Aug 05 2010

தாய்லாந்து போனால் Khaosan Road கட்டாயம் போங்கோ

Published by at 11:36 am under Uncategorized


பாங்கொக் நகரில் நான் தங்குவதற்காக ஏற்பாடு செய்த ஹோட்டல் பெரும் சிக்கலைக் கொண்டு வந்தது என்று முந்திய பதிவிலும் சொல்லியிருந்தேன். அந்த யோகம் எனக்குத் தொடர்ந்து கொண்டே இருந்தது இன்னொரு வடிவிலும். நான் பாட்டுக்குக் கால் நடையாகவும் அல்லது ஆட்டோவிலும் ஊர் சுற்றி விட்டு மீண்டும் என் ஹோட்டலுக்குத் திரும்ப வேண்டுமே என்று ஆட்டோக்காரை நிறுத்தி என் தங்குமிடமான Lamphu Tree House போகவேண்டும் என்றால் அவரோ ஒகே ஒகே என்று சமத்தாகத் தலையாட்டி விட்டு Rambuttri Village Inn முன்னால் நிறுத்தி விட்டு என் பர்சைப் பார்க்க ஆரம்பித்து விடுவார். நான் பிறகு இன்னொரு ஆட்டோவைப் பிடித்துக் கண்ணை மூக்கைக் காட்டி என் தங்குமிடத்துக்கு வந்து சேரும் கதையாகி விட்டது. ஒருத்தர் இரண்டுபேர் என்றால் பரவாயில்லை இதுவே நாலைஞ்சு ஆட்டோக்காரை வெவ்வேறு நாட்களில் பிடித்தாலும் இதே கதிதான். ஒரு நாள் இதுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று ஒரு நாள் இப்படியாக என்னை நடுத்தெருவில் Rambuttri Village Inn முன்னால் ஒரு ஆட்டோர்க்காரர் விட்ட சமயம் பார்த்து இறங்கிக் காலார நடந்தேன். ஆகா, என் முன்னே ஒரு பெரும் அமளிதுமளி நிறைந்த பரந்து விரிந்த கடைத்தெரு ஒன்று முன்னால் விரிய எங்கெங்கு காணினும் வெள்ளைத் தோல்க்காரர் கூட்டமும், சுடச்சுடத் தாய்லாந்தின் தனித்துவங்கள் கடை விரித்திருக்கின்றன. அடடா, தாய்லாந்துப் பிள்ளையார் தான் என்னை இந்த இடத்துக்கு ஆட்டோக்காரர் வடிவில் வந்து இங்கே இழுத்துக் கொண்டு வந்தாரோ என்று எண்ணத் தோன்றியது. ஆம், நான் நின்ற அந்த இடம் தான் Khaosan Road.

தாய்லாந்துக்குச் சுற்றுலா வந்து Khaosan Road போகாமல் திரும்பிப் போவோர், சென்னைக்கு வந்த சுற்றுலாக்காரர் தி.நகர் போய் ரங்கநாதன் தெருவுக்குப் போகாத பாவம் அடைவார்கள். அந்த அளவுக்கு Khaosan Road
மிகமுக்கியமானதொரு சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது. இங்கே சந்து பொந்துக்கள், குறுக்கும் நெடுக்குமான குச்சு வீதிகள் எல்லாமே கடைகள், கடைகள், கடைகள், தலைகள், தலைகள், மனிதத் தலைகளின் கூட்டம் தான். இந்த இடம் இவ்வளவு முக்கியத்துவம் பெறக்காரணத்தில் முதன்மைக்காரணி இங்கே தான் backpackers எனப்படும் முதுகில் ஒரு மூட்டை பொதியைச் சுமந்து ஊர் சுற்றும் நாடோடிகளுக்கும், செலவு குறைந்த ஆனால் தரமான தங்கும் விடுதிகளும் நிறைந்திருக்கின்றன. இந்த ஒரு விஷயத்தை முதன்மைப்படுத்தியே இந்தச் சுற்றாடல் முழுவதும் விதவிதமான கடைகள் மையம் கொண்டு விட்டன.

எந்த விதமான முன்னேற்பாடும் இன்று கிடைத்த ஒரு வாரத்தை பாங்கொக்கில் கழிக்கலாம் என்று வருவோர் நேராக Khaosan Road வந்தாலே போதும். இங்கே நிறைந்திருக்கும் தனியார் சுற்றுலாப் பணியங்கள் வழிகாட்டி விடுகின்றன. அதாவது தாய்லாந்திலிருந்து கம்போடியா, வியட்னாம் வரை போகக் கூடிய நெடுந்தூரப் பயணங்களில் இருந்து, பாங்கொக்கைச் சூழவுள்ள புற நகர்கள் அயோத்யா, பட்டாயா தீவு போன்றவற்றோடு, பாங்கொக் நகரச் சுற்றுலா என்று விதவிதமான சுற்றுலாப் பொதிகளைக் காட்டுகின்றார்கள். உங்கள் வசதிக்கேற்ப ஒரு குறிப்பிட்ட சுற்றுலா அட்டவணையைத் தேர்ந்தெடுத்துப் பணம் கட்டினால் போதும், அடுத்த நாட்காலை உங்கள் தங்குமிடம் முன் சொகுசு வண்டி வந்து காவல் நிற்கும், அழைத்துப் போக.


பாங்கொக் வந்து விட்டோம் வெறுங்கையோடு ஊர் திரும்பப் போறோம் என்ற கவலை வேண்டாம், நேராக Khaosan Road க்கு ஆட்டோவை விடுங்கள். பாசிமணி மாலைகள் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட, விதவிதமான தாய்லாந்தின் பழமையையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஓவியங்களையும், நினைவுச் செதுக்குகளையும் அள்ளிக் கொண்டு வரலாம்.

எல்லா இடமும் சுற்றிப் பார்த்து விட்டுச் சீக்கிரமாகவே தங்குமிடம் வந்து விட்டோம், இளமையாக இருக்கும் இரவை எப்படிக் களிக்கலாம், உடனே டாக்ஸியை Khaosan Road பக்கம் விடுங்கள். வானம் கறுத்துப் போனபின்னர் இந்த Khaosan Road இற்குக் கொண்டாட்டம் தான். வெளிச்சத்தைப் பரவவிட்டு பரபரப்பாக நடைவண்டி வியாபாரங்களில் இருந்து பார், ஹோட்டல்கள் என்று அமர்க்களமாக அந்த இரவை ஒரு பெரும் பண்டிகையாக கழிப்பார்கள். நடைவண்டிகளிலே குறிப்பாக இங்கே அதிகம் விளையும் வாழைப்பழத்தை வைத்து விளையாட்டுக் காட்டும் வியாபாரம் Banana Pancake சாப்பிட்டால் ஜென்ம சாபல்யம் அடைவீர்கள். இப்படி நானும் ஒரு Banana Pancake கையேந்தி பவனை மறித்து அந்த பன் கேக்கைத் தயாரித்துத் தரும்படி கேட்கவும், கண்ணுக்கு முன்னாலேயே, கரைத்து வைத்த மாவுவை அகப்பையால் எடுத்து பரப்பிய சூடான தட்டில் வட்டமாக ஒரு சுழற்றுச் சுழற்றி விட்டு, அது கொஞ்சம் வெந்ததும் மேலே முட்டையை அடித்துத் துவைத்து விட்டு வாழைப்பழத்தைத் துண்டமாக நறுக்கி மேலே போட்டு விட்டு பின் அந்த ரொட்டியை லாவகமான மடித்துக் கொடுத்தாளே பார்க்கலாம் அப்பப்பா என்ன சுவை.


கடைத்தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்தால் சட்டையில் இழுக்காத குறையாய் மீன்கள் நம் கால்களைத் தடவிச் செய்யும் மசாஜ்க்கு வாங்கோ வாங்கோ என்று இழுக்கிறார்கள். கீழே குனிந்து கொண்டு போனால் போனவாரம் திரைக்கு வந்து சில நிமிடங்களே ஆன டிவிடிக்கள் 20 பாட் இல் சிரித்துக் கொண்டிருக்கின்றன.


எத்தனை தடவை அந்தக் கடைத்தெருவைச் சுற்றினாலும் அலுக்காத உலாத்தலாக இருந்தாலும், வயிற்றுக்கு வஞ்சனை பண்ணக்கூடாது என்று வயிறு கடமுடா என்று எச்சரித்தால் முன்னே தெரிகிறது புத்தம் புது நிறம் மாறாத பூக்களாய் மீன் குவியல்கள் துடித்துக் கொண்டு கடைக்கு முன்னால். உள்ளே நுழைந்து மீன் வறுவல் ஆடர் கொடுத்தால் துடிக்கும் மீன் அடுப்பில் பாய, வெண் சோற்றுடன் சில நிமிடங்களில் தட்டில் பொன் நிற வறுவலாக ஆடி அடங்கித் தன் வாழ்க்கையை முடித்து பசிக்கு இரையாகக் காத்திருக்கும்.

ஆற அமர அந்த உணவை முடித்து அந்த நடு நிசி தொடும் நேரம் Khaosan Road சந்தியில் வந்து நின்றால் அதே இளமையோடு துடிப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த வீதி.

25 responses so far