Jan 06 2010

பாங்கொக் மாரியம்மன் ஆலயத்தில் மாயவரத்தான் தரிசனம்

Published by at 9:17 am under Uncategorized


நான் தாய்லாந்து உலாத்தலைத் திட்டமிட்டபோது அதன் ஒரு அங்கமாக அங்கிருக்கும் நம் பதிவர்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தபோது நண்பர் ஆயில்யன் தான் என்னை விட முனைப்பாக தாய்லாந்தில் இருக்கும் பதிவர்களைத் தேடத் தொடங்கினார். அப்படியாக முதலில் வந்தவர் தான் வலைப்பதிவுலகில் நீண்ட காலம் இருந்து வரும் நண்பர் மாயவரத்தான். இன்னொருவர் அபி அப்பாவின் நண்பர் நிஜாமுதீன். நிஜாமுதீனுக்கு கானா பிரபா என்ற பெயரில் ஒரு பதிவரே இருப்பது நான் அவரைத் தொடர்பு கொண்டு பேசிய நாள் வரை தெரியாது. “நீங்க அபிஅப்பா ஊரா, உங்க பேச்சு சிலோன் தமிழ் மாதிரி இருக்குல்ல” என்று சிபிஐ ரேஞ்சுக்குப் போய் விட்டார் ;-). ஒருவாறு என்னைப் பற்றி தமிழ் மண நட்சத்திர வாரத்தில் கொடுத்த சுய அறிமுகம் கணக்காகச் சொல்லிப் புரியவைத்தேன். நான் அங்கே போன நேரம் நோன்பு காலம் என்பதால் இருவரும் பல தடவை நேரங்களை மாற்றி மாற்றி நம் சந்திப்புக்கு ஒதுக்கி இருந்தாலும் இறுதி வரை அது கை கூடவில்லை. பின்னர் அடுத்த முறை தாய்லாந்து வரும் போது சந்திக்கலாம் என்று முடிவெடுத்துக் கொண்டோம்.

நண்பர் மாயவரத்தானைத் தொடர்பு கொண்ட போது அவர் தன் தேசத்துக்கு வந்தவரை நேசத்தோடு வரவேற்றதோடு எப்போது சந்திக்கலாம் என்று ஆர்வப்பட்டார். அதற்கு முன்பு வரை மாயவரத்தானோடு அதிகம் தொடர்பில் இருக்காத எனக்கு அவரின் நட்பின் நேசம் கண்டு உண்மையிலேயே மனதுக்குள் மகிழ்ந்து போனேன். நாம் சந்திக்கப் போகும் இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாய்லாந்தின் இந்து ஆலயமான பாங்கொக் மஹா மாரியம்மன் ஆலயமாக அமைந்தது இன்னொரு சிறப்பு ;-).

மஹாமாரியம்மன் ஆலயத்துக்கு காலையில் சீக்கிரமாகவே கிளம்பி வந்து விட்டேன். காலைப் பூசையைப் பார்க்கலாமே என்ற ஆர்வக் கோளாறு வேறு. ஏழு வருஷங்களுக்கு முன்னர் தாய்லாந்துக்கு வேலை விடயமாக வந்தபோது பார்த்த ஒரே சுற்றுலாத்தலமாக இந்த ஆலயம் மட்டுமே இருந்தது. கோயில் சுற்றில் பூக்கடைகள் தமிழ்ப்பெயர்களோடு தென்பட்டதைக் கண்டு கண் குளிர்ந்தேன். கோயிலில் அறிவிப்பு பலகைகள் எல்லாம் தாய் மொழியில் தான் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து வந்த நாதஸ்வர, மேளக் குழுவினர் காலைப் பூசையில் கலந்து இசைபரப்புகின்றார்கள்.

Silom என்ற பகுதியில் இருக்கும் இந்த மாரியம்மன் ஆலயம் Wat Khaek என்று தாய்லாந்து மொழியில் அழைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் இருந்து வணிகம் செய்ய வந்த யாதவ சமூகத்தின் வழி வந்தவரால் 1879 ஆம் ஆண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டது. இன்று அவரின் தலைமுறையில் வந்தவரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தசரா எனப்படும் நவராத்திரி கழிந்த பத்தாவது நாளை மையப்படுத்தி ஆலயத்தில் பத்து நாள் வருடாந்த மகோற்சவம் இடம்பெறும். அப்போது இந்தியாவில் இருந்து கலைஞர்கள் இந்த மகோற்சவ காலத்தில் இங்கு வந்து தம் கலை நிகழ்ச்சிகளை வழங்குவார்கள். ஆலயத்தின் மூலவர் தெய்வம் உமா தேவி தவிர சிவன், விஷ்ணு, பிள்ளையார் என்று பரிவார மூர்த்திகளுக்கும் சிறு சிறு உட்பிரகாரங்கள் உண்டு. இந்துக்கள் என்னும் போது தாய்லாந்தின் இந்து மதத்தைப் பின்பற்றும் தாய் மக்களும் இந்த ஆலயத்திற்கு நிதமும் வந்து போகின்றார்கள்.

இந்த ஆலயம் பற்றி நண்பர் மாயவரத்தான் பின்னூட்டம் வழி பகிர்ந்த வரலாற்றுக் குறிப்புக்களைத் தருகின்றேன்.

மாரியம்மன் ஆலயத்தைக் கட்டியவர் மாயவரத்திற்குப் பக்கத்தில் இருந்து வந்த செட்டியார் ஒருவர். வைத்தி செட்டியார் என்ற அவர் மாடு வியாபாரம் செய்து வந்தார். செட்டியார் எப்படி மாடு வியாபாரம் – அதுவும் அந்தக் காலத்தில் என்றெல்லாம் குழம்ப வேண்டாம். அவர் உண்மையில் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர். மாடு வியாபாரம் நிமித்தம் ரங்கூனுக்கு அடிக்கடி சென்று வந்தார். அந்தக் காலத்தில் அங்கே ரங்கூனில் செட்டியார் சமூகத்தினர் அதிகம் அல்லவா? எனவே அவரையும் ரங்கூன் மக்கள் செட்டியார் ஆக்கிவிட்டார்கள் என்றுக் கேள்வி. இந்த வைத்தி செட்டியார் அவர்கள் மாடுகளோடு கப்பலில் ரங்கூன் சென்ற போது புயலடித்து இங்கே தாய்லாந்தில் கரை ஒதுங்கி காடாகக் கிடந்த சிலோம் சாலையில் மாரியம்மன் ஆலயத்தைக் கட்டினார். மாரியம்மன் ஆலயம் இருக்கும் சாலையின் ஒரு பக்கம் இன்றும் ‘சோய் வைத்தி’ என்று அவர் பெயரால் அழைக்கப்படுகிறது. ‘சோய்’ என்றால் ‘தெரு’ என்று அர்த்தம்.

கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே இறை தரிசனத்தில் மூழ்கினேன். காலைப் பூசை வழக்கம் போல நடந்து முடிகிறது. எல்லோருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு கூட்டம் கலைகிறது. நான் ஆலயத்தின் ஒரு பக்கமாக நின்று கொண்டிருக்கிறேன். ஒருவர் குந்து ஒன்றில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பார்த்தால் அவர் ஈழத்தில் இருந்து வந்தவர் போல இருந்தது. என்னை அறிமுகப்படுத்திப் பேச்சுக் கொடுத்தேன். என் கணிப்பு சரியாகத் தான் இருந்தது. ஈழத்தின் மட்டுவில் பிரதேசத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்னர் தாய்லாந்து வந்ததாகச் சொன்னார். அவரோடு ஊர்ப்புதினங்களைப் பேசிக் கொண்டிருந்த போது அவரின் நண்பர் ஒருவரும் வந்தார். அவர் கரவெட்டியாம். இன்னொரு தேசத்தில் இப்படி நம் நாட்டவர்களை திடீர் சந்திப்பில் கண்டது மகிழ்வாக இருந்தது. தாய்நாட்டின் அவல வாழ்வில் இருந்து தப்பிப் பிழைக்கக் கடல் கடப்போருக்கு தாய்லாந்தும் ஒரு தற்காலிகப் புகலிடமாகின்றது. ஆனால் அங்கேயும் எம்மவருக்குப் பலவிதமான சோதனைகள். பத்து வருஷங்களுக்கு முன் ஈழமுரசு பத்திரிகையில் இந்த அவலங்கள் தொடராக வந்ததைப் பலர் படித்திருக்கக் கூடும். பாங்கொக்கின் புற நகர்ப்பகுதிகளில் ஈழ அகதிகள் பலர் வாழ்வதாகச் சொன்னார்கள். ஈழத்தவர்களால் காட்டு அம்மன் கோயில் என்றொரு கோயிலும் நிறுவப்பட்டிருக்கிறதாம். எவ்வளவோ முயற்சி செய்தும் அங்கு போக வேளை வாய்க்கவில்லை.

மாயவரத்தானை இன்னும் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த போது எம்மை தூரத்தில் நின்று ஒருவர் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். மெதுவாக எம் பக்கம் வந்து என்னைப் பார்த்து “நீங்களா பிரபா?” என்றார். “நானே தான் நண்பா” என்று அவரின் கையை இறுகப் பற்றிக் கொண்டேன். “உங்க பிளாக்ல போட்ட போட்டோவைப் பார்த்தது அந்தக் கணிப்பில் வந்தேன். ஆனா உருவ அமைப்பு வித்தியாசமா இருக்கே” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் மாயவரத்தான்.

மாயவரத்தானும் மடத்துவாசல் பிள்ளையாரடியும்

வலைப்பதிவுலகம், நாட்டு நடப்புக்கள் என்று சுற்றிவிட்டு, தாய்லாந்துக்குப் படையெடுக்கும் சினிமா ஷூட்டிங்குகளில் நடந்த சுவாரஸ்யமான அவலங்கள், தாய்லாந்தில் தமிழ் முயற்சிகள் குறிப்பாக தமிழ்ப்பாடசாலை பற்றியும், தான் எடுக்க இருக்கும் எதிர்கால முயற்சிகுறித்தும் ஆர்வத்தோடு பேசினார்.

தமிழ்நாடு ரெஸ்டாரண்ட் முபாரக் உடன் மாயவரத்தான்
மாயவரத்தானின் அலுவலகம் போய் விட்டு பின்னர் நாம் சென்றது தமிழ்நாடு ரெஸ்டாரண்ட். இதனை பாண்டிச்சேரியைச் சேர்ந்த முஸ்லீம் அன்பர் நடத்துகின்றார். பாங்கொக்குக்கு வந்து தமிழ்ச்சாப்பாட்டைத் தேடுவோருக்கு வாய்க்கு ருசியாகச் சமைத்துக் கொடுக்கிறார்கள். நாம் போன போது உணவகத்தின் உரிமையாளரின் உறவினர் முபாரக் இருந்தார். அவரோடு பேசிக் கொண்டே காலை உணவை முடித்தோம். பின்னர் மாயவரத்தானின் அப்பார்ட்மெண்ட் சென்று தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். விகடனில் மாணவப்பத்திரிகையாளனாகச் சேர்ந்த நாள் முதல் இது நாள் வரை தான் எழுதிய கட்டுரைகளைச் சேர்த்த தொகுப்பைக் காட்டினார். முதல் பக்கத்தில் “தலைவர் ரஜினி” படத்தோடு 😉 1990 களில் இருந்து அவரின் ஆக்கங்கள் சேமிக்கப்பட்டிருந்தன. மாயவரத்தான் யார் என்று தெரியாத நாட்களில் அவரின் ஆக்கங்களை விகடனில் படித்த நினைவுகளை மீண்டும் அந்தத் தொகுப்பைப் புரட்டியபோது மீள நினைவு படுத்தியது. வீட்டில் கிடைத்த பழரசம், சமோசாவோடு அடுத்து நாம் சென்றது மாயவரத்தானின் நண்பர் ஒருவரின் அலுவலகத்துக்கு. அவர் நண்பர் கோவையில் இருந்து வந்திருந்தார். அங்கும் நம் பேச்சுக் கச்சேரி தொடர்ந்தது.

புதிய சென்னை உணவகத்தின் நண்பர்களுடன் நான்
மதிய உணவு நேரம் நாம் சென்ற இடம், ஈழத்தவர்களால் நடத்தப்படும் புதிய சென்னை உணவகம். உள்ளே அச்சு அசல் யாழ்ப்பாணக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
“அண்ணை என்ன சாப்பிடப் போறியள்” என்று எங்கள் முன்னால் வந்து நின்றார் ஒரு இளைஞன். அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த சொரூபன். ஊர்ப்புதினங்களை அவரோடு ஆசை தீரப் பேசிக் கொண்டே மதிய உணவைச் சாப்பிட்டோம். ஈழத்தவர்கள் பலர் இங்கே மாலை வேளைகளில் வருவதாகச் சொன்னார். சொரூபனோடு அங்கே இருந்த யாழ் நண்பர்களையும் சந்தித்துப் பேசினேன். மாயவரத்தான் எங்கள் மொழி புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்.

மதியம் கடந்து பள்ளிக்கூடம் விடும் நேரமாகி விட்டது.மாயவரத்தான் தன் மூத்த மகனை அழைப்பதற்காகச் செல்ல வேண்டும். “நீங்களும் வாங்க பிரபா, என்று என்னையும் அழைத்துக் கொண்டே அவர் மகனின் பள்ளிக் கூடம் போனோம். தகப்பனின் வருகைக்காகக் காத்திருந்தார் ஜீனியர் மாயவரத்தான், வயசு எட்டு. அழகாகத் தமிழ் பேசுகிறான்.

மாயவரத்தான் தன்னுடைய சகோதரி அவுஸ்திரேலியாவில் இருப்பதை வைத்து இந்தக் கேள்வியை மகனிடம் கேட்கிறார்.
“இந்த அங்கிள் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறார், ஆஸ்திரேலியாவில் வேறு யாரெல்லாம் இருக்காங்க சொல்லு பார்ப்போம்?”
“இவங்களை மாதிரி இன்னும் நிறையப் பேர் அங்கே இருக்காங்க” – இது ஜீனியர் மாயவரத்தான்.

பாங்கொக் பயணம் மாயவரத்தான் என்ற நல்ல நண்பரைச் சம்பாதித்தது.

23 responses so far