step by acknowledging the past and laying claim to a future that embraces all Australians.

“A future where this Parliament resolves that the injustices of the past must never, never happen again.

“A future where we harness the determination of all Australians, Indigenous and non-Indigenous, to close the gap that lies between us in life expectancy, educational achievement and economic opportunity.

“A future where we embrace the possibility of new solutions to enduring problems where old approaches have failed. peA future based on mutual respect, mutual resolve and mutual responsibility.

“A future where all Australians, whatever their origins, are truly equal partners, with equal opportunities and with an equal stake in shaping the next chapter in the history of this great country, Australia.”

உசாத்துணை மற்றும் படங்கள்:
International Herald Tribune: www.iht.com
Wikipedia: www.wikipedia.org
European Network for Australian rights: www.eniar.org
www.news.com.au/

02 December 2008 இல் எழுதப்பட்ட பதிவு இது

One response so far

Oct 03 2011

சிட்னி வந்தால் "Jenolan Caves" போங்கோ

Published by under Uncategorized

சிட்னிக்கு அலுவலக விஷயமாக வருபவர்களோ அல்லது சுற்றுலாவுக்காக வருபவர்களோ என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான். “சிட்னியில் சுற்றிப் பார்க்க உருப்படியான இடம் எது?, வெறும் பீச் இற்கு மட்டும் தான் போகவேண்டியிருக்கே” என்று சலிப்பார்கள். அவர்களுக்கு நான் முதலில் கைகாட்டி விடும் இடம் இந்த “Jenolan Caves”.

பொதுவாகவே ஆதிவாசிகள் என்றால் இயற்கையின் சீற்றத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள குகைகளை நாடுவார்கள். அப்படியாக முன்னொரு காலத்தில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான Aborigines வாழ்விடமாக Jenolan Caves என்ற குகைகளே இருந்து வந்திருக்கின்றன. ஐரோப்பியர்களின் கண்ணில் பட்ட கங்காரு தேசம் நாளடைவில் அவர்களின் கழுகுக் கண்களில் இருந்து இந்தக் குகைகளும் தப்பி விடவில்லை. James Whalan என்ற உள்ளூர் குடியானவரின் பார்வையில் தான் இந்தக் குகைகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வருஷம் 1838 ஆம் ஆண்டு என்று கொள்ளப்படுகின்றது.

James Whalan மற்றும் Charles இன் முயற்சியால் இந்தப் பகுதியில் இருந்த பல குகைகள் கண்டுபிடிக்கப்பட்டு நாளடைவில் அவை முக்கியமான சுற்றுலாத் தலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இன்று நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் செல்லும் இடமாக இந்த “Jenolan Caves” மாறி விட்டது.

இந்த “Jenolan Caves” பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்து ஒவ்வொரு குகைகளாகப் பார்ப்போரும் உண்டு. ஆனால் ஏதாவது ஒரு நல்ல குகையைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தாலே போதுமானது. ஒவ்வொரு குகைகளைப் பார்ப்பதற்கும் தனித்தனிக் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. இவை பெரியவர்களுக்கு 27 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து ஒவ்வொரு குகையின் தன்மையைப் பொறுத்து வேறுபடுகின்றது. முழுமையான விபரங்களைப் பெற்றுக் கொள்ள இங்கே செல்லுங்கள்.

ஒவ்வொரு குகைகளைப் பார்ப்பதற்கும் ஒவ்வொரு நேரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. பேய்கள் உலாவும் குகை கூட இருக்கிறதாம். கிடுகிடுகிடுகிடு
எந்தக் குகைக்குப் பயணிக்க வேண்டும் என்று நுளைவுச் சீட்டை வாங்கியிருக்கிறீர்களோ அந்தக் குகை முகப்பிற்குச் செல்ல வேண்டும். பின்னர் அந்தக் குகையைச் சுற்றிக்காட்ட நியமிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டி ஒருவர் வந்தது, குறித்த குகையின் பெருமையைச் சிலாகித்துப் பேசி விட்டு எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாக விளக்கம் சொல்லிக் காட்டுவார். கிட்டத்தட்ட 45 நிமிட நேரம் இந்தக் குகைப் பயணம் இருக்கும். கரடு முரடான பாதையாக மேலும் கீழும் ஏறி இறங்கும் பயணமாக இருந்தாலும் களைப்பே தெரியாத அளவுக்கு உள்ளே லேசான குளிரோடு இயற்கை செதுக்கி வைத்த நவீன காலச் சிற்பங்களாய் பவளப்பாறைகள் ஒவ்வொன்றும் தென்படும் காட்சிகளைக் காணும் போது உள்ளத்தில் உவகை வந்து சேரும். சில பகுதிகளில் வண்ண வண்ண விளக்குகளை இட்டு அலங்கரித்திருக்கின்றார்கள். இந்தக் குகைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்குள் திருமணம் முடிக்க வேண்டும் என்று மல்லுக்கட்டுபவர்களுக்கும் வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன.

சுற்றுலா முடித்து வெளியில் வந்தால் பசி எடுக்கிறதா, அங்கேயே நல்ல உணவகமும் உண்டு. கூடவே “Jenolan Caves” இற்கு வந்து போனதன் ஞாபகமாக வாங்கி வைக்க ஞாபகச் சின்னங்களை விற்கும் கடையும் உண்டு.

Blue Mountains என்ற இன்னொரு முக்கிய சுற்றுலா மையத்துக்கு அருகைமையிலேயே இந்த இடம் இருப்பது இன்னொரு வசதியான அம்சமாகும். நாளாந்தம் சுற்றுலாப் பயணிகளை இந்த இடங்களுக்கு ஏற்றிச் செல்லும் Sydney Explorer பஸ் வசதியும் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த இடத்திற்கு நேரடியான புகையிரதச் சேவை கிடையாது. சொந்த வாகனத்தில் வருபவர்களும் தாராளமாகப் பயணிக்கலாம். குறுகலான பாதையாக மலையைச் சுற்றுச் சுற்றி மேல் முகட்டுக்கு வருவதற்குள் ஒவ்வாமையால் வாந்தி/சத்தி வருபவர்களும் உண்டு. இன்னொரு விஷயம், இந்த இடத்துக்கு சொந்த வாகனத்தில் பயணிக்கும் போது வாகனத்தில் தாராளமாக எரிபொருள் உள்ளதா எனச் சரி பார்த்த பின்னரே பயணப்படுங்கள். காரணம், இந்த இடத்துக்குப் பயணிக்கும் கிட்டத்தட்ட 45 நிமிட சுற்று வட்டாரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் காணக்கிடைப்பதே அபூர்வம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று மலையின் இடையில் இருந்த ஒரு எரிபொருள் நிரப்பு நிலையமும் போன தடவை போனபோது இழுத்து மூடப்பட்டிருந்தது.
ஒகே, சிட்னி வந்தால் “Jenolan Caves” போங்கோ, போயிட்டு வந்து அனுபவத்தைச் சொல்லுங்கோ

பிற்குறிப்பு: இந்தப் பதிவு ஏற்கனவே கங்காரு கொவாலாவும் காய்ஞ்ச புல்லும் என்ற அவுஸ்திரேலியக் கூட்டு வலைபதிவில் இட்டிருந்தேன். இனிமேல் தொடந்து இனிமேல் அவுஸ்திரேலிய நடப்பு வாழ்வியல்/வரலாறு/அரசியல்/புவியியல் சார்ந்த என் பதிவுகள் என் தனித்தளமான உலாத்தல் பதிவில் இடம்பெறும் என அறியத்தருகின்றேன்.

2 responses so far

Next »