Filed Under Uncategorized


நான் தாய்லாந்து உலாத்தலைத் திட்டமிட்டபோது அதன் ஒரு அங்கமாக அங்கிருக்கும் நம் பதிவர்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தபோது நண்பர் ஆயில்யன் தான் என்னை விட முனைப்பாக தாய்லாந்தில் இருக்கும் பதிவர்களைத் தேடத் தொடங்கினார். அப்படியாக முதலில் வந்தவர் தான் வலைப்பதிவுலகில் நீண்ட காலம் இருந்து வரும் நண்பர் மாயவரத்தான். இன்னொருவர் அபி அப்பாவின் நண்பர் நிஜாமுதீன். நிஜாமுதீனுக்கு கானா பிரபா என்ற பெயரில் ஒரு பதிவரே இருப்பது நான் அவரைத் தொடர்பு கொண்டு பேசிய நாள் வரை தெரியாது. “நீங்க அபிஅப்பா ஊரா, உங்க பேச்சு சிலோன் தமிழ் மாதிரி இருக்குல்ல” என்று சிபிஐ ரேஞ்சுக்குப் போய் விட்டார் ;-). ஒருவாறு என்னைப் பற்றி தமிழ் மண நட்சத்திர வாரத்தில் கொடுத்த சுய அறிமுகம் கணக்காகச் சொல்லிப் புரியவைத்தேன். நான் அங்கே போன நேரம் நோன்பு காலம் என்பதால் இருவரும் பல தடவை நேரங்களை மாற்றி மாற்றி நம் சந்திப்புக்கு ஒதுக்கி இருந்தாலும் இறுதி வரை அது கை கூடவில்லை. பின்னர் அடுத்த முறை தாய்லாந்து வரும் போது சந்திக்கலாம் என்று முடிவெடுத்துக் கொண்டோம்.
நண்பர் மாயவரத்தானைத் தொடர்பு கொண்ட போது அவர் தன் தேசத்துக்கு வந்தவரை நேசத்தோடு வரவேற்றதோடு எப்போது சந்திக்கலாம் என்று ஆர்வப்பட்டார். அதற்கு முன்பு வரை மாயவரத்தானோடு அதிகம் தொடர்பில் இருக்காத எனக்கு அவரின் நட்பின் நேசம் கண்டு உண்மையிலேயே மனதுக்குள் மகிழ்ந்து போனேன். நாம் சந்திக்கப் போகும் இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாய்லாந்தின் இந்து ஆலயமான பாங்கொக் மஹா மாரியம்மன் ஆலயமாக அமைந்தது இன்னொரு சிறப்பு ;-).

மஹாமாரியம்மன் ஆலயத்துக்கு காலையில் சீக்கிரமாகவே கிளம்பி வந்து விட்டேன். காலைப் பூசையைப் பார்க்கலாமே என்ற ஆர்வக் கோளாறு வேறு. ஏழு வருஷங்களுக்கு முன்னர் தாய்லாந்துக்கு வேலை விடயமாக வந்தபோது பார்த்த ஒரே சுற்றுலாத்தலமாக இந்த ஆலயம் மட்டுமே இருந்தது. கோயில் சுற்றில் பூக்கடைகள் தமிழ்ப்பெயர்களோடு தென்பட்டதைக் கண்டு கண் குளிர்ந்தேன். கோயிலில் அறிவிப்பு பலகைகள் எல்லாம் தாய் மொழியில் தான் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து வந்த நாதஸ்வர, மேளக் குழுவினர் காலைப் பூசையில் கலந்து இசைபரப்புகின்றார்கள்.

Silom என்ற பகுதியில் இருக்கும் இந்த மாரியம்மன் ஆலயம் Wat Khaek என்று தாய்லாந்து மொழியில் அழைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் இருந்து வணிகம் செய்ய வந்த யாதவ சமூகத்தின் வழி வந்தவரால் 1879 ஆம் ஆண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டது. இன்று அவரின் தலைமுறையில் வந்தவரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தசரா எனப்படும் நவராத்திரி கழிந்த பத்தாவது நாளை மையப்படுத்தி ஆலயத்தில் பத்து நாள் வருடாந்த மகோற்சவம் இடம்பெறும். அப்போது இந்தியாவில் இருந்து கலைஞர்கள் இந்த மகோற்சவ காலத்தில் இங்கு வந்து தம் கலை நிகழ்ச்சிகளை வழங்குவார்கள். ஆலயத்தின் மூலவர் தெய்வம் உமா தேவி தவிர சிவன், விஷ்ணு, பிள்ளையார் என்று பரிவார மூர்த்திகளுக்கும் சிறு சிறு உட்பிரகாரங்கள் உண்டு. இந்துக்கள் என்னும் போது தாய்லாந்தின் இந்து மதத்தைப் பின்பற்றும் தாய் மக்களும் இந்த ஆலயத்திற்கு நிதமும் வந்து போகின்றார்கள்.
இந்த ஆலயம் பற்றி நண்பர் மாயவரத்தான் பின்னூட்டம் வழி பகிர்ந்த வரலாற்றுக் குறிப்புக்களைத் தருகின்றேன்.
மாரியம்மன் ஆலயத்தைக் கட்டியவர் மாயவரத்திற்குப் பக்கத்தில் இருந்து வந்த செட்டியார் ஒருவர். வைத்தி செட்டியார் என்ற அவர் மாடு வியாபாரம் செய்து வந்தார். செட்டியார் எப்படி மாடு வியாபாரம் - அதுவும் அந்தக் காலத்தில் என்றெல்லாம் குழம்ப வேண்டாம். அவர் உண்மையில் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர். மாடு வியாபாரம் நிமித்தம் ரங்கூனுக்கு அடிக்கடி சென்று வந்தார். அந்தக் காலத்தில் அங்கே ரங்கூனில் செட்டியார் சமூகத்தினர் அதிகம் அல்லவா? எனவே அவரையும் ரங்கூன் மக்கள் செட்டியார் ஆக்கிவிட்டார்கள் என்றுக் கேள்வி. இந்த வைத்தி செட்டியார் அவர்கள் மாடுகளோடு கப்பலில் ரங்கூன் சென்ற போது புயலடித்து இங்கே தாய்லாந்தில் கரை ஒதுங்கி காடாகக் கிடந்த சிலோம் சாலையில் மாரியம்மன் ஆலயத்தைக் கட்டினார். மாரியம்மன் ஆலயம் இருக்கும் சாலையின் ஒரு பக்கம் இன்றும் ‘சோய் வைத்தி’ என்று அவர் பெயரால் அழைக்கப்படுகிறது. ‘சோய்’ என்றால் ‘தெரு’ என்று அர்த்தம்.
கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே இறை தரிசனத்தில் மூழ்கினேன். காலைப் பூசை வழக்கம் போல நடந்து முடிகிறது. எல்லோருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு கூட்டம் கலைகிறது. நான் ஆலயத்தின் ஒரு பக்கமாக நின்று கொண்டிருக்கிறேன். ஒருவர் குந்து ஒன்றில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பார்த்தால் அவர் ஈழத்தில் இருந்து வந்தவர் போல இருந்தது. என்னை அறிமுகப்படுத்திப் பேச்சுக் கொடுத்தேன். என் கணிப்பு சரியாகத் தான் இருந்தது. ஈழத்தின் மட்டுவில் பிரதேசத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்னர் தாய்லாந்து வந்ததாகச் சொன்னார். அவரோடு ஊர்ப்புதினங்களைப் பேசிக் கொண்டிருந்த போது அவரின் நண்பர் ஒருவரும் வந்தார். அவர் கரவெட்டியாம். இன்னொரு தேசத்தில் இப்படி நம் நாட்டவர்களை திடீர் சந்திப்பில் கண்டது மகிழ்வாக இருந்தது. தாய்நாட்டின் அவல வாழ்வில் இருந்து தப்பிப் பிழைக்கக் கடல் கடப்போருக்கு தாய்லாந்தும் ஒரு தற்காலிகப் புகலிடமாகின்றது. ஆனால் அங்கேயும் எம்மவருக்குப் பலவிதமான சோதனைகள். பத்து வருஷங்களுக்கு முன் ஈழமுரசு பத்திரிகையில் இந்த அவலங்கள் தொடராக வந்ததைப் பலர் படித்திருக்கக் கூடும். பாங்கொக்கின் புற நகர்ப்பகுதிகளில் ஈழ அகதிகள் பலர் வாழ்வதாகச் சொன்னார்கள். ஈழத்தவர்களால் காட்டு அம்மன் கோயில் என்றொரு கோயிலும் நிறுவப்பட்டிருக்கிறதாம். எவ்வளவோ முயற்சி செய்தும் அங்கு போக வேளை வாய்க்கவில்லை.
மாயவரத்தானை இன்னும் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த போது எம்மை தூரத்தில் நின்று ஒருவர் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். மெதுவாக எம் பக்கம் வந்து என்னைப் பார்த்து “நீங்களா பிரபா?” என்றார். “நானே தான் நண்பா” என்று அவரின் கையை இறுகப் பற்றிக் கொண்டேன். “உங்க பிளாக்ல போட்ட போட்டோவைப் பார்த்தது அந்தக் கணிப்பில் வந்தேன். ஆனா உருவ அமைப்பு வித்தியாசமா இருக்கே” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் மாயவரத்தான்.
மாயவரத்தானும் மடத்துவாசல் பிள்ளையாரடியும்
வலைப்பதிவுலகம், நாட்டு நடப்புக்கள் என்று சுற்றிவிட்டு, தாய்லாந்துக்குப் படையெடுக்கும் சினிமா ஷூட்டிங்குகளில் நடந்த சுவாரஸ்யமான அவலங்கள், தாய்லாந்தில் தமிழ் முயற்சிகள் குறிப்பாக தமிழ்ப்பாடசாலை பற்றியும், தான் எடுக்க இருக்கும் எதிர்கால முயற்சிகுறித்தும் ஆர்வத்தோடு பேசினார்.

தமிழ்நாடு ரெஸ்டாரண்ட் முபாரக் உடன் மாயவரத்தான்
மாயவரத்தானின் அலுவலகம் போய் விட்டு பின்னர் நாம் சென்றது தமிழ்நாடு ரெஸ்டாரண்ட். இதனை பாண்டிச்சேரியைச் சேர்ந்த முஸ்லீம் அன்பர் நடத்துகின்றார். பாங்கொக்குக்கு வந்து தமிழ்ச்சாப்பாட்டைத் தேடுவோருக்கு வாய்க்கு ருசியாகச் சமைத்துக் கொடுக்கிறார்கள். நாம் போன போது உணவகத்தின் உரிமையாளரின் உறவினர் முபாரக் இருந்தார். அவரோடு பேசிக் கொண்டே காலை உணவை முடித்தோம். பின்னர் மாயவரத்தானின் அப்பார்ட்மெண்ட் சென்று தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். விகடனில் மாணவப்பத்திரிகையாளனாகச் சேர்ந்த நாள் முதல் இது நாள் வரை தான் எழுதிய கட்டுரைகளைச் சேர்த்த தொகுப்பைக் காட்டினார். முதல் பக்கத்தில் “தலைவர் ரஜினி” படத்தோடு
1990 களில் இருந்து அவரின் ஆக்கங்கள் சேமிக்கப்பட்டிருந்தன. மாயவரத்தான் யார் என்று தெரியாத நாட்களில் அவரின் ஆக்கங்களை விகடனில் படித்த நினைவுகளை மீண்டும் அந்தத் தொகுப்பைப் புரட்டியபோது மீள நினைவு படுத்தியது. வீட்டில் கிடைத்த பழரசம், சமோசாவோடு அடுத்து நாம் சென்றது மாயவரத்தானின் நண்பர் ஒருவரின் அலுவலகத்துக்கு. அவர் நண்பர் கோவையில் இருந்து வந்திருந்தார். அங்கும் நம் பேச்சுக் கச்சேரி தொடர்ந்தது.

புதிய சென்னை உணவகத்தின் நண்பர்களுடன் நான்
மதிய உணவு நேரம் நாம் சென்ற இடம், ஈழத்தவர்களால் நடத்தப்படும் புதிய சென்னை உணவகம். உள்ளே அச்சு அசல் யாழ்ப்பாணக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
“அண்ணை என்ன சாப்பிடப் போறியள்” என்று எங்கள் முன்னால் வந்து நின்றார் ஒரு இளைஞன். அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த சொரூபன். ஊர்ப்புதினங்களை அவரோடு ஆசை தீரப் பேசிக் கொண்டே மதிய உணவைச் சாப்பிட்டோம். ஈழத்தவர்கள் பலர் இங்கே மாலை வேளைகளில் வருவதாகச் சொன்னார். சொரூபனோடு அங்கே இருந்த யாழ் நண்பர்களையும் சந்தித்துப் பேசினேன். மாயவரத்தான் எங்கள் மொழி புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்.
மதியம் கடந்து பள்ளிக்கூடம் விடும் நேரமாகி விட்டது.மாயவரத்தான் தன் மூத்த மகனை அழைப்பதற்காகச் செல்ல வேண்டும். “நீங்களும் வாங்க பிரபா, என்று என்னையும் அழைத்துக் கொண்டே அவர் மகனின் பள்ளிக் கூடம் போனோம். தகப்பனின் வருகைக்காகக் காத்திருந்தார் ஜீனியர் மாயவரத்தான், வயசு எட்டு. அழகாகத் தமிழ் பேசுகிறான்.
மாயவரத்தான் தன்னுடைய சகோதரி அவுஸ்திரேலியாவில் இருப்பதை வைத்து இந்தக் கேள்வியை மகனிடம் கேட்கிறார்.
“இந்த அங்கிள் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறார், ஆஸ்திரேலியாவில் வேறு யாரெல்லாம் இருக்காங்க சொல்லு பார்ப்போம்?”
“இவங்களை மாதிரி இன்னும் நிறையப் பேர் அங்கே இருக்காங்க” - இது ஜீனியர் மாயவரத்தான்.
பாங்கொக் பயணம் மாயவரத்தான் என்ற நல்ல நண்பரைச் சம்பாதித்தது.
Filed Under Uncategorized
அந்த ஒரு நாள் சுற்றுலாவுக்காகப் பதிந்த சுற்றுலாப்பயணிகளிடம் “யாரெல்லாம் யானைச் சவாரி செய்ய ஆசைப்படுகின்றீர்கள்? கையைத் தூக்குங்களேன்” என்றார் பஸ்ஸுக்குள் இருந்த எங்களைப் பார்த்து, சுற்றுலா முகவர். ஆனையாரின் முதுகில் சவாரி செய்வது என் வாழ் நாள் இலட்சியம், அது இவ்வளவு சீக்கிரம் ஈடேறுகிறதே என்ற மகிழ்ச்சியில் ஆசையோடு கையைத் தூக்கிக் கொண்டே பஸ்ஸில் சுற்றும் பார்க்கிறேன்.கூடவந்தவனெல்லாம் கப்சிப் என்று ஏவிஎம் சரவணன் மாதிரி கையைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். “சரி! உங்களை மட்டும் Elephant village இல் விட்டு விட்டு அரை மணி நேரத்தில் வந்து கூட்டிக் கொண்டு போகின்றோம்” என்று என்னிடம் சொல்லி விட்டு சொன்ன படியே என்னை Elephant village என்ற இடத்தில் இறக்கினார்கள்.

யானைச் சவாரி செய்ய அதிகமில்லை ஜென்டில்மன் வெறும் 500 தாய்லாந்து பாட் தான். கிட்டத்தட்ட 12 டொலர்கள். காசைக் கட்டி விட்டு நின்ற என்னை மரச்சட்டங்கள் பதித்த மாடி ஒன்றுக்கு ஏறுமாறு பணித்தார்கள். அங்கே நின்று தான் யானையாரின் முதுகில் உட்கார வேண்டும். அந்த மரச்சட்ட மாடியின் மேல் பிள்ளையார் சிலையும் உண்டியலும் இருந்தது. ஒரு ரவுண்ட் அடித்து விட்டு யானையார் நான் நின்ற மாடிக்கு வருகிறார். என்னை அவரின் மேல் இருக்குமாறு கையைக் காட்டுகிறார்கள். மெல்ல மெல்ல நிதானமாக காலைச் சவட்டி யானையாரின் முதுகின் மேல் இருந்த பெட்டியில் இருக்கிறேன். அதில் சீற்றும் , பெல்டும் இருந்தது. பெல்டைப் போடுகிறேன்.
முன்னே பாகன் வழிகாட்ட யானையார் மெதுவாக நடக்கிறார். அடர்ந்த புதர்ப்பத்தைகளின் நடுவே இருக்கும் குறுகலான பாதையால் மெல்ல நடக்கிறோம். யானையாரின் முதுகு வெயிலுக்கு வெடித்த தார் ரோட் மாதிரி இருக்கு. லேசான லத்தி வாடையும் நாசியைத் துளைக்கிறது. கொஞ்சம் பயம், நிறைய சந்தோஷமாக யானைச் சவாரி மெல்ல நடை பழகுகிறது.
மவனே! என் முதுகில் ஏறிச் சவாரி செய்கிறாயா? உன்னை அப்படியே…. என்ற கணக்காய் பாதையை விட்டு விலகி புதர்ப்பக்கமாகத் திரும்புகிறார் யானையார். தாய்லாந்து மொழியில் அவரைத் திட்டியவாறே கையை பாதைப்பக்கமாகக் காட்டுகிறான் பாகன். கூடவே என் கமராவை வாங்கிப் படம் எடுப்பதற்கும் தயாராகிறான். ஆனால் யானையார் செம கடுப்பில் இருக்கிறார் போல, பாகன் படம் எடுப்பதுக்கு யானையாரை நிற்குமாறு பணித்தாலும் அவர் கேட்ட பாடில்லை, முன்னே முன்னே நகர்ந்து வருகிறார். கையில் இருந்த முசத்தால் கண்ணுக்குள் குத்தி விடுவது போல பாகன் பாவனை காட்ட பயத்தோடு நிற்கிறார்.அந்த சமயம் பார்த்து பாகன் பின்னால் போய் கமராவை சரிபார்க்க ஆரம்பிக்க, யானையார் மீண்டும் நகர்கிறார். மீண்டும் பாகன் முசத்தால் வெருட்டுகிறான். யானையார் தாமதிக்கிறார். இப்படி இவர்கள் இரண்டு பேரின் கண்ணாமுச்சியில் நான் அகப்பட்டு நிற்கிறேன். பின்னர் பாகனும் என்னோடு யானைச் சவாரியில் பங்கு போட யானையார் முதுகில் ஏறி சதுப்பு நீரோடைப்பக்கம் யானையாரைத் திசை திருப்புகின்றான். அறுந்து போவான் சேத்துக்குள்ளாலை எல்லாம் நடக்க விடுகிறான் என்று யானையார் நொந்திருப்பார். ஒருவாறு அரைமணி நேர யானைச் சவாரி முடிந்து இருப்பிடம் வருகிறோம். களைப்பைப் போக தண்ணீர் தரப்படுகிறது. எனக்காகக் காத்திருக்கிறார் சுற்றுலா வழிகாட்டியும், கூடவந்த பஸ்ஸும். அடுத்து நாங்கள் சென்றது தான் முந்திய உலாத்தல் பதிவில் பார்த்த தாய்லாந்தின் மிதக்கும் சந்தை (Damnoen Saduak).



மிதக்கும் சந்தைச் சுற்றுலா முடிந்து அடுத்த உலாத்தலுக்கு முன்னர் இரண்டு பகுதிகளாகச் சுற்றுலாப் பயணிகள் பிரிக்கப்பட்டு இரு வேறு உலாத்தல்களுக்காகத் திசை திருப்பபடுகின்றனர். என்னுடன் கூட வந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே என் பஸ்ஸில் இருக்க புதிதாக சில தலைகள் வந்து சேர்கின்றன. அதில் ஒருத்தி தான் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த ஒரு இந்தியப் பெண்ணும், அவள் நண்பியான பிரென்சுக்காரியும் , இன்னும் இரண்டு ஜப்பானியப் பெண்களும். நாங்கள் முதலில் சென்றது வயிற்றுக்கு வஞ்சனை செய்யக்கூடாது என்ற நோக்கில் ஒரு மதிய உணவகத்துக்கு. அதை ஒழுங்கு செய்து பணம் கட்டியதும் சுற்றுலா முகவர் தான். அந்த ஒரு நாள் சுற்றுலாக் கட்டணத்தில் மதிய உணவும் அடக்கம். நல்ல மீன் கறியும், தாய்லாந்து கோழி மிளகாயில் சங்கமாய்க் கிடந்த கறியுடன் சோறும் வருகிறது. அந்தப் பிரெஞ்சுப் பெண்களும், ஜப்பானிய பெண்களும் என் மேசையில் தான் வந்து இருக்கிறார்கள். அவர்களாக ஒவ்வொருவரை அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த இந்தியப் பெண், தன் தாய் தந்தையின் சொந்த ஊர் பொச்சிரி, பொச்சிர் என்றாள். என்னடா இது இப்படி ஒரு ஊரா என்று மூளைக்கு வேலை கொடுத்துக் கண்டு பிடித்தேன். அட! பாண்டிச்சேரி 
அந்தப் பாண்டிச்சேரிக் குமரிக்கு வயசு 22, தன் கல்யாணத்துக்காக உடுப்பெடுக்க வந்திருக்கிறாளாம். பாரதிராஜா படங்களில் வருமே வெள்ளுடைத் தேவதை அந்த உடுப்புத்தானாம். என்னடா கொடுமை பிரான்சிலிருந்து இவ்வளவு மைல் கடந்து தாய்லாந்து வந்து சுற்றிப் பார்ப்பதென்றால் நியாயம், அதை விட்டு விட்டு உடுப்பெடுக்க ஏன் வந்திருக்கிறாள் என்று மனதுக்குள் குமைந்த என் நினைப்பை அடுத்த சில நாட்களில் மாற்றியது நானும் அந்த விஷயத்தில் கண்ட உண்மையை. அதைப் பிறகு சொல்கிறேன். சாப்பிட்டு விட்டு அந்த ப்ரென்சுக்காரியும் இந்திய யுவதியும் லாவகமாக சிகரட்டைப் பற்றுகிறார்கள். புகை வளைவில் கலாச்சாரம் வளையல்களாகப் போகிறது.

















அடுத்து நாங்கள் உலாத்தப் போனது யானைகளின் சாகசம் காண. யானைகளின் சகாசக் காட்சி நிலையம் செல்கிறோம். உள் நுளைந்தால் எடுத்த எடுப்பிலேயே தேவர் பிலிம்ஸ் புலி ஒன்று உயிரோடு, அதற்குப் பக்கத்தில் நின்று படம் கூட எடுக்கலாமாம். வேண்டாமய்யா இந்த விளையாட்டு என்று நகர்கிறேன் அந்த இடத்தை விட்டு.
யானைச் சாகசம் நடக்கும் திடலுக்குள் போய் உட்கார்கிறோம். முதலில் கண்கட்டு வித்தை நடக்கிறது. பெட்டிக்குள் போனவள் பின் கதவால் திரும்புகிறாள், தொப்பிக்குள் போன முயல் பறவையாக வருகிறது. இதெல்லாம் ஓய்ந்த பின்னர் யானைகள் மெல்ல மெல்ல அணிவகுத்து வருகின்றன. ஒவ்வொரு யானையும் வந்து வேடிக்கை காட்டி விளையாடுகின்றன. பார்க்கும் போது சுதந்திர தின அணிவகுப்புப் போல இருக்கிறது.
அடுத்து தாய்லாந்து நாட்டின் போரியல் வரலாற்றில் யானைப் படையின் பங்களிப்பினை ஒருவர் ஒலிபெருக்கியில் சொல்லச் சொல்ல காட்சிகள் கண்முன்னே நடக்கின்றன.கோட்டைக் கொத்தளங்களைப் தீப்பந்தங்களை எறிந்து தீமுட்டுகிறார்கள். பெரும் போர் நிகழ்கின்றது. இரண்டு நாட்டு யானைப் படைகளும் வாட் போர் புரிகிறார்கள். வென்றவன் கட்சி யானைகளில் இருந்து வீரர்களை மண்ணில் முத்தமிட வைக்கின்றான்.
அடுத்ததாக யானைகளின் உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி. அந்தப் போட்டிக்காக அடுத்த கட்ட யானைகள் தம்மோடு ஒவ்வொரு நாட்டுப் பெயர்பொறித்த விரிப்புக்களோடு வருகின்றன. ஒவ்வொரு அணிக்கும் நடக்கிறது கால்பந்து மோதல். யானைகள் லாவகமாக கோல் போட்டு விளையாடுகின்றன. இறுதி வெற்றி உருகுவே யானைக்காம் 

எல்லாம் முடிந்து அடுத்த பக்கத்தில் முதலைகளின் சாகசமும் காண்பிக்கப்படுகிறது. சிறுவன் ஒருவன் முதலையின் வாய்க்குள் தலையைக் கவிழ்ப்பதுமாக நடக்கிறது விளையாட்டு. அடுத்த உலாத்தலுக்கு நேரமானதால் நகர்கின்றோம் அந்த இடத்தை விட்டு.
















Filed Under Uncategorized

தாய்லாந்து உலாத்தல் அடிக்கடி தொடரமுடியாமல் இழுத்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பதிவுக்குமாக பொருத்தமான படங்களை ஏற்கனவே எடுத்திருந்த தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுத்துப் போடுவது தான் பெரும் வேலையாக இருக்கின்றது. எப்படியாவது வாரத்தில் இரண்டு தொகுப்பாவது போடவேண்டும் என்ற நினைப்போடு மீண்டும் தாய்லாந்து உலாத்தல் தொடர்கின்றது.
இம்முறை நான் பார்க்கச் சென்ற இடம் Damnoen Saduak என்ற பகுதியில் இருக்கும் மிதக்கும் சந்தை (Floating Market). Damnoen Saduak என்ற வாய்க்காலுக்கு இருமருங்கும் பெட்டிக்கடைகள் நிறைக்க, நடுவில் ஓடும் நீரோடையில் இந்த மிதக்கும் சந்தை வியாபாரம் களை கட்டுகின்றது. முன்னர் நான் கம்போடியாவில் பார்த்த மிதக்கும் கிராமம் போல மக்களில் முழுமையான வாழ்க்கையும் இந்த இடத்தில் கழிவதில்லை. மாற்றாக இங்கே கால்வாய்க்கு இருமருங்கிலும் அமைந்த பெட்டிக் கடைகளோடு, கூடவே கால்வாயில் பயணிக்கும் நீண்ட வள்ளங்களில் ஒவ்வொரு வியாபாரியும் தங்கள் பொருட்களை நிறைத்துக் கொண்டே நீர்ப்பாதையின் ஒரு அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தம் வரை பயணிப்பார். இந்த இடத்துக்குப் பொருட்களை வாங்க வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகள் தமக்கான வள்ளங்களில் கட்டணம் கொடுத்து ஏறிப் பயணித்துக் கொண்டே எதிர்ப்படும் இந்த மிதக்கும் கடைகளில் பேரம் பேசிப் பொருட்களை வாங்குவார்கள். இது நாள் முழுதும் தொடரும் வழக்கமாக இருக்கும்.
எனது அடுத்த நாள் பயணத்தில் தங்கியிருந்த ஹோட்டல் மூலம் ஒரு நாட் சுற்றுலாவை ஒரு பயண முகவரிடம் ஏற்பாடு செய்திருந்தேன். அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இருந்தது இந்த மிதக்கும் சந்தைக்கான சுற்றுலா. மினி வான் மூலம் என்னையும், வேறு ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்களையும் அழைத்துக் கொண்டு Damnoen Saduak நோக்கிப் பயணித்தது வாகனம்.
தாய்லாந்து அரசர் இராமா IV இன் ஆட்சிக்காலத்தில் இந்த Damnoen Saduak கால்வாய் தோண்டப்பட்டுப் பெயரும் சூட்டப்பட்டது. Samutsakorn மாகாணத்தில் இருக்கும் Taachin ஆற்றையும் Samutsongkram மாகாணத்தில் உள்ள Maklong என்ற ஆற்றையும் இணைத்து உள்ளூர்வாசிகளின் பயணச் சிரமத்தைக் குறைத்ததோடு அவர்களின் பொருண்மிய மேம்பாட்டை வளப்படுத்தும் முகமாவே இந்தக் கால்வாய்த் திட்ட்டம் அமைந்தது.
ராஜ்புரி என்ற மாகாணத்தின் கீழ் இருக்கும் இந்த Damnoen Saduak, பாங்கொக்கில் இருந்து சுமார் 100 கி.மீட்டர் பயணத்தில் இரண்டு மணி நேரத்தில் வந்து சேர்கிறோம். வாகனத்தில் இருந்த சுற்றுலா வழிகாட்டி “சரியாக ஒரு மணி நேரத்தில் மீண்டும் இந்த இடத்த்துக்கு வந்து விடுங்கள், இப்போது நீங்கள் விரும்பிய இடத்துக்குப் போகலாம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
கால்வாயின் மிதப்பில் வந்தால் ஒவ்வொரு பயணிகளையும் கூட்டாக இணைத்து கிட்டத்தட்ட பத்துப்பேர் கொள்ளுமளவுக்குச் சேர்த்த பின்னர் ஒவ்வொரு வள்ளமாகப் பயணத்தை ஆரம்பிக்கிறது. அந்தப் பயணத்திற்கான கட்டணமும் மிகக் குறைவு. வள்ளம் போக முன்னர் ஒவ்வொருவராகப் படம் பிடித்ததன் சூக்குமம் முதலில் புரியவில்லை. ஆனால் இந்தப் பயணம் முடிந்த பின்னர் வள்ளத்தில் இருந்து வெளியேறும் போது, ஏற்கனவே என்னைப் புகைப்படம் எடுத்த சிறுவன் என் முகம் பொறித்த பீங்கான் கோப்பை ஒன்றைக் காட்டி நினைவுப் பொருளாக வாங்க விருப்பமா என்று கேட்கிறான். விருப்பமிருந்தால் வாங்கலாம், இல்லாவிட்டால் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கலாம்.





வள்ளத்தில் இருந்தவாறே கால்வாய் ஓரமாக இருக்கும் கடைகளைப் பார்த்தவாறே நகர்கின்றேன். என் வள்ளத்தில் ஒரு ஜப்பானிய இளமங்கையும், ஐரோப்பாவின் ஏதோ ஒரு மொழி பேசும் இரண்டு வயதான தம்பதிகளும், மேலும் சில வெள்ளையர்களுமாக இருக்கின்றார்கள். எனக்கு முன்னே இருந்த ஜப்பானிய யுவதி அடிக்கடி தன் கமெராவைத் தந்து தன் போஸுக்கு படமெடுக்கச் சொன்னாள். பெண் என்றால் பேயும் இரங்கும் தானே 
இந்த வள்ளப் பயணத்தில் ஒரு தொழில் ரகசியத்தைக் கண்டேன். வள்ள ஓட்டுனருக்குப் பரிச்சயமான, அல்லது நட்பு வட்டாரத்தில் உள்ள கால்வாய் ஓரக் கடைகளைக் கண்டால் அந்தப் பக்கமாக வள்ளத்தைத் திருப்பி நிற்கின்றார். ஒரு சில நிமிடங்கள் அந்தக் கடைக்காரர் தன்னுடைய கடையில் உள்ள பொருட்களாகக் காட்டிக் காட்டி வியாபாரத்தை சில நிமிடங்களுக்குள் முடிக்க ஆசைப்படுகின்றார். 500 தாய்லாந்து பாட் இல் இருக்கும் சில பொருட்களை இப்படியே வள்ளத்தில் இருப்பவர் தன் வாய் வீச்சில் பேரம் பேசி 100 தாய்லாந்து பாட் வரை குறைக்கும் கொடுமையும் இருக்கிறது. எல்லா ஆசிய நாடுகளிலும் இருக்கும் பொதுவான பண்பு இது.



இந்த மிதக்கும் சந்தையில் உள்ள வியாபார நுட்பம் என்னவென்றால், அழகான காட்சிப்படுத்தல் மூலமும், ஒரு சில செக்கன்கள் மட்டுமே அவகாசம் இருக்கும் குறுகிய கால இடைவெளியில் தமது பொருட்களைப் பற்றி உயர்வாகப் பேசியும் குறித்த வியாபாரிகள் தமது விற்பனையை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. ஆனால் நான் பார்த்த அளவில் இந்த மிதக்கும் சந்தையால் பயணிகளைக் காவிச் செல்லும் வள்ளங்கள் ஈட்டும் வருமானம் தவிர, மிதக்கும் சந்தைகளின் விற்பனை மூலமான வருமானம் பெரிதாக இல்லை என்றே நினைக்கின்றேன். பெரும்பாலான கூட்டம் வேடிக்கை பார்த்தே சொல்கின்றது.
எமது கூர்மூக்கு வள்ளம் ஒரு அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தம் வரை அசைந்தாடிப் போகின்றது. மீண்டும் தன் கமராவைத் எனக்குத் தந்துவிட்டு தன் தலையைச் சிலுப்பிப் போஸ் கொடுக்கிறாள் அந்த ஜப்பானிய யுவதி.
தாய்லாந்தில் விளையும் ஆப்பிள், மங்குஸ்தான், அன்னமுன்னா (சீதாப்பழம்), வாழைப்பழம், மாம்பழம், கொய்யாப்பழம், மாதுளம்பழம் என்று பரப்பிய பழ வள்ளம் ஒரு புறம். தாய்லாந்தின் பாரம்பரிய விழுமியங்கள் சார்ந்த ஓவிய, கைவினைப் பொருட்கள் தாங்கிய வள்ளம் ஒரு புறம், தாய்லாந்துக்கே உரிய கூடைத் தொப்பிகளை நிறைத்த தொப்பிக்கடை வள்ளம் இன்னொரு புறம், கால்வாயில் பயணிக்கும் போது பசிக்கிறதா இருக்கவே இருக்கிறது சுடச்சுடத் தயாராகும் உணவு என்று சைவ அசைவ மாமிச வகையறாக்களோடு சுடச்சுட வெள்ளைச் சோறும், நூடுல்ஸ் பாத்திரங்களுமாக இன்னொரு சாப்பாட்டுக் கடை வள்ளம், தாய்லாந்தின் கொடுமையான வெயிலில் பியர் அடித்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பவருக்கு முன்னால் வருகிறது மதுபானப் போத்தல்களும், குளிர்பானங்களும் தாங்கிய வள்ளமொன்று,
சாப்பிட்டீர்களா இப்போது தாய்லாந்து இனிப்புப் பதார்த்தங்களையும் ஒரு கை பாருங்களேன் என்று சொல்லுமாற்போல தாய்லாந்தின் தனித்துவமான வாழைப்பழ பன் கேக் வகையறாக்களுடன் இன்னொரு இனிப்பு வள்ளம் என்று எதிர்ப்படும் ஒவ்வொரு வள்ளக் கடைகளும் விதவிதமான பொருட்களோடு கடைபரப்பி வலம்வருகின்றன. முதுமையின் விளிம்பில் இருக்கும் மூதாட்டி ஒருவர் தனியே தன் வள்ளத்தைத் தள்ளி அதற்குள் இருக்கும் வாழைப்பழங்களைக் காட்டிக் காட்டி விற்பனை செய்தது உருக்கியது.
தாய்லாந்தின் இன்னொரு முகம் பற்றி எல்லோருமே பரவலாக அறிந்த செய்தி. அதைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்வதற்கு முன், இந்த வள்ளப் பயணத்தில் நான் கண்ட ஒரு காட்சியையும் இங்கே சொல்லி வைக்கிறேன். எமக்குப் பக்கமாக இன்னொரு வள்ளம், அதிலே ஒரு 70 வயதைத் தொடும் ஒரு வெள்ளைக்காரக் கிழத்தோடு இருபதைத் தாண்டாத ஒரு தாய்லாந்து யுவதி. ஆணா பெண்ணா என்று அவளை எடை போடவே கஷ்டமாக இருக்கும் தோற்றத்தில் இருந்த அவள் முகம் வறுமையின் முகவரியைப் பறை சாற்றியது. தன் பார்ட்னராக வந்த வெள்ளைக்காரக் கிழவரிடம் யாசித்து, பக்கத்தில் போகும் தொப்பிக் கடை வள்ளத்தில் ஒரு தொப்பியை வாங்கிப் போட்டுக் கொண்டே குழந்தை மாதிரி அந்தக் கிழவரைப் பார்த்துச் சிரிக்கிறாள். மனசின் ஓரமாய் ஊசியால் குத்துவது போல இருக்கிறது. அந்தக் காட்சியைப் படம் பிடித்துக் கொண்டேன்.
நீலச்சட்டை தாய்லாந்து பெண்மணியோடு கூட்டி வந்த கிழவர்.
வானம் மெல்ல மழைத் துளிகளை ஊசிகளாக கீழ் நோக்கிச் செருகுகின்றது. நனைந்தபடியே முடிவிடம் நோக்கிப் பயணிக்கிறோம்.

















வரலாற்றுக் குறிப்புக்கள் நன்றி: தாய்லாந்து சுற்றுலாத் தளங்கள்
Filed Under Uncategorized
பாங்கொக்கில் தங்கியிருந்த முதல் நாள் சுற்றுலாவுக்காக நான் ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த சுற்றுலாகப் பணியகத்தின் வழிகாட்டி வந்து என்னை அழைத்துப் போனாள், எனக்காக ஹோட்டலின் எதிர்த்திசையில் கார் காத்து நின்று கொண்டிருந்தது. முதலில் நாங்கள் போன இடம் Wat Pho என்ற புகழ்பெற்ற பெளத்த ஆலயம். இருநூறு வருடங்களுக்கு முற்பட்ட பழமையான இந்த ஆலயத்தில் மிக நீண்ட சயன நிலையில் இருக்கும் தங்க நிறத்துப் புத்தரைப் பார்க்க என்றும் கூட்டம் இருக்கும்.
நாங்கள் போன நாள் பெளத்தர்களுக்கு ஒரு விஷேட நாளாக இருந்ததால் உள்ளூர் மக்களின் கூட்டமும் திரண்டிருந்தது. 45 மீட்டர் நீளமும் 15 மீட்டர் உயரமுமான அந்தப் புத்தரைப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கின்றது. ஆலயத்தின் உள்ளரங்கத்தில் ஒரு ஓரமாக வரிசை ஒன்று நீண்டு கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது. இந்த ஆலயத்துக்கான தனித்துவமான வழிபாட்டினை மேற்கொள்ள உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரஜைகள் என்ற பேதமில்லாமல் இருக்கின்றது அந்த வரிசை. தாய்லாந்து நாட்டுக்கே உரிய பாரம்பரிய மசாஜ் இந்த ஆலயத்தில் இருந்து தான் தோற்றம் பெற்றது என்று சொல்கின்றார்கள்.







ஆலயச் சூழலில் வலம் வரும் போது பள்ளிச் சிறுவர் கூட்டம் தம் கலாச்சாரச் சுற்றுலாவுக்காகத் திரள்வது தெரிகின்றது. கூடவே இன்னொரு பகுதியில் சிறுவர்களுக்கு பெளத்தமதப் பிரசாரத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றார் ஒரு துறவி. நான்கு மன்னர்களுக்கான நினைவிடங்களும் இங்கே அமைக்கப்பட்டு பெருமைப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.
தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தின் தந்தையான Hermit doctor (Ruesee) இன் உருவச் சிலையும் அவருக்கு முன்னே மருந்து தயாரிக்கப் பய்ன்படும் அம்மிக்குழவியும்


புத்தர் சிலையில் மினுமினுவென்று இருந்த தங்க மேற்பூச்சைச் சுரண்டித் தன் நெற்றியில் வைத்தாள் என்னுடன் வந்த வழிகாட்டி. அதை நெற்றியில் இடுவதால் புத்தரின் அனுக்கிரகம் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாம். பலர் இப்படிச் சுரண்டியதால் புத்தர் நிறமிழந்து போய்க் கொண்டிருக்கிறார்.
Grand Palace Complex
1782 இல் முதலாம் இராமா என்ற அரசரின் ஆளுக்கைப் பிரதேசமாக மாற்றப்பட்ட இந்தப் பகுதி 218,400 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அரச வாசஸ்தலத்தோடு, Emerald Buddha என்ற பெளத்த வழிபாட்டிடமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்துக்குப் போகும் போது இன்னொரு கட்டுப்பாடும் விதிக்கப்படுகின்றது. அதாவது ஆண்கள், பெண்கள் என்று எல்லோருமே அவர்களுக்கு கொடுக்கப்படும் தனித்துவமான முழுநீளக்கை கொண்ட ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும் என்பது விதிவிலக்கற்ற விதிமுறை.




Temple of the Emerald Budda (Wat Phra Kaew)
கி.பி 14 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தர் சிலையைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் இது என்று கொள்ளப்படுகின்றது. தாய்லாந்து நாட்டுக்கே உரிய சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த, தங்க நிறத்தில் தகதகக்கும் இவ் ஆலயத்தின் உட்சுவரில் இராமாயணக் கதையைச் சித்திரமாகத் தீட்டியிருக்கின்றார்கள். கம்போடியா நாட்டின் புகழ்பெற்ற அங்கோர் வாட் ஆலயத்தின் மாதிரி அமைப்பை இங்கே உருவாக்கி இருக்கின்றார்கள்.

Temple of the Dawn (Wat Arun)
கைமர் மன்னர்களின் தனித்துவமான கட்டிட அமைப்பினைக் கொண்ட மிக நீண்ட ( கிட்டத்தட்ட 105 மீட்டர்) கூம்பு வடிவக் கூரையைக் கொண்ட இவ்வாலயத்தில் இந்து சமயக் கடவுளர்களின் சிலைகள் இருப்பது குறிப்பிட வேண்டிய ஒரு அம்சம். அந்த வகையில் சிவன், இந்திரன், பிரம்மா, சக்தி போன்ற கடவுளர்களின் உருவச் சிலைகள் காணக்கிடைக்கின்றன. ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா, இந்த Wat Arun என்ற ஆலயப் பெயரில் Arun என்பது இந்தியக் கடவுளரான அருணனைக் குறிக்கின்றது என்கிறார்கள்.
ஆமாம், உதயத்துக்கான ஆலயம் என்று சிறப்பிக்கப்படும் இக்கோயில் அருணன் என்று இன்னொரு பெயரால் அழைக்கபடும் சூரியனின் கோயிலாகவே கொள்ளப்படுகின்றது.































உசாத்துணை: தாய்லாந்து வழிகாட்டி, சுற்றுலா வழித்தகவல் குறிப்புக்கள்
Filed Under Uncategorized

தாய்லாந்துக்கு விசா தேவையா இல்லையா என்ற குழப்பத்துடன் நான் இருக்க பாங்கொக்கின் ஸ்வர்ணபுரி விமான நிலையத்தில் தன் கால்களைப் பதித்து சிங்கப்பூர் விமான சேவையின் இயந்திரப் பருந்து. விமான நிலையத்துக்குள் புகும் போது குடிவரவுப் பகுதிக்குள் நுழைய முன்பே எல்லோரையும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கமரா கொண்டு படம் பிடிப்பது புதுமையாக இருக்கின்றது. குடிவரவுச் சீட்டில் உங்கள் வருஷ வருமானம் எவ்வளவு என்றெல்லாம் ஏன் கேட்கிறார்கள், கொழும்பில் கருணா குழு காட்டிய கப்பம் கைவரிசை மாதிரியா? என்றெல்லாம் ஆயிரம் கேள்விக்கணைகள் மனதில் தோன்றி மறையவும் குடிவரவு அதிகாரிக்கு பக்கம் வரவும் சரியாக இருந்தது. துண்டுச் சீட்டைப் பார்த்து விட்டு எல்லாம் சரி என்று விட்டு அவருக்குப் பக்கமாக இருக்கும் இன்னொரு கமரா மூலம் படம் பிடிக்கிறார். அட, மீண்டும் படமா? ஸ்ஸ்சப்பா


மேலே படங்கள் பாங்கொக் ஸ்வர்ணபுரி விமான நிலையத்தினுள் இருக்கும் ” நடுவே கிருஷ்ண பரமாத்மா நிற்க தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் மந்தாரமலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலைக் கடையும் காட்சி
விமான நிலையத்திற்குள் சுற்றுலா ஏற்பாடுகளைச் செய்து தருவதற்கான முகவர்கள் கடை விரித்திருக்கிறார்கள். எட்டிப்பார்த்தேன், City & Temple tour ஒரு நாள் சுற்றுலா கண்ணில் தென்பட அதில் பதிவு செய்து கொண்டேன். பின்னர் தான் தெரிந்தது இப்படியான முகவர்களிடம் பதிவு செய்வது எவ்வளவு முட்டாள் தனம் என்று, அதை அடுத்த பதிவில் சொல்கின்றேன். Airport Taxi ஐ வாடகைக்கு அமர்த்தும் பகுதிக்குச் சென்று பதிவு செய்து துண்டுச் சீட்டை வாங்குறேன். நான் போகும் ஹோட்டலுக்கு 500 தாய் பாட் இற்கு மேல் கொடுக்க வேண்டாம் என்று சொன்னார்கள். நானும் சரி என்று விட்டு டாக்சியில் அமர்கின்றேன்.
டாக்சிக்காரர் பேச்சுக் கொடுத்தவாறே நட்புப்பாராட்டி வந்தவர் ஒரு பத்து நிமிடம் கழிந்த பயணத்தின் பின் 800 தாய் பாட் கட்டணமாக கொடுக்க வேண்டும் என்று பிட் ஐப் போட்டார். “இல்லையில்லை நான் விமான நிலையத்தில் வைத்து ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டேன். 500 பாட் இற்கு மேல் கொடுக்க வேண்டாம் என்றார்கள்” என்று சொல்லவும்
அவனோ “இன்று சரியான மழை வெள்ளம், கட்டணம் அதிகம்” என்றான். எனக்குப் புரியவில்லை. பெரும் நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருக்கிறோம், மழை வெள்ளத்தின் சுவடே இல்லை என்னடா இவன் என்னை வச்சு காமடி பண்றானே என்று எரிச்சலோடு, “500 பாட் இற்கு மேல் அதிகம் இல்லை” என்று பேச்சை வெட்டினேன். ஒருவாறு 550 பாட் இல் வந்து நின்றது பேரம். அன்று ஆரம்பித்த பேரம் பேசிப் பயணிக்கும் அனுபவங்கள் தாய்லாந்தில் இருந்து விடைபெறும் நாள் வரை தொடர்ந்தது. யோசித்துப் பார்த்தால் இந்தப் பேரம் பேசி குறைக்கும் தொகை வெளிநாட்டு செலாவணியோடு ஒப்பிடும் போது ஒரு டாலரும் கூட இருக்காது. ஆனால் ஏனோ ஆசிய நாடுகளுக்குப் போனால் இந்தப் பேரம் பேசும் வியாதி தானாக ஒட்டிக் கொண்டு விடுகிறது.
நான் முந்திய பதிவில் சொன்னது போல ஒரு நல்ல ஹோட்டலை தங்குமிடமாகத் தெரிவு செய்திருந்தாலும் அதன் அமைவிடம் தான் பெரும் சிக்கலைக் கொண்டு வந்திருந்தது. அதாவது அந்த ஹோட்டல் ஒரு சாலைக்குக் குறுக்காகப் போகும் சின்னச் சந்து வழியாகத் தான் தன்னுடைய நுழைவிடத்தை வைத்திருந்தது. ஆனால் தன் விலாசத்தை மட்டும் குறித்த சாலையாகக் காட்டி இருந்தது. விமான நிலையத்தில் இருந்து பயணித்த டாக்சிக்காரர் குழம்பிப் போய் ஒருவாறு இடத்தைப் பிடித்து டாக்சியை நிறுத்தினார். ஆனால் தொடந்த நாட்களில் இந்த ஹோட்டலுக்கு நான் பயணித்த டாக்சி ஒவ்வொன்றுக்கும் வழிகாட்டிக் களைத்தே போனேன்.
Lamphu Tree House இதுதான் நான் தேர்தெடுத்த தங்குமிடம். நடுத்தர கட்டணத்தில் 1,850 பாட் (55 US dollar ) இலிருந்து கிடைக்கின்றது தங்கும் அறைகள். தாய்லாந்தின் பாரம்பரிய மரவேலைப்பாடுகள் கொண்ட கட்டிட அமைப்பில் தங்குமிடச் சூழலிலும் அறைகளிலும் தாய்லாந்தின் மரவேலைப்பாடுகள் சிற்பங்களாக ஜொலிக்கின்றன. இணையப் பாவனைக்கு அரை மணி நேரத்திற்கு 30 பாட் ஐ அறவிடுகின்றார்கள். நீச்சல் அரங்கம் ஒன்று உண்டு.


இன்னொரு சிறப்பு காலை உணவு buffet முறையில் பாணில் ஆரம்பித்து தாய்லாந்தின் தனித்துவ உணவு வகைகள் சைவ அசைவங்களாக நிறைந்திருக்கும். காலை உணவுக்கான தனிக்கட்டணம் ஏதுமில்லை. அறை வாடகைக்குள் அடங்குகின்றது. விருந்தாளிகளாக அமெரிக்கர்களும் ஒரு சில அவுஸ்திரேலியர்களும் தென்பட்டார்கள். இந்தத் தங்குமிடத்தின் முகாமையாளர் கனிவான சுபாவம் கொண்டவராக , தனது ஹோட்டலில் தங்கி இருப்பவர்கள் கேட்கும் உதவிகளுக்கு அள்ளி அள்ளி ஆலோசனைகளைக் கொடுக்கின்றார். அவர்கள் போக வேண்டிய இடங்களைப் பரிந்துரை செய்கின்றார். கூடவே அங்கிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணிப்பதற்கு அண்ணளவாக எவ்வளவு செலவாகும் என்பதை விரல் நுனியில் வைத்திருந்து சொல்கின்றார். இதனால் ஒரு வாடகைக் காரையோ, ருக் ருக் இனையோ பிடித்துப் பேரம் பேச இலகுவாக அமைந்து விடுகின்றது.
அடுத்த நாட்காலை 9 மணிக்கு ஏற்கனவே விமான நிலையத்தில் ஒழுங்கு செய்த சுற்றுலாப் பணியகத்தின் வழிகாட்டி வர வேண்டும். காலை 8.30 மணிக்கே தயாராக இருக்கிறேன். மணி 9.05 ஐயும் தாண்டி 9.10 க்குள் நுழைகிறது. சலித்துப் போய் தங்கிருந்த ஹோட்டலில் வரவேற்புப் பகுதியில் இருக்கும் பெண்ணிடம் விஷயத்தைச் சொல்கிறேன். அவள் அந்தச் சுற்றுலாப் பணியகத்தைத் தொடர்பு கொண்டு பேசிவிட்டு என்னிடம் “வழிகாட்டி வழி மாறி எங்கோ போய்விட்டாராம், இப்போது வருகிறாராம்” என்றாள்.
வழிகாட்டிக்காக காத்திருக்கிறேன்.
Filed Under Uncategorized
“போகணும்னு மட்டும் தான் தோண்றது ஆனா எங்கே போகிறதுன்னு தெரியலையே” என்று கெளரவம் சிவாஜி மாதிரி பேச வேண்டும் போலத் தோன்றியது இம்முறை உலாத்தலை ஆரம்பித்தபோது. இறுதியில் 2 நாள் அவகாசத்தில் திடீர் திட்டமிடலோடு போகவேண்டும் என்று நான் தீர்மானித்த இடம் “தாய்லாந்து”. ஏற்கனவே தாய்லாந்தின் அண்மித்த நாடான கம்போடியாவுக்கு கடந்த வருடம் பயணித்த பின்னர் ஆசிய நாடுகள் எல்லாவற்றையும் பார்த்து விடவேண்டும் என்ற ஆசை இன்னும் தீவிரமாக ஏற்பட்ட நிலையில் தாய்லாந்து தான் இம்முறை பொருத்தமான இடமாக இருக்கும் என்று நினைத்தேன்.
ஏழு வருடங்களுக்கு முன்னர் வேலை நிமித்தம் தாய்லாந்துக்கு 1 வாரம் போகவேண்டி இருந்தது. வேலைப்பழு காரணமாக உலாத்தலுக்கு அப்போது அவகாசம் கிட்டவில்லை. ஆனால் ஒரு நாள் இரவு உணவுக்குப் பின் டாக்சியில் பயணிக்கும் போது வீதியின் மருங்கிலே திடீர் என்று எதிர்ப்பட்ட இந்து ஆலயம் ஒன்றைக் கண்டு யுரேக்கா யுரேக்கா என்று கத்த வேண்டும் போல இருந்தது. ஆனால் அப்படியெல்லாம் கத்தாமல் டாக்சிக்காரரை ஓரமாக வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு சென்ற அந்த ஆலயம், சிறீ மாரியம்மன் கோவில். அப்போது நவராத்திரி காலம் கூடவே கோயிலின் மகோற்சவ காலம் என்பதால் ஆலயச் சூழல் படு அமர்க்களமாக இருந்தது. மாரியம்மன் கோயில் தரிசனத்தோடு மட்டும் என் அன்றைய தாய்லாந்து சுற்றுலா ஓய்ந்து போனது.
இம்முறை என் பயணம் முழுமையான சுற்றுலா, குறிப்பாக தாய்லாந்து நாட்டின் வரலாற்று விழுமியங்களைத் தேடிப் பார்த்து விடவேண்டும் என்பதே அதில் முனைப்பாக இருந்தது. தாய்லாந்து நாட்டில் இந்து மதத்தின் பரவலையும் அறிய வேண்டும் என்ற அவாவும் கூடவே இருந்தது.
வழக்கம் போல பயண ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக Lonely Planet இன் “தாய்லாந்து வழிகாட்டி” நூலை வாங்கி முதற்கட்டமாக நான் தங்குவதற்கு ஏற்ற தங்குமிடத்தைத் தேடினேன். இருப்பவற்றுள் Lamphu Tree House என்ற தங்குமிடம் சிறப்பான வசதிகளோடு இருப்பதாகப் பட்டது. இணையத்திலும் அந்த ஹோட்டலின் இணையப்பக்கத்தையும் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டேன். இங்கே ஒரு சுற்றுலா டிப்ஸ் சொல்லி வைக்க வேண்டும். பொதுவாக சுற்றுலாவுக்குப் போகும் போது பெரும் நட்சத்திர ஹோட்டல்களை விட நடுத்தர (mid range) நிலையில் உள்ள ஹோட்டல்களை நான் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் தங்கும் கட்டணம் நியாயமானது என்பது மட்டுமல்ல, இப்படியான நடுத்தர நிலையில் உள்ள ஹோட்டல்களில் இருக்கும் பணியாளர்களில் இருந்து முகாமையாளர் வரை விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். சுற்றுலாப் பயணம் செல்ல வேண்டிய இடங்கள், மேலதிக தகவல்கள் போன்றவற்றைத் தேடித் தருவதோடு தனிப்பட்ட அல்லது குழுவாகப் பயணம் செய்யக் கூடிய ஸ்தல யாத்திரைகளையும் ஒழுங்கு செய்து தருவார்கள் என்பதே முக்கியமான காரணம். அந்த வகையில் முன்னர் நான் சென்ற கம்போடியாப் பயண அனுபவத்தில் Lamphu Tree House என்ற தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் இல் உள்ள தங்குமிடத்தை இணையம் மூலம் முற்பதிவு செய்து உறுதிப் படுத்திக் கொண்டேன். ஆனால் இந்த ஹோட்டல் மூலம் வந்த வம்பை பின்னர் சொல்கிறேன் 
அடுத்த நாள் பயணம், அதற்கு முதல் நாள் சிட்னியில் இருக்கும் அவுஸ்திரேலியாவிற்கான தாய்லாந்து நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு போன் இட்டு,
“நான் தாய்லாந்து நாட்டுக்குப் பயணிக்க இருப்பதாகவும் அங்கே தாய்லாந்து சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏதாவது சுற்றுலாப் நிகழ்ச்சித் திட்டங்களை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பாடு செய்து தருகின்றதா?” என்று கேள்விக் குறியிட்டேன்.
மறுமுனையில் தாய் வாடையில் ஆங்கிலம் பேசிய மாது “எமது சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணி தாய்லாந்து நாட்டுக்கு வாருங்கள் என்று பிரச்சாரப்படுத்தும் நோக்கம் மட்டும் தான், நீங்கள் தாய்லாந்து போய்த்தான் சுற்றுலா முகவரைத் தேடவேண்டும்” என்று சொல்லி தன் கடன் பணி செய்து முடித்தார்.
எனது விமானச் சீட்டை ஒழுங்கு செய்த பயண முகவரிடம் “தாய்லாந்துக்கு விசா தேவையா” என்று மூன்றாவது முறையும் கேட்டு வைத்தேன், தேவை இல்லை” என்று அவர் நாலாவது முறை சொல்லி மனதுக்குள் அலுத்திருப்பார். நான் சந்தேகப் பிராணியாக இப்படி நடந்து கொண்டதற்கு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில் ஏழு வருடங்களுக்கு முன்னர் நான் அவுஸ்திரேலிய பாஸ்போர்ட் உடன் தாய்லாந்துக்குப் பயணிக்க வேண்டி இருந்த போது தாய்லாந்து விசா எடுக்க வேண்டியது அன்று அவசியமாக இருந்தது.

சிட்னியில் இருந்து முதலில் சிங்கப்பூர் போகும் Singapore Airlines இன் காலை நேர விமானத்தில் ஏறியாற்று. வழக்கம் போல விமானத்தின் டிவி திரையில் காண்பிக்கப்போகும் திரைப்படங்கள் பட்டியலை நோண்டினேன். வழக்கம் போல யாரோ ஒரு ரசனையின் உச்சம் கொண்டவர் பரிந்துரைத்த “வில்லு” என்ற காவியமும் “அபியும் நானும்” என்ற த்ரிஷா நடித்த தொலைக்காட்சி நாடகமும் இருந்தது. கூடவே ஆடியோ பகுதியில் “வசூல்” என்ற படத்தின் பாடல்கள் இருந்தன. அந்தப் படம் எடுத்தவருக்கே தெரியுமோ தெரியாது இந்தப் படத்தின் பாடல்கள் வந்திருக்கும் என்று.
சிங்கையில் இறங்கி ஒரு மணி நேர இடைவெளியின் பின் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொங் போகும் விமானத்தில் ஏறி இருந்தாயிற்று. தாய்லாந்து நாட்டுக்கு உள்நுளைவோர் பதியும் சிட்டையை விமானப் பெண் தந்தாள். அதை வாங்கி நிரப்ப ஆரம்பித்தால் ஒரு பகுதியில் விசா இலக்கம் என்ன என்ற கேள்வி இருந்தது. அடிவயிற்றில் யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போல இருந்தது.
தாய்லாந்தில் என்ன நடக்கப் போகுது => அடுத்த பதிவில்
0000000000000000000000000000000000000000000000
மலேசிய உலாத்தல் ஆரம்பித்த வேளை சரியில்லைப் போல. பயணத் தொடரின் முதல் பதிவு போட்டதில் இருந்து மாதங்கள் கடந்தும் சில பல காரணங்களால்/வேலைப்பழுவால் அதைத் தொடராமல் போய் விட்டது. இடையில் தாய்லாந்துக்கும் போய் உலாத்தி விட்டு வந்தாயிற்று. எனவே மலேசிய உலாத்தலை ஒரு பக்கம் நிறுத்தி வைத்து விட்டு தாய்லாந்து உலாத்தலை முழுமூச்சோடு எழுதி முடிக்கக் கங்கணம் கட்டி இறங்கியிருக்கிறேன்.
Filed Under Uncategorized
நான்கு மாச இடைவெளியில் சிங்கப்பூரில் இன்னொரு பதிவர் சந்திப்பில் இணைந்தது நானாக மட்டும் இருக்குமோ
. தாய்லாந்துக்கு திடீர் உலாத்தலை மேற்கொண்டு மீண்டும் சிட்னி வரும் வழியில் சிங்கப்பூரையும் பார்த்து வராவிட்டால் பொச்சம் தீராது என்று இடையில் இரண்டு நாட்கள் அங்கே டேரா போட்டேன். இந்த முறை பாசக்காரப் புள்ள இராம் முகம் நினைவுக்கு வந்ததால் Hotel 81 இல் தங்காமல் செரங்கூன் வீதியில் முஸ்தபா கடை வளாகத்துக்கு முன்னே இருந்த Claremont hotel இல் தங்கினேன். ஒரு ஹோட்டலுக்கு உரிய எல்லா அடையாளங்களும் அற்று விதவைக்கோலத்தில் இருந்தது தங்கிய அறை. இணையத்தில் படம் எடுக்கும் போது மட்டும் வெள்ளை அடித்துப் படம் எடுத்தார்களோ என்னவோ 
கடந்த பதிவர் சந்திப்பில் நாம் சந்திக்க முடியவில்லையே என்று சகோதரன் ஜோசப் பால்ராஜ் குற்றம் “சாட்டி”யதால் இம்முறை அவரையாவது சந்திப்போம், இன்னொரு பதிவர் சந்திப்புக்கு கூப்பாடு போட்டு சிங்கை நண்பர்களின் விசனத்துக்கு ஆளாகக் கூடாது என்று பார்த்தால், பயபுள்ள ஊரையே கூட்டி விட்டார். முஸ்தபாவுக்கு எதிரில் உள்ள அஞ்சப்பருக்கு முன்னே வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு காத்திருங்கள், வருகிறோம் என்று பால்ராஜ் சொல்லியிருந்தார். அன்றைய சிங்கை தமிழ் முரசு பத்திரிகையை வாசித்துக் கொண்டே அடிக்கடி வீதியை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று எதிர்ப்பட்டார் நண்பர் பாஸ்கரன். அவரோடு அறிமுகம் பாராட்டி விட்டு பேசிக்கொண்டிருக்கும் போது பால்ராஜும் மோட்டார் சைக்கிளில் வந்தார். எல்லாரும் “குடைக்கடைக்கு” போயிட்டாங்க வாங்கன்னு அவர் அழைக்க பொடி நடை போட்டோம் நானும் பாஸ்கரனும்.
குடைக்கடைக்கு வந்தோம். அட பக்கத்தில் Hotel 81 (அவ்வ்வ்வ்). ஏற்கனவே பதிவர் குழு வந்து சேர்ந்திருந்தது. கடந்த முறை இடம்பெற்ற பதிவர் சந்திப்பை விட நீண்ட நேரம் சம்பாஷிக்கக் கூடிய விதத்தில் அமைந்ததோடு புதிதாக இது நாள் வரை சந்திக்காத உறவுகளையும் கண்டது பெருமகிழ்ச்சியாக இருந்தது. உலக அரசியலில் இருந்து இலக்கியம், சினிமா, வலையுலகம் வரை கலவையாகப் பேசிக் கொண்டிருந்தோம்.
உடல் நலம் குன்றி அன்றைய சந்திப்புக்கு வரமுடியாது உள்ளது என்று மெயிலிட்ட சகோதரர் கோவி.கண்ணன் மக்களைக் காணவேண்டும் என்ற ஆசையில் காய்ச்சலை காற்றில் எறிந்து விட்டு வந்தது நெகிழ வைத்தது.
தம்பி டொன் லீ, சகோதரன் ஜோதிபாரதி, பங்காளி நிஜம்ஸ் ஆயில்ஸ் வழி நட்பான சந்துரு, சுரேஷ் போன்ற ஏற்கனவே சந்தித்தவர்களோடு ஜெகதீசன், முகவை ராம், ஞானப்பித்தன் விஜய், விஜய் ஆனந்த், பித்தன் சுதாகர் என்று புதிய நண்பர்களையும் கண்டு பேசக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி மனதுக்கு நிறைவான மாலைப் பொழுதாக இருந்தது. தோசை, இட்லி படையலோடு இரவு உணவு களை கட்டி நிறைவேறியது பதிவர் சந்திப்பு.
அடுத்தது என்ன, “ஈரம்” போலாம் (படம் பேரப்பா) என்றார் ஒருவர், பால்ராஜ் “நினைத்தாலே இனிக்கும்” போகலாம் (நாமளும் யுத்து தான்
என்றார். இறுதியில் வென்றது “உன்னைப் போல் ஒருவன்”. பீச் ரோட் வரை நானும் முகவை ராமும் நடை ராஜாவில் பயணித்து கோல்டன் சினிமாவுக்கு போகவும், அங்கே எமக்காக முன் கூட்டியே சென்று டிக்கெட் எடுத்துக் காத்திருக்கிறார்கள் பால்ராஜும், ஞானப்பித்தன் விஜய்யும்.
படம் முடிந்து மற்றைய நண்பர்கள் விடை பெற டாக்சியில் வழித்துணையாக முகவை ராமும் வர வந்து சேர்ந்தேன் ஹோட்டலுக்கு. இரவு 12 மணியைத் தொட்டது. வெளியே இருக்கும் இணையச் சேவை நிலையத்தில் வலை அளந்து முடிக்க அதிகாலை 2.30 ஐ தொட்டது. முஸ்தபா பக்கம் இருக்கும் ஒரு தேனீர் கடையில் ஒரு சாயா குடித்து விட்டு அந்தத் தெம்போடு கட்டிலில் சாய்ந்தேன்.








00000000000000000000000000000000000000
அடுத்த நாள் கடும் மழை. இணையச் சேவை நிலையத்தில் வலை மேய்ந்து கொண்டிருந்தால் அடிப்பாதத்தில் குளிர்ந்தது. கீழே பார்த்தால் மழை வெள்ளம் வரவா போகவா என்று ஹலோ சொல்லிக் கொண்டிருந்தது. மதியம் ஒரு மணி வாக்கில் நண்பர் குழலில் வந்தார். அஞ்சப்பர் போய் மதிய உணவை வெட்டினோம். மீண்டும் ஹோட்டலுக்கு வந்து பேசிக் கொண்டிருக்கும் போது முகவை ராமும் வந்து சேர்ந்தார். மூவரும் ஒரு சந்துக் கடைக்குப் போய் நமது சம்பாஷணையைத் தொடர்ந்தோம், இங்கேயும், உலகம், இலக்கியம், ஈழம், சினிமா தாவித் தாவிப் போனது பேச்சாடல். கூடவே சகோதரன் விசாகன் (கதியால் வலைப்பதிவை எழுதுபவர்) வந்து சேர்ந்தார். இடையில் கடைப்பக்கம் வந்த கோவி.கண்ணன் எதேச்சையாக சந்தித்தது சுவாரஸ்யம். மதியம் 1.30 க்கு ஆரம்பித்த நமது பேச்சுக்கச்சேரி முடியும் போது இரவு 7.30.
இருக்கும் அந்த ஒரு நாள் இராத்திரி லிட்டில் இந்தியாவை ஒரு ரவுண்ட் அடித்தேன். வரப்போகும் தீபாவளிக்கு கட்டியம் கூற வண்ண விளக்குகள் அலங்காரம் அந்த ஊரையே கலர்புல்லாக்கியது. கூடவே தீபாவளிச் சந்தையும். கொஞ்சமாவது ஊர் நினைப்பைக் கொண்டு வரும் இந்தச் சிங்காரச் சிங்கையை விட்டுப் போகிறோமே என்ற கவலையோடு ஹோட்டலுக்கு மீண்டேன்.






Filed Under Uncategorized

நமது தாயகத்திலே வலைப்பதிவர் சந்திப்பு வரப்போகிறது என்று நண்பன் வந்தி சொன்னபோது எவ்வளவு சந்தோஷப்பட்டேன் கூடவே பொறாமையும் கலந்து. தாயகத்தை விட்டு விலகி 14 ஆண்டுகளைக் கழித்தும் இன்றும் ஏதாவது படிவத்தில் Nationality என்ற பகுதிக்கு வரும்போது Australian என்பதை தயங்கித் தயங்கி வாயில் எச்சிலை மிண்டியபடி எழுதும் பண்பு மாறவில்லை. நாடு நல்ல சுகம் கண்ட பிறகு அங்கே வாழ்ந்து மடிய வேண்டும் என்பதும் என் பேராசைகளில் ஒன்று. இதைப் பதிவுக்கான வார்த்தை ஜாலமாக எல்லாம் எழுதவில்லை.
நான்கு ஆண்டுகளைத் தொடும் என் வலைப்பதிவு அனுபவத்தில், தாயகத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக, இன்னும் சொல்லப்போனால் ஓராண்டாகத் தான் நம் உறவுகள் நிறையப்பேர் எழுத வந்திருக்கின்றார்கள். வலைப்பதிவு அனுபவத்தினூடே ஒரு புதியதொரு நட்பு வட்டத்தினைப் பெற்ற எனக்கு தாயத்தில் இருந்து வரும் உறவுகள் மீது இன்னும் ஒரு படி மேலான பரிவும் ஏற்படுகின்றது. என் போன்ற புலம்பெயர்ந்தவர்களின் எண்ணவோட்டங்களை அப்படியே பிரதிபலிப்பது போல இருக்கும் அவர்களின் நனைவிடைதோய்தல் போன்ற பதிவுகள். வந்தியத்தேவன் பதிவராக வரும் முன்பே, என்னுடைய “என் இனிய மாம்பழமே” பதிவினை வாசித்து விட்டு அதில் நான் கறுத்தக் கொழும்பான் வகை மாம்பழத்தைப் பற்றிச் சொன்னபோது அந்தப் பழத்தினைப் புகைப்படம் எடுத்து என் பதிவுக்காக அனுப்பியது தான் எனக்கும் என் தாயகத்து வலைப்பதிவர்களுக்கும் இடையிலான நேசத்தின் ஆரம்பம் என்பேன். எனக்கு மட்டும் தாயகம் போகும் சுதந்திரம் வாய்த்தால் ஒரு நாள் அவகாசத்திலேயே இந்த வலைப்பதிவர் சந்திப்புக்கும் போய் வந்திருப்பேன்.
வலைப்பதிவர் சந்திப்புக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே வந்தியத்தேவனுடைய பதிவு மூலமாக விடுத்த அழைப்புப் பதிவுக்கு அநானியாக யூ எஸ் இலிருந்து ஒருவர் (ஐ.பியும் சேமிக்கப்பட்டிருக்கிறது) கிண்டலாக “புலியை பாத்து பூனை சூடு போட்டுகொண்டதை போல நடத்துகிறீர்கள். மாபெரும் தோல்வியடைய வாழ்த்துக்கள்” என்று கேவலமாகப் பின்னூட்டியிருந்தாராம். வந்தியிடம் சொன்னேன் தயவு செய்து அதை வெளியிடவேண்டாம் என்று. அந்தப் பின்னூட்டத்தைப் படிக்கும் தாயக் வலைப்பதிவர்கள் இதனால் மனம் நொந்து அல்லது ஏன் வம்பு என்று ஒதுங்கக் கூடும் என்றேன். இப்படியெல்லாம் தான் அவர்கள் இந்தப் பதிவர் சந்திப்பை நடத்துவதற்கு முன் சில சங்கடங்களையும் எதிர் நோக்க வேண்டியிருந்தது என்பதற்கு இது ஒரு சாம்பிள்.
வலைப்பதிவர் சந்திப்புக்கு முதல் நாள் வந்தி மூலமாக இணைய வழி நேரடி ஒளிபரப்புக்கான இணைப்புக் கிடைத்தது. சிட்னி நேரம் மதியம் 12 மணிக்கே அந்த இணைப்பை போட்டு விட்டு ஏறக்குறைய மறந்தே விட்டிருந்தேன். மற்றைய அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்த எனக்கு திடீரென்று ஆட்கள் பலர் பேசுவதுபோலக் கேட்டது. பக்கத்து வீட்டுக்காரன் டிவியை சத்தமாக வைத்துப் பார்க்கிறானோ என்று சினந்து கொண்டே எழும்பிய போது தான் ஞாபகத்துக்கு வந்தது, அடடா பதிவர் சந்திப்பின் ஒலி அல்லவா அது என்று.
கணினியின் முன் உட்கார்ந்தேன்.
வலைப்பதிவர்கள் ஒவ்வொருவராகத் தம்மை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஆரம்பித்தது. வெற்று போட்டோவில் பார்த்த ஆட்களின் கற்பனை உருவ அமைப்பு கண்ணுக்கு முன்னே கணினித் திரையில் தெரியத் தெரிய உள்ளுரச் சந்தோஷம் தொற்றிக் கொண்டது. ஆனால் அது நீடிக்குமுன்னே ஒரு கவலைக்குரிய நிகழ்வு வந்து கஷ்டப்படுத்தியது. வீடியோ ஒளிபரப்போடு இணைந்த அரட்டைப் பெட்டியில் பத்தோடு பதினொன்றாக நின்ற என்னைப் போல இன்னொருவர் “இந்தியன்” என்ற ஒருவர் வந்து “துரோகி பிரபாகரன் ஒழிந்தான்” “வன்னியில் ஹிட்லரின் ஆட்சி ஓய்ந்தது” என்ற ரீதியில் தொடர்ந்து அந்த அரட்டைப் பெட்டியை படு கேவலமான வார்த்தைப் பிரயோகங்களினூடாகப் புண்படுத்த ஆரம்பித்தார். சிறீலங்கா ராணுவத்தளத்தில் இருந்து புலிகளைக் கொச்சையாக எழுதும் பாணியில் அது தொடர்ந்தது.
கனடாவில் இருந்து அந்த அதிகாலை வேளை இந்த இணைய ஒளிபரப்பைப் பார்க்க வந்த சினேகிதி என்னைப் போலவே ஆவலோடு இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டே அரட்டைப் பெட்டியில் மேலதிக தகவல்களை புதிதாக வருபவர்களுக்கும் கொடுத்துக் கொண்டே மறுமுனையில் பதிவர் சந்திப்பில் இருந்த கெளபாய் மது, பகீ போன்றோரிடம் அங்கே நடக்கும் விடயங்களைக் கேட்டுக் கொண்டே இருந்த அவரிடமும் அந்த “இந்தியன்” என்பவர் விட்டு வைக்கவில்லை. எச்சில் கோப்பை எல்லாம் கழுவி தொழிலை முடிச்சாச்சா (அதுதான் இலங்கையைச் சேர்ந்தவர்களின் தொழிலாம்), என்னுடைய எச்சில் பாத்திரத்தையும் கழுவித் தரமுடியுமா” என்று சீண்டினார். மறுமுனையில் ஜீ சாட்டில் இருந்து கொண்டு சினேகிதியிடம் “தங்கச்சி! தயவு செய்து அந்த ஆளுக்கு ஒரு பதிலும் போட வேண்டாம், அவரின் தொல்லை அதிகமாகும்” என்று நான் சொல்லி வைத்தேன். அந்த “இந்தியன்” அடுத்ததாக வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்கள் மீது நாரசமான கொமெண்டை அடிக்க ஆரம்பித்தார். அப்போது தான் எதிர்பாராத இன்னொரு விஷயமும் நடந்தது. இந்த “இந்தியன்” என்பவரோடு கூட்டுச் சேர்ந்து கொண்டே படு கேவலமான அரட்டையை ஆரம்பித்தார் இன்னொருவர். அவர் யாரென்று தேடிப்பார்த்தால் அவர் ஒரு இலங்கையில் இருந்து எழுதும் பதிவர் (அவர் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை) என்ற கவலையான பதிலை அவர் வலைப்பதிவு முகவரி சொல்லி வைத்தது.
“தயவு செய்து உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், இப்படி ஆபாசமாகப் பேசுவதை நிறுத்துங்கள்” என்றேன் இருவருக்கும். “இது எங்கள் கருத்துச் சுதந்திரம்” என்றார் ஒருவர். “அப்படியென்றால் உங்கள் அக்கா,தங்கச்சியைப் பற்றி மற்றவன் பேசினாலும் விடுவீர்களா” என்று நான் கேட்டேன். இந்த அரட்டையில் தாயகத்தில் நடக்கும் வலைப்பதிவு நிகழ்வில் லயிக்க முடியாத ஒரு கட்டமும் வந்தது. அப்போது என் துணைக்கு வந்தார்கள் அதுவரை இணைப்பில் இருந்த டோண்டு ராகவனும், மாயவரத்தானும். அவர்கள் இருவரும் இந்த “இந்தியன்” என்ற நபரை இந்த நாரசமான அரட்டையை விடும்படி கேட்க, அவரோ “டோண்டு பக்தன்”, “சோ.ராமசாமி பக்தன்” என்று டோண்டு மீது தன் சேஷ்டையை ஆரம்பித்தார். கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கு மேல் இந்த தொல்லை நீடித்தது. மெல்ல மெல்ல பத்து இருபதாக அரட்டைப் பெட்டிக்குள் ஆட்கள் நுழைந்தார்கள். சுவிஸ் போன்ற ஐரோப்பா போன்ற நாடுகளில் அப்போது காலை வேளை ஆகி விட்டிருந்ததால் அங்கிருந்து நிறையப் பேர் வந்தார்கள் போல. அந்தக் கணத்தில் இருந்தூ “இந்தியன்” என்பவர் அதற்குப் பின் தன் ஆட்டத்தை விட்டு மாயமானார்.
சிங்கையில் இருந்து ஜோதிபாரதி போன்றவர்களும், இந்தியாவில் இருந்து டோண்டு ராகவன், சகோதரி முத்துலெட்சுமி, தமிழ் நெஞ்சம் தாய்லாந்திலிருந்து மாயவரத்தான், கனடாவில் இருந்து சினேகிதி, கீத் போறவர்களும், சுவிஸ் நாட்டில் இருந்து சயந்தன், சாத்திரி போன்றவர்களும் அவுஸ்திரேலியாவில் இருந்து நான், வசந்தன் போன்றவர்களும் இந்த நேரடி ஒளிபரப்பில் இணைந்தவர்களில் சிலர். அரட்டை அறையிலும் லோஷனைக் காட்டுங்கள் என்று தேடித்திரிந்தார்கள் 
தொடர்ந்து வலைப்பதிவர் சந்திப்பின் ஒளியோட்டத்தில் முழுமையாக ஈடுபட முடிந்தது. வலைப்பதிவர் சந்திப்பு பற்றி ஏற்கனவே சக உறவுகள் பலர் தங்கள் விரிவான பதிவுகள் மூலம் கொடுத்திருந்தார்கள். ஒரு பார்வையாளனாக இருந்து எனக்குப் பட்ட விஷயங்களைச் சொல்கின்றேன்.
இணைய வழி நேரடி ஒளிபரப்பு என்னும் இந்த விஷயத்தை எந்த விதமான தொழில்நுட்பச் சிக்கலும் இன்றி, ஒரு சில நிமிட ஒலித்தெளிவின்மை தவிர சாதித்துக் காட்டிவிட்டார்கள் சகோதரங்கள்.
சத்தியமாக அந்த பத்து வயசு சின்னப்பையனைப் பார்த்து யாரோ ஒரு பெண் பதிவரின் சகோதரன், இந்தப் பெண்ணின் பாதுகாப்புக்காக வந்திருக்கிறார் என்று நினைத்தேன். என் நினைப்பு அவ்வாறு இருந்ததில் தவறில்லை ஏனென்றால் எங்கள் சமூக அமைப்பு அப்படி
பிறகு தான் தெரிந்தது அவரும் ஒரு பதிவர் என்று.
ஆரம்பத்திலேயே அறிமுகங்களைக் கொடுத்து விட்டதால் பின்னர் தனியாகப் பேசும் போது ஒரு சிலரை இனங்காண முடியவில்லை. “ஆர் இப்ப கதைக்கிறது” என்று அரட்டை அரங்கத்தில் இருந்த ஆட்கள் கேட்கக் கேட்க சலிக்காமல் அலுக்காமல் அங்கிருந்து பகீ அரட்டைப் பெட்டியில் போட்டுக் கொண்டிருந்தார். ஒரே ஆளை 10 பேர் விசாரித்தாலும் கூட தனித்தனியாக 
யாழ் என்ற பெயரைக் கேட்டாலே தேள் கொட்டியவன் போல சிலர் நடக்கும் பாங்கை கண்டு பலமுறை எரிச்சல் பட்டிருக்கிறேன். யாழ் தேவி என்பது யாரோ ஒருவர் ஆரம்பித்து வைத்த திரட்டி. யாழ் தேவி என்பது ஒரு இனத்தின் வாழ்வாதாரங்களோடு கூடவே வந்த ஒரு குறியீட்டுப் பொருள் மட்டுமே. அந்தத் திரட்டிச் சொந்தக்காரர் “யாழ்தேவி” என்று வைத்தது போல “உத்தரதேவி” என்று இன்னொருவர் ஆரம்பித்து விட்டுப் போகட்டுமே. ஒரு ஆரோக்கியமான முதலாவது சந்திப்பிலேயே இந்த யாழ்தேவி விடயத்தை ஆளாளுக்கு போஸ்ட்மாட்டம் பண்ணிய கொடுமையை உண்மையில் என்னால் சகிக்க முடியவில்லை. யாழ்ப்பாணத்தான் ரயில் , மட்டக்களப்பான் கிணறு என்று அடிபட்டுச் சாகும் கூத்து அடுத்த நூற்றாண்டிலும் ஓயாது போல. ஒன்று மட்டும் தெரிந்தது, இலவச ஆலோசனை செய்வதற்கு 24 மணி நேரமும் ஒலிவாங்கியைப் பிடிக்க நம்மவர்கள் தயார்.
ஈழத்தமிழப் பதிவர்கள் தம் பதிவுகளில எழுதும் தமிழகப் பேச்சு வழக்கு பற்றியும் பேச்சு வந்தது. தக்கன வாழும் தகாதன அழியும். இது பதிவுகளுக்கும் பதிவர்களுக்கும் கூடப்பொருந்தும். எல்லாப் பதிவர்களும் ஜெயகாந்தன் மாதிரியோ, எஸ்.பொன்னுத்துரை மாதிரியோ எழுத்தாளனாக பிறப்பதில்லை. வலைப்பதிவு என்பதே ஒருவன் தன்னுடைய மன ஓட்டங்களைப் பதியும் ஒரு இணையவழி ஊடகமே. யாரோ ஒரு ஆங்கிலேயன் கண்டுபிடித்த விஷயங்களுக்கெல்லாம் வரைவிலக்கணம் போட்டு இதுதான் எழுது, இப்பிடித்தான் எழுது என்ற இணையச் சட்டாம்பி வேலைகள் தொடரும் இந்த வேளை என்பங்குக்கும் சொல்லி வைக்கிறேன் இதை. யார் எதை எழுத வேண்டும் என்பதை எழுதுபவனும், எதை யார் படிக்க வேண்டும் என்ற பூரண சுதந்திரம் படிக்கும் வாசகனுக்கும் இருக்கு. சதா சர்வகாலமும் யாரைப் பிடிச்சுத் தின்னலாம் என்று எல்லாப் பதிவுகளையும் மோந்து பார்த்து தேடித்தேடி இவர் என்ன எழுதுகிறார் என்று தேடித்திரிந்து கிண்டல் அடித்துப் பொழுது போக்குவதல்ல நல்ல வாசகனுக்குரிய/வழிகாட்டிக்குரிய அடையாளம். நான் ஈழத்தமிழ் சொற்களை வைத்து முழுமையாக எழுதிய பதிவுகளிலும், ஈழத்தமிழ் படைப்பாளிகள் போன்றோர் குறித்து எழுதிய பதிவுகளும் இப்படி “ஆலோசனை சொல்லும்” எத்தனை பேர் வந்து எட்டிப் பார்த்திருக்கிறார்கள் என்று போய்ப் பாருங்கள். நடிகமணி வைரமுத்து குறித்த பதிவுக்கு வந்து கருத்து சொன்னவர்கள் இரண்டெ இரண்டு பேர்.அதற்காக நான் கூட்டம் சேர்ப்பதற்காக பதிவு என்று சொல்ல வரவில்லை. இலவச ஆலோசனை செய்பவர்கள் எத்தனை பேர் அப்படியான செயற்பாடுகளை ஊக்குவிக்கிறார்கள் என்று சொல்ல வந்தேன். முப்பது பேர் வந்து பின்னூட்டம் போடுவதால் மூவாயிரம் டொலரா கிடைக்கப் போகுது? ஆலோசனைகள் தேவையானவை அவை முறையாக வருமிடத்து.
விடுபட்ட ஒன்ரையும் இப்போது சேர்க்கிறேன். வலைப்பதிவு ஆக்கங்களை எழுதியவர் சம்மதமின்றி வெளியிடும் பத்திரிகைகள் “நன்றி இணையம் ” என்று போடுவது கொலைக் கொடுமை. இப்படியான நாகரீகத் திருட்டை வலைப்பதிவர் சந்திப்பில் மு.மயூரன் பேசியபோது உண்மையில் வீட்டில் இருந்து கைதட்டினேன் ;)இனியாவது இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
இறுதியாக தமிழ் தட்டச்சும் முறை. “நீங்கள் எந்த கீ போர்ட் பாவிக்கிறீங்கள்” என்று கேட்டார் ஒருவர் என்னிடம். நான் அன்றிலிருந்து இன்று வரை Logitech தான் என்றேன் அவரிடம். பிறகு கேட்டார் “தமிழ் எழுதுவதற்கு எதப்பா”, “நான் அன்றிலிருந்து இன்று வரை ஈழம் யூனிகோட் தட்டச்சு தான்” என்றேன். என்னைப் பொறுத்தவரை தமிழ் எழுத்து வந்தால் போதும், நாளைக்கு அதுவே தமிழ் பேச்சைக் கண்டுணர்ந்து திரையில் அடிக்கும் முறையாக (voice recognition software) வந்தால் என்ன எது தட்டச்சுபவனுக்கு இலகுவான முறையோ அதுவே போதம். இந்தக் கீபோர்ட் முறையால் தமிழ் அடிச்சால் தான் தமிழ் நீடு நிலைத்து, ரோபோ காதலிக்கும் காலத்திலும் வாழும் என்று சொன்னால் நான் அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பேன், அது என் அறியாமை என்றே வைத்துக் கொள்ளுங்களேன். அப்படியே இருந்துட்டு போறன்.
நிறைவாக, இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு, ஆரம்பமே அமர்க்களம். இன்னும் பல சந்திப்புக்கள் நடக்க வேண்டும். நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக, நீங்கள் இருக்கிறீர்கள் எங்களுக்காக.
வலைப்பதிவர் சந்திப்பு படங்கள் நன்றி : வந்தியத்தேவன், நிமல்
Filed Under Uncategorized

சென்ற பதிவு ஒரே சாப்பாடு ம(ண)யமாக அமைந்து விட்டது அதுவும் நல்லதுக்கு தான் போல. ஏனென்றால் புதிதாக சிங்கப்பூர் போகின்றவர்கள் தவிர சிங்கையில் இருப்போரிலும் உணவகம் பக்கம் திரும்பிப் பார்க்காதவர்களுக்கும் உபயோகப்படும் போல இருக்கின்றது.
மலேசியப் பயணம் பற்றிச் சொல்ல வந்து சிங்கப்பூர் புராணம் பேசிக் கொண்டிருக்கிறாரே என்று நீங்கள் சலிக்காமல் இருக்க இந்தப் பதிவோடு ஒரு முற்றுப் புள்ளி வைக்க இருக்கின்றேன்.
ஒவ்வொரு முறை சிங்கப்பூர் பயணம் சென்றாலும் ஈழநாதனை மட்டும் சந்தித்து விட்டு வரும் வழக்கம் இருந்தது. காரணம் முன்னேயெல்லாம் சிங்கைப் பதிவர்கள் குறித்த அறிமுகமும் கிடையாது அதே போல கோவி கண்ணன் போன்ற ஒரு சிலரைத் தவிர பரவலாக அங்கே பதிவர்கள் தோன்றாமல் இருந்தது இன்னொரு காரணம். ஆனால் இப்போது பார்க்கும் போது சிங்கப்பூர் பதிவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் இருந்து பதிவோரை முந்திச் சென்று விடும் போல இருக்கின்றது. அதை ஓரளவு உறுதிப்படுத்துமாற் போல அமைந்தது எனது சிங்கை வலைப்பதிவர் சந்திப்பு.
போகும் இடத்தில் அங்கிருப்போருக்கு எதற்குச் சிரமம் என்று இப்படியான வலைப்பதிவர் சந்திப்பை தவிர்ப்போம் என்று எண்ணினாலும், முகம் காணாமல் வலை மூலம் நேசத்தை ஏற்படுத்திய உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற அற்ப ஆசை மட்டும் மனதின் சின்ன மூலையில் ஒட்டிக்கொண்டிருந்தது. சிங்கை வந்து இரண்டாம் நாள் நம்ம நிஜமா நல்லவரை தொடர்பு கொண்டு பேசினேன். அவரோ சத்தமில்லாமல் ஜோதிபாரதி, கோவி கண்ணன் போன்றோருக்கு சொல்லவும் அவர்கள் சக வலைப்பதிவர்களை மே 14 ஆம் திகதி ஒன்று கூட்டி நான் தங்கியிருந்த லிட்டில் இந்தியா பகுதியில் இருக்கும் காளி அம்மன் கோயிலடிக்கு அழைத்து வந்தார்கள்.
மே 14 ஆம் திகதி வியாழன் மாலை ஏழு மணி வாக்கில் காளி அம்மன் கோயிலடிக்குப் போகின்றேன். அன்று என் பிறந்த நாள் வேறு. அங்கே வழி மேல் விழி வைத்தவாறு நிஜமா நல்லவன், டொன் லீ, மற்றும் சின்னப்பாண்டி ஆயில்யன் சார்பில் அவரின் நண்பர்களுமாக காத்திருந்தார்கள். மெல்ல மெல்ல பதிவர்கள் வருகை ஆரம்பித்தது. கிஷோர், ஜோதிபாரதி, வடுவூர் குமார், கிரி, சிங்கை நாதன், அதிரை ஜமால், இராம் என்று நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள், கோவி கண்ணனை தவிர. கோவியார் வரும் வரை இளநீர் பருகுவோம் என்று கூட்டம் இளநீர் கடையை முற்றுகையிட்டது. இளநீர்க்காரருக்கு நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும் இப்படியொரு கூட்டத்தின் திடீர் வருகையை எண்ணி.
எங்கே இரவு உணவைக் கழிக்கலாம் என்று ஆளாளுக்கு யோசித்த போது சிங்கை நாதன் Moghul Mahal Restaurant என்ற வட இந்திய உணவகத்துக்குச் செல்லலாம் என்ற போது அவரின் பின்னால் அணிவகுத்தது கூட்டம். அந்த உணவகத்தில் இவ்வளவு பேரையும் ஒரே மேசையில் இருத்த முடியாத ஒரு நிர்ப்பந்தம் வந்தபோது கூட்டம் வெளிநடப்பு செய்ய முயற்சித்தது. ஆனால் உணவக உபசரிப்பாளரோ இவனுகளை விடக்கூடாது என்று எண்ணி மேல் தளத்தில் இருக்கும் உபசரிப்புப் பகுதிக்கு அனுப்பினார். ஒருவாறு இடம்பிடித்து எல்லோரும் ஒரே பகுதியில் அமரவும் கோவி கண்ணன் வரவும் சரியாக இருந்தது.

வடுவூர் குமார் கையோடு கொண்டு வந்த இனிப்பு பொதியைத் தருகின்றார். ஆயில்யன் நண்பர்கள் மற்றும் நிஜமா நல்லவன் ஆகியோர் புத்தக பொதிகளை அன்புப் பரிசாக அளித்தனர். நான் தேடிக்கொண்டிருந்த உமர்கயாம் பாடல்கள், டாக்டர் கே.எஸ்.சுப்ரமணியன் எழுதிய “ஜெயகாந்தன் ஒரு பார்வை”, பா.விஜய்யின் “வானவில் பூங்கா”, பா.விஜய்யின் “நந்தவனத்து நாட்கள்”, என்.ராமகிருஷ்ணன் எழுதிய “மார்க்ஸ் எனும் மனிதர்”, தபூ சங்கரின் “சோலையோரப் பூங்கா”, பசுமைக்குமார் எழுதிய “சார்லி சாப்ளின் 100, ஜெ.பிஸ்மி எழுதிய “களவுத் தொழிற்சாலை” என்று அவர்கள் அளித்த பரிசுகளை அன்போடு ஏற்றுக் கொண்டேன்.



உணவுப் பட்டியல் ஒரு கலைக்களஞ்சியம் ரேஞ்சில் பெரும் சைசில் இருந்ததால் ஆளாளுக்கு புரட்டி மேய்ந்ததில் அரை மணி நேரத்திற்கு மேல் கழிந்தது. அதிரை ஜமால் இவ்வளவு கனமான பெரிய சிலபஸில் என்னால் பரீட்சைக்கு படிக்க முடியாதுன்னு அடம்பிடிக்க ஆரம்பித்தார். உணவக உபசரிப்பாளர் அடிக்கடி சந்தேக கண்ணோடு வந்து முற்றுகையிடவும் சிங்கை நாதன் இரவு உணவுத் தேர்வை கலந்து பேசி தீர்மானித்து நிலமையை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தார்.

உணவை வாய்க்குள் தள்ளிக் கொண்டே பதிவுலகம் பற்றிய அலசலை பேச ஆரம்பித்தோம். ஆயில்யன் நண்பர்களுக்கு இந்த பதிவுலக சமாச்சாரங்கள் புரிந்ததா தெரியவில்லை ஆனாலும் அவர்களிடமிருந்து ஆயில்யன் குறித்த இராணுவ ரகசியங்களைப் பெற்றுக் கொண்டேன். வர்களுக்கு சிரமம் ஏதாவது கொடுத்து விட்டோமோ, அலுவலக நாள் வேறு என்று மனதின் ஒரு மூலையில் குத்திக் கொண்டிருந்தது. ஆனால் இந்தத் திடீர்ச் சந்திப்பில் ஏதோ 10 வருஷப் பழக்கம் போல மிகவும் இயல்பாக எல்லா நண்பர்களும் பழகியது நெகிழ்வடையைச் செய்தது. உண்மையில் என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாக இது அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
சகோதரன் “டொன்” லீ இந்தச் சந்திப்பைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கின்றார் இங்கே.
தாயகத்தில் இருந்து என்னோடு வலைப்பதிவினூடக அறிமுகமாகி பின்னர் தற்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் சகோதரன் விசாகனின் சந்திப்பும், அவர் பழகிய விதமும் நாம் இருவரும் ஒரே அலைவரிசையில், ஒத்த ரசனையில் இயங்குவதை மேலும் உறுதிப்படுத்தியது.
தங்கச்சி துர்காவை அவரின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் உணவகத்தில் சந்தித்தேன்.
என்னதான் கூகுள் சாட்டில் ஆளாளுக்கு காலை வாரினாலும் நேரில் அண்ணனுக்கு மரியாதையான தங்கச்சியாக இருந்தார் 
0000000000000000000000000000000000000000000000000000
சிங்கை லிட்டில் இந்தியாவில் மூலைக்கு மூலை இருக்கும் சிறு பெட்டிக்கடைகளில் தீராநதி, புதிய பார்வையில் இருந்து விகடன் குமுதம் சமாச்சாரங்கள் கிடைக்கின்றன. ஒரு கடையில் கிழக்குப் பதிப்பகத்தின் படைப்புக்களும் தென்பட்டது அவர்களின் வியாபாரப் பரம்பலின் வெற்றியைக் காட்டி நின்றது. சிங்கையில் இருந்த காலம் வரை தமிழ் முரசு பத்திரிகையை தினமும் வாங்கினேன். அப்போது அகோரமாக நடைபெற்று வந்த வன்னி முற்றுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுடச் சுட செய்திகளை வெளியிட்டதோடு இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளையும் சிறப்பு மாலைப்பதிப்பில் இடம்பெற வைத்தது சிங்கை தமிழ் முரசு பத்திரிகை. அளவான பக்கங்கள் என்றாலும் கச்சிதமாக செய்திகளை நிறையவே கொடுத்து வருகின்றது தமிழ் முரசு.
000000000000000000000000000000000000000000000000000000000000
சிங்கப்பூர் வந்து விட்டு முஸ்தபா சென்டர் போகாவிட்டால் கொலைக்குற்றம் போல :0 அங்கும் ஒரு எட்டு நடந்தேன். முஸ்தபாவின் எல்லா தளங்களையும் வலம் வந்தேன். மதிய நேர சாப்பாட்டுக் களைப்பில் துணிக்குவியலுக்கு மத்தியில் ஊழியர்கள் சிலர் கன்னத்தில் கைவைத்து சுகமான கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். சில பகுதிகளில் இருப்போர் வாங்கினால் வாங்கு இல்லாட்டி நகரு என்று பொறுப்புணர்ச்சியோடு தமது வாடிக்கையாளர் சேவையை ஏனோ தானோவென்று நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். புத்தகப் பகுதிகளில் தன்னம்பிக்கை தரும் நூல்கள் தான் இறைந்து கிடந்தன. சிங்கப்பூரர்களுக்கு தன்னம்பிகைக்கு மாத்திரை கூட செய்து விற்பார்கள் போல. சீடிப்பக்கம் தாவி சத்யன் அந்திக்காடு இளையராஜா கூட்டணியில் வந்த “விநோத யாத்ரா” டிவிடியையும் தென்கச்சி சுவாமி நாதனின் “இன்று ஒரு தகவல்” டிவிடியையும் வாங்கினேன். ஆயிரம் தான் இருந்தாலும் ஒரே கூரையின் கீழ் விதவிதமான தெரிவுகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் முஸ்தபாவை விட்டால் கதி ஏது?
000000000000000000000000000000000000000000

ஓவ்வொரு முறை சிங்கப்பூர் வந்தும் Sentosa Island பார்க்க வேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போனதை இந்த முறை மாற்ற வேண்டுமென்று எண்ணி அங்கும் ஒரு நாள் போனேன். கேபிள் காரிலோ, பஸ்ஸிலோ,போகலாம் என்ற போது நான் ஒரு முறையாவது பயணிக்காத கேபிள் காரைத் தேர்ந்தெடுத்தேன்.

Sentosa Island இல் உள்ள நீரடி உலகத்தையும் (Underwater World) 3D magic இல் படம் காட்டும் திரையரங்கத்தையும் சுற்றிப் பார்த்ததோடு இது போதும் என்று திரும்பினேன்.Underwater World மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்களைக் காட்சிப்படுத்தியிருப்பது நிறைவாகவும் பயனுடையதாகவும் இருந்தது. இதயக்கோளாறு உள்ளவர்கள், மனசு பலவீனமானவர்கள் தவிர்க்கவும் என்று ஏகப்பட்ட பில்ட் அப் களோடு ஆரம்பித்த 3D magic படம் பெரிசாக பூச்சாண்டி காட்டவில்லையானாலும் சிறப்பானதொரு விருந்து தான்.
சிங்கையின் புகையிரத நிலையங்களில் உள்ள டிக்கட் மெஷின்கள் நாணயங்களை மட்டுமே வாங்குவேன் என்று நாணயமாக இருந்தது கடுப்பேற்றியது. டொலர் நோட்டுக்களை போட்டாலும் துப்பித் தள்ளியது.
00000000000000000000000000000000000000000000000

சிலோன் ரோட் பிள்ளையார் கோயிலுக்கு இரண்டாவது தடவை போக முடிவெடுத்தேன். அதுவும் என் பிறந்த நாளன்று காலை வானம் சிணுங்கிக் கண்ணீர் மழை பொழிய ஒரு வாடகை டாக்சியில் கோயிலை நோக்கிப் பயணித்தேன். கோயில் உட்பிரகாரத்தை வலம் வந்து அர்ச்சனை செய்யும் போது எங்களூர் தெய்வீகச் சூழ்நிலையை மீள நினைக்க வைத்தது ஆலய அமைவு. எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஆலயத்தின் நாதஸ்வர மற்றும் தவில் வித்துவான்களாக இருப்பதைக் கண்டு அவர்களிடம் சென்று நானாகவே அறிமுகம் செய்து பேசி மகிழ்ந்தேன்.

என்னுடைய நடவடிக்கைகளைப் பார்த்தோ என்னவோ எங்கோ இருந்து வந்த கோயிலின் தர்மகர்த்தா “நீங்க சிங்கப்பூருக்கு புதுசா, எங்கிருந்து வரீங்க” என்று ஆரம்பித்தார். என்னைப் பற்றிச் சொல்லவும் உடனே பக்கத்தில் இருந்தவரை அழைத்து ஏதோ சொல்லவும், அவர் கையோடு ஆலயத்தின் சிறப்பு மலரையும், சின்னதாக ஒரு வெள்ளி விநாயகர் சிலையையும் கொண்டு வந்தார். “இந்த ஆலயத்துக்கு முதன் முதலாக வருவோருக்கு நாங்கள் கொடுக்கும் பரிசு இது” என்று அன்பாகச் சொல்லிக் கொண்டே ஆலயத் தர்மகர்த்தா நடந்து கொண்ட விதம் தமிழ் படங்களின் வில்லன் ரேஞ்சில் ஆலயத்தர்மகர்த்தாக்களை கற்பனை செய்யும் பாங்கை மாற்றியது. எனக்கும் குளிர் விட்டுப் போய்” உள்ளே படம் எடுக்கலாமா” என்று அவரிடம் கேட்டேன். “தாராளமா எடுங்க” என்று சொல்லி விடைபெற்றார் அவர். வரும் வெள்ளிக்கிழமை ஈழத்து ஆறுமுக நாவலர் குறித்த சொற்பொழிவு இருப்பதாக அறிவிப்புப் பலகையில் இட்டிருந்தது. நிச்சயம் வரவேண்டுமென்று நினைத்தும் அந்தச் சொற்பொழிவுக்கு போக முடியவில்லை.

தங்குமிடம் திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக இம்முறை வாய்த்த சீனத்து டாக்சிக்காரர் நிறையவே பேசிக்கொண்டு வந்தார். அடிப்படை மருத்துவ உதவிகளுக்குக் கூட பெருமளவில் அரசினை எதிர்பார்க்க முடியாது சாகும் வரை வேலை செய்தே வாழ்க்கை நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலையைப் பற்றியும், அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதன் வருவாய் மூலம் பிற்காலத்தில் தம் வாழ்நாளின் இறுதிக்காலத்தைக் கழிக்கலாமே என்ற நினைப்பில் முதலீடு செய்து சமீபத்திய அமெரிக்க பொருளாதாரச் சரிவில் தனது முதலீட்டில் 60000 டொலர் இழப்பையும் பற்றி சொல்லி நொந்து கொண்டார் அந்த முதிய டாக்சிக்காரர். இப்படியான வாழ்க்கை முறை வாய்த்ததால் தான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வோர் தொகை வருஷா வருஷம் அதிகரிப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. ஆக மொத்தத்தில் வாழ்வின் கடைசிப்புள்ளி வரை ஓடிக்கொண்டே இருப்பவருக்கே லாயக்கான திரிசங்கு சொர்க்கமாக சிங்கப்பூர் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.
மலேசியா நோக்கிய பயணம் அடுத்த சில தினங்களுக்குப் பின்னர் ஆரம்பித்தது.