Aug 09 2010

பட்டையைக் கிளப்பிய பட்டாயா பயணம்

Published by at 11:17 am under Uncategorized

தாய்லாந்துக்கு உலாத்தப்போய் ஒரு கடற்கரையிலாவது குளியலை மேற்கொள்ளாமல் போனால் அந்தப் பாவம் சும்மா விடாது என்று நினைத்துத் திட்டமிட்டபோது முதலில் என் மனதில் தோன்றிய இடம் புக்கெட் தீவு தான். காரணம், அவுஸ்திரேலியாவைச் சூழவும் எத்தனையோ கடற்கரைப்படுக்கைகள் இருந்தாலும் ஒரு வாரம் லீவு கிட்டினாலே அவுஸ்திரேலியர்கள் படையெடுப்பது இந்தப் புக்கெட் தீவுக்குத் தான். அவுஸ்திரேலியர்களைக் குறிவைத்து உள்ளூர் சுற்றுலாப்பணியகங்கள் முதலில் காட்சிப்படுத்துவது இந்த புக்கெட் தீவு நோக்கியதாகத் தான் இருக்கும். ஆனால் என் அதிஷ்டம், இருக்கும் சொற்ப நாட்களுக்குள் புக்கெட் தீவு சென்று வரக் கால நேரம் போதாமல் இருந்தது. எனவே கையருகே இருக்கும் சொர்க்கத்தைத் தேடிப்போவோம் என்று நினைத்து பாங்கொக் நகரில் இருந்த தனியார் சுற்றுலா மையத்தின் கதவைத் தட்டினால் அவர்கள் கை காட்டி விட்டது பட்டாயா வை அண்மித்த Coral island.

பட்டாயா ,தாய்லாந்து நாட்டிலுள்ள நகரம். இது தாய்லாந்து வளைகுடா பகுதியின் கிழக்கு கடலோரம் அமைந்துள்ளது. பேங்காக் நகரின் தென்கிழக்கில் 165கிமீ தொலைவுக்குள் இருந்தாலும், சோன்புரி மாகாணத்தில் உள்ள அம்பே பேங் லாமுங் (பங்கலாமுங்) பகுதியுடன் தொடர்பற்று உள்ளது. (நன்றி விக்கிபீடியா) பட்டாயா குறித்து மேலதிக வாசிப்புக்கு

எனது தங்குமிடத்தில் இருந்து என்னை ஏற்றிக் கொண்டு பின்னர் மேலும் சில பயணிகளை வெவ்வேறு ஹோட்டல்களில் இருந்து ஏற்றியவாறே பட்டாயா நோக்கிப் பயணித்தது சுற்றுலா வான். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கடந்த நிலையில் பட்டாயாவில் வந்திறங்கியது. இந்த நகரம் பூலோக சொர்க்கம் என்று வர்ணிக்கத்தக்க வகையில் அனைத்து சமாச்சாரங்களும் கிட்டும் இடம். ஆனால் அதற்கெல்லாம் சமரசம் செய்து கொள்ளாமல் நேராக , ஒழுங்கு செய்திருந்த படகு மூலம் Coral island நோக்கிப் பயணிக்கலாம் என்று கூட்டத்தோடு கூட்டமாக கடலுக்குள் கால்கள் அலம்ப நடக்கின்றோம். எங்களுக்காகக் காத்திருந்து வழிகாட்டியாக இருப்பவன் முன்னே நடக்கப் பின்னால் பவ்யமாகப் போகின்றோம்,படகு எங்களுக்காகக் காத்து நிற்கின்றது. ஒவ்வொருவராகக் கைப்பிடித்துத் தூக்கிய அந்த வழிகாட்டி என்னைக் கண்டதும் “கமோன் ஷாருக்கான் கமோன் ஷாருக்கான்” என்றான் எனக்குப் பாதி சிரிப்பும் பாதி வெறுப்புமாக நான் “ஷாருக்கான் இல்லை, யாரவர்?” என்றேன் படகில் ஏறி இடம் பார்த்து இருந்ததும் அவனை நோக்கி. “பொலிவூட் ஸ்டார் ஷாருக்கான்” என்று எனக்கே விளக்கமளித்தான். ஷாருக்கான் அடிக்கடி வந்து போகும் இடமாம் இது, ஷூட்டிங் கூட நடந்திருக்காம் , மேலதிக ஆராய்ச்சியின் விளைவாக அவன் எனக்குச் சொன்னது. அதுக்காகக் கண்டவன் எல்லாம் ஷாருக்கானா என்று என் மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். படகு கடலைக் கிழித்துக் கொண்டு போய்க்கொண்டிருக்கின்றது.ஷாருக்கானைத் தெரிந்த எம் சுற்றுலா வழிகாட்டி 😉

Coral island ஐ மையப்படுத்திப் பல கடல் சகாசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சகாசத்துக்கும் பணம் கட்டினால் போதும். அந்த வகையில் அடுத்ததாக கடலுக்குள் முழ்கி நீந்தும் சகாசத்துக்காகப் பணம் கட்டியவர்களின் ரசீதுகளை வாங்கி விட்டு இன்னொரு சிறு படகில் அவர்களை இடமாற்றி விடுகிறார்கள். கூட வந்த ஒரு ஜப்பானியக் கூட்டம் மாயமாகிறது. எமது பயணம் தொடர்ந்தது.

அடுத்ததாக பாரசூட்டில் மிதக்கப் பணம் கட்டியோரை அழைக்கிறார்கள், ஒவ்வொருவராகப் போகிறார்கள், இன்னொரு பிரமாண்டமான கப்பலை நோக்கி, அதில் நானும் ஒருவன். ஏதோ துணிச்சலில் பணம் கட்டியாகிவிட்டது. வாழ்நாளில் சினிமாப் பாட்டுக்களை ஓட விட்டுக் கற்பனை செய்ததைத் தவிர நிஜத்தில் பாரசூட் அனுபவம் கிடையாது. பயந்தாங்கொள்ளி வேறு. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று மனச்சாட்சியின் உறுத்தலைக் கேட்காமல் முன்னே நடக்கிறேன். ஒவ்வொருவராகப் பாரசூட்டில் பறக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். அடுத்தது நான், திரும்பி ஓடுவோமா என்றால் எங்கே ஒடுவது கடலையும் படகையும் தவிர?பாரசூட்டில் ஏற்றமுன் பாதுகாப்பு அங்கிகளை அணியச் செய்து சிறிது விளக்கமும் கொடுக்கிறார்கள். எல்லாம் காதில் ஏறினால் தானே? பாழாய்ப்போன மனச்சாட்சி “உனக்கு இது தேவையா தேவையா” என்று ரீமிக்ஸ் செய்தது. என்னைப் பாரசூட்டுடன் கட்டுகிறார்கள் மெல்ல மெல்ல மேலே போகிறேன். என்ர மடத்துவாசல் பிள்ளையாரே, உன்னைத் தேடி தான் நான் வாறேனோ தெரியேல்லை, என்னைக் காப்பாற்று பிள்ளையாரே பிள்ளையாரே என்று அரட்ட அரட்ட சுழன்று சுழன்று அந்தக் கடற்காற்றில் பாரசூட் நமீதா ஆட்டம் ஆடியது.


மேலே மேலே உயர உயர பயம் எல்லாம் மெல்லக் கழன்று ஒரு பற்றற்ற ஞானியைப் போலச் சிரித்துக் கைகளை விரிக்கின்றேன். புதிய வானம் புதிய பூமி என்று பாடலாம் போலத் தோன்றியது, மகிழ்ச்சிக் களிப்பில் அந்த உசரத்தில் நான் கத்தியது கீழே யாருக்கும் கேட்டிராது அவ்வளவு உயரம். வாழ்வின் உச்சத்தைக் காட்டிய திருப்தியோடு கீழே லாவகமாக பாரசூட் வளைந்து வளைந்து கப்பலின் தளத்தைத் தொடுகிறது. முறுவலோடு என் படகுக்குள் பாய்கின்றேன். மீண்டும் பயணம் தொடர்கிறது Coral island நோக்கி.

அரைமணி நேரம் வரை கழிந்த நிலையில் Coral தீவு நெருக்கமாகக் கண்ணுக்கு முன்னால். மெல்ல மெல்ல இன்னும் இன்னும் நெருக்கமாக. ஒருவாறு அந்தப் படகுப்பயணம் தரை தட்ட ஒவ்வொருவராக இறங்கினோம். எமக்காக ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு உணவகம் சக இளைப்பாறும் இடம் செல்கிறோம். பின்னர் கடலில் குளிப்பதற்கான நீச்சலுடையை மாற்றி விட்டு மீண்டும் கடலுக்குள் பாய்கிறோம். ஆசை தீர அந்தக் கடலில் குளிக்கலாம் என்றால் ஆசை தீர்ந்தால் தானே. பளிங்கு மாதிரிச் சுத்தமான தண்ணீர் , ஒரு இளஞ்சூட்டு வெப்பத்தின் கதகதப்பில் அந்தக் கடலில் குளிப்பதே பேரானந்தம் தான்.


சீட்டுக்கட்டு விளையாடும் உள்ளூர்வாசிகள்

Coral தீவிலும் அதை மையப்படுத்திய ஏகப்பட்ட கடற்களியாட்டங்களுக்கான வசதிகள் உண்டு. காற்றடைத்த மிதவைத் தெப்பங்கள், நீருக்குள் பாய்ந்தோடும் மோட்டார் சைக்கிள்கள், மோட்டார் படகுப் பயணம் என்று இவற்றை வாடகைக்கு வாங்கி ஓடும் வசதி உண்டு. இங்கிருந்தும் கடலின் அடிக்குள் போய் கடல் ஆழம் கண்டு களிப்புறவும் வசதிகள் உண்டு. களைப்பாக வந்து கடற்கரை மணலோரம் இருக்கும் இருக்கைகளில் சாய்ந்து கடற்காற்றை அனுபவிக்கவும் வசதிகள் உண்டு, அதற்கும் தனிக்கட்டணம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு இலவச குருமணல் தரை அனுபவம்.

கடலைக் கண்டால் பெரிசுகளே குழந்தையாக மாறும் போது இந்தச் சிறுசுக்கு மட்டும் உவகை வந்தால் வியப்பேது

இந்தப் பயணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டதன் பிரகாரம், மீன் பொரியல், மீன் கறி, முட்டைப் பொரியல், சாலட் என்று கூட்டாகச் சோற்றுடன் களமிறங்கும் கூட்டணியைப் பரிமாறுகிறார்கள். உண்ட களைப்பில் மெல்ல கடற்கரை மணல் தழுவ குட்டி உறக்கம் கொள்ளலாம். கடற்கரையை மையப்படுத்தி சுடச்சுட தாய்லாந்தின் சுதேச பண்டங்களும், பழவகைகளும் சுடச்சுட விற்பனையாகின்றன. இளநீர்க்குலைகள் வெட்டப்பட்டுத் தாகம் தணிக்க உதவும் அதே வேளை உள்ளே இருக்கும் வெள்ளை வழுக்கலைக் கிளறித் தின்னவும் வசதியாகக் கொத்திக் கொடுக்கிறார்கள்.
எல்லா அனுபவங்களும் தித்திக்க மாலை சாயும் நேரம் Coral தீவை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிகின்றோம்.15 responses so far

15 Responses to “பட்டையைக் கிளப்பிய பட்டாயா பயணம்”

 1. noreply@blogger.com (அகல்விளக்கு)on 09 Aug 2010 at 1:28 pm

  உடன்வந்ததைப் போன்று உணர்வு ஏற்படுகிறது பிரபா….

  🙂

 2. noreply@blogger.com (☀நான் ஆதவன்☀)on 09 Aug 2010 at 1:32 pm

  வாவ்!!! பாராசூட் எல்லாம் இருக்குதா பாஸ். விடமாட்டோம்ல :)))

  ரொம்ப நன்றி பாஸ் 🙂

 3. noreply@blogger.com (கோபிநாத்)on 09 Aug 2010 at 5:35 pm

  தல ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ;))

  கலக்குறிங்க போங்க ;)))

 4. noreply@blogger.com (கானா பிரபா)on 10 Aug 2010 at 3:02 am

  மிக்க நன்றி அகல்விளக்கு நண்பரே 😉

 5. noreply@blogger.com (வானவன் யோகி)on 10 Aug 2010 at 6:55 am

  \\மேலே மேலே உயர உயர பயம் எல்லாம் மெல்லக் கழன்று ஒரு பற்றற்ற ஞானியைப் போலச் சிரித்துக் கைகளை விரிக்கின்றேன்//

  ஆனந்தத்தை விவரிப்பதில் இதை விட உச்சமாக எழுத வேறு வார்த்தைகளே இல்லை என எண்ணுகிறேன்.

  எங்களையும் கூட்டிச்சென்று காண்பித்ததைப் போல் உணருகிறேன்.

  எழுதுங்கள்…வரவேற்கிறோம்.கை பிடித்துக் கூட்டிச் செல்லுங்கள்.வருகிறோம்..நும்முடன்…!!!!!

 6. noreply@blogger.com (கானா பிரபா)on 10 Aug 2010 at 10:43 am

  ☀நான் ஆதவன்☀ said…

  வாவ்!!! பாராசூட் எல்லாம் இருக்குதா பாஸ். விடமாட்டோம்ல :)))//

  நீங்களும் போய் கலக்குங்க பாஸ் 😉

 7. noreply@blogger.com (ஆயில்யன்)on 10 Aug 2010 at 11:05 am

  //மேலே மேலே உயர உயர பயம் எல்லாம் மெல்லக் கழன்று ஒரு பற்றற்ற ஞானியைப் போலச் சிரித்துக் கைகளை விரிக்கின்றேன்//

  போட்டோ எடுத்தவரு மேல வந்து பொத்’த்துன்னு வுழுந்துடுவீங்களோன்னு ஒரு நிமிசம் பதட்டமா தோணுச்சு!

 8. noreply@blogger.com (ஆயில்யன்)on 10 Aug 2010 at 11:06 am

  நிறைய போட்டோஸ் நிறைய இடங்கள் பார்க்க வேண்டும் என்பது போல ஆர்வம் ஏற்படுத்தியது ! ஹம்ம்ம்!

 9. noreply@blogger.com (கானா பிரபா)on 10 Aug 2010 at 12:47 pm

  தல கோபி

  நீங்களும் பாரசூட்டில் தொங்கிக்கொண்டு பின்னூட்டியது மாதிரி இருக்கே 😉

  வானவன் யோகி said…

  ஆனந்தத்தை விவரிப்பதில் இதை விட உச்சமாக எழுத வேறு வார்த்தைகளே இல்லை என எண்ணுகிறேன். //

  உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே, தொடர்வேன்

 10. noreply@blogger.com (yarl)on 13 Aug 2010 at 9:57 pm

  அட டா!!!!!!!!! பிரபா ஜேம்ஸ் bond விளையாட்டெல்லாம் காட்டிறிங்கள். முதல் படம் சண்டைக்கு போக வெளிகிட்டு நிக்கிற மாதிரி இருக்கு. குரு மணலையும் நீல தண்ணியையும் பாக்கவே ஆசையாய் இருக்கு. கட்டாயம் ஒரு முறை போயே தீரவேணும். எங்க சாப்பாட்டு கடை படம் ஒண்டையும் காணேல. . உங்கட பதிவை பார்த்து தான் வாற கிழமை கேரளா போகப்போறம். கௌரி ரெசிடன்சில தான் தங்கப்போறம். படங்களும் பதிவும் அருமை பிரபா. வாழ்த்துக்கள்.
  அன்புடன் மங்கை

 11. noreply@blogger.com (NIZAMUDEEN)on 28 Aug 2010 at 4:46 pm

  நாமே நேரில் அனுபவித்த சுகம்!

 12. noreply@blogger.com (கானா பிரபா)on 30 Aug 2010 at 10:40 am

  yarl said…

  அட டா!!!!!!!!! பிரபா ஜேம்ஸ் bond விளையாட்டெல்லாம் காட்டிறிங்கள்//

  ஆகா அந்த அளவுக்கு ஏத்தாதேங்கோ 😉

  கேரளாவுக்குப் போய் கெளரி ரெசிடென்சியின் அரவணைப்பில் உங்கள் விடுமுறை இனிதாய் அமைய வாழ்த்துக்கள் அக்கா

  எங்கட சாப்பாட்டுக்கடைகளைப் பற்றி ஒரு பதிவு போட்டேனே முன்பு

 13. noreply@blogger.com (கானா பிரபா)on 30 Aug 2010 at 10:41 am

  வாசித்துக்கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி நிஜாம்தீன்

 14. noreply@blogger.com (தியாவின் பேனா)on 24 Sep 2010 at 5:22 am

  அருமையான படங்கள்

 15. noreply@blogger.com (R)on 24 Dec 2010 at 8:00 am

  என்னுடைய எல்லா தாய்லாந்து பயணத்தின் போதும் கோரல் தீவுக்கு செல்ல நான் தவறுவதில்லை. இனிமையான இடம். ஆனால் இந்த பாரசெய்லிங் சமாச்சாரம் மட்டும் எனக்கு சரிவருவதில்லை. காரணம் பிறநாடுகளை ஒப்பிடுகையில் தாய்லாந்தில் அதிலும் பட்டாயாவில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறைவு. ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் பட்டாயா இந்த பூவுலகின் சொர்க்க பூமி, அதில் எந்த மாறுபாடும் இல்லை.

  மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள் நன்பரே. நன்றி.

Trackback URI | Comments RSS

Leave a Reply