உலாத்தல்

எந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு

Dec
17

யானைச் சவாரியும் யானைகளின் சாகசமும்

Filed Under Uncategorized

அந்த ஒரு நாள் சுற்றுலாவுக்காகப் பதிந்த சுற்றுலாப்பயணிகளிடம் “யாரெல்லாம் யானைச் சவாரி செய்ய ஆசைப்படுகின்றீர்கள்? கையைத் தூக்குங்களேன்” என்றார் பஸ்ஸுக்குள் இருந்த எங்களைப் பார்த்து, சுற்றுலா முகவர். ஆனையாரின் முதுகில் சவாரி செய்வது என் வாழ் நாள் இலட்சியம், அது இவ்வளவு சீக்கிரம் ஈடேறுகிறதே என்ற மகிழ்ச்சியில் ஆசையோடு கையைத் தூக்கிக் கொண்டே பஸ்ஸில் சுற்றும் பார்க்கிறேன்.கூடவந்தவனெல்லாம் கப்சிப் என்று ஏவிஎம் சரவணன் மாதிரி கையைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். “சரி! உங்களை மட்டும் Elephant village இல் விட்டு விட்டு அரை மணி நேரத்தில் வந்து கூட்டிக் கொண்டு போகின்றோம்” என்று என்னிடம் சொல்லி விட்டு சொன்ன படியே என்னை Elephant village என்ற இடத்தில் இறக்கினார்கள்.

யானைச் சவாரி செய்ய அதிகமில்லை ஜென்டில்மன் வெறும் 500 தாய்லாந்து பாட் தான். கிட்டத்தட்ட 12 டொலர்கள். காசைக் கட்டி விட்டு நின்ற என்னை மரச்சட்டங்கள் பதித்த மாடி ஒன்றுக்கு ஏறுமாறு பணித்தார்கள். அங்கே நின்று தான் யானையாரின் முதுகில் உட்கார வேண்டும். அந்த மரச்சட்ட மாடியின் மேல் பிள்ளையார் சிலையும் உண்டியலும் இருந்தது. ஒரு ரவுண்ட் அடித்து விட்டு யானையார் நான் நின்ற மாடிக்கு வருகிறார். என்னை அவரின் மேல் இருக்குமாறு கையைக் காட்டுகிறார்கள். மெல்ல மெல்ல நிதானமாக காலைச் சவட்டி யானையாரின் முதுகின் மேல் இருந்த பெட்டியில் இருக்கிறேன். அதில் சீற்றும் , பெல்டும் இருந்தது. பெல்டைப் போடுகிறேன். முன்னே பாகன் வழிகாட்ட யானையார் மெதுவாக நடக்கிறார். அடர்ந்த புதர்ப்பத்தைகளின் நடுவே இருக்கும் குறுகலான பாதையால் மெல்ல நடக்கிறோம். யானையாரின் முதுகு வெயிலுக்கு வெடித்த தார் ரோட் மாதிரி இருக்கு. லேசான லத்தி வாடையும் நாசியைத் துளைக்கிறது. கொஞ்சம் பயம், நிறைய சந்தோஷமாக யானைச் சவாரி மெல்ல நடை பழகுகிறது.

மவனே! என் முதுகில் ஏறிச் சவாரி செய்கிறாயா? உன்னை அப்படியே…. என்ற கணக்காய் பாதையை விட்டு விலகி புதர்ப்பக்கமாகத் திரும்புகிறார் யானையார். தாய்லாந்து மொழியில் அவரைத் திட்டியவாறே கையை பாதைப்பக்கமாகக் காட்டுகிறான் பாகன். கூடவே என் கமராவை வாங்கிப் படம் எடுப்பதற்கும் தயாராகிறான். ஆனால் யானையார் செம கடுப்பில் இருக்கிறார் போல, பாகன் படம் எடுப்பதுக்கு யானையாரை நிற்குமாறு பணித்தாலும் அவர் கேட்ட பாடில்லை, முன்னே முன்னே நகர்ந்து வருகிறார். கையில் இருந்த முசத்தால் கண்ணுக்குள் குத்தி விடுவது போல பாகன் பாவனை காட்ட பயத்தோடு நிற்கிறார்.அந்த சமயம் பார்த்து பாகன் பின்னால் போய் கமராவை சரிபார்க்க ஆரம்பிக்க, யானையார் மீண்டும் நகர்கிறார். மீண்டும் பாகன் முசத்தால் வெருட்டுகிறான். யானையார் தாமதிக்கிறார். இப்படி இவர்கள் இரண்டு பேரின் கண்ணாமுச்சியில் நான் அகப்பட்டு நிற்கிறேன். பின்னர் பாகனும் என்னோடு யானைச் சவாரியில் பங்கு போட யானையார் முதுகில் ஏறி சதுப்பு நீரோடைப்பக்கம் யானையாரைத் திசை திருப்புகின்றான். அறுந்து போவான் சேத்துக்குள்ளாலை எல்லாம் நடக்க விடுகிறான் என்று யானையார் நொந்திருப்பார். ஒருவாறு அரைமணி நேர யானைச் சவாரி முடிந்து இருப்பிடம் வருகிறோம். களைப்பைப் போக தண்ணீர் தரப்படுகிறது. எனக்காகக் காத்திருக்கிறார் சுற்றுலா வழிகாட்டியும், கூடவந்த பஸ்ஸும். அடுத்து நாங்கள் சென்றது தான் முந்திய உலாத்தல் பதிவில் பார்த்த தாய்லாந்தின் மிதக்கும் சந்தை (Damnoen Saduak).

மிதக்கும் சந்தைச் சுற்றுலா முடிந்து அடுத்த உலாத்தலுக்கு முன்னர் இரண்டு பகுதிகளாகச் சுற்றுலாப் பயணிகள் பிரிக்கப்பட்டு இரு வேறு உலாத்தல்களுக்காகத் திசை திருப்பபடுகின்றனர். என்னுடன் கூட வந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே என் பஸ்ஸில் இருக்க புதிதாக சில தலைகள் வந்து சேர்கின்றன. அதில் ஒருத்தி தான் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த ஒரு இந்தியப் பெண்ணும், அவள் நண்பியான பிரென்சுக்காரியும் , இன்னும் இரண்டு ஜப்பானியப் பெண்களும். நாங்கள் முதலில் சென்றது வயிற்றுக்கு வஞ்சனை செய்யக்கூடாது என்ற நோக்கில் ஒரு மதிய உணவகத்துக்கு. அதை ஒழுங்கு செய்து பணம் கட்டியதும் சுற்றுலா முகவர் தான். அந்த ஒரு நாள் சுற்றுலாக் கட்டணத்தில் மதிய உணவும் அடக்கம். நல்ல மீன் கறியும், தாய்லாந்து கோழி மிளகாயில் சங்கமாய்க் கிடந்த கறியுடன் சோறும் வருகிறது. அந்தப் பிரெஞ்சுப் பெண்களும், ஜப்பானிய பெண்களும் என் மேசையில் தான் வந்து இருக்கிறார்கள். அவர்களாக ஒவ்வொருவரை அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த இந்தியப் பெண், தன் தாய் தந்தையின் சொந்த ஊர் பொச்சிரி, பொச்சிர் என்றாள். என்னடா இது இப்படி ஒரு ஊரா என்று மூளைக்கு வேலை கொடுத்துக் கண்டு பிடித்தேன். அட! பாண்டிச்சேரி ;)
அந்தப் பாண்டிச்சேரிக் குமரிக்கு வயசு 22, தன் கல்யாணத்துக்காக உடுப்பெடுக்க வந்திருக்கிறாளாம். பாரதிராஜா படங்களில் வருமே வெள்ளுடைத் தேவதை அந்த உடுப்புத்தானாம். என்னடா கொடுமை பிரான்சிலிருந்து இவ்வளவு மைல் கடந்து தாய்லாந்து வந்து சுற்றிப் பார்ப்பதென்றால் நியாயம், அதை விட்டு விட்டு உடுப்பெடுக்க ஏன் வந்திருக்கிறாள் என்று மனதுக்குள் குமைந்த என் நினைப்பை அடுத்த சில நாட்களில் மாற்றியது நானும் அந்த விஷயத்தில் கண்ட உண்மையை. அதைப் பிறகு சொல்கிறேன். சாப்பிட்டு விட்டு அந்த ப்ரென்சுக்காரியும் இந்திய யுவதியும் லாவகமாக சிகரட்டைப் பற்றுகிறார்கள். புகை வளைவில் கலாச்சாரம் வளையல்களாகப் போகிறது.

அடுத்து நாங்கள் உலாத்தப் போனது யானைகளின் சாகசம் காண. யானைகளின் சகாசக் காட்சி நிலையம் செல்கிறோம். உள் நுளைந்தால் எடுத்த எடுப்பிலேயே தேவர் பிலிம்ஸ் புலி ஒன்று உயிரோடு, அதற்குப் பக்கத்தில் நின்று படம் கூட எடுக்கலாமாம். வேண்டாமய்யா இந்த விளையாட்டு என்று நகர்கிறேன் அந்த இடத்தை விட்டு.

யானைச் சாகசம் நடக்கும் திடலுக்குள் போய் உட்கார்கிறோம். முதலில் கண்கட்டு வித்தை நடக்கிறது. பெட்டிக்குள் போனவள் பின் கதவால் திரும்புகிறாள், தொப்பிக்குள் போன முயல் பறவையாக வருகிறது. இதெல்லாம் ஓய்ந்த பின்னர் யானைகள் மெல்ல மெல்ல அணிவகுத்து வருகின்றன. ஒவ்வொரு யானையும் வந்து வேடிக்கை காட்டி விளையாடுகின்றன. பார்க்கும் போது சுதந்திர தின அணிவகுப்புப் போல இருக்கிறது.

அடுத்து தாய்லாந்து நாட்டின் போரியல் வரலாற்றில் யானைப் படையின் பங்களிப்பினை ஒருவர் ஒலிபெருக்கியில் சொல்லச் சொல்ல காட்சிகள் கண்முன்னே நடக்கின்றன.கோட்டைக் கொத்தளங்களைப் தீப்பந்தங்களை எறிந்து தீமுட்டுகிறார்கள். பெரும் போர் நிகழ்கின்றது. இரண்டு நாட்டு யானைப் படைகளும் வாட் போர் புரிகிறார்கள். வென்றவன் கட்சி யானைகளில் இருந்து வீரர்களை மண்ணில் முத்தமிட வைக்கின்றான்.

அடுத்ததாக யானைகளின் உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி. அந்தப் போட்டிக்காக அடுத்த கட்ட யானைகள் தம்மோடு ஒவ்வொரு நாட்டுப் பெயர்பொறித்த விரிப்புக்களோடு வருகின்றன. ஒவ்வொரு அணிக்கும் நடக்கிறது கால்பந்து மோதல். யானைகள் லாவகமாக கோல் போட்டு விளையாடுகின்றன. இறுதி வெற்றி உருகுவே யானைக்காம் ;)
எல்லாம் முடிந்து அடுத்த பக்கத்தில் முதலைகளின் சாகசமும் காண்பிக்கப்படுகிறது. சிறுவன் ஒருவன் முதலையின் வாய்க்குள் தலையைக் கவிழ்ப்பதுமாக நடக்கிறது விளையாட்டு. அடுத்த உலாத்தலுக்கு நேரமானதால் நகர்கின்றோம் அந்த இடத்தை விட்டு.

Nov
21

தாய்லாந்தின் மிதக்கும் சந்தை (Damnoen Saduak) கண்டேன்

Filed Under Uncategorized

தாய்லாந்து உலாத்தல் அடிக்கடி தொடரமுடியாமல் இழுத்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பதிவுக்குமாக பொருத்தமான படங்களை ஏற்கனவே எடுத்திருந்த தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுத்துப் போடுவது தான் பெரும் வேலையாக இருக்கின்றது. எப்படியாவது வாரத்தில் இரண்டு தொகுப்பாவது போடவேண்டும் என்ற நினைப்போடு மீண்டும் தாய்லாந்து உலாத்தல் தொடர்கின்றது.

இம்முறை நான் பார்க்கச் சென்ற இடம் Damnoen Saduak என்ற பகுதியில் இருக்கும் மிதக்கும் சந்தை (Floating Market). Damnoen Saduak என்ற வாய்க்காலுக்கு இருமருங்கும் பெட்டிக்கடைகள் நிறைக்க, நடுவில் ஓடும் நீரோடையில் இந்த மிதக்கும் சந்தை வியாபாரம் களை கட்டுகின்றது. முன்னர் நான் கம்போடியாவில் பார்த்த மிதக்கும் கிராமம் போல மக்களில் முழுமையான வாழ்க்கையும் இந்த இடத்தில் கழிவதில்லை. மாற்றாக இங்கே கால்வாய்க்கு இருமருங்கிலும் அமைந்த பெட்டிக் கடைகளோடு, கூடவே கால்வாயில் பயணிக்கும் நீண்ட வள்ளங்களில் ஒவ்வொரு வியாபாரியும் தங்கள் பொருட்களை நிறைத்துக் கொண்டே நீர்ப்பாதையின் ஒரு அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தம் வரை பயணிப்பார். இந்த இடத்துக்குப் பொருட்களை வாங்க வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகள் தமக்கான வள்ளங்களில் கட்டணம் கொடுத்து ஏறிப் பயணித்துக் கொண்டே எதிர்ப்படும் இந்த மிதக்கும் கடைகளில் பேரம் பேசிப் பொருட்களை வாங்குவார்கள். இது நாள் முழுதும் தொடரும் வழக்கமாக இருக்கும்.

எனது அடுத்த நாள் பயணத்தில் தங்கியிருந்த ஹோட்டல் மூலம் ஒரு நாட் சுற்றுலாவை ஒரு பயண முகவரிடம் ஏற்பாடு செய்திருந்தேன். அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இருந்தது இந்த மிதக்கும் சந்தைக்கான சுற்றுலா. மினி வான் மூலம் என்னையும், வேறு ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்களையும் அழைத்துக் கொண்டு Damnoen Saduak நோக்கிப் பயணித்தது வாகனம்.

தாய்லாந்து அரசர் இராமா IV இன் ஆட்சிக்காலத்தில் இந்த Damnoen Saduak கால்வாய் தோண்டப்பட்டுப் பெயரும் சூட்டப்பட்டது. Samutsakorn மாகாணத்தில் இருக்கும் Taachin ஆற்றையும் Samutsongkram மாகாணத்தில் உள்ள Maklong என்ற ஆற்றையும் இணைத்து உள்ளூர்வாசிகளின் பயணச் சிரமத்தைக் குறைத்ததோடு அவர்களின் பொருண்மிய மேம்பாட்டை வளப்படுத்தும் முகமாவே இந்தக் கால்வாய்த் திட்ட்டம் அமைந்தது.

ராஜ்புரி என்ற மாகாணத்தின் கீழ் இருக்கும் இந்த Damnoen Saduak, பாங்கொக்கில் இருந்து சுமார் 100 கி.மீட்டர் பயணத்தில் இரண்டு மணி நேரத்தில் வந்து சேர்கிறோம். வாகனத்தில் இருந்த சுற்றுலா வழிகாட்டி “சரியாக ஒரு மணி நேரத்தில் மீண்டும் இந்த இடத்த்துக்கு வந்து விடுங்கள், இப்போது நீங்கள் விரும்பிய இடத்துக்குப் போகலாம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

கால்வாயின் மிதப்பில் வந்தால் ஒவ்வொரு பயணிகளையும் கூட்டாக இணைத்து கிட்டத்தட்ட பத்துப்பேர் கொள்ளுமளவுக்குச் சேர்த்த பின்னர் ஒவ்வொரு வள்ளமாகப் பயணத்தை ஆரம்பிக்கிறது. அந்தப் பயணத்திற்கான கட்டணமும் மிகக் குறைவு. வள்ளம் போக முன்னர் ஒவ்வொருவராகப் படம் பிடித்ததன் சூக்குமம் முதலில் புரியவில்லை. ஆனால் இந்தப் பயணம் முடிந்த பின்னர் வள்ளத்தில் இருந்து வெளியேறும் போது, ஏற்கனவே என்னைப் புகைப்படம் எடுத்த சிறுவன் என் முகம் பொறித்த பீங்கான் கோப்பை ஒன்றைக் காட்டி நினைவுப் பொருளாக வாங்க விருப்பமா என்று கேட்கிறான். விருப்பமிருந்தால் வாங்கலாம், இல்லாவிட்டால் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கலாம்.


வள்ளத்தில் இருந்தவாறே கால்வாய் ஓரமாக இருக்கும் கடைகளைப் பார்த்தவாறே நகர்கின்றேன். என் வள்ளத்தில் ஒரு ஜப்பானிய இளமங்கையும், ஐரோப்பாவின் ஏதோ ஒரு மொழி பேசும் இரண்டு வயதான தம்பதிகளும், மேலும் சில வெள்ளையர்களுமாக இருக்கின்றார்கள். எனக்கு முன்னே இருந்த ஜப்பானிய யுவதி அடிக்கடி தன் கமெராவைத் தந்து தன் போஸுக்கு படமெடுக்கச் சொன்னாள். பெண் என்றால் பேயும் இரங்கும் தானே ;-)
இந்த வள்ளப் பயணத்தில் ஒரு தொழில் ரகசியத்தைக் கண்டேன். வள்ள ஓட்டுனருக்குப் பரிச்சயமான, அல்லது நட்பு வட்டாரத்தில் உள்ள கால்வாய் ஓரக் கடைகளைக் கண்டால் அந்தப் பக்கமாக வள்ளத்தைத் திருப்பி நிற்கின்றார். ஒரு சில நிமிடங்கள் அந்தக் கடைக்காரர் தன்னுடைய கடையில் உள்ள பொருட்களாகக் காட்டிக் காட்டி வியாபாரத்தை சில நிமிடங்களுக்குள் முடிக்க ஆசைப்படுகின்றார். 500 தாய்லாந்து பாட் இல் இருக்கும் சில பொருட்களை இப்படியே வள்ளத்தில் இருப்பவர் தன் வாய் வீச்சில் பேரம் பேசி 100 தாய்லாந்து பாட் வரை குறைக்கும் கொடுமையும் இருக்கிறது. எல்லா ஆசிய நாடுகளிலும் இருக்கும் பொதுவான பண்பு இது.

இந்த மிதக்கும் சந்தையில் உள்ள வியாபார நுட்பம் என்னவென்றால், அழகான காட்சிப்படுத்தல் மூலமும், ஒரு சில செக்கன்கள் மட்டுமே அவகாசம் இருக்கும் குறுகிய கால இடைவெளியில் தமது பொருட்களைப் பற்றி உயர்வாகப் பேசியும் குறித்த வியாபாரிகள் தமது விற்பனையை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. ஆனால் நான் பார்த்த அளவில் இந்த மிதக்கும் சந்தையால் பயணிகளைக் காவிச் செல்லும் வள்ளங்கள் ஈட்டும் வருமானம் தவிர, மிதக்கும் சந்தைகளின் விற்பனை மூலமான வருமானம் பெரிதாக இல்லை என்றே நினைக்கின்றேன். பெரும்பாலான கூட்டம் வேடிக்கை பார்த்தே சொல்கின்றது.
எமது கூர்மூக்கு வள்ளம் ஒரு அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தம் வரை அசைந்தாடிப் போகின்றது. மீண்டும் தன் கமராவைத் எனக்குத் தந்துவிட்டு தன் தலையைச் சிலுப்பிப் போஸ் கொடுக்கிறாள் அந்த ஜப்பானிய யுவதி.

தாய்லாந்தில் விளையும் ஆப்பிள், மங்குஸ்தான், அன்னமுன்னா (சீதாப்பழம்), வாழைப்பழம், மாம்பழம், கொய்யாப்பழம், மாதுளம்பழம் என்று பரப்பிய பழ வள்ளம் ஒரு புறம். தாய்லாந்தின் பாரம்பரிய விழுமியங்கள் சார்ந்த ஓவிய, கைவினைப் பொருட்கள் தாங்கிய வள்ளம் ஒரு புறம், தாய்லாந்துக்கே உரிய கூடைத் தொப்பிகளை நிறைத்த தொப்பிக்கடை வள்ளம் இன்னொரு புறம், கால்வாயில் பயணிக்கும் போது பசிக்கிறதா இருக்கவே இருக்கிறது சுடச்சுடத் தயாராகும் உணவு என்று சைவ அசைவ மாமிச வகையறாக்களோடு சுடச்சுட வெள்ளைச் சோறும், நூடுல்ஸ் பாத்திரங்களுமாக இன்னொரு சாப்பாட்டுக் கடை வள்ளம், தாய்லாந்தின் கொடுமையான வெயிலில் பியர் அடித்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பவருக்கு முன்னால் வருகிறது மதுபானப் போத்தல்களும், குளிர்பானங்களும் தாங்கிய வள்ளமொன்று,
சாப்பிட்டீர்களா இப்போது தாய்லாந்து இனிப்புப் பதார்த்தங்களையும் ஒரு கை பாருங்களேன் என்று சொல்லுமாற்போல தாய்லாந்தின் தனித்துவமான வாழைப்பழ பன் கேக் வகையறாக்களுடன் இன்னொரு இனிப்பு வள்ளம் என்று எதிர்ப்படும் ஒவ்வொரு வள்ளக் கடைகளும் விதவிதமான பொருட்களோடு கடைபரப்பி வலம்வருகின்றன. முதுமையின் விளிம்பில் இருக்கும் மூதாட்டி ஒருவர் தனியே தன் வள்ளத்தைத் தள்ளி அதற்குள் இருக்கும் வாழைப்பழங்களைக் காட்டிக் காட்டி விற்பனை செய்தது உருக்கியது.

தாய்லாந்தின் இன்னொரு முகம் பற்றி எல்லோருமே பரவலாக அறிந்த செய்தி. அதைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்வதற்கு முன், இந்த வள்ளப் பயணத்தில் நான் கண்ட ஒரு காட்சியையும் இங்கே சொல்லி வைக்கிறேன். எமக்குப் பக்கமாக இன்னொரு வள்ளம், அதிலே ஒரு 70 வயதைத் தொடும் ஒரு வெள்ளைக்காரக் கிழத்தோடு இருபதைத் தாண்டாத ஒரு தாய்லாந்து யுவதி. ஆணா பெண்ணா என்று அவளை எடை போடவே கஷ்டமாக இருக்கும் தோற்றத்தில் இருந்த அவள் முகம் வறுமையின் முகவரியைப் பறை சாற்றியது. தன் பார்ட்னராக வந்த வெள்ளைக்காரக் கிழவரிடம் யாசித்து, பக்கத்தில் போகும் தொப்பிக் கடை வள்ளத்தில் ஒரு தொப்பியை வாங்கிப் போட்டுக் கொண்டே குழந்தை மாதிரி அந்தக் கிழவரைப் பார்த்துச் சிரிக்கிறாள். மனசின் ஓரமாய் ஊசியால் குத்துவது போல இருக்கிறது. அந்தக் காட்சியைப் படம் பிடித்துக் கொண்டேன்.
நீலச்சட்டை தாய்லாந்து பெண்மணியோடு கூட்டி வந்த கிழவர்.

வானம் மெல்ல மழைத் துளிகளை ஊசிகளாக கீழ் நோக்கிச் செருகுகின்றது. நனைந்தபடியே முடிவிடம் நோக்கிப் பயணிக்கிறோம்.


வரலாற்றுக் குறிப்புக்கள் நன்றி: தாய்லாந்து சுற்றுலாத் தளங்கள்

Oct
27

பாங்கொக் நகரத்துக் கோயில்கள்

Filed Under Uncategorized

பாங்கொக்கில் தங்கியிருந்த முதல் நாள் சுற்றுலாவுக்காக நான் ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த சுற்றுலாகப் பணியகத்தின் வழிகாட்டி வந்து என்னை அழைத்துப் போனாள், எனக்காக ஹோட்டலின் எதிர்த்திசையில் கார் காத்து நின்று கொண்டிருந்தது. முதலில் நாங்கள் போன இடம் Wat Pho என்ற புகழ்பெற்ற பெளத்த ஆலயம். இருநூறு வருடங்களுக்கு முற்பட்ட பழமையான இந்த ஆலயத்தில் மிக நீண்ட சயன நிலையில் இருக்கும் தங்க நிறத்துப் புத்தரைப் பார்க்க என்றும் கூட்டம் இருக்கும்.

நாங்கள் போன நாள் பெளத்தர்களுக்கு ஒரு விஷேட நாளாக இருந்ததால் உள்ளூர் மக்களின் கூட்டமும் திரண்டிருந்தது. 45 மீட்டர் நீளமும் 15 மீட்டர் உயரமுமான அந்தப் புத்தரைப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கின்றது. ஆலயத்தின் உள்ளரங்கத்தில் ஒரு ஓரமாக வரிசை ஒன்று நீண்டு கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது. இந்த ஆலயத்துக்கான தனித்துவமான வழிபாட்டினை மேற்கொள்ள உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரஜைகள் என்ற பேதமில்லாமல் இருக்கின்றது அந்த வரிசை. தாய்லாந்து நாட்டுக்கே உரிய பாரம்பரிய மசாஜ் இந்த ஆலயத்தில் இருந்து தான் தோற்றம் பெற்றது என்று சொல்கின்றார்கள்.


ஆலயச் சூழலில் வலம் வரும் போது பள்ளிச் சிறுவர் கூட்டம் தம் கலாச்சாரச் சுற்றுலாவுக்காகத் திரள்வது தெரிகின்றது. கூடவே இன்னொரு பகுதியில் சிறுவர்களுக்கு பெளத்தமதப் பிரசாரத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றார் ஒரு துறவி. நான்கு மன்னர்களுக்கான நினைவிடங்களும் இங்கே அமைக்கப்பட்டு பெருமைப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.

தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தின் தந்தையான Hermit doctor (Ruesee) இன் உருவச் சிலையும் அவருக்கு முன்னே மருந்து தயாரிக்கப் பய்ன்படும் அம்மிக்குழவியும்

புத்தர் சிலையில் மினுமினுவென்று இருந்த தங்க மேற்பூச்சைச் சுரண்டித் தன் நெற்றியில் வைத்தாள் என்னுடன் வந்த வழிகாட்டி. அதை நெற்றியில் இடுவதால் புத்தரின் அனுக்கிரகம் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாம். பலர் இப்படிச் சுரண்டியதால் புத்தர் நிறமிழந்து போய்க் கொண்டிருக்கிறார்.

Grand Palace Complex

1782 இல் முதலாம் இராமா என்ற அரசரின் ஆளுக்கைப் பிரதேசமாக மாற்றப்பட்ட இந்தப் பகுதி 218,400 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அரச வாசஸ்தலத்தோடு, Emerald Buddha என்ற பெளத்த வழிபாட்டிடமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்துக்குப் போகும் போது இன்னொரு கட்டுப்பாடும் விதிக்கப்படுகின்றது. அதாவது ஆண்கள், பெண்கள் என்று எல்லோருமே அவர்களுக்கு கொடுக்கப்படும் தனித்துவமான முழுநீளக்கை கொண்ட ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும் என்பது விதிவிலக்கற்ற விதிமுறை.


Temple of the Emerald Budda (Wat Phra Kaew)

கி.பி 14 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தர் சிலையைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் இது என்று கொள்ளப்படுகின்றது. தாய்லாந்து நாட்டுக்கே உரிய சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த, தங்க நிறத்தில் தகதகக்கும் இவ் ஆலயத்தின் உட்சுவரில் இராமாயணக் கதையைச் சித்திரமாகத் தீட்டியிருக்கின்றார்கள். கம்போடியா நாட்டின் புகழ்பெற்ற அங்கோர் வாட் ஆலயத்தின் மாதிரி அமைப்பை இங்கே உருவாக்கி இருக்கின்றார்கள்.

Temple of the Dawn (Wat Arun)

கைமர் மன்னர்களின் தனித்துவமான கட்டிட அமைப்பினைக் கொண்ட மிக நீண்ட ( கிட்டத்தட்ட 105 மீட்டர்) கூம்பு வடிவக் கூரையைக் கொண்ட இவ்வாலயத்தில் இந்து சமயக் கடவுளர்களின் சிலைகள் இருப்பது குறிப்பிட வேண்டிய ஒரு அம்சம். அந்த வகையில் சிவன், இந்திரன், பிரம்மா, சக்தி போன்ற கடவுளர்களின் உருவச் சிலைகள் காணக்கிடைக்கின்றன. ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா, இந்த Wat Arun என்ற ஆலயப் பெயரில் Arun என்பது இந்தியக் கடவுளரான அருணனைக் குறிக்கின்றது என்கிறார்கள்.
ஆமாம், உதயத்துக்கான ஆலயம் என்று சிறப்பிக்கப்படும் இக்கோயில் அருணன் என்று இன்னொரு பெயரால் அழைக்கபடும் சூரியனின் கோயிலாகவே கொள்ளப்படுகின்றது.




உசாத்துணை: தாய்லாந்து வழிகாட்டி, சுற்றுலா வழித்தகவல் குறிப்புக்கள்

Oct
18

பாங்கொக்கில் காலடி வைத்தேன்

Filed Under Uncategorized

தாய்லாந்துக்கு விசா தேவையா இல்லையா என்ற குழப்பத்துடன் நான் இருக்க பாங்கொக்கின் ஸ்வர்ணபுரி விமான நிலையத்தில் தன் கால்களைப் பதித்து சிங்கப்பூர் விமான சேவையின் இயந்திரப் பருந்து. விமான நிலையத்துக்குள் புகும் போது குடிவரவுப் பகுதிக்குள் நுழைய முன்பே எல்லோரையும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கமரா கொண்டு படம் பிடிப்பது புதுமையாக இருக்கின்றது. குடிவரவுச் சீட்டில் உங்கள் வருஷ வருமானம் எவ்வளவு என்றெல்லாம் ஏன் கேட்கிறார்கள், கொழும்பில் கருணா குழு காட்டிய கப்பம் கைவரிசை மாதிரியா? என்றெல்லாம் ஆயிரம் கேள்விக்கணைகள் மனதில் தோன்றி மறையவும் குடிவரவு அதிகாரிக்கு பக்கம் வரவும் சரியாக இருந்தது. துண்டுச் சீட்டைப் பார்த்து விட்டு எல்லாம் சரி என்று விட்டு அவருக்குப் பக்கமாக இருக்கும் இன்னொரு கமரா மூலம் படம் பிடிக்கிறார். அட, மீண்டும் படமா? ஸ்ஸ்சப்பா

மேலே படங்கள் பாங்கொக் ஸ்வர்ணபுரி விமான நிலையத்தினுள் இருக்கும் ” நடுவே கிருஷ்ண பரமாத்மா நிற்க தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் மந்தாரமலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலைக் கடையும் காட்சி

விமான நிலையத்திற்குள் சுற்றுலா ஏற்பாடுகளைச் செய்து தருவதற்கான முகவர்கள் கடை விரித்திருக்கிறார்கள். எட்டிப்பார்த்தேன், City & Temple tour ஒரு நாள் சுற்றுலா கண்ணில் தென்பட அதில் பதிவு செய்து கொண்டேன். பின்னர் தான் தெரிந்தது இப்படியான முகவர்களிடம் பதிவு செய்வது எவ்வளவு முட்டாள் தனம் என்று, அதை அடுத்த பதிவில் சொல்கின்றேன். Airport Taxi ஐ வாடகைக்கு அமர்த்தும் பகுதிக்குச் சென்று பதிவு செய்து துண்டுச் சீட்டை வாங்குறேன். நான் போகும் ஹோட்டலுக்கு 500 தாய் பாட் இற்கு மேல் கொடுக்க வேண்டாம் என்று சொன்னார்கள். நானும் சரி என்று விட்டு டாக்சியில் அமர்கின்றேன்.

டாக்சிக்காரர் பேச்சுக் கொடுத்தவாறே நட்புப்பாராட்டி வந்தவர் ஒரு பத்து நிமிடம் கழிந்த பயணத்தின் பின் 800 தாய் பாட் கட்டணமாக கொடுக்க வேண்டும் என்று பிட் ஐப் போட்டார். “இல்லையில்லை நான் விமான நிலையத்தில் வைத்து ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டேன். 500 பாட் இற்கு மேல் கொடுக்க வேண்டாம் என்றார்கள்” என்று சொல்லவும்
அவனோ “இன்று சரியான மழை வெள்ளம், கட்டணம் அதிகம்” என்றான். எனக்குப் புரியவில்லை. பெரும் நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருக்கிறோம், மழை வெள்ளத்தின் சுவடே இல்லை என்னடா இவன் என்னை வச்சு காமடி பண்றானே என்று எரிச்சலோடு, “500 பாட் இற்கு மேல் அதிகம் இல்லை” என்று பேச்சை வெட்டினேன். ஒருவாறு 550 பாட் இல் வந்து நின்றது பேரம். அன்று ஆரம்பித்த பேரம் பேசிப் பயணிக்கும் அனுபவங்கள் தாய்லாந்தில் இருந்து விடைபெறும் நாள் வரை தொடர்ந்தது. யோசித்துப் பார்த்தால் இந்தப் பேரம் பேசி குறைக்கும் தொகை வெளிநாட்டு செலாவணியோடு ஒப்பிடும் போது ஒரு டாலரும் கூட இருக்காது. ஆனால் ஏனோ ஆசிய நாடுகளுக்குப் போனால் இந்தப் பேரம் பேசும் வியாதி தானாக ஒட்டிக் கொண்டு விடுகிறது.

நான் முந்திய பதிவில் சொன்னது போல ஒரு நல்ல ஹோட்டலை தங்குமிடமாகத் தெரிவு செய்திருந்தாலும் அதன் அமைவிடம் தான் பெரும் சிக்கலைக் கொண்டு வந்திருந்தது. அதாவது அந்த ஹோட்டல் ஒரு சாலைக்குக் குறுக்காகப் போகும் சின்னச் சந்து வழியாகத் தான் தன்னுடைய நுழைவிடத்தை வைத்திருந்தது. ஆனால் தன் விலாசத்தை மட்டும் குறித்த சாலையாகக் காட்டி இருந்தது. விமான நிலையத்தில் இருந்து பயணித்த டாக்சிக்காரர் குழம்பிப் போய் ஒருவாறு இடத்தைப் பிடித்து டாக்சியை நிறுத்தினார். ஆனால் தொடந்த நாட்களில் இந்த ஹோட்டலுக்கு நான் பயணித்த டாக்சி ஒவ்வொன்றுக்கும் வழிகாட்டிக் களைத்தே போனேன்.

Lamphu Tree House இதுதான் நான் தேர்தெடுத்த தங்குமிடம். நடுத்தர கட்டணத்தில் 1,850 பாட் (55 US dollar ) இலிருந்து கிடைக்கின்றது தங்கும் அறைகள். தாய்லாந்தின் பாரம்பரிய மரவேலைப்பாடுகள் கொண்ட கட்டிட அமைப்பில் தங்குமிடச் சூழலிலும் அறைகளிலும் தாய்லாந்தின் மரவேலைப்பாடுகள் சிற்பங்களாக ஜொலிக்கின்றன. இணையப் பாவனைக்கு அரை மணி நேரத்திற்கு 30 பாட் ஐ அறவிடுகின்றார்கள். நீச்சல் அரங்கம் ஒன்று உண்டு.

இன்னொரு சிறப்பு காலை உணவு buffet முறையில் பாணில் ஆரம்பித்து தாய்லாந்தின் தனித்துவ உணவு வகைகள் சைவ அசைவங்களாக நிறைந்திருக்கும். காலை உணவுக்கான தனிக்கட்டணம் ஏதுமில்லை. அறை வாடகைக்குள் அடங்குகின்றது. விருந்தாளிகளாக அமெரிக்கர்களும் ஒரு சில அவுஸ்திரேலியர்களும் தென்பட்டார்கள். இந்தத் தங்குமிடத்தின் முகாமையாளர் கனிவான சுபாவம் கொண்டவராக , தனது ஹோட்டலில் தங்கி இருப்பவர்கள் கேட்கும் உதவிகளுக்கு அள்ளி அள்ளி ஆலோசனைகளைக் கொடுக்கின்றார். அவர்கள் போக வேண்டிய இடங்களைப் பரிந்துரை செய்கின்றார். கூடவே அங்கிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணிப்பதற்கு அண்ணளவாக எவ்வளவு செலவாகும் என்பதை விரல் நுனியில் வைத்திருந்து சொல்கின்றார். இதனால் ஒரு வாடகைக் காரையோ, ருக் ருக் இனையோ பிடித்துப் பேரம் பேச இலகுவாக அமைந்து விடுகின்றது.

அடுத்த நாட்காலை 9 மணிக்கு ஏற்கனவே விமான நிலையத்தில் ஒழுங்கு செய்த சுற்றுலாப் பணியகத்தின் வழிகாட்டி வர வேண்டும். காலை 8.30 மணிக்கே தயாராக இருக்கிறேன். மணி 9.05 ஐயும் தாண்டி 9.10 க்குள் நுழைகிறது. சலித்துப் போய் தங்கிருந்த ஹோட்டலில் வரவேற்புப் பகுதியில் இருக்கும் பெண்ணிடம் விஷயத்தைச் சொல்கிறேன். அவள் அந்தச் சுற்றுலாப் பணியகத்தைத் தொடர்பு கொண்டு பேசிவிட்டு என்னிடம் “வழிகாட்டி வழி மாறி எங்கோ போய்விட்டாராம், இப்போது வருகிறாராம்” என்றாள்.

வழிகாட்டிக்காக காத்திருக்கிறேன்.

Oct
11

தாய்லாந்து உலாத்தல் ஆரம்பம்

Filed Under Uncategorized

“போகணும்னு மட்டும் தான் தோண்றது ஆனா எங்கே போகிறதுன்னு தெரியலையே” என்று கெளரவம் சிவாஜி மாதிரி பேச வேண்டும் போலத் தோன்றியது இம்முறை உலாத்தலை ஆரம்பித்தபோது. இறுதியில் 2 நாள் அவகாசத்தில் திடீர் திட்டமிடலோடு போகவேண்டும் என்று நான் தீர்மானித்த இடம் “தாய்லாந்து”. ஏற்கனவே தாய்லாந்தின் அண்மித்த நாடான கம்போடியாவுக்கு கடந்த வருடம் பயணித்த பின்னர் ஆசிய நாடுகள் எல்லாவற்றையும் பார்த்து விடவேண்டும் என்ற ஆசை இன்னும் தீவிரமாக ஏற்பட்ட நிலையில் தாய்லாந்து தான் இம்முறை பொருத்தமான இடமாக இருக்கும் என்று நினைத்தேன்.

ஏழு வருடங்களுக்கு முன்னர் வேலை நிமித்தம் தாய்லாந்துக்கு 1 வாரம் போகவேண்டி இருந்தது. வேலைப்பழு காரணமாக உலாத்தலுக்கு அப்போது அவகாசம் கிட்டவில்லை. ஆனால் ஒரு நாள் இரவு உணவுக்குப் பின் டாக்சியில் பயணிக்கும் போது வீதியின் மருங்கிலே திடீர் என்று எதிர்ப்பட்ட இந்து ஆலயம் ஒன்றைக் கண்டு யுரேக்கா யுரேக்கா என்று கத்த வேண்டும் போல இருந்தது. ஆனால் அப்படியெல்லாம் கத்தாமல் டாக்சிக்காரரை ஓரமாக வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு சென்ற அந்த ஆலயம், சிறீ மாரியம்மன் கோவில். அப்போது நவராத்திரி காலம் கூடவே கோயிலின் மகோற்சவ காலம் என்பதால் ஆலயச் சூழல் படு அமர்க்களமாக இருந்தது. மாரியம்மன் கோயில் தரிசனத்தோடு மட்டும் என் அன்றைய தாய்லாந்து சுற்றுலா ஓய்ந்து போனது.

இம்முறை என் பயணம் முழுமையான சுற்றுலா, குறிப்பாக தாய்லாந்து நாட்டின் வரலாற்று விழுமியங்களைத் தேடிப் பார்த்து விடவேண்டும் என்பதே அதில் முனைப்பாக இருந்தது. தாய்லாந்து நாட்டில் இந்து மதத்தின் பரவலையும் அறிய வேண்டும் என்ற அவாவும் கூடவே இருந்தது.


வழக்கம் போல பயண ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக Lonely Planet இன் “தாய்லாந்து வழிகாட்டி” நூலை வாங்கி முதற்கட்டமாக நான் தங்குவதற்கு ஏற்ற தங்குமிடத்தைத் தேடினேன். இருப்பவற்றுள் Lamphu Tree House என்ற தங்குமிடம் சிறப்பான வசதிகளோடு இருப்பதாகப் பட்டது. இணையத்திலும் அந்த ஹோட்டலின் இணையப்பக்கத்தையும் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டேன். இங்கே ஒரு சுற்றுலா டிப்ஸ் சொல்லி வைக்க வேண்டும். பொதுவாக சுற்றுலாவுக்குப் போகும் போது பெரும் நட்சத்திர ஹோட்டல்களை விட நடுத்தர (mid range) நிலையில் உள்ள ஹோட்டல்களை நான் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் தங்கும் கட்டணம் நியாயமானது என்பது மட்டுமல்ல, இப்படியான நடுத்தர நிலையில் உள்ள ஹோட்டல்களில் இருக்கும் பணியாளர்களில் இருந்து முகாமையாளர் வரை விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். சுற்றுலாப் பயணம் செல்ல வேண்டிய இடங்கள், மேலதிக தகவல்கள் போன்றவற்றைத் தேடித் தருவதோடு தனிப்பட்ட அல்லது குழுவாகப் பயணம் செய்யக் கூடிய ஸ்தல யாத்திரைகளையும் ஒழுங்கு செய்து தருவார்கள் என்பதே முக்கியமான காரணம். அந்த வகையில் முன்னர் நான் சென்ற கம்போடியாப் பயண அனுபவத்தில் Lamphu Tree House என்ற தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் இல் உள்ள தங்குமிடத்தை இணையம் மூலம் முற்பதிவு செய்து உறுதிப் படுத்திக் கொண்டேன். ஆனால் இந்த ஹோட்டல் மூலம் வந்த வம்பை பின்னர் சொல்கிறேன் ;)
அடுத்த நாள் பயணம், அதற்கு முதல் நாள் சிட்னியில் இருக்கும் அவுஸ்திரேலியாவிற்கான தாய்லாந்து நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு போன் இட்டு,
“நான் தாய்லாந்து நாட்டுக்குப் பயணிக்க இருப்பதாகவும் அங்கே தாய்லாந்து சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏதாவது சுற்றுலாப் நிகழ்ச்சித் திட்டங்களை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பாடு செய்து தருகின்றதா?” என்று கேள்விக் குறியிட்டேன்.
மறுமுனையில் தாய் வாடையில் ஆங்கிலம் பேசிய மாது “எமது சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணி தாய்லாந்து நாட்டுக்கு வாருங்கள் என்று பிரச்சாரப்படுத்தும் நோக்கம் மட்டும் தான், நீங்கள் தாய்லாந்து போய்த்தான் சுற்றுலா முகவரைத் தேடவேண்டும்” என்று சொல்லி தன் கடன் பணி செய்து முடித்தார்.

எனது விமானச் சீட்டை ஒழுங்கு செய்த பயண முகவரிடம் “தாய்லாந்துக்கு விசா தேவையா” என்று மூன்றாவது முறையும் கேட்டு வைத்தேன், தேவை இல்லை” என்று அவர் நாலாவது முறை சொல்லி மனதுக்குள் அலுத்திருப்பார். நான் சந்தேகப் பிராணியாக இப்படி நடந்து கொண்டதற்கு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில் ஏழு வருடங்களுக்கு முன்னர் நான் அவுஸ்திரேலிய பாஸ்போர்ட் உடன் தாய்லாந்துக்குப் பயணிக்க வேண்டி இருந்த போது தாய்லாந்து விசா எடுக்க வேண்டியது அன்று அவசியமாக இருந்தது.


சிட்னியில் இருந்து முதலில் சிங்கப்பூர் போகும் Singapore Airlines இன் காலை நேர விமானத்தில் ஏறியாற்று. வழக்கம் போல விமானத்தின் டிவி திரையில் காண்பிக்கப்போகும் திரைப்படங்கள் பட்டியலை நோண்டினேன். வழக்கம் போல யாரோ ஒரு ரசனையின் உச்சம் கொண்டவர் பரிந்துரைத்த “வில்லு” என்ற காவியமும் “அபியும் நானும்” என்ற த்ரிஷா நடித்த தொலைக்காட்சி நாடகமும் இருந்தது. கூடவே ஆடியோ பகுதியில் “வசூல்” என்ற படத்தின் பாடல்கள் இருந்தன. அந்தப் படம் எடுத்தவருக்கே தெரியுமோ தெரியாது இந்தப் படத்தின் பாடல்கள் வந்திருக்கும் என்று.

சிங்கையில் இறங்கி ஒரு மணி நேர இடைவெளியின் பின் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொங் போகும் விமானத்தில் ஏறி இருந்தாயிற்று. தாய்லாந்து நாட்டுக்கு உள்நுளைவோர் பதியும் சிட்டையை விமானப் பெண் தந்தாள். அதை வாங்கி நிரப்ப ஆரம்பித்தால் ஒரு பகுதியில் விசா இலக்கம் என்ன என்ற கேள்வி இருந்தது. அடிவயிற்றில் யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போல இருந்தது.

தாய்லாந்தில் என்ன நடக்கப் போகுது => அடுத்த பதிவில்
0000000000000000000000000000000000000000000000

மலேசிய உலாத்தல் ஆரம்பித்த வேளை சரியில்லைப் போல. பயணத் தொடரின் முதல் பதிவு போட்டதில் இருந்து மாதங்கள் கடந்தும் சில பல காரணங்களால்/வேலைப்பழுவால் அதைத் தொடராமல் போய் விட்டது. இடையில் தாய்லாந்துக்கும் போய் உலாத்தி விட்டு வந்தாயிற்று. எனவே மலேசிய உலாத்தலை ஒரு பக்கம் நிறுத்தி வைத்து விட்டு தாய்லாந்து உலாத்தலை முழுமூச்சோடு எழுதி முடிக்கக் கங்கணம் கட்டி இறங்கியிருக்கிறேன்.