Nov 28 2010

சிங்கைக்கு ஒரு அதிரடி விஜயம் ;-)

Published by at 8:33 am under Uncategorized


சிங்கையில் இருக்கும் நண்பர் வெற்றிக்கதிரவன் போன வார ஆரம்பத்தில் “இனி எப்ப சிங்கை வர்ரீங்க” என்று கேட்கும் நேரம் அடுத்த வாரம் சிங்கைக்கு ஒரு திடீர் விஜயம் இருக்கும் என்று நான் எண்ணவில்லை. திடீரென்று ஒரு அலுவலக விஷயமாக மூன்று நாட்கள் சிங்கையில் தங்கல்.
தங்கியது என்னமோ மூன்று நாட்கள் தான் என்றாலும் அவற்றில் கண்டதையும் கேட்டதையும் கன்னாபின்னாவென்று கண்டபடி பதிவாக்க விரும்பினேன்.


சிங்கைக்கு எப்போது சென்றாலும் சிங்கைப்பதிவுலகம் இருகரங் கூப்பி வரவேற்கும், இந்த முறை அவர்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைத்திருந்தாலும் தம்பி டொன் லீ எப்படியாவது சைக்கிள் கேப்பில் கிடைக்கும் நேரத்தில் சந்திக்கலாம் என்று உசுப்பேற்றினார். வெள்ளிக்கிழமை மாலை வேலைகள் முடியும் போல இருந்ததால் ட்விட்டரில் சிங்கைப் பதிவர்கள்/ட்விட்டர்களுக்கு ஒரு பகிரங்க அழைப்பை வைத்தேன், முருகன் இட்லிக்கடையில் சந்திக்கலாம் என்று.
திடீர் பகல் நேர அழைப்பின் பிரகாரம் தம்பி டொன் லீ, ஜோசப் பால்ராஜ், ஜெகதீசன், வெற்றிக்கதிரவன், விஜய் ஆனந்த் ஆகியோர் முருகன் இட்லிக்கடை முன்பாகச் சந்தித்தோம். நண்பர் கிஷோரை அடுத்த முறை கண்டிப்பாகச் சந்திக்க வேண்டும், நிஜம்ஸ் இம்முறையும் அஞ்சப்பர் அழைத்துச் செல்லவில்லை.
அரசியல், உலகம், சினிமா என்று சுற்றுச் சுழன்று சாப்பிட உட்காரும் போது, ஜோசப் பால்ராஜ் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்தார்.
“தற்போதுள்ள தமிழ் வலைப்பதிவுலகத்தைப் புரட்டிப் போட என்ன செய்யலாம்?”என்று அவர் கேட்கவும்
ஆடர் செய்த இட்லியும் சட்னியும் வரச் சரியாக இருந்தது.
இட்லியைப் புரட்டிப் போட்டுச் சாப்பிட ஆரம்பித்தோம். (நோ உள்குத்து)

முருகன் இட்லிக்கடையில் ஒரு மணி நேரமும், இன்னொரு கடையில் மேலதிகமாக இன்னும் ஒன்றரை மணி நேரமாக உலக விஷயங்களை தோய்த்துக் காயப்போட்டு விட்டு, நந்தலாலா படம் பார்க்கும் எண்ணத்தையும் ஒதுக்கி விட்டுக் கிளம்பினோம். முருகன் இட்லிக்கடை உரிமையாளர் சுப்ரமணிய சுவாமி அனுதாபியாம். இப்போது சுப்ரமணிய சாமி(க்கு) சீசன் போலிருக்கு

பதிவர் சந்திப்புக்குப் பின் நெட் கபேக்குச் சென்று வலை மேய்ந்தேன், பன்னிரண்டு மணியைத் தொடும் நேரம் வந்தும் தூக்கம் வராததால் காலாற நடக்க ஆரம்பித்தேன். லிட்டில் இந்தியா பக்கம் இருக்கு ரெக்ஸ் சினிமாவுக்குள் நுழைந்தேன். “மைனா” போடப்போகின்றார்கள். டிக்கட்டை வாங்கிக் கொண்டு இருக்கையில் அமர்ந்தேன். நள்ளிரவு 12 மணிக் காட்சிக்கு என்னுடன் சேர்த்து ஒன்பது பேர் இருக்கும். மைனாவின் செண்டிமெண்ட், சோகக் காட்சிகளில் எல்லாம் கைதட்டி விசில் அடித்து ஆர்ப்பரிப்போடு பார்த்தார்கள் மற்றைய எட்டு ரசிகப்பெருமக்கள். படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டிய பின் திட்டிக்கொட்டே போனார்கள். மைனா என்னைக் கொத்திக் குதறி விட்டது. இந்தப் படத்துக்காடா இவ்வளவு பெரிய பில்ட் அப்பு என்று திகைத்தேன்.

சிங்கைக்கு ஒவ்வொரு முறை வரும் போதும் டாக்சி எடுப்பது பெரும் சவாலாகப்படுகின்றது எனக்கு. இவ்வளவுக்கும் ரோட்டை நிறைக்கும் டாக்சிக்கள் என்றாலும் எல்லாமே பிசி என்று போர்டை மாட்டி வெறும் சீட்டோடு பயணிக்கின்றன. ஒப்பீட்டளவில் இங்கே டாக்சி கட்டணம் மிகக்குறைவு என்பதால் ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு எடுக்கின்றார்கள். ஒவ்வொரு முறை டாக்சியில் ஏறும் போதும் “எப்படிப் போனது இன்றைய நாள்” என்று ஒட்டுனரின் வாயைக் கிளறுவேன்.
ஒவ்வொரு டாக்சிக்காரரும் சொல்லி வைத்தாற் போல
“ஒக்க்கே…லாஆஆ” என்பர்கள்.
ஒருமுறை சீன மொழி பேசும் டாக்சிக்காரர் ஒருவர் நான் சிட்னியில் இருந்து வந்ததைப் பேச்சில் பிடித்துக் கொண்டு
“அங்கு நிறவெறி அதிகமாமே” என்று கேட்கவும், நான் சொன்னேன்
“உனக்கும் எனக்கும் இல்லாத நிறவெறியா, இதில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லையே?”

முஸ்தபா 24 மணி நேரமும் கடைபரப்பி இருப்பதால் எப்போதுமே தூக்கம் கலைத்த நுகர்வோர் கூடும் இடமாக இருக்கின்றது. அதே நேரம் பகல் நேரமும் துணி அடுக்குகளுக்குள் தூக்கம் போடும் விற்பனைச் சிப்பந்தியும் வழக்கம் போல்.
முஸ்தபாவில் எல்லாமும் நிறைந்திருந்தாலும், ஒரு அங்காடியில் இருப்பது இன்னொரு அங்காடியில் இருக்கும் விற்பனை முகவருக்குத் தெரியாமல் இருக்கிறது. நாலாவது மாடியில் புத்தக விற்பனைக் கூடம் இருக்கின்றது. அம்புலிமாமாவில் இருந்து அம்பானி வரை புத்தகங்கள் உண்டு.
கிழக்குப் பதிப்பக வெளியீடுகள் அதிகமாக வும், விகடன் பிரசுரம், அல்லயன் வெளியீடுகள் அடுத்த நிலையிலும் உண்டு.
“ஆண்”மீகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள நூல்களில் நாடோடித் தென்றல் ஸ்வாமி நித்தியானந்தாவும் இருக்கிறார்.

ஐந்து மாத இடைவெளியில் லிட்டில் இந்தியா பகுதி பலவகையில் மாறியிருப்பதாகப்பட்டது. புதிதாக வட இந்திய உணவகங்கள் வந்திருக்கின்றன. கூடவே சென்னையின் பிரபல “பொன்னுச்சாமி உணவகம்” கூட வந்திருக்கிறது. பொன்னுச்சாமி உணவகம் சென்றும் ஒரு நாள் இரவு உணவு சாப்பிட்டேன். நியாயமான விலை, தரமான சுவையான உணவுப்பரிமாறல். ஈரல் வறுவல் கேட்டதுக்கு மட்டன் வறுவல் கொடுத்து சாரி கேட்டதை மன்னிக்க முடியாது பொன்னுச்சாமி 😉

டீக்கடைகளில் ஒலிக்கும் 80 களின் இளையராஜா, பூக்கடைகளில் மெல்லிசைக்கும் எம்.எஸ்.வி எத்தனை வருஷங்கள் கடந்தாலும் இதே போல் இருக்க வேண்டுகிறேன்.

சிங்கப்பூரர்களின் கலைத்தாகத்துக்கு ஒரு எல்லையே கிடையாது போல. இராமநாதபுரத்தின் சூப்பர் (பிரியாணி) ஸ்டார் ரித்தீஷ் கலைப்பயணம் செய்ய இருக்கிறாராம்.

ஆசியாவுக்குக் கிடைத்த கடந்த மற்றும் இந்த நூற்றாண்டின் உருப்படியான தலைவர் லீ க்வான் யூவின் From Third World to First : The Singapore Story: 1965-2000 சிட்னியில் தேடிக் கிடைக்காத புத்தகம் கடைகளில் இருந்தாலும் இரண்டு பெரிய வால்யூமே 5 கிலோ கொள்ளுமோ என்று நினைத்து Success stories – Lee Kuan Yew என்ற விவரணச் சித்திர டிவிடியை மட்டும் வாங்கினேன்.


நண்பர் ஒருவர் எலக்ட்ரானிக் சுருதிப்பெட்டி வாங்கிவருமாறு கேட்டார். சிராங்கூன் சாலை எல்லாம் அளந்து இறுதியில் ஒரு சந்துக்குள் இருந்த இசைக்கருவிகள் விற்குமிடத்தில் அதைக் கண்டேன். அந்த விற்பனைக்கூடத்தை நடத்துபவர் உஸ்தாத் ஷராப் கான் என்ற முதியவர் கடைக்குள்ளேயே ஹிந்துஸ்தானி வகுப்பெடுத்துக்கொண்டு இசைக்கருவிகளை விற்கின்றார். சிங்கையில் இருக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் இந்த விஷயம் தெரியாததால், அடுத்த முறை என்னைப் போலவே யாராவது இந்த சமாச்சாரத்தை விசாரித்தால்
Indian Classical Music Centre
26 Clive Street (Junction of Campbell Lane, besides Little India Arcade)
இற்கு அனுப்பி விடுங்கள்.

புலம்பெயர்ந்த சூழலில் தமிழ் தமிழ் என்று பெருங்கோஷம் போடுவதும், தமிழ் சார்ந்த முயற்சிகளும் பெரும்பாலும் அவரவரின் பிள்ளைகள் தமிழ் சார்ந்த பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுப்பொருட்களை வாங்கிக் குவிக்க உதவும் சமாச்சாரமாகவே இருக்கும் ஒரு கள்ளத்தனமான சூழலில் சிங்கப்பூரில் அரசாங்க மட்டத்திலும், நடைமுறை வர்த்தக உலகிலும் தமிழை நேர்மையான ஊடகமாகப் பயன்படுத்துவதைப் பல சந்தர்ப்பங்களில் பார்த்து வியக்கின்றேன், இந்த முறையும் கூட.

வழக்கம் போல சிங்கை தமிழ்முரசை தங்கியிருந்த நாட்களில் வாங்கிப்படித்தேன். உள்ளூர்ச் செய்திகளைத் தவிர தமிழ் சினிமா சார்ந்த செய்திகளுக்கு அவர்களுக்குப் பெரிதும் துணை நிற்பது தமிழ்சினிமா இணையத்தளம் என்பது தெரிகிறது. கரு பழனியப்பன் பதிவர்களை அழைத்து ஸ்பெஷல் காட்சி போட்டதைச் சொல்லும் அதே வேளை முன்று வாரங்களுக்கு முன் வந்து ஒரே வாரத்தில் தியேட்டரை விட்டு ஓடிய சுந்தர்.சி இன் “வாடா” படம் இனிமேல் தான் வர இருக்கின்றது என்ற ஷீட்டிங் செய்தியைப் போட்டது உள்குத்தா என்ன? அடுத்த முறை சிங்கை தமிழ்முரசு ஆசிரியர் தமிழ் சினிமா இணையத்தை ரிப்ரெஷ் செய்து பார்த்தால் புது செய்திகளுக்கு உதவும்.

தமிழ் முரசு பத்திரிகையால் ஒரு மன நிறைவான நிகழ்வும் இடம்பெற்றது எனக்கு. தமிழகத்தின் பிரபல ஓவியர் மணியன் செல்வன் அவருடைய தந்தை மணியனின் ஓவியங்கள், மற்றும் இவரின் ஓவியங்களோடு ஒரு கண்காட்சி நடத்த இருப்பதாகச் செய்தி கண்ணில்பட்டது. விமான நிலையம் போக ஒன்றரை மணி நேரமே இருக்கும் தறுவாயில் மூன்று ரெயில்கள் பிடித்து திக்குத் திணறு ஐந்து ஆறு பேரை வழி கேட்டு ஒருவாறு கிளார்க் கீ பகுதியில் நடந்த அந்தக் கண்காட்சிக்குப் போனேன். அங்கே இந்தியாவின் பலவகை உணவுகளின் விற்பனை, நேரடி ஹிந்துஸ்தானி இசைக்கச்சேரி இவற்றோடு மணியம் செல்வனின் ஓவியக்கண்காட்சிக் கூடமும் கண்ணிற்பட்டது. ஓவியக்கூடத்துக்குள் நுழைகிறேன். நான் நினைத்தது போலவே மணியன் செல்வன் அங்கே இருக்கிறார்.


மும்முரமாக அன்று மாலை நடக்க இருக்கும் நிகழ்வுக்காக ஓவியம் ஒன்றைத் தீட்டிக் கொண்டிருக்கும் அவரை வலியப் போய் என்னை அறிமுகப்படுத்தினேன். சிட்னியில் இருந்து வந்ததை அறிந்து பெருமகிழ்வோடு உரையாடித் தன் தொடர்பிலக்கம், மின்னஞ்சலையும் தருகின்றார். உங்களை என் வானொலிப்பேட்டிக்காக நேர்காணல் செய்ய வேண்டும் என்ற என் அன்பு வேண்டுகோளை ஏற்று “தாராளமா பண்ணலாம்” என்கிறார்.
ஓவியக்கண்காட்சியை வலம் வருகின்றேன். பொன்னியின் செல்வனின் பாத்திரங்கள் மணியம் அவர்களின் தூரிகையில் உயிர்பெற்று ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன, மணியம் செல்வனின் முக்கியமான படைப்புக்களும் அணி செய்கின்றன.


சாங்கி விமான நிலையம் வந்தடைகின்றேன். நான் போன விமான நிலையங்களிலேயே பயணிகளை ஏதோ ஒருவகையில் குஷிப்படுத்தி ஜாலம் காட்டுவதில் சாங்கி சிங்கி தான்.
அன்று இந்தியப் பாரம்பரியக் கண்காட்சி Terminal 2 இல் நடப்பதாகச் சொன்னார்கள். இந்தியக் கண்காட்சி அரங்கத்தில் கிளி ஜோசியக்காரரும் இருக்கிறார். கிளி ஜோசியம் பார்க்க ஆர்வப்பட்டேன்.
கிளி ஒரு துண்டை எடுத்துப் போட்டது.
“எதிர்பாராத பல நன்மைகள் வர இருக்கின்றது” என்று சொன்ன கிளி ஜோசியத்தை ஹாஸ்யமாக எடுத்துக் கொண்டு நகர்ந்தேன். ஐயோடா நான் பயணப்பட இருக்கும் குவண்டாஸ் விமானம் வழக்கம் போல் ஒரு மணி நேரம் தாமதமாம்.

31 responses so far

31 Responses to “சிங்கைக்கு ஒரு அதிரடி விஜயம் ;-)”

 1. noreply@blogger.com (ஜோசப் பால்ராஜ்)on 28 Nov 2010 at 9:49 am

  சுட சுட பயணக்குறிப்பு எழுதிட்டிங்க.

  படத்துக்கு போறேன்னு சொல்லியிருந்தா அந்த மைனா துயரத்துல நாங்களும் பங்கெடுத்துருப்போமே? போன முறை போல இந்த முறையும் படம் பார்த்திருக்கலாம்.

 2. noreply@blogger.com (’டொன்’ லீ)on 28 Nov 2010 at 10:04 am

  🙂

  ஓ..மைனா எல்லாம் போய்ப் பார்த்தீர்களா..? :-))

 3. noreply@blogger.com (’டொன்’ லீ)on 28 Nov 2010 at 10:05 am

  இசைக்கருவிகள் பற்றிய இடத்தின் தகவல்களுக்கு நன்றி 🙂

 4. noreply@blogger.com (வந்தியத்தேவன்)on 28 Nov 2010 at 10:34 am

  சிங்கம் அடிக்க்டி சிங்கை போகும் ரகசியம் என்ன? #அண்ணியிடம் போட்டுக்கொடுப்போர் சங்கம்

  //"எதிர்ப்பாராத பல நன்மைகள் வர இருக்கின்றது" //
  அண்ணே இந்த நன்மைகள் ஆஸியிலிருந்தா இல்லை யாழில் இருந்தா வரப்போகின்றது.

 5. noreply@blogger.com (Pot"tea" kadai)on 28 Nov 2010 at 10:37 am

  Like Like…:) especially that little para about expat tamils 🙂

  I thought I had dinner at ponnusamy last year itself?!

 6. noreply@blogger.com (கானா பிரபா)on 28 Nov 2010 at 10:48 am

  ஜோசப் பால்ராஜ் said…

  சுட சுட பயணக்குறிப்பு எழுதிட்டிங்க.

  படத்துக்கு போறேன்னு சொல்லியிருந்தா அந்த மைனா துயரத்துல நாங்களும் பங்கெடுத்துருப்போமே?//

  திடீர் என்று வந்த ஆர்வக்கோளாறு பாஸ், ஆனா நள்ளிரவில் ஆந்தையாகிப் போனது மைனா

 7. noreply@blogger.com (☀நான் ஆதவன்☀)on 28 Nov 2010 at 11:04 am

  அருமை பாஸ். உங்க பயணம் போலவே இந்த பதிவும் ரொம்ப விறு விறுன்னு இருந்துச்சு 🙂

 8. noreply@blogger.com (கானா பிரபா)on 28 Nov 2010 at 11:05 am

  டொன் லீ

  மைனா ஒரு கொடுங்கனவு :0

  அடுத்த முறை சுருதிப்பெட்டி கேட்பவருக்கு வழிகாட்டவும் 😉

 9. noreply@blogger.com (மாணவன்)on 28 Nov 2010 at 11:25 am

  உங்களது பயணங்களை அனுபவங்களுடன் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை,

  தொடரட்டும்…

 10. noreply@blogger.com (கானா பிரபா)on 28 Nov 2010 at 11:47 am

  வந்தியத்தேவன் said…
  //"எதிர்ப்பாராத பல நன்மைகள் வர இருக்கின்றது" //
  அண்ணே இந்த நன்மைகள் ஆஸியிலிருந்தா இல்லை யாழில் இருந்தா வரப்போகின்றது.//

  வந்தி

  அதான் கடைசி வசனத்தில் சொன்னேனே, ப்ளைட் 1 மணி நேரம் தாமதம் 🙁

 11. noreply@blogger.com (இனியவன்)on 28 Nov 2010 at 12:03 pm

  தரம் மிகுந்த படங்கள்.நல்ல செய்திகள். அருமை நண்பா.

 12. noreply@blogger.com (வந்தியத்தேவன்)on 28 Nov 2010 at 12:04 pm

  //அதான் கடைசி வசனத்தில் சொன்னேனே, ப்ளைட் 1 மணி நேரம் தாமதம் :(//

  பிளைட் தாமதத்தால் என்ன நன்மை கிடைத்தது. ஏர்ஹொஸ்டஸ் அக்காவை சைட் அடிக்க கூடுதலாக ஒரு மணீ நேரம் கிடைத்ததா?

 13. noreply@blogger.com (கானா பிரபா)on 28 Nov 2010 at 12:07 pm

  வந்தியத்தேவன் said…

  பிளைட் தாமதத்தால் என்ன நன்மை கிடைத்தது. //

  ஐயா கிளியின் உள்குத்தை சொன்னேன், அதன் பாணியில் நன்மை என்றால் இது போலும் 😉

 14. noreply@blogger.com (கானா பிரபா)on 28 Nov 2010 at 12:15 pm

  Pot"tea" kadai said…

  I thought I had dinner at ponnusamy last year itself?!//

  வாங்க தல, போன தடவை நான் போனபோது இந்த உணவகம் இல்லை, எனக்குப் பிறகு நீங்க போயிருக்கலாம்னு நினைக்கிறேன்

 15. noreply@blogger.com (கோபிநாத்)on 28 Nov 2010 at 12:26 pm

  அட அட பட படன்னு கலக்கிட்டிங்க தல…;)

 16. noreply@blogger.com (ஆயில்யன்)on 28 Nov 2010 at 12:56 pm

  உள்ளேன் ஐயா!

  தம்பிக்கு எதுனாச்சும் பரிசில் கொடுத்தனுப்பினீரா?

  பரிசிலுக்காக பாரினில் காத்திருக்கும்
  ஆயில்யன்

 17. noreply@blogger.com (ஆயில்யன்)on 28 Nov 2010 at 12:57 pm

  //திடீரென்று ஒரு அலுவலக விஷயமாக மூன்று நாட்கள் சிங்கையில் தங்கல்.//

  தங்கல் – அதுதானே பார்த்தேன் அலுவலகத்திலயே நாமெல்லாம் அலுவல் செய்யறது கிடையாது இதுல அயல்நாடெல்லா போயி பண்ண போறமோ என்ன? #ஹய்யோஹய்யோ

 18. noreply@blogger.com (கிஷோர்)on 28 Nov 2010 at 1:00 pm

  ஏர்போர்ட்டில் உங்களை பார்த்துவிட வேண்டும் என்று முயன்று முடியாதபோது, அந்த கிளிஜோசியக்காரரை என் மனைவிக்கு காண்பித்து நான் சென்றமுறை இந்தியா சென்ற அனுபவத்தை என் மனைவிக்கு வியூயுங் மால் அருகில் இருந்து சொல்லிக்கொண்டிருந்தேன். நீங்கள்கூட அங்கு இருந்திருக்கிறீர்கள் போல, அப்போதுகூட நீங்கள் என் கண்ணில் மாட்டவில்லை. 🙁

 19. noreply@blogger.com (கிஷோர்)on 28 Nov 2010 at 1:00 pm

  for follow-up

 20. noreply@blogger.com (ஆயில்யன்)on 28 Nov 2010 at 1:01 pm

  //டொன் லீ எப்படியாவது சைக்கிள் கேப்பில் கிடைக்கும் நேரத்தில் சந்திக்கலாம் என்று உசுப்பேற்றினார்

  அவுரு எப்பவுமே அப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தியே உம்மை ரணகளமாக்கிட்டாரோ? அப்படி இருந்தும் கூட எம் சமகால டிவிட்டர் கிஷோர் அண்ணாவை [கண்டுக்காதீங்க பாஸ்] காணாது எஸ்ஸானது ஏனோ கானா?

 21. noreply@blogger.com (ஆயில்யன்)on 28 Nov 2010 at 1:03 pm

  //சிங்கைக்கு எப்போது சென்றாலும் சிங்கைப்பதிவுலகம் இருகரங் கூப்பி வரவேற்கும், இந்த முறை அவர்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினை //

  ஒரு கையால மட்டும் கூப்பி வரவேற்க்கவும் முன்னாடியே சொன்னீங்களாக்கும்!

 22. noreply@blogger.com (ஆயில்யன்)on 28 Nov 2010 at 1:04 pm

  //சிங்கைக்கு ஒவ்வொரு முறை வரும் போதும் டாக்சி எடுப்பது பெரும் சவாலாகப்படுகின்றது எனக்கு//

  ஏன் பாஸ் எவனும் சாவியோட வைச்சுட்டுப்போறதில்லையா? உங்க மேலயும் நிறைய தப்பு இருக்கு போகும்போது ரெண்டு 3 கள்ளசாவி எடுத்துக்கிட்டு போனாத்தான் என்ன :))

 23. noreply@blogger.com (ஆயில்யன்)on 28 Nov 2010 at 1:05 pm

  //நாடோடித் தென்றல் ஸ்வாமி நித்தியானந்தாவும் இருக்கிறார்.//

  ஆத்திய்ய்ய்ய்ய் இது வாத்துக்கூட்டம் பார்த்தா இவன் ஆளு மட்டும் கேட்டாலும் :))

 24. noreply@blogger.com (ஆயில்யன்)on 28 Nov 2010 at 1:08 pm

  //எதிர்பாராத பல நன்மைகள் வர இருக்கின்றது///

  தாமதமாக வந்தாலும் கூட அந்த இன் பிட்வின் இடைவெளியில் எத்தனை காட்சிகள் கண்டுணரமுடிந்தது ஐயா?! #எல்லாம்நன்மைக்கே 🙂

 25. noreply@blogger.com (yarl)on 28 Nov 2010 at 10:47 pm

  மீண்டும் அசத்தலான உங்கள் பயணக்கட்டுரை. உங்களுக்கும் சிங்கப்பூருக்கும் எதோ ஒரு பூர்வ ஜென்ம பந்தம் இருக்குப்போலும். அதென்ன அடிக்கடி பறந்து திரியிறிங்கள். பிரபா, இம்முறை நீங்கள் தங்கிய ஹோட்டலை ஏன் குறிப்பிடவில்லை? ஆவலுடன் எதிர்பார்த்தேன். பயணக்கட்டுரை எழுதுபவர்கள் குறிப்பிடும் ஹோட்டல் பெயர்களை எனது டைரியில் குறித்து வைப்பேன். (பிறகு உதவும் தானே) short & sweet ஆக அழகிய பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்:)))))))
  அன்புடன் மங்கை

 26. noreply@blogger.com (கானா பிரபா)on 29 Nov 2010 at 2:42 am

  வருகைக்கு நன்றி நான் ஆதவன் பாஸ்

  மிக்க நன்றி மாணவன்

  தங்கள் கருத்துக்கு நன்றி இனியவன்

 27. noreply@blogger.com (வழிப்போக்கன் - யோகேஷ்)on 29 Nov 2010 at 3:15 am

  //
  நள்ளிரவில் ஆந்தையாகிப் போனது மைனா
  //
  :)…

 28. noreply@blogger.com (KANA VARO)on 29 Nov 2010 at 4:30 am

  மைனாவை புஸ்வானம் எண்டுற அளவுக்கு சொல்லிட்டீங்கள்…

  பகிர்வுக்கு நன்றி

 29. noreply@blogger.com (thiru)on 29 Nov 2010 at 7:34 am

  Hi Piraba good to see you back in town. What is the meaning for சைக்கிள் கேப்பில்

 30. noreply@blogger.com (கானா பிரபா)on 29 Nov 2010 at 9:54 am

  வாங்க தல கோபி ;0

  ஆயில்

  பேசாம நீர் ஒரு பதிவே போட்டிருக்கலாம்

  வாங்க கிஷோர்

  குவன்டாஸ் தாமதத்தால் கிளியைச் சந்தித்தேன் 😉 அடுத்த சந்திப்பில் கண்டிப்பாக கிடா வெட்டிக் கொண்டாடிடுவோம்

 31. noreply@blogger.com (கானா பிரபா)on 30 Nov 2010 at 12:47 pm

  yarl said…
  பிரபா, இம்முறை நீங்கள் தங்கிய ஹோட்டலை ஏன் குறிப்பிடவில்லை?//

  கருத்துக்கு நன்றி மங்கை அக்கா, இது கம்பனி செலவில் தங்கிய ஹோட்டல் கட்டுப்படியாகாது என்பதால் சொல்லவில்லை 😉

  கானா வரோ

  வருகைக்கு நன்றி

  திரு

  சைக்கிள் கேப் என்றால் ஒரு சின்ன இடைவெளியில் 😉

Trackback URI | Comments RSS

Leave a Reply