Dec 06 2016

இயேபின்ட புஸ்தகம் 🎬

Published by under Uncategorized


எந்தவொரு ஆட்சி, அதிகார முறைமையும் துரோகத்தனத்தால் கட்டியெழுப்பப்பட்டது. அது தன்னை நிலை நிறுத்த எந்தவொரு விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கும். பதவி வெறிக்கு முன் பந்த பாசம் கூட நிலைத்திருக்காது. 

ஆனால் இப்படியானதொரு கட்டமைப்பு என்பது நிலைத்திருக்காது, அடிமைத் தளையிலிருந்து தன் சமூகத்தைக் காப்பாற்றிக் கொள்ள, சமூக விடுதலை நோக்கிய, தன்னலம் பாராத போராளிகள் தோற்றம் பெறுவர். 

மன்னராட்சிக் காலத்திலிருந்து, ஐரோப்பியர் காலம், அதற்குப் பின்னான குடியாட்சி அரசமைப்பு வரை இது முடிவில்லாத சக்கரச் சுழற்சி. இதைத்தான் “இயோபின்ட புஸ்தகம்” திரைப்படமும் பதிவாக்குகிறது.


இந்திரா காந்தி அரசால் இந்தியாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட காலப்பகுதி, 1977 ஆம் ஆண்டு தான் எந்த நேரமும் கைதாகலாம் என்ற சூழலில் கம்யூனிஸ்ட் தலைவர்,  தன் கழிந்த நினைவுகளை, வரலாற்றின் பழைய பக்கங்களை எழுத ஆரம்பிக்கிறார். அதுதான் “இயோபின்ட புஸ்தகம்” (The Book of Job).


ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்குப் பாய்கிறது கதை. ஹாரிசன் என்னும் வெள்ளைக்காரர் கேரளாவின் மூணாறு பகுதியிலே தேயிலைத் தோட்டங்களை நிறுவித் தன் வர்த்தகப் பரப்பை ஆரம்பிக்கிறார். அந்தத் தோட்டங்களில் வேலை செய்ய வாழ்க்கைப்பட்டவர்களை அடிமைகளாக வழி நடத்தும் வகையில் விசுவாசமிக்க ஒருவனைக் காண்கிறார். அவனைக் கிறீஸ்தவனாக்கி இயோப் (Job) என்று பெயரும் சூட்டப்படுகிறது. 

முரட்டுத்தனமும், மிருக குணமும் கொண்ட இயோப் இப்போது ஹாரிசனின் முற்று முழுதாக நம்பிக்கைக்குரிய விசுவாசி. ஏற்கனவே திருமணமான உள்ளூர்ப் பெண் கசாளி மேல் ஹாரிசனின் பார்வைபடுகிறது.  கசாளியின் கணவனைக் கொன்று அவளை ஹாரிசனின் ஆசை மனைவி ஆக்குகிறான் இயோப். 

இயோப் இற்கு ட்மித்ரி, இவான், அலோசி என்று மூன்று பையன்கள். 

இந்த நிலையில் முதலாம் உலக யுத்தம் ஆரம்பிக்கிறது. ஹாரிசனின் தேயிலை வர்த்தகம் படுத்துவிட அவர் இங்கிலாந்து செல்ல முனைகிறார். ஆனால் கொச்சினில் வைத்து அவருக்கு நோய் முற்றி இறக்கிறார்.

இயோப் தன் கையில் அதிகாரத்தை எடுக்கிறான். மூணாறின் தேயிலை வயல்கள், ஹாரிசனின் பங்களா உள்ளிட்ட சொத்துகளைக் கையப்படுத்தி விடுகிறான். கர்ப்பவதியான ஹாரிசனின் ஆசை மனைவி கசாளியை வீட்டை விட்டு அடித்துத் துரத்துகிறான்.

இயோபின் மூத்த மகன் ட்மித்ரியும் இரண்டாமவன் இவானும் தன் தந்தை போன்ற முரட்டுச் சுபாவம் மிக்க வஞ்சகர்களாக வளர்கிறார்கள். ஆனால் கடைசிப் பையன் அலோசியோ இளமையிலேயே இறந்து போன அவனின் தாயைப் போல இரக்க சுபாவம் கொண்டு வளர்கிறான். அவனின் நட்பு வட்டம் காசாளியின் மகள், மலைக் கிராமத்துப் பையன் செம்பன் என்று சிறியது. 

ஆனால் சிறுவன் அலோசி, தம் அண்ணன் இருவரும் வேலைக்காரியைப் பாலியல் வன் கொடுமை செய்து கொன்று தூக்கியதைக் கண்டு வெறுத்துப் போய்  தன் வீட்டை விட்டே ஓடுகிறான்.


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயங்கிக் கொண்டிருந்த Royal Navy இல் கடற்படை வீரனாகச் சேர்ந்த அலோசி 1946 ஆம் ஆண்டில் மீண்டும் தம் சொந்த பூமிக்கு வருகிறான். 

இயோப் மற்றும் அவனது மகன்களது கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மூணாறு வாழ் அப்பாவிக் குடிகள் எப்படிக் காப்பாற்றப்படுகிறார்கள், ஆங்கிலேயர் ஆட்சியின் நிர்வாகத்தில் இருந்த இந்தியக் கடற்படையில் இருந்த அலோசியின் மறுபக்கம் என்ன, இந்த மூணாறுப் பகுதியின் வளத்தைச் சுரண்ட வரும் மதுரை அங்கூர் ராவுத்தரின் சதி வலையில் சிக்கும்இயோபின் ராஜ்ஜியத்தின் நிலை என்ன இதைத்தான் தொடர்ந்து பேசுகிறது இயோபின்ட புஸ்தகம்.


ஒரு வரலாற்றுப் பகைப்புலத்தோடு எடுக்கப்பட்ட இந்திய சினிமா இலக்கியத்தை இந்தப் படமளவுக்கு நேர்த்தியாக, என்னுடைய அனுபவத்தில் கண்டதில்லை. அதற்குக் காரணமே பிரமாண்டம் என்ற பெயரில் சாரமிழந்து போன காட்சியமைப்பு, எடுத்துக் கொண்ட சிக்கலான கதையமைப்பை எந்த வித வர்த்தக மாமூல் விஷயங்களுக்கும் ஆட்படாது நிறுவுதல், வெறும் பிரமாண்டத்தை மட்டும் காட்டிக் கதையில் கோட்டை விடுதல் என்ற நிலை இல்லாதிருத்தல் என்ற வகையிலேயே இதுவொரு கச்சிதமானதொரு படைப்பு.


இயக்குநர் அமல் நீராட் உடன் இணை தயாரிப்பாளர் இந்தப் படத்தின் நாயகன் பகத் பாஸில். இந்தப் படத்தின் கதையை ஒரு சொட்டுக் கூடச் சிதற விடாது காட்சியமைப்பில் பெரும் நியாயத்தைக் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளரும் இயக்குநர் அமல் நீராட் தான். ஒளிப்பதிவுக்கும், காட்சிக் களன்களுக்கும் நூறு புள்ளியை இறைக்கலாம்.

நல்ல இயக்குநர் மட்டுமல்ல மலையாள சினிமாவின். இன்றைய நம்பிக்கைக்குரிய குணச்சித்திர ஆளுமை லால் தான் கொடுங்கோலனான இயோப் ஆக வருகிறார். தமிழ்ப்படங்களில் சாதா வில்லனாக்கிப் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கும் நாம் லால் இம்மாதிரியான அமானுஷ்ய நடிப்பைக் கொடுத்த படங்களைத் தேடியெடுத்துப் பார்க்கும் போது அவரின் உண்மையான பரிமாணம் விளங்கும்.

நான் நினைத்தே பார்க்கவில்லை, ஒடிசலான தற்காலத்துத் தலைமுறை நடிகன் ஜெயசூர்யா அங்கூர் ராவுத்தர் என்னும் மதுரைக்கார வணிகராக நெஞ்சில் வஞ்சமும், முகத்தில் கள்ளமும் பொதிந்திருக்கும் வெளிப்பாட்டை அநாயசமாகக் காட்டியது. இந்தப் படத்தில் லால் இற்கு அடுத்து நடிப்பென்ற வகையில் இவருக்குத் தான் கனமான வேலை கிட்டியிருக்கிறது.

இயோபின் கடைசி மகன், அலோசி என்ற முற்போக்குச் சிந்தனை கொண்ட வாலிபனாக பகல் பாஸில், நாயகன் என்பதற்காகத் தன்னை மீறிய நாயகத் தனத்தைத் தன் படங்களில் காட்டாதவர் இந்தப் படத்திலும் அடக்கமாகத் தன் எல்லையில் நின்று சாதிக்கிறார். இன்னும் அந்த செம்பன் என்ற மலைவாசி இளைஞனாக விநாயகன் இன்று கேரளாவைத் தாண்டி கவனிக்கப்படும் நடன், தன் கணவன் இவானின் (இயோபின் இரண்டாவது மகன்) துன்புறுத்தலுக்கு அடங்கிப் போனாலும் தன் கனவுலத்தில் வாழ்ந்து கொண்டே வஞ்சம் தீர்க்கக் காத்திருக்கும் ரஹேல் என்ற பாத்திரத்தில் வரும் பத்மப்ரியா, ஹாரிசனின் மகளாக ஏழ்மையும், மர்மமும் முகத்தில் புதைத்து வைத்திருக்கும் மார்த்தா என்ற இஷா சர்வாணி என்று சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொரு பாத்திரங்களும் கச்சிதமாகப் பொருந்திப் போன நடிகர்களின் பங்களிப்பு.


படத்துக்கு அளவாகத் தூவப்பட்ட இசைக் கலவையை நேஹா நாயரும் யக்ஸன் கேரி பெரேராவும் சிறப்பான பங்களிப்பு. ரஹேலின் கனவுலகத்தில் பின்னணியில் ஒலிக்கும் “மெளனமே இதென்ன சொல்கிறாய்” https://youtu.be/q5V3iMGCRA் உஷா உதூப் பாடும் அந்தத் தமிழ்ப்பாட்டு அப்படியே காட்சியமைப்போடு படத்தை உலகத் தரத்தில் அமர்த்துகிறது.

அலோசி & மார்த்தா காதல் பாடலைத் தவிர்த்திருக்கலாம்.

 

இந்தப் படம் கேரளாவில் வசூல் ரீதியாகவும், விருதுகளாலும் பெருமை சேர்த்திருக்கிறது. இருப்பினும் இந்தியத் தேசிய விருதுகளிலும், சர்வதேசப் பட விழாக்களிலும் அதிகம் கவனிக்கப்பட வேண்டியது.

 

எங்கோ பிறந்து, எங்கோ வளர்பவன் தனக்கு செளகரியமான வாழ்விடங்களைத் தேடிப் போகின்றான். வரலாற்றின்  எல்லாக் காலகட்டத்திலும் அதர்ம நெறிகளோடு வாழத் தலைப்பட்டவர்களின் முடிவுரையை அலோசி போன்ற போராளிகளால் எழுத வேண்டியிருக்கிறது. சுதந்தரத்துக்குப் பின்னான மக்களாட்சியில் அலோசி போல் ஒருவன் வருகைக்காகக் காத்திருக்கிறது “இயோபின்ட புஸ்தகம்”.

No responses yet

Feb 07 2016

விசாரணை – என்னுடைய FIR

Published by under Uncategorized

 

வழக்கம் போல நல்ல படங்களுக்கு வரும் குறைவான மக்கள் கூட்டத்தோடு சிட்னியிலுள்ள திரையரங்கில் விசாரணை படம் பார்த்தேன். இப்படியான வகையில் நம்பிக்கை கொடுக்கும் ரசிகர்களால் தான் முன்னர் “அவதாரம்” படத்தின் ஆஸி விநியோகஸ்தருக்கும் அதுவே கடைசிப் படம் ஆனது. அப்போது 15 பேருடன் மெல்பர்ன் திரையரங்கில் பார்த்திருந்தேன். “அங்காடித் தெரு” பட சிட்னி விநியோகஸ்தரும் மூன்று பேருடன் படம் காட்டிய அனுபவத்தில் அப்படியான விஷப் பரீட்சைக்கே பின்னர் இறங்கும் நிலை இல்லாமல் போனது. இதுதான் நல்ல படங்களுக்கும் அவற்றைத் திரையரங்கில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்குமான இடைவெளியை ஏற்படுத்தும் சமாச்சாரங்கள்.

 

சரி இனி “விசாரணை” க்கு வருவோம்.

தாமுண்டு தம் வேலையுண்டு என்றிருக்கும் அப்பாவிகள் நாலு பேர் ஆந்திரா காவல்துறையினரால் கொள்ளையடிப்பு வழக்கின் குற்றவாளிகள் ஆகுமாறு நிர்ப்பந்திக்கப்படும் சூழலுக்கு அவர்கள் ஆட்படும் போது அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள். ஆந்திராவில் இருந்து தம் தாய்த் தமிழகத்துக்கு வந்த போது எப்படியானதொரு சவாலை எதிர் கொண்டார்கள் என்பதே படத்தின் மூலம்.

சொல்லப் போனால் இரண்டு வெவ்வேறு முடிச்சுகளோடு பயணப்படும் கதை, இடைவேளைக்கு முன், பின் என்று பயணிக்கிறது.

 

உமா சந்திரன் எழுதிய “முள்ளும் மலரும்” நாவலை முழுமையாகப் பயன்படுத்தாமல் அதன் முக்கிய கதையோட்டத்தை வைத்து மீதியைத் தன் பாணியில் கதையாக்கி “முள்ளும் மலரும்” படத்தை இயக்கிய போதும் இயக்குநர் மகேந்திரன், மூல எழுத்தாளக்குரிய கெளரவத்தையும், அடையாளத்தையும் ஒரு போதும் குறைத்துக் காட்டியதில்லை.

அது போலவே  மு.சந்திரகுமார் தன் சுய வாழ்வியல் குறிப்புகளை வைத்து எழுதிய “லாக்கப்” என்ற புதினத்த்தை இந்தப் படத்தின் முதல் பகுதியில் மட்டும் பயன்படுத்தி மீதியை இன்னொரு களத்தோடு இணைத்துப் புதிதாகக் கதை பண்ணிய வெற்றி மாறனும் இங்கே மு.சந்திரகுமாருக்கான முக்கியத்தை என்றும் தவிர்த்ததில்லை.

இயக்குநர் வெற்றி மாறனைப் பொறுத்தவரை அவரின் முந்திய படைப்புகளோடு ஒப்பிடும் போது “விசாரணை” அசுரப் பாய்ச்சல். அதுவும் இரண்டு கதை அம்சங்களை ஒரே காவல்துறை எனும் தளத்தில் நிகழ்ந்தாலும் இரு வேறுபடுத்திக் காட்டிய விதத்திலும் “வெற்றி” மாறன் தான்.

 

ஆனால் காட்சியமைப்புகளில் ஏற்கனவே பார்த்த இயக்குநர் மிஷ்கின் போன்றோரின் காவல் துறைப் படங்களின் ஒரு சில காட்சியமைப்புகளை நினைவுபடுத்துவது போலத் தோன்றி மறைகிறது.

ஆனந்தியின் பாத்திரமும், தினேஷ் & ஆனந்தி நட்பும் படத்தின் ஓட்டத்துக்கு எந்த விதத்திலும் உதவாத இடைச் செருகல்.

ஒரு மணி நேரம் 40 நிமிடம் ஓடும் படத்தில் பாடல்கள் இல்லை, இருந்தால் படத்தின் இயல்பைக் கெடுத்திருக்கும். ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை உறுத்தாமல் உதவுகிறது.

இடைவேளையே தேவை இல்லை எனுமளவுக்குப் படத்தைக் கவனம் சிதறாமல் எடுத்த விதத்திலும் வெற்றி மாறனுக்கு வெற்றியே.

 

நடிகர் தேர்வில் “அட்டகத்தி” தினேஷ், ஆடுகளம் முருகதாஸ் போன்றோர் படத்தின் பாத்திர அமைப்புக்கு ஏற்ற பாங்கில் இருப்பதால் இயல்பாகப் பார்க்க முடிகிறது.

சமுத்திரக்கனி இன்னொரு பிரகாஷ் ராஜ் ஆகும் அபாயக் கட்டத்துக்குப் பயணிக்கிறார்.

அதே பார்த்துப் போன இவரின் முந்திய பாத்திர நடிப்புக்குக் கொடுத்த உடல் மொழி, நல்லவரா கெட்டவரா என்று குழப்பும் நடையுடை. ஆனால் இந்த மாதிரிப் படங்களைப் பரவலான ரசிகர் வட்டத்துக்கு இழுத்துச் செல்லும் நட்சத்திர அந்தஸ்துக்குப் பலமாக அமைவார் என்ற விதத்தில் ஏற்கலாம்.

இங்கே சமுத்திரக்கனியின் கையைப் பிடித்து நான் இழுத்ததற்கு முக்கிய காரணமே நடிகர் கிஷோர் தான். முக்கியமான அரசியல் புள்ளியின் auditor ஆக வரும் கிஷோரை மையப்படுத்தித்தான் இந்தப் படத்தின் இரண்டாம் பகுதி.

 

வில்லன் என்றால் ஏகத்துக்கும் மிகை நடிப்பு, அப்பாவி என்றால் தரையில் தவழாத குறையாக நடித்துத் தள்ளும் நடிகர்களில் கிஷோர் இந்தப் படத்தில் கொடுத்திருக்கும் நடிப்புத் தான் இந்தப் படத்தில் பங்களித்த அனைவரையும் தள்ளி விட்டு முன் நிற்கிறது.

இவர் வரும் ஆரம்பக் காட்சியில் இருந்து இறுதி நொடி வரை நுணுக்கமாகப் பார்த்தால் ஒரு மகா நடிகன் தன்னுடைய நடிப்பை எவ்வளவு தூரம் தனித்து வித்தியாசப்படுத்திக் காட்டலாம் என்ற ரீதியில் அனுபவிக்கலாம்.

மற்றப்படி இந்தப் படத்தின் ஒவ்வொரு பாத்திரத் தேர்வும் கச்சிதம்.

 

படத்தொகுப்பாளர் கிஷோர் இந்தப் படத்துக்குப் பலம், அவரின் நிரந்தர இழப்பை ஆரம்பத்தில் நினைவுபடுத்திய விதத்தில் மனம் கனத்தது.

 

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணித் தயாரிப்பில் “காக்கா முட்டை” ஐத் தொடர்ந்து “விசாரணை” என்று இரண்டு நல்ல படைப்புகள். இதில் முன்னதுதான் உலகத் தரத்துக்கான சமரசம் இல்லாத இயல்பான படம் என்பது என் கருத்து.

 

ஒரு வருடத்துக்கு முன்பே தயாரிக்கப்பட்டாலும் இந்த ஆண்டின் நடப்புத் தமிழக அரசியலோடும், கடந்த வருடங்களில் நிகழ்ந்த அரசியல் சதுரங்க விளையாட்டுகளை உன்னிப்பாகக் கவனித்தோரும் இந்தப் படத்தின் காட்சி அமைப்போடு ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது.

 

சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற எழுத்தாளர் மு.சந்திரகுமாரின் காட்சிப் பதிவுகளைப் படம் முடிவில் இணைத்தது சிறப்பு.

வெனிஸ் இல் நிகழ்ந்த சர்வதேசப் பட விழாவில் போட்டிப் பிரிவில் பங்கேற்ற முதல் படம் விசாரணை. Amnesty International Italia விருதைப் பெற்றுக் கொண்டது.

 

“விசாரணை” போன்ற நல்ல சினிமா இன்னும் வர இவற்றைத் திரையரங்கு சென்று பார்த்து, இறுதியில் இடம் பாராது எழுந்து நின்று கை தட்டிக் கொண்டாட வேண்டும்.

 

 

 

 

 

No responses yet

Sep 24 2015

தமிழகத்தின் மடி தேடி – மாங்காடு அம்மன் தரிசனம்

Published by under Uncategorized

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டுப் பயணம் ஏதுமில்லை. இந்த ஆண்டு இலக்கியாவின் முதலாவது பிறந்த தினம் எம் தாய்நாட்டிலேயே அமைய வேண்டும் என்று நினைத்துக் கடந்த மார்ச் மாதமே இலங்கைக்கான பயண ஏற்பாடுகளைச் செய்தாயிற்று. அப்போது புது வேலையில் சேர்ந்த சமயம் புது நிறுவனத்தில் எனது முதல் வேண்டுகோளே செப்டெம்பரில் அமையும் 3 வாரப் பயணம் குறித்ததாக அமைந்திருந்தது.

 

நமது எண்ணம் பரிபூரணமாக இருந்தால் மீதி எல்லாமே நாம் திட்டமிட்டதுக்கும் மேலாக அமைந்து விடும் என்பதை எனக்கு மீளவும் நிரூபித்து விட்டது இந்தப் பயணம்.

 

இலக்கியாவை எம் பெற்றோருக்குக் காட்ட வேண்டும். எங்களுக்குக் குழந்தைச் செல்வன் கிட்டவேண்டும் என்று எங்களை விட அதிக கரிசனையோடு இருந்த நண்பர்கள் நேர்ந்த நேர்த்தியை முடிக்க வேண்டும் இவை தான் இந்தப் பயணத்தின் இலக்கு.

முதலில் இலங்கைக்குப் போவோம். அங்கிருந்து இந்தியா செல்லும் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தான் முதலில் திட்டம். காரணம் சிட்னியில் இந்திய விசா விண்ணப்பிக்க வீணாக இரண்டு வேலை நாட்களைத் தின்று விடும். அவ்வளவு பெருங்கூட்டம் எப்போதும் இந்திய விசா முகவர் நிலையத்தில்.  ஆனால் என்னுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக இலங்கையிலுள்ள இந்திய விசா முகவர் நிலையத்தில் அனுபவம் அமைந்துவிட்டது. முதலில் இந்திய விசாவுக்கான புகைப்படத்தை எடுத்துக் கொள்வோம். எதற்கும் ஒரு உதவியாக அந்தப் படங்களை சீடியிலும் பதிவு பண்ணுவோம் என்று கொழும்பில் அந்த விடிகாலையில் திறக்கப்படாத புகைப்படக் கடைகளையெல்லாம் தட்டி ஒருவாறு காலை ஒன்பது மணிக்கே (கவனிக்கவும் கே)

கடையைத் திறந்து வைத்திருந்த புண்ணியவானிடம் முகத்தைக் காட்டிப் படமும் எடுத்து ஆட்டோவில் இந்திய விசா முகவர் நிலையம் போனால் அங்கே கல்யாணக் கூட்டம். ஒரு வித்தியாசம், விசா விண்ணப்பிக்க வந்தவர்களை விட விண்ணப்பப் படிவமும் கையுமாக நின்று வாறவர் போறவரை எல்லாம் அமுக்கும் கூட்டம் தான் அது. அதையும் கடந்து முகவர் நிலையம் நுழைந்தால் ஒரு இளைஞன் வரவேற்று இன்னொரு அறையைக் காட்டினான். அங்கே இன்னொருத்தர் புகைப்படக்கருவி சகிதமாக.

“300 ரூவாவுக்கு விசா விண்ணப்பம் நிரப்பித் தரலாம் அண்ணை றோட்டில நிக்கிறவங்கள் கூடக் கேப்பான்கள் ஏமாந்து போவிடாதேங்கோ அந்தா தெரியுது பில்டிங் அங்கை எங்கட ஆட்கள் நிக்கினம் போங்கோ என்று அவன் கையைக் காட்ட மீண்டும் வெளிப்பிரகாரச் சுற்று, 300 ரூபா தள்ளு கையில் விண்ணப்பப் படிவம் இந்தா பிடி.

மீண்டும் பழைய இடத்துக்கு வந்து நிற்க, மேல போங்கோ அண்ணை அங்க தான் விசா விண்ணப்பம் எடுப்பினம். மேலே போனால் எல்லாம் மீசை முளைக்காத இளைஞர் கூட்டம் வேலை பார்த்துக் கொண்டிருந்தது.

எட்டிப் போய் ஒருத்தரிடம் கேட்டேன்,

“நான் அவுஸ்திரேலியன் பாஸ்போர்ட் எவ்வளவு நாள் விசா வர எடுக்கும்? யாழ்ப்பாணமும் போகோணும் வெறுங்கையோட ஓமந்தையில் கால் வைக்கேலாது”

 

“குறைந்தது ஏழு நாள் எடுக்கும்” என்றார் அதில் இருந்த பொடிப்பையர்.

ஏழு நாள் என் பாதி விடுமுறையைத் தின்னுமே என்று வாயைப் பிழியாமல் ஏமாற்றத்தோடு வெளியில் வந்தேன். அப்போதுதான் அண்ணர் சொன்ன செய்தி ஞாபகத்துக்கு வந்தது. இந்த ஆகஸ்ட் 15 முதல் அவுஸ்திரேலியா உட்பட சில நாடுகள் e-Visa வுக்கு apply பண்ணலாமாம். அந்தப்  புது நடைமுறையில் ஏன் இறங்குவான் என்றிருந்த நான் சரி இதுதான் கடவுள் விட்ட வழி என்று குட்டி யாழ்ப்பாணம் வெள்ளவத்தையை நோக்கிப் போய் ஒரு netcafe பிடிச்சு புகைப்பட சீடியை கணினியின் வாயில் அமுக்கி online இல் இந்திய e-Visa விண்ணப்பத்தை நிரப்பினேன். சலக்கடுப்பு கண்டவன் சிறு நீர் கழிப்பது போன்ற இணைய வேகத்தில் வெந்ததும் வேகாததுமாக விறு விறுவென்று காரியத்தை முடித்துவிட்டு வெளியே இறங்கினேன்.

அடுத்த நாள் காலை iPad இல் கண் விழிக்கும் போது எனது இந்திய விசா பரிசீலிக்கப்பட்டு வழங்கப்பட்டதாக மின்னஞ்சல் வந்தது.

 

உடனேயே விமானச் சீட்டைப் பதிவு பண்ணிவிட்டு எனது ஆஸ்தான ஓட்டல் நண்பரை அழைத்தேன். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் நண்பர் அனுப்பிய கார் காத்திருந்தது.

“ஓட்டலுக்குத் தானே சார்?” வெற்றிலைக் கறையேறிய சாரதி என்னிடம் திரும்பி

 

“மாங்காடு மாரியம்மன் கோயில் இங்கிருந்து பக்கமாங்க?”

 

“போயிடலாம் சார் முக்கால் மணி நேரம் ஆகும்”

கணக்குப் போட்டுப் பார்த்தேன். சென்னையில் இருப்பதே மூன்று நாட்கள். எனவே மாங்காடு அம்மன் கோயிலில் எனக்காக நேர்த்தி வைத்த நண்பரின் வேண்டுகோளின் படி அங்கேயே முதலில் போகலாம் என்று நினைத்து

 

“சரி அங்கே எடுங்க”

கொத்தவால்சாவடி எல்லாம் தாண்டி கார் மாங்காடு நோக்கிப் பயணித்தது.

தீ மிதிப்பு ஒன்றுக்கு ஆளுயர நடிகர் விஜய் கட் அவுட் போட்டு அவரின் ரசிக சிகாமணிகள் தீ மிதிப்போரை வாழ்த்தியிருந்ததைக் கண்டதும் மனதுக்குள் கவுண்டர் “மொதல்ல இவனை நான் மிதிச்சிட்டு வர்ரேன்” என்று அந்த நேரம் சிரிப்பு மூட்டினார்.

 

வழக்கம் போல வாகனச் சாரதியோடு நட்புப் பாராட்டிப் பழக்கம் பிடிக்கும் கதை இம்முறையும் இருந்தது. பக்கா சென்னைத் தமிழன் அவர். அவர் காரோடிக் கொண்டே என்னிடம் பேசப்பேச “மச்சி மன்னாரு மனசுக்குள்ள பேஜாரு” என்று என்னுயிர்த் தோழன் இளையராஜா பாடிக் கொண்டிருந்தார்.

 

மாங்காடு அம்மன் கோயிலின் பக்கவாட்டு வாசலில் இருந்த சாலையில் காரை நிறுத்திவிட்டு சாரதி நண்பரும் என்னுடன் கூட வந்தார்.

“தங்கச்சி! சார் வெளியூர்ல இருந்து வர்ரார் நேர்த்தி ஆக்கணும் பூஜை ஜாமன்களை எடுத்து வையீ” என்று கோயிலுக்கு நெருக்கமாக இருந்த ஒரு பூக்கடைப் பெண்ணிடம் நம் சாரதி கேட்க

“இந்தாங்க சார்  மாலை, பழம், இந்தாங்க இந்த வெள்ளித் தட்டுல வச்சிடுங்க” வெள்ளித்தட்டொன்றைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்து விட்டு நீட்டினார் பூ விற்கும் பூவை.

 

“எவ்ளோம்மா கணக்கு”

“பூ மாலை, பழம், பூவு, தேங்கா” என்று அந்தப் பெண் எண்ணிக் கொண்டே காசுக் கணக்கைப் பார்த்து முடிப்பதுக்குள்

“நூத்து இருவது ரூபா கொடுங்க தம்பி” உள்ளே இருந்து பாரதிராஜாவின் ஏதோவொரு கிராமியப் படத்தை ஞாபகப்படுத்தும் தொங்கல் காதுக்குள் ஊஞ்சலாடும் கடுக்கண் மின்ன தாய்க் கிழவிவின் குரல் .

 

“நீ சும்மா இர்ம்மா” அந்தப் பெண் சினந்து விட்டு மீண்டும் காசுக் கணக்கைச் சரி பார்த்து

“ஆமாங்க நூத்து இருவது தான் ஆவுது”

 

“பாத்தியாம்மா உங்கம்மா எவ்ளோ பார்ஸ்டு பெரிசு பெருசுதான்” என்று நம் சாரதி நக்கலடிக்க வெட்கித்தார் அந்தப் பெண்.

 

ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோயிலுக்குள் பக்தர் கூட்டம் அள்ளியது. நீண்ட குழாய்த்தடுப்பு வழியே ஊர்ந்து ஊர்ந்து கடந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு தம்பதி அவர்களுக்கும் நீண்ட வருடங்களுக்குப் பின் மகள் பிறந்திருக்க வேண்டும். சுமார் இரண்டு வயசு மதிக்கத்தக்க அந்தச் சுட்டிப் பெண் வேடிக்கை காட்டினார். “காமாட்சிம்மா” “காமாட்சிம்மா” என்று அந்தக் குழந்தையின் பெயரைச் சொல்லி அன்பொழுகக் கவனித்துக் கொண்டிருந்தார் தந்தை.

 

வரிசையில் கலந்து மூல விக்கிரகங்களாக வீற்றிருக்கும் மாங்காடு காமாட்சி அம்மன்

தரிசனம் நிறைவாகக் கிட்டியது. ஆண்டவருக்கு நன்றி சொன்னேன்.

உட்பிரகாரத்தைச் சுற்றும் போது பால் கலந்த ஒரு வகை நைவேத்தியம் கிட்டியது.

நேர்த்தி வைக்கும் இடத்திலும் சுற்றி முடித்து விட்டு வெளியே வந்தேன்.

பூக்கடைக்குப் போய் இந்த வெள்ளித் தட்டைக் கொடுக்க வேண்டும் என்று அந்தப் பக்கம் நடந்து போய் பூ விற்கும் பெண்ணிடம் தட்டை நீட்டினேன்.

 

“காப்பித் தண்ணி ஏதாச்சும் குடிச்சுட்டுப் போங்க தம்பி” பூக்கடையின் முதுகுப்புறம் நீண்ட அந்த வீட்டின் உள்ளேயிருந்து தன் பொங்கை வாய்ச் சிரிப்போடு அதே மூதாட்டி.

நெகிழ்ந்து போனேன் நான். ஊர் பேர் தெரியாது ஏதோ ஒரு ஓர்மத்தில் தனியே கோயில் தரிசனம் காண வந்த எனக்கு இப்படி ஒரு உபசரிப்பா?

“இல்லைம்மா ரொம்ப நன்றி” கை கூப்பினேன்.

மாங்காடு அம்மன் தரிசனம் இதோ இப்போது கிட்டியிருக்கிறது என்று மனது சொன்னது.

No responses yet

Mar 13 2015

வாசித்ததில் நேசித்தது – இயக்குநர் ஜெயபாரதியின் “இங்கே எதற்காக”

Published by under Uncategorized

வாசித்து முடித்ததும் நீண்டதொரு பெருமூச்சை விட்டேன்.  இந்தப் புத்தகத்தைப் படித்த அனுபவத்தை மீட்டிப் பார்த்தால் ஒரு சுமையொன்று அழுத்துமே அது போலத் பக்கங்கள் ஒவ்வொன்றைக் கடந்த நிலை இருந்தது.


இயக்குனர் ஜெயபாரதி இப்படிச் சொல்கிறார், நான் பகவத் கீதையை ஆழ்ந்து படித்தவன் இல்லை! இருந்தாலும் எப்போதோ படித்தபோது பாஞ்சாலி கிருஷ்ணனிடம் கேட்டது நினைவுக்கு வந்தது. 

“தீயவர்களின் (கெளரவர்களின்) மனங்களை மாற்றி இந்த மகாபாரதப் போரை நீங்கள் தவிர்த்திருக்கலாமே!”


அதற்குக் கண்ணன்,

“ஒருவன் என்னவாக இருக்க வேண்டுக் என்பதை அவன் மனமோ அல்லது அவனின் அறிவோ தீர்மானிப்பதில்லை, அவனின் ஆன்மாதான் தீர்மானிக்கிறது. ஆன்மா முடிவு செய்ததை மாற்றும் சக்தி எனக்கில்லை பாஞ்சாலி” 


கிருஷ்ணன் சொன்ன இந்தமாதிரியான ஓர்மம் வயப்பட்ட, நல்ல சினிமாவைத் தமிழ் ரசிகனுக்குக் காட்டவேண்டும், நாமும் நல்ல சினிமா எடுக்கலாம் என்ற வைராக்கியத்யோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கலைஞன் சினிமாச் சூதாடிகளின் மத்தியில் தன் சுயத்தைத் தொலைக்காமல் தன் ஒவ்வொரு முயற்சிலும் போராடிச் சளைக்காமல் தன் நாற்பதாண்டுக் கலையுலக வாழ்வைத் தொடவிருக்கும் இயக்குநர் ஜெயபாரதியின் வாக்குமூலம் தான் இந்த நூல்.

 

வாக்குமூலம் என்று இந்தப் படைப்பை அடையாளப்படுத்தியதை நிரூபிக்குமாற்போல

“நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை. இது இறைவன் மீது ஆணை”

என்ற சத்தியப்பிரமாணத்தோடு நல்ல சினிமா எடுக்கப் புறப்பட்ட கதை ஒவ்வொன்றாய் சொல்லப்படுகிறது.

 

து.ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தி என்று இருவருமே இலக்கிய உலகில் அறியப்பட்ட பெரும் எழுத்தாளர் தம்பதியின் மகனாக வாய்த்த ஜெயராமன் பின்னாளில் ஜெய் என்றும் ஜெயபாரதி ஆகியும் எழுத்தாளராகத் இலக்கிய உலகில் தடம் பதித்து அங்கிருந்து கொண்டே ஜ்வாலா என்ற திரையமைப்பை உருவாக்கி நல்ல சினிமாவை மொழி கடந்தும் தேடிக் கொணர்ந்து பகிர்ந்து அதுவும் தீராமல் நல்ல சினிமாவை நாமும் எடுக்கலாம் என்று சாதித்துக் காட்ட முனைந்த கலைப்படைப்பாளியின் சோதனைப் பக்கங்களைத் தான் இந்த நூல் அவரின் அனுபவ வெளிப்பாடாக உள்ளதை உள்ளவாறு பகிர்கின்றது. சில தருணங்களில் வாக்கியக் கோர்வைகளின் இடைவெளியில் அடைப்புக்குறிக்குள் அவரின் மனசாட்சியும் பேசுகிறது.


எத்தனையோ வகை வகையான வாழ்வியல் அனுபவங்கள், குறிப்பாகச் சினிமா உள்ளிட்ட கலையுலகப் பிரபலங்களின் வாழ்க்கைப் பகிர்வுகளை இன்னார் எழுதியும் பிறருக்குச் சொல்லக் கேட்டு எழுதியதையும் படித்திருக்கிறேன். ஆனால் அப்படியான பஞ்சுமெத்தை அனுபவத்தை இந்த நூல் தரவில்லை. முள் படுக்கையில் நடந்தவனின் ஊமைக் குரலாக, எந்த விதமான சால்ஜாய்ப்புகளுமோ, முகஸ்துதியோ, ஒளிவு மறைவோ இல்லாது சொல்லிக் கொண்டே போகின்றார் ஜெயபாரதி.


Crowd-funding என்ற முறைமையில் பொதுசனத்திடமிருந்து நிதி திரட்டி வெளிவந்த முதல் படைப்பு என்ற அங்கீகாரத்தைப் பெறும் “குடிசை” படத்தில் இருந்து ஒவ்வொரு படமாகச் சொல்லிக் கொண்டே போகின்றார். ஒவ்வொரு படம் எடுக்கும் போதும், பாதியில் எடுத்து அப்படியே கைவிட்ட போதும், மூலப் படம் இன்னொரு படமாக மாறிய போதும் என்று வித விதமான சவால்கள். இப்படியாகத் தனது குடிசை, ஊமை ஜனங்கள் ( தேநீர்  என்று எடுக்கப்பட்ட படம்), உச்சி வெயில், நண்பா நண்பா, ரெண்டும் ரெண்டும் அஞ்சு, புத்ரன், குருஷேத்திரம் என்று ஒவ்வொரு பட அனுபவங்களும் பதிவாகியிருக்கின்றது.

ஆனால் முதல் படமான குடிசை படம் வெளியான பின்னர் எழுந்த அதிர்வலைகளை மற்றைய படங்கள் அளவுக்கு ஆவணப்படுத்தவில்லையோ என்ற அவா எழுகிறது.


இயக்குநர் மனோபாலாவின் இன்னொரு முகமான புத்தக, போஸ்டர் வடிவமைப்பாளர் என்ற உண்மை போல எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இயங்கிய கலைஞர்களது நிழலும் நிஜமும் பேசுகின்றன. கிராமத்து அத்தியாயம் படத்தில் நாயகனாக நடிக்க வைத்து ஏமாற்றியதையும் தன்னால் அறிமுகப்படுத்திய விஜய் (தலைவாசல்), டெல்லி கணேஷ் போன்றவர்களின் உதாசீனத்தையும், தேசிய விருதை நண்பா நண்பா படத்தின் வழியாகப் பெற்ற சந்திரசேகரின் நன்றிக் கடன் (?) என்றெலாம் இன்னும் அறியப்படாத சங்கதிகள்.


ஆனால் தேநீர் படம் ஊமை ஜனங்கள் ஆன போது பாக்யராஜின் நியாயமான கோபத்தை இயக்குநராக ஆற்றுப்படுத்தவில்லையோ என்ற கேள்வியும் தொக்கு நிற்கிறது. இந்தக் கேள்விக்கான காரணம் ஏன் என்பது அந்தப் பட உருவாக்கத்தில் கிட்டிய ஒரு உதவி வழியாகத் தான். எதுவென்பதைப் புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ளவும்.

 

உச்சி வெயில் படம் எடுத்த அனுபவத்தைப் பகிர்ந்த அத்தியாயத்தில் இரு வேறு பகுதிகள் தான் தமிழ் சினிமாவின் இருவேறு குணாதிசியங்களைக் காட்டுகிறது.

 

காட்சி 1

 

மக்களிடம் நிதி திரட்டி உச்சி வெயில் படத்தை எடுத்து முடிக்க உத்தேசிக்கும் ஜெயபாரதி, நடிகை ராதிகாவிடமும் அவ்வாறே உதவி கேட்டுப் போகிறார்.

“ரொம்ப இருட்டாவே படம் பூராவும் இருக்கும், நடிகர்கள் மெல்ல பேசுவாங்க.., எப்போதாவது மியூசிக் கேக்கும். இதுதானே நீங்க டைரக்ட் பண்ணப் போற படம்? I don’t like such film! ” என்றார் ராதிகா.

 

காட்சி 2

 

உச்சி வெயில் படப்பிடிப்பு முடிவில்.

 

“மேடம் எவ்வளவு payment தரச்சொல்லட்டும்” – இயக்குநர் ஜெயபாரதி

“உங்களுக்கு நான் எவ்வளவு payment தரணும் இப்போ” நடிகை ஶ்ரீவித்யா


சினிமா உலகில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளவேண்டும் இல்லாவிட்டால் காலி பண்ணி விடுவார்கள் என்பதற்கு உதாரணமாக தேநீர் படத்தின் உருவாக்கத்தின் போது

இளையராஜா, ஜெயபாரதி சந்திப்பு வழியாக ராஜா உணர்த்துகிறார்.


இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் இளையராஜா ஜெயபாரதியின் முதல் படத்துக்கே வாய்ப்பைக் கொடுக்க அன்றைய பரபரப்பான சூழலிலும் முன் வந்ததை முந்திய அத்தியாயம் ஒன்றில் காட்டுகிறார்.


“ராஜா சார் குடிசை படத்துக்கு பின்னணி இசையமைக்க விரும்புகிறார் அவர் பங்களிப்பாக இருக்க வேண்டும் என்று”

1979 இல் படம் தயாரிக்கப்பட்ட போது


இளையராஜாவை முன் வைத்து எழுப்பபடும் விமர்சனங்களுக்கு எல்லாம் விளக்கம்,  இப்படியான அனுபவப் பகிர்வுகளைப் படிக்கும் போது தான் இன்று வரை அவர் எவ்வளவு தூரம் சூதாடிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்ற ஒரு வளையம் போட்டிருக்கிறார் என்பதாக அமைந்திருக்கும்.


கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தேசியத் திரைப்பட வாரியம் வரை எல்லாரையும் மறு விசாரணை செய்கிறது ஜெயபாரதியின் மனசாட்சி. எப்போதோ சுராங்கனி பாடி நிதி திரட்டிப் படம் பண்ண உதவிய சிலோன் ஏ.ஈ.மனோகர் வரை ஒருவர் விடாமல் தேடிப்பிடித்து நன்றி பாராட்டுகள் அந்தந்த நிகழ்வுகளை நினைவில் மீட்டி.


தன்னால் உறுதிப்படுத்தாதை இன்னார் சொன்னது என்றும் ஆவணப்படுத்துகிறார்.


இங்கே எதற்காகப் படமெடுக்கிறீர்கள் என்ற வைரமுத்துவின் உரிமை கலந்த அக்கறையையும், யாரோ ஒரு வாடகைக் கார்க்காரன் தன் சினிமாத்துறையின் யோக்கியதை குறித்துக் கேட்ட கேள்வியையுமே நாமும் இவரைப் பார்த்துக் கேட்க முடிகிறது. 

அதற்கான பதிலாக தன் படைப்பின் மீது நம்பிக்கையும், நல்லதைக் கொடுக்க வேண்டும் என்ற நேர்மையும் உள்ள இந்தக் கலைஞனின் பதிலே மேற் சொன்ன கீதையின் சாரம்.


இந்த நூலை இடையில் இருந்து அவ்வபோது படிக்கத் தோன்றும் அத்தியாயமாகப் படித்தேன். இறுதியில் தான் ஆரம்ப அத்தியாயங்களைப் படித்தேன். ஒரு புதுமையான படத்தொகுப்புப் போல மனதுக்குள் ஓட்டினேன்.


எழுத்துப் பிழைகள், தொகுப்பு வடிவத்தில் வாக்கிய அமைப்பில் சீரற்ற தன்மை போன்ற குறைபாடுகள் இந்த நூலில் பொதிந்திருக்கின்றன. 


பின் அட்டையில் ஜெயபாரதி தன் நூலில் சொன்ன ஏதாவது கருத்தை எடுத்துப் பதித்திருக்கலாம்.


நடிகர் சிவகுமார், எழுத்தாளர் மாலன் போன்றோர் இயக்குநர் ஜெயபாரதியின் ஆரம்ப காலத்தில் இருந்து பழகியவர்கள் என்ற அடிப்படையில் புத்தகத்தின் முகவுரைப் பகிர்வுகளைப் பகிர்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கியிருக்கலாம். ஆனால் இந்த இருவருமே நூலில் இடம்பெற்றிருக்கும் சில பகுதிகளை மையப்படுத்தி எழுதியிருக்கிறார்கள்.

இவர்களுக்குப் பதில், ஜெயபாரதியின் திரை இயக்கத்தின்  ஆரம்பகாலத் தோழமை இயக்குநர் மனோபாலாவை எழுதச் சொல்லியிருந்தால் இவர் குறித்து இன்னும் தெரியப்படாததைச் சொல்லி வைக்கும் அனுபவப் பகிர்வாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றியது.

 

“இங்கே எதற்காக” இயக்குநர் ஜெயபாரதியால் எழுதப்பட்ட இந்த நூல் டிஸ்கவரி புக் போலஸ் வெளியீடாக டிசெம்பர் 2014 வெளியாகியிருக்கிறது.

 

நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகனொருவன் மொழி கடந்து ஒவ்வொன்றாய்த் தேடிப் பார்த்துச் சுகம் கொள்ளும் அனுபவம் போன்றதல்ல இது.

அந்த ரசிகனுக்கு நல்ல சினிமாவை உள் வீட்டில் இருந்து காட்ட வேண்டும் என்ற முனைப்போடு பயணித்துக் கொண்டிருக்கும் கலைப் படைப்பாளியின் தீராத தாகம், வலிமிகு அனுபவப் பகிர்வாய்ச் சாட்சியம் பறையும் வாக்குமூலம் என்பேன்.

 

“நல்ல படமெடுத்தால் தியேட்டர் வந்து பார்ப்போம் என்று சொல்வாங்க, 

அதெல்லாம் சும்மா” 


என்று சொல்லும் இயக்குநர் ஜெயபாரதியின் வாக்குமூலம் தான் திரும்பத் திரும்ப மனதில் அறையுமாற் போல இருக்கிறது.

 

 

 

 

No responses yet

Dec 26 2014

முன்னறிவிப்பு (மலையாளம்) திரை அனுபவம்

Published by under Uncategorized

செத்த பல்லியொன்றைக் கூட்டாக இழுத்துப் போக யத்தனிக்கும் எறும்புக் கூட்டத்தின் காட்சிப்படுத்தலோடு ஆரம்பிக்கிறது முன்னறவிப்பு மலையாளத் திரைப்படம்.

 

ஒரு மணி நேரம் 54 நிமிடங்கள் பயணிக்கும் இந்தப் படத்தின் ஓட்டமும் மெதுவான எறும்பு நடை தான். ஆனால் படம் பார்த்து முடித்ததும் சுருக்கென்று எறும்பொன்று கடித்த உணர்வு தான் சற்று முன்னர் இந்தப் படத்தைப் பார்த்து முடித்ததும்.

 

தன்னுடைய மனைவியையும், குஜராத்திப் பெண் பூஜாவையும் ஆக இரட்டைக் கொலை செய்த குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து, 20 வருடங்கள் கடந்தும் ஜெயில் வாழ்க்கையை விட்டு வெளியுலகம் தேடிப் போக விரும்பாத சி.கே.ராகவன் (மம்முட்டி).

ஜெயில் சூப்பரிண்டெண்ட் (நெடுமுடிவேணு) வாழ்க்கையை எழுத வரும் பத்திரிகையாளர் அஞ்சலி (அபர்ணா கோபி நாத்.

தான் அந்தக் கொலைகளைச் செய்யவில்லை என்று சாதிக்கும் கைதி சி.கே.ராகவனைக் கண்டு அந்த சுவாரஸ்யமான மனிதனின் வாழ்க்கையில் இருக்கும் மர்மத்தைப் புத்தக வடிவில் கொண்டு வர விரும்பிய பத்திரிகையாளர் அஞ்சலி சந்திக்கும் அனுபவங்களோடு முடிவில் சற்றும் எதிர்பாராத ஒரு புள்ளியில் வந்து நிற்கின்றது இந்தப் படம்.

இங்கே சொன்ன கதை முடிச்சை வைத்து ஒரு சராசரி மசாலாப் படமாக நீங்கள் கற்பனை பண்ணி “மனிதனின் மறுபக்கம்” அளவுக்குப் போனால் உங்கள் நினைப்பில் மண் தான்.

 

பாடல்கள் கிடையாது. மலையாள மர்மப் படங்களுக்கே உரித்தான மாமூல் இசையோட்டம் மட்டுமே.

மலையாளத்தின் பிரபல இயக்கு நர் ரஞ்சித் தயாரித்து, கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேணு.

 

இந்த 2014 ஆண்டு வெளிவந்து நடிகர் மம்முட்டிக்கு பரவலான பாராட்டைக் கொடுத்த படம். கிட்டத்தட்ட மோகன்லாலுக்கு ஒரு “த்ரிஷ்யம்” போல மம்முட்டிக்கு “முன்னறிவிப்பு” என்று சொல்லுமளவுக்கு இவரின் வயதுக்கும், முதிர்ச்சிக்கும் ஏற்ற பாத்திரம் இது.

மம்முட்டியின் நடிப்பைப் பற்றிப் புதிதாக என்ன சொல்ல வேண்டியிருக்கிறது?

படம் முழுக்க எந்த வித நாயக அந்தஸ்தும், இலட்சணமும் இன்றிக் கொடுத்த பாத்திரமாகவே இயங்கியிருக்கிறார்.

 

படத்தின் நாயகியாக பத்திரிகை நிருபர் அஞ்சலி (அபர்ணா கோபி நாத்) மிகக் கச்சிதமான தேர்வு. இவர் தான் படத்தின் ஆரம்பம் முதல் காட்சிக்குக் காட்சி திரைக்கதையைச் சுமக்க வேண்டிய பொறுப்பை மிகவும் சிறப்பாக ஏற்று வழங்கியிருக்கிறார்.

 

இந்தப் படத்தைப் பார்க்கும் எண்ணம் இருந்தால், மலையாளம் தெரியாதவர்கள் ஆங்கிய உப குறிப்புகளோடு பார்க்க வேண்டியது கட்டாயம். தவிர்க்க முடியாத வசனப் பகுதிகளை உள்வாங்க அது உதவும். குறிப்பாக கைதி சி.கே.ராகவனின் தர்க்க ரீதியான கருத்துகள்.

படத்தின் முடிவை எங்கும் படிக்காமல் நீங்களாகவே அனுபவிக்க வேண்டுகிறேன்.

 

மெதுவாக நகரும் பட ஓட்டத்தைப் பொறுமையாக விரும்பிப் பார்க்கும் ரசிகருக்கு ஏற்றது இந்த “முன்னறிவிப்பு”.

எனக்கு ஒரு நிறைவான கலைப்படைப்பைக் கண்ட திருப்தி ஒட்டியிருக்கிறது.

No responses yet

« Prev - Next »