Jan 19 2013

கேரள தேசம் நோக்கி

Published by at 7:07 am under Uncategorized

ஐந்து வருஷங்களின் பின்னர் இந்தியப் பயணம் செல்வதாக முடிவெடுத்தற்கு முக்கிய காரணமே ட்விட்டரில் இயங்கும் கோயம்புத்தூர் வாசியான அறிவுக்கரசு சார் மற்றும் மும்பையில் இருக்கும் நண்பர் ஆனந்தராஜ்.  எனது முதல் இந்தியப் பயணம் 2001 இல் இருந்தபோது அப்போது எனக்குஇப்போது மாதிரி ட்விட்டர், வலைப்பதிவுலகம் இல்லாத  எல்லாமே அந்நியமாகமாக இருந்த சூழல். அதுவும் எனது முதல் இந்தியப்பயணம் அப்போது வேலைபார்த்துக் கொண்டிருந்த Oracle நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்திற்குப் போயிருந்தேன்.  பின்னர் 2005 ஆம் ஆண்டிலிருந்து தீவிர வலைப்பதிவராக இயங்கிக் கொண்டிருந்த சூழலில் நிறையவே தமிழக உறவுகள் அறிமுகமாகியிருந்தார்கள். அந்தவகையில் 2006 இல் கோ.ராகவனையும்,  2007 இல் செந்தழல் ரவியையும் சந்தித்திருந்தேன். இப்போது அந்த நிலையே வேறு. தினமும் காலை எழும் போது ட்விட்டரில் ஏதாவது ஒரு தமிழக நண்பரின் முகத்தில் தான் விழிப்பேன் , தூங்கும் போதும் அப்படியே. அறிவுக்கரசு சாரும், ஆனந்தராஜும் அடிக்கடி என் தமிழகப் பயணத்துக்குத் எண்ணெய் வார்த்ததால் இந்த ஆண்டு எப்படியாவது இந்தியப்பயணத்தை மேற்கொண்டால் போச்சு என்று முடிவெடுத்துக் கொண்டேன். ஆனால் அதில் ஒரு முடிவு, ஊர் சுற்றிப்பார்ப்பது என்பதை விடுத்து, இதுவரை  சமூக ஊடகங்களின் வாயிலாக உறவாடிய முகம் தெரியாத நட்புக்களை நேரில் பார்ப்பது மட்டுமே முழுமையான திட்டம் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.  ஆகவே, கோயம்புத்தூர், சென்னை ஆகிய நகரங்களுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் பயணத்திட்டத்தை ட்விட்டரில் வெளியிட்டபோது நான் நேசிக்கும் எழுத்தாளர் ஆர்.பி.ராஜநாயஹம் அவர்கள்  கோவையிலிருந்து திருப்பூர் பக்கம் தானே, என் வீட்டுக்கும் வந்துவிடுங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

 இடையில் இரண்டு உள்ளீடுகளும் என் பயணத்திட்டத்தில் சேர்ந்து கொண்டன. ஒன்று என் இந்திய அலுவலக சகபாடியின் திருமணம் கேரளாவில் அவரின் சொந்த ஊரான கோழிக்கோடுவில் நடப்பதாக அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். அவர் நான் இப்போது வேலை செய்யும் நிறுவனத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பழக்கம் என்பதை விட அவர் மீது கொண்ட நேசத்தினால் திருமணத்துக்கு வருவதாக வாக்குக் கொடுத்தேன்.

இவற்றையெல்லாம் விட, இந்த ஆண்டு எனக்குத் தனிப்பட்ட ரீதியில் மிகுந்த சவாலையும், மன உளைச்சலையும் உண்டு பண்ணிய சம்பவங்களைச் சந்தித்தேன்.
எதேச்சையாக குமுதம் சஞ்சிகையில், பாடகி நித்ய ஸ்ரீ அவர்கள், தான் குருவாயூருக்குச் சென்று சேவித்தபோது தன் தீராத மனக்குறை தீர்ந்ததாகச் சொன்ன பேட்டியைப் படித்திருந்தேன். ஆக, இந்த இந்தியப் பயணத்தில் குருவாயூரப்பனையும் தரிசிக்கவேண்டும் என்று அந்தத் திட்டத்தையும் சேர்த்துக் கொண்டேன்.

எல்லாம் சரி, இரண்டு மாநிலங்கள் நான்கு முக்கிய நகரங்களுக்கு ஐந்து நாட்களுக்கு ஜெட்வேகத்தில் பயணிக்கவேண்டுமே, ஒரு வழித்தடம் பிசகினால் மற்ற எல்லாம் அம்பேல், திட்டம் பக்காவாக இருக்கவேண்டுமே என்று கூகிளாண்டவனை நிதமும் வேண்டித் தகவல் திரட்டினேன். இடைக்கிடை ட்விட்டரிலும் நண்பர்களிடம் ஆலோசனை பெற்றேன். ஆனாலும் கூகிளாண்வர் மிகவும் நேர்மையாக கூகிள் மேப் வழியாக குறுகிய நேரப் பயணங்களைக் காட்டுவார் ஆனால் தமிழக நண்பர்களோ, அநியாயத்துக்கும் கூகிளை நம்புறீங்க பாஸ், நம்ம ஊர் ரோடு நிலவரத்தையும் கணக்கில் வச்சுக்கணும் என்பார்கள். இப்படியாக ஏகப்பட்ட கூத்து பயண ஏற்பாடுகளைச் செய்ய‌.
நண்பரின் கல்யாணமும், குருவாயூர் கோயிலும் கேரளாவில் இருந்ததால் முதலில் அந்த வேலையை முடிப்போம் என்று நினைத்து ஒவ்வொரு வழித்தடங்களாகப் பார்த்து எது குறுகிய நேரம் பிடிக்கும் என்று கண்டுகொண்டேன்.   கொழும்பில் இருந்து கொச்சினுக்கு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் காலை 7.25 மற்றும் மாலை 4.25 இற்குமாக இரண்டு சேவைகள் , 45 நிமிடத்தில் போயிவிடலாம். கொச்சின் விமான நிலையத்தில் இருந்து ஒரு Airport Taxi மூலம் குருவாயூருக்குப் போக அதிக பட்சம் மூன்று மணி நேரமே பிடிக்கும் என்று கணக்குப் போட்டு வைத்தேன்.

இதற்கிடையில் ட்விட்டரில் இயங்கும் நண்பர் புரட்சிகனல் என்ற‌ சைஜூ தான் கொச்சினில் இருப்பதாகவும் கண்டிப்பாகச் சந்திக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார். கட்டு நாயக்கா விமான நிலையத்துக்கு அதிகாலையே வந்தேன். குறித்த நேரத்தில் கொழும்பில் இருந்து கொச்சின் விமானம் கிளம்பித் தன் சேரிடம் சேர்ந்தது.

 கேரள தேசம் எனக்குப் புதியதல்ல, 2006 ஆம் ஆண்டு  திருவனந்தபுரம், ஆலப்புழா, கொச்சின் எல்லாம் வந்திருக்கிறேன்.  கொச்சினிலிருந்து பெங்களூர் பயணத்துக்க்காக  அப்போது இயங்கிய டெக்கான் ஏர்லைன்ஸ் இல் பணம் கட்டி, அந்த விமானப் பயணம் தாமதமாகி, கொச்சின் விமான நிலையத்தில் 12 மணி நேரம் தங்கியதெல்லாம் அப்போதைய வரலாறு இங்கே வரும்போது யாழ்ப்பாணத்துக்கு வந்தது போன்ற பிரமை இருக்கும் சூழலும், இந்த ஊர் மொழிவழக்கும். எனக்கும் கேரளத்துக்குமான பந்தத்தை தேர்ந்தெடுத்த நல்ல மலையாளப்படங்களைப்பார்த்துத் திருப்திப்பட்டுக்கொள்வேன்.

சிட்னியிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் வரும்போது வழக்கம் போல வேலாயுதம் போன்ற உலகத்தரமான தமிழ்ப்படங்களைக் காட்டும் போது நொந்துபோய் வேறு படங்களைத் தேடும் போது கிட்டியது Indian Rupee என்ற ஒரு மலையாளம் இருப்பதாகக் காட்டியது.  நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிறைவான படத்தைப் பார்த்த திருப்தி வானத்தில் கிட்டியது. நடிகர் பிருதிவிராஜ் தயாரித்து நடித்த அந்தப் படத்தைப் பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்கியிருந்தார்.  சிறந்த மாநில விருது உள்ளிட்ட தேசிய விருதுகளை அள்ளியிருந்தது அந்தப்படம்.
இந்தக் காலத்து இளைஞர்களின் குறுகிய நோக்கிலான பணம் தேடும் வேட்கையை மையமாக வைத்து எடுத்த அந்தப் படம் கேரளத்தின் கோழிக்கோடு பகுதியில் படமாக்கப்பட்டிருந்தது. பிருதிவிராஜ் உடன் நாயகியாக வந்த ரீமா கலிங்கலுக்கு இப்போது பொற்காலம் எனலாம், தொடர்ந்து நல்ல படங்கள் கிட்டுகிறது இவருக்கு. ஜெகதி ஸ்ரீகுமாரின் நடிப்பு பெரும்பாலும் எனக்கு எரிச்சலூட்டும், அதை மீறி ரசிக்கவைத்ததென்றால் அது இப்படத்தில் தானாக இருக்கும்.

இந்தப் படத்தில் நடிகர் திலகனின் கள்ளமில்லா நடிப்பு கலங்கடித்துவிட்டது. குறிப்பாக நிராதரவாக மூட்டை முடிச்சுக்களோடு நடுத்தெருவுக்கு வரும் போதும் அந்தக் கணம், மாப்பிள்ளை வீட்டாரிடம் பிருதிவிராஜ் தங்கையின் பெருமையைச் சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராது நடையைக் கட்டுவது போன்ற காட்சிகளில் தெரியுது திலகனின் அருமை. எப்பேர்ப்பட்ட கலைஞன் இவர் என்று பெருமூச்சுக் கொண்டேன் படம் முடிந்ததும். தேடிப்பிடித்து பாருங்கள்

குடிவரவு அலுவல்களை முடித்து விட்டு வெளியில் வர காலை ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது.  இதற்கிடையில் எங்கேடா என்னைக் காணோம் என்று சைஜூ ட்விட்டரில் பெரிய பரப்புரையே செய்துவிட்டிருந்தார். வெளி வாசலுக்கு வந்தபோது என் பெயர் தாங்கிய பதாதையோடு ஒரு இளைஞன், இவர் தான் சைஜூ என்று ஒரு குத்துமதிப்பாகக் கணக்குப் போட்டிருந்தேன். காரணம் அவர் தன் ட்விட்டரில் சிவகார்த்திகேயன், ராமராஜன் படங்களையே போட்டுவைத்ததால் இவர் எப்படியான ஒரு மனிதர் நெட்டையா குள்ளமா கறுப்பா சிவப்பா ஆணா பெண்ணா என்று ஏகப்பட்ட குழப்பம் இருந்தது.
 சில வாரங்களுக்கு முன்னர் தான் நண்பர் பரிசல்காரன் ஒடிசா சென்று, அங்கு அறிமுகமானவரிடம் எல்லாம் இழந்து  (பொருட்களை மட்டும்)  தன் உடுத்த உடுப்போடு கர்ணனாட்டம் திரும்பி வந்த சம்பவத்தையும் அடிக்கடி மூளை நினைவு படுத்தியது.
என்னைக் கட்டாயம் அடையாளம் கண்டு கையை உயர்த்தினார், நானும் சிரித்துக் கொண்டு அவருக்கு கைலாகு கொடுத்தேன்.  விமான நிலையத்தில் வைத்தே இந்தியாவில் நான் தங்கியிருக்கும் நாட்களில் நண்பர்கள் தொடர்புகொள்ள வசதியாக ஏர்டெல் செல்போன் இணைப்பைப் பெற்றுக் கொள்ளத் தன் விலாசத்தைக் கொடுத்துதவினார், தயவு செய்து சிம்கார்டை யாராவது தீவிரவாதிகளிடம் கொடுக்கவேண்டாம் என்ற வேண்டுகோளோடு.  சைஜுவைச் சந்தித்து விட்டு விமான நிலையத்திலேயே டாக்ஸி பிடித்து குருவாயூர் போகும் திட்டம் இருந்ததால் விமான நிலைய உணவகம் செல்லுவோமா என்று கேட்க அவரும் தலையாட்டினார்.

கொச்சின் விமான நிலையத்தில் இந்திய உணவில் இருந்து எல்லா வகை உணவுப்பதார்த்தங்களும் இருந்தன, ஆனால் கூட்டம் தான் என்னையும் சைஜுவையும் சேர்த்து நாலு பேர்.
உணவகத்தில் பணிபுரிந்த இளம் பெண்ணிடம் இரண்டு மசாலாத்தோசை, இரண்டு சாயா (தேநீர்) என்று ஆடர் கொடுத்து விட்டு எனக்குத் தெரியாமலேயே அந்தப் பெண்ணின் பேரைக் கேட்டு வைத்த சைஜூவின் மதி நுட்பம் மெய்சிலிர்க்கவைத்தது. பெண் பேர் அஸ்வதியாம், இப்போதெல்லாம். கொச்சின் விமான நிலையம் பக்கம் போனால் சைஜூவைக் காணாலாம் என்று தகவல்.

உணவருந்திக் கொண்டே ட்விட்டர் உலக நடப்புக்களை அளவளாவினோம்.
 புரட்சிக்கனல் என்ற சைஜு, தமிழகம் நாகர்கோயில்காரர்.  பணி நிமித்தமாக கொச்சினில் வாழ்கிறார். ட்விட்டர் வழியாகச் சில மாதங்களாகத் தான் நட்பு. ஆனால் நேரில் காணும் போது துளியளவும் அந்தத் தூரம் இருக்கவில்லை. ஏதோ நெருங்கிய உறவுக்காரரைக் கண்ட பூரிப்பு அவர் முகத்தில். “பாஸ் எங்கூட வந்திடுங்களேன், என் வீட்டில் தங்கி அங்கிருந்து குருவாயூர் போகலாம்” என்று அன்புக் கட்டளை வேறு. உண்மையில் இப்படியான நண்பர்களைப் பெற என்ன தவம் செய்தேனோ என்று நினைக்கத் தோன்றும். தன்னுடைய ஊருக்கு வந்தவரைப் பொறுப்பாகக் கவனிக்க வேண்டும் என்ற சிந்தனை அவரை விட்டு நான் குருவாயூருக்குப் போகும் வரை இருந்ததை நான் உணர்ந்து கொண்டேன்.
 “நானும் உங்க கூட குருவாயூர் வரவா” என்று சொல்லுமளவுக்கு சைஜூ அப்போது இருந்தார்.

சைஜூவிடமிருந்து பிரியாவிடை வாங்கிக் கொண்டு Airport Taxi   மூலம் 1400 ரூபா கட்டணத்தில் குருவாயூர் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தேன்.

One response so far