Jul 19 2012

லண்டன் உலாத்தல் ஆரம்பம்

Published by at 2:19 am under Uncategorized

புலம்பெயர்ந்த 17 வருஷ வாழ்வில் அவுஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள ஆசிய நாடுகளில் பெரும்பான்மையான நாடுகளுக்குச் சென்றிருந்தாலும் இந்த ஆண்டின் கடந்த மாதம் வரை ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லாத கடன் ஒன்று இருந்தது. அதுவும் ஓரளவுக்கு நிரப்பப்பட்டிருக்கின்றது இந்த மாதம் லண்டன் உலாத்தல் மூலம். ஆனால் இந்தப் பயணம் முன்னர் எனக்கு வாய்த்த பயணங்களை விட ஏகப்பட்ட தில்லாலங்கடி ஆட்டங்களோடு நிறைவேறியிருக்கின்றது. மூன்று வாரப் பயணம் அதில் ஒருவாரம் தாயகத்தில் மற்றைய இரண்டு வாரமும் இங்கிலாந்தும் அதனைச் சூழவுள்ள ஐரோப்பிய நாடுகள் சிலதையும் பார்க்கலாம் என்ற வகையிலேயே இந்தப் பயணம் ஆரம்பத்தில் அமையவிருந்தது. ஆனால் தவிர்க்கமுடியாத சில காரணங்களால் மூன்று வாரம் என்பது பத்து நாட்களாகக் குறைய அதில் நான்கு நாட்கள் சிட்னியில் இருந்து லண்டன் வரைக்குமான போக்குவரத்துக்குத் தியாகம் செய்ய வேண்டிய நிலை வந்து விட்டது. இதில் நிறையப் படிப்பினைகளும் கூட.

முதல் பாடம், விலை மலிவு கருதி முகம் தெரியாத விமானப்பயண முகவரை நாடக்கூடாது. வழக்கமாக நான் பயண ஏற்பாடுகளைச் செய்யும் முகவரை என் அவசரத்துக்குப் பிடிக்க முடியாத நிலையில் இன்னொரு தெரியாத ஒரு பயண முகவரிடம் சென்றேன். அவரோ “ஜூலை மாதம் விமானப்பயண டிக்கெட்டுக்களை எடுப்பது சிரமம்,காரணம் பள்ளி விடுமுறை, அவுஸ்திரேலியாவில் கடும் குளிர் பற்றிக் கொள்ளும் மாதம் மற்றும் லண்டனில் வரவிருக்கும் ஒலிம்பிக்ஸ், ஆனால் நான் சகாய விலையில் டிக்கெட்டைக் கொடுக்கிறேன் என்று என்று சொல்லித் தேன் தடவிய வார்த்தைகளால் பேசவும் நானும் அவரிடமே விமானப்பயண ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னேன். பின்னர் மூன்று கிழமைப் பயணத்தைப் பத்து நாளாக மாற்றும் நிலை வந்தபோது அதெல்லாம் செய்யச் செலவாகும் என்று முரண்டு பிடித்தார். நேராக விமான நிறுவனத்துக்கே தொடர்பு கொண்டால் அவர்களோ உங்களின் ஆரம்பம் பயணத்தை மேற்கொள்ளும் வரை எந்த மாற்றமும் பயண முகவரால் தான் செய்ய முடியும் என்று கைவிரித்து விட்டார்கள். மீண்டும் முகவரிடமே வந்து எவ்வளவு செலவானாலும் மாற்றம் செய்யுங்கள் என்று கேட்டேன். எல்லாமாக எழுநூறு டாலர்களை மேலதிகமாகக் கேட்டு ஆப்பு வைத்தார். வேறுவழியில்லாமல் மேலதிக பணத்தைக் கொடுத்து திகதிகளில் மாற்றம் செய்து கொண்டேன். இதனால் கிடைத்த இரண்டு நீதிகள்.
1. ஏற்கனவே அறிமுகமான நிறுவனம் இருக்க, பழக்கமில்லாத முகவர்களின் வலையில் விழக்கூடாது
2. கொஞ்சம் அதிகம் செலவானாலும் Fully Flexible எனப்படும் டிக்கெட்டை ஆரம்பத்திலேயே வாங்கிவைத்து விட்டால் ஆபத்துக்குப் பாதகம் இல்லாமல் திகதிகளை விரும்பியது போல மாற்றிக்கொள்ளலாம்.

சிட்னியில் இருந்து கொழும்பு வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கொழும்பில் இருந்து லண்டன் வரை ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்று பயண ஏற்பாடு. அந்த நாளும் வந்தது. சிட்னி ஏர்போர்ட்டில் கூட்டம் அதிகம் இல்லை. பள்ளி விடுமுறை முந்திய வாரம் என்பதால் மக்கள் கூட்டம் காலியாகியிருந்தது. எனது iPad இல் 12 முழு நீளப்படங்களையும் நூற்றுச் சொச்சம் பாடல்களைச் செருகியிருந்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறியிருந்ததும் முதலில் தேடியதே பயணிக்கும் விமானத்தில் என்னென்ன படங்களைப் போடுவார்கள் என்று விபரப்புத்தகத்தில் மேய்ந்தேன். வழக்கம் போலப் பெரிய ஆப்பு. ஏனோ தெரியவில்லை சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் தமிழ் பாடல் தெரிவுகளும் சரி தமிழ்ப்படங்களின் தெரிவும் சரி ஒரு மார்க்கமாகவே இருக்கும். தனுஷ் தம்பி நடித்த வேங்கை, கலைஞானி கமல்ஹாசன் பழிவாங்கிய மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு என்ற விவரணப்படம் இவற்றோடு பாடல்களில் விஜய் ஆண்டனி மற்றும் முகவரி மாறி இசையமைப்பாளர்களாகிய உப்புமா பாடல்களுமாக நிரவியிருந்தது. ஹிந்தியில் தபாங் படம் இருப்பதாகக் காட்டியிருந்தது. சரி அதையாவது பார்ப்போம் என்று படத்தை நெட்டித் தள்ளினேன். சத்தியாமாகப் புரியவில்லை இந்த திரபை தபாங் படத்தையா ஆகா ஓஹோவென்று தலையில் வைத்துக் கொண்டாடினார்கள். அடுத்ததாக இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் குறித்த ஒரு விபரணப் படம் ஒன்று இருப்பதாகத் தெரிந்து அதை முழுதுமாகப் பார்த்தேன். ஆகா இந்த இசைமேதை குறித்து வெகு சிறப்பாக எடுத்த அருமையான படைப்பு இது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன் முழுதும் பார்த்த பின்னர்.

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இரவு 11.55 இற்குச் சறுக்கி நின்று நிதானித்தது விமானம். ஏற்கனவே ஒன்லைனில் விசா எடுத்து வைத்திருந்தேன். அடுத்த நாள் மதியம் 1 மணிக்குத் தான் கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிய பயணம். கொழும்பு சென்று திரும்ப நேரம் போதாது என்று கட்டுநாயக்காவை அண்மித்திருந்த Ramada Inn என்ற ஹோட்டலில் தங்கிச் செல்ல ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். அதன்படி விமான நிலைய டாக்ஸி மூலம் ஹோட்டலுக்கு வந்து ஒரு ஒரு வென்னீர் குளியல் எடுத்து விட்டு பயணக்களைப்பில் சரிந்தேன். அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே எழுந்து விட்டேன். டிவியை முடுக்கினேன், சக்தி டிவியில் காலை நிகழ்ச்சியில் உங்களுக்குப் பிடித்த ஆண்மகன் எப்படி இருக்கவேண்டும் என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது, பெண் மக்கள் தமக்கு சூர்யா மாதிரி வேணும், அறிவிப்பாளர் அண்ணா மாதிரி வேணும் என்று ஆளாளாளுக்குத் தங்கள் உள்ளக்கிடக்கையைக் கொட்டித் தீர்த்தார்கள். ஹோட்டலில் இருக்கும் உடற்பயிற்சிக்கூடம் எங்கே என்று விசாரித்தேன். நீச்சல் குளத்தைத் தாண்டி ஓரமாக இருக்கும் ஒரு அறையைக் காட்டினார்கள். அங்கு போனால் ட்ரெட் மில் இல் இருந்து அங்கிருக்கும் உபகரணங்கள் தூசி படர்ந்து சந்திரமுகி அரண்மனை கணக்காக இருந்தது. தும்மிக் கொண்டே அரைமணி நேரம் உடற்பயிற்சிக்கடனை முடித்து விட்டு குளியலோடு அங்கே காலை ஆகாரத்தையும் முடித்துக் கொண்டேன். விமான நிலையத்துக்குத் திரும்பும் வழியில் ரம்புட்டான் பழங்கள் குவியல் குவியலாக. என்னை ஏற்றிவந்த டாக்ஸிக்காரர் என்னை ஏதோ வேறு நாடுக்காரர் என்று நினைத்து “ரம்புட்டான் சேர் ரம்புட்டான்” என்று விளக்கம் கொடுத்தார்.

ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். வழக்கம் போல, திரையிடும் படங்களின் பட்டியலைப் பார்த்தால் அதில் மன்மதன் அம்பு த்ரில்லர் வகைக்குள். ஆகா ஆளாளுக்கு ரவுண்டு கட்டி அடிக்குறாங்களே என்று வடிவேலு குரலில் சொல்லிப் பார்த்தேன். சரக்கரைத்துச் செய்த மீன் குழம்போடு சோறு மட்டும் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன் பேர் சொல்ல வைத்தது. விமானத்தில் தந்த போர்வையை விரித்து முகர்ந்தேன். அரைகுறை ஈரத்தில் காய்ந்திருக்கும் போது ஒரு கெட்ட வாசனை வருமே அந்த வாசனை வந்து நாசியைக் கூறுபோட்டது. போர்வையைச் சுருட்டி வைத்து விட்டு உடம்பைச் சுருட்டிக் கொண்டு படுத்தேன்.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததாக அறிவிப்பு. விமான நிலையத்தின் குடிவரவுப் பிரிவில் நிற்கும் போது சென்னை விமான நிலையத்தில் நிற்பது போல ஒரு பிரமை, சுற்றம் சூழலில் ஒரே தமிழ் வாடை. போதாக்குறைக்கு ஒரு வெள்ளைக்காரக் குடிவரவு அதிகாரி “இங்கே தமிழில் இருந்து மொழிபெயர்ப்புச் செய்யக் கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா?” என்று குரல் கொடுக்க, ஒரு மடிசார் மாமி “ஐ கேன்” என்று கையை உயர்த்திக் கொண்டு முன்னே சென்றார்.

உலாத்தல் தொடரும்…..

22 responses so far