Dec 26 2010

Hong Kong இல் ஒரு குட்டி இந்தியா

Published by at 11:16 pm under Uncategorized

“நம்ம தமிழங்கள இப்பிடிக் கஷ்டப்படுத்துறவங்க நல்லாவே இருக்கமாட்டாங்க, பாருங்க” இப்படிச் சொன்னவர் Chungking Mansions பகுதியில் இருக்கும் ஹோட்டல் சரவணாவில் உணவு பரிமாறும் அந்த தஞ்சாவூர்க்கார முதியவர். Hong Kong இற்குப் பயணப்படும் போது அங்குள்ள இந்தியர்களது வாழ்வியலின் ஒரு பரிமாணமாக, அவர்களது வியாபார ஸ்தலங்களைச் சென்று பார்வையிட வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு உதவியாக இருந்தவர் நண்பர் மாயவரத்தான். Chungking Mansions பகுதிக்குச் செல்லுங்கள் அந்த இடத்தில் நிறைய உணவுக் கூடங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனையாகும் கடைகளை இந்தியர்களே நடத்துகின்றார்கள் என்று என் பயணத்துக்கு முன்னதாகவே சொல்லி வைத்திருந்தார்.
Tsim Sha Tsui என்ற ரயில் நிலையத்தில் இறங்கி Nathan Road என்ற வழிப் பக்கமாக நடந்தால் சில நொடிகளில் எதிர்ப்படுகின்றது Chungking Mansions.


அந்தக் கட்டிடத் தொகுதி 17 அடுக்குகளைக் கொண்டது. அந்தக் கட்டிடத்தில் சீன, இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குடியிருப்புக்கள் மேலே இருக்க, கீழே இருக்கும் இரண்டு அடுக்குகளை நிறைக்கின்றன இந்திய உணவங்கள், மற்றும் தொழில் நுட்ப, இலத்திரனியல் உபகரணங்கள் விற்கும் கடைகள். சீனர்களது வியாபார ஸ்தலங்கள் இருந்தாலும் அங்கே பெரும்பான்மையாக நிறைந்திருப்பது இந்தியர்களது கடைகளே.
வட இந்திய உணவகங்களோடு ஒன்றிரண்டு தென்னிந்திய உணவகங்கள் இருந்தாலும், “ஹோட்டல் சரவணா” என்ற தமிழ்ப்பெயரைத் தாங்கிய ஹோட்டல் தென்படவே. அந்த உணவகம் நோக்கிச் சென்றேன். ஒரு முதியவர் வாங்க தம்பி என்று சொல்லியவாறே இருக்கையைக் காட்டுகிறார். உணவுப்பட்டியலில் இருந்து “வெஜிடேரியன் தாலி மீல் வாங்கிக்குங்க, நல்ல சப்பாத்தி சுட்டுக் கொடுப்பாங்க” என்று அவரே பரிந்துரைக்க நானும் அதையே சொல்லி விட்டு அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.


“நான் தஞ்சாவூர்க்காரன் தம்பி, நீங்க எந்தப்பக்கம்?” என்று அவர் கேட்க
“நான் சிலோன் ஐயா”
“ஓ சரி சரி, ராஜபக்க்ஷ ஏதாச்சும் பண்றானா”
“இன்னும் ஒண்ணும் பண்ணல ஐயா” இப்படி நான் சொல்லவும் அதற்கு அந்த முதியவர் சொன்ன பதிலைத் தான் முதல் பந்தியில் சொல்லியிருக்கிறேன். அவர் அப்படிச் சொன்னதும் உண்மையில் நெகிழ்ந்து போனேன். எங்கோ இரண்டு மூலைகளில் இருந்து வந்து இன்னொரு அந்நிய தேசத்தில் இரண்டு தமிழர்களாக நாம் இருவரும் நம் மனப்பாங்கை அந்த நிமிடங்கள் பகிர்ந்த கணங்கள் மறக்கமுடியாதவை.

ஹோட்டல் சரவணாவில் சாப்பிட்டுவிட்டுக் கடைகளைச் சுற்றிப் பார்க்கின்றேன்.

ஒரு தமிழரின் நாணய மாற்று நிறுவனம், கண்ணாடிக்குப் பின்னால் ” தமிழ் வாழ்க” 😉

இந்திய மளிகைச் சாமான்கள் விற்கும் கடை, இந்தியத் திரைப்படங்களின் டிவிடிக்கள், இசைத்தட்டுக்கள் விற்கும் கடைகள், சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் மொபைல் போன்களில் இருந்து ஐபாட் வரை நிறைந்திருக்கும் கடைகள் எல்லாப் பக்கங்களிலும் இருக்கின்றன.000000000000000000000000000000000000000000000000000000000
ஹொங்கொங்கில் சுற்றுலா செல்பவர்கள் கண்டிப்பாகச் செல்லவேண்டிய இன்னொரு இடம் The Peak என்ற இடம். இந்த நாட்டின் உயர்ந்த இடமிது. Hong Kong Central ரயில்வே நிலையத்தில் இருந்து ஒரு பத்து நிமிஷ நடையில் இந்த உச்சிக்குச் செல்லும் ட்ராம் வண்டிச் சேவையைப் பிடிக்கலாம். இரவு 12 மணி வரை தொடர்ந்து இந்த ட்ராம் வண்டிகள் கீழிருந்து மேலும், மேலிருந்து கீழுமாக ஓடித் திரிகின்றன. ஒரு நாள் மாலை ஏழுமணி வாக்கில் நானும் இந்தப் புதிய அனுபவத்தைப் பெற அங்கு சென்று ட்ராம் டிக்கட்டையும் வாங்கிக் கொண்டு பயணிக்கின்றேன்.

செங்குத்தான பாதையில் பல்லிபோல உரசிக்கொண்டே பயணிக்கும் இந்த ட்ராம் வண்டிகள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து விடாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்தக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய வண்டிகளையும் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். அந்தப் பயணத்தின் போது ஹொங்கொங்கின் அழகை ஒவ்வொரு பாகமாகப் பிரித்துக் காட்டிக்கொண்டே பயணிக்கிறது வண்டி. மெல்ல மெல்ல இருள் கவிய, அந்தக் கறுப்பு நிலப்படுக்கை எங்கும் ஒளிரும் வைரங்களை வைத்து இழைத்து போலத் தெரிகின்றது.

உச்சிக்குச் சென்றால் உணவகங்களுடன், இந்த நாட்டுக் கலைச் செல்வங்கள் ஓவியங்களாகவும் கைவினைப்பொருட்களாகவும் விற்பனையாகின்றன. இப்படியான இடங்களில் வழக்கத்தை விடப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால் இங்கே நியாயமான விலையில் கிட்டுகின்றன.

இந்த இடத்துக்குப் பயணித்து உச்சியில் நின்று கீழே இருக்கும் நிலப்பகுதியைக் கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாதைகளில் நின்று இந்த நாட்டின் முழு அழகையும் ஒரே பார்வையில் பார்க்கக் கூடியாக இருக்கின்றது. ட்ராம் வண்டிப்பயணத்தின் டிக்கட்டோடு The Sky Terrace இற்குச் செல்லும் டிக்கட்டையும் வாங்கி வைத்தால் அங்கிருந்து இன்னும் ஒரு அழகான தரிசனத்தைக் காணலாம்.

Madame Tussauds Hong Kong இங்கே அமைந்திருப்பது இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம். மெழுகு சிலைகளில் உயிர்பெற்றிருக்கும் ப்ரூஸ்லீயும், ஜாக்கி சானும் முகப்பில் நிற்கின்றார்கள்.

ஒவ்வொரு பகுதியாக நின்று நிதானித்துச் சுற்றிப்பார்த்து முடிக்க 11 மணியை அண்மிக்கிறது. ஹோட்டல் திரும்பலாம் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு ட்ராமைப் பிடிக்கின்றேன்.
Hong Kong உலாத்தலில் விடுபட்ட இடங்களை இன்னொரு பயணத்தில் கவனித்துக் கொள்ளலாம் என்று மனதைத் தேற்றியவாறு உலாத்தலை நிறைவு செய்கின்றேன்.

18 responses so far