Jan 19 2013

குருவாயூரில் காலடி வைத்தேன்

Published by at 7:10 am under Uncategorized

கொச்சின் விமான நிலையத்தில் இருந்து டாக்ஸி மூலம், கேரளத்தின் ஊர்களைக் கடந்து கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரப் பயணத்துக்குப் பின் குருவாயூருக்கு வந்து சேர்ந்தேன். 
ஏற்கனவே தங்குமிடத்தை ஒழுங்கு செய்து வைத்து, அவர்களின் தொடர்பு முகவரி, தொலைபேசி எண்ணையும் கையோடு எடுத்து வந்தது பெரும் உதவியாக இருந்தது. குருவாயூரைத் தொட்டதும் ஹோட்டலுக்கு எப்படிப் போகவேண்டும் என்று என்னிடம் சம்சாரிக்கத் தொடங்கிவிட்டார் சாரதி. என் செல்போனை ஹோட்டல் ரிஸப்ஷனுக்குத் தொடர்பு படுத்தி அவருக்கு வழிகாட்டிய பின்பே சேரிடம் வந்தேன். குருவாயூர் கோயிலைத் தரிசிக்கவே இந்தப் பயணம் என்பதால் கோயிலைச் சூழவுள்ள ஹோட்டல்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்று http://www.tripadvisor.com.au/Hotels-g1137974-Guruvayur_Kerala-Hotels.html ஐ நாடினேன். அங்கே முன்னர் ஒவ்வொரு ஹோட்டலிலும் தங்கியோரின் அனுபவங்களையும் நட்சத்திரக் குறியீட்டையும் பார்த்து, அதில் நல்ல ஹோட்டல்களை மட்டும் பொறுக்கி ஒவ்வொரு ஹோட்டலின் ரிஸப்ஷனை அழைத்தேன். எல்லோரும் சொல்லிவைத்தாற்போல தங்கும் அறை இல்லை என்று கைவிரித்து விட்டார்கள். நான் குருவாயூர் கோயிலுக்குப் போகும் அந்த வார இறுதி சுப முகூர்த்தம் என்பதால் ஏகப்பட்ட கல்யாணங்கள் கோயிலின் முன்றலில் நடக்கவிருந்தது. எனவே சிலர் ஒட்டுமொத்த அறைகளையுமே சில ஹோட்டல்களில் தமது கல்யாணத்துக்காக முற்பதிவு பண்ணி வைத்திருந்தார்கள். உண்மையில் குருவாயூர் கோயிலுக்கு மிக நெருக்கமான, நடை தூரத்தில் இருக்கும் ஹோட்டல்களில் ஒன்றைத் தெரிவு செய்து வைத்திருப்பதே சாலச் சிறந்தது. காரணம், அதிகாலை நடை திறப்பு, இரவு நடை சாத்து மற்றும் கோயிலுக்குள் நடக்கும் முக்கிய பூஜை புனஸ்காரங்களை ஆற அமரப் பார்ப்பதற்கு இது பெரும் வசதியாக இருக்கும். அந்த வகையில் Gokulam Resorts ஹோட்டல்கள் நல்ல விதமான சேவையை வழங்குவதாகச் சொல்லப்படுகின்றது. நீங்கள் பயணிக்கவிருந்தால் இந்த ஹோட்டல்களைப் பரிந்துரைக்கிறேன். ஆனால் எனக்கு அந்தக் கொடுப்பினை இருக்கவில்லை. சிட்னியில் இருந்து புறப்படும் நாளுக்கு முன் தினம் வரை ஏறக்குறைய எல்லா ஹோட்டல்களையும் அழைத்தாயிற்று. சரி அடுத்ததாக இரண்டு கி.மீட்டர் தொலைவானாலும் காரியமில்லை என்று நினைத்து அடுத்த சுற்றில் தேடினால் கிட்டியது Fortgate Hotel And Resort. இந்த ஹோட்டல் குறித்து ஏற்கனவே தங்கியவர்களும் நல்ல விதமாகச் சொல்லியிருந்தார்கள். எனவே அந்த ஹோட்டலுக்கு அழைத்தால் அறை உண்டு என்றார்கள், மறுபேச்சில்லாமல் பதிவு பண்ணி விட்டேன். 
நல்ல வசதிகளோடு, சுத்தமாகவும் சிறப்பாகவும் இருந்தது. ஹோட்டல் ரிசப்ஷனில் குருவாயூர் கோயிலுக்கு இங்கிருந்து போக எத்தனை மணி நேரமாகும் என்று கேட்டேன். “இருபது நிமிடத்துக்குள் போயிடலாம், ஆட்டோ கூட ஒழுங்கு செய்யலாம்” என்றார். முதல் வேலையாக மதிய உணவை முடிப்போம் என்றுவிட்டு ஹோட்டலுக்குள் இருந்த உணவகத்துக்குள் சென்றேன். முழுக்க முழுக்க அசைவ உணவுகளோடு ஒரு சில சைவ உணவுகள், அதிலும் கேட்டது அப்போது கிடைக்காதாம், என்னடா குருவாயூருக்கு வந்த சோதனை என்று நினைத்துக் கொண்டு, சப்பாத்தி போடுவீங்களா என்று கேட்டேன். ஆமாம் என்று தலையாட்டினார் பரிமாறுபவர். உருளைக்கிழங்குத் துவையலுடன், சப்பாத்தியும் வந்து சேர்ந்தது. இதைவிட நான் நன்றாகச் சமைப்பேனே என்று மனதுக்குள் நினைக்குமளவுக்கு இருந்தது சாப்பாடு. மாலை குருவாயூர் கோயிலுக்குப் போகலாம் அதுவரை ஊர் சுற்றிப்பார்ப்போம் என்று நினைத்து ஹோட்டல்காரரிடம், இங்கே பக்கத்தில் யானைகள் சரணாலயம் இருப்பதாக அறிகிறேன் அங்கே போகவேண்டும் ஓட்டோ ஒன்று ஒழுங்கு செய்து தாருங்கள் என்று கேட்கவும், அடுத்த ஐந்து நிமிடத்தில் ஓட்டோக்காரர் வந்து சேர்ந்தார். 
“அழகான ராட்சசியே” பாடல் யானைகள் சரணாலயத்தின் முகப்பில் இருந்த பெட்டிக்கடையில் வரவேற்றது. பெயர்ப்பலகைகள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக. புகைப்படக் கருவி எடுத்துச் சென்றால் மேலதிக கட்டணம் என்று மொத்தமாகவே 25 ரூபா மட்டுமே கட்டணம், நல்லவேளை வெளி நாட்டுக்காரருக்குத் தனிக்கட்டணம் என்று இருக்கவில்லை. மரங்களடர்ந்த சோலை கொண்ட பெரு நிலப்பரப்பில் அந்த யானைகள் சரணாலயம் இருந்தது. ஒவ்வொரு யானைகளுக்கும் தனித்தனியான இட வசதியோடு, ஆங்காங்கே பாகன்களும் தென்பட்டார்கள். ஒவ்வொரு யானைகளும் தத்தமது வேலைகளும் தம் பாடுமாக இருந்தன. ஆட்டம் போட்டது ஒரு யானை, தும்பிக்கையால் மண்ணை அள்ளித் தன் தலையில் இறைத்தது இன்னொரு யானை, கொடுத்த தென்னங்கீற்றை நார் நாராகச் சப்பித் தின்றது ஒன்று, இன்னொன்று நின்ற நிலையில், இன்னும் கொஞ்சம் அந்த மதிய நேர சயனத்தில். வயது வித்தியாசமின்றிச் சுற்றிப்பார்க்க வந்தவர்கள் குழந்தைகள் போல ஆசையோடு ஒவ்வொரு காட்சியையும் கண்டு கழித்துக் கொண்டிருந்த அந்தச் சூழலே ரம்யமாக இருந்தது. அடுக்கடுக்காகக் குவித்து வைக்கப்பட்ட இலை, தழை, குழைகளோடு ஏகப்பட்ட வசதிகளும் கொண்ட அந்தச் சரணாலயத்தில் யானைகளை வெகு சிரத்தையாகக் கவனிப்பது தெரிந்தது குருவாயூர் கோயிலுக்குப் போகும் நினைப்பு வந்து பிரியமனமின்றிப் பிரிந்தேன் அங்கிருந்து.

One response so far