Jan 02 2010

தாய்லாந்து கலாச்சார நடனம் கண்டேன்

Published by at 10:30 am under Uncategorized

ஆசிய நாடுகளுக்குப் பயணித்து அவர்களின் கலை பண்பாட்டு அம்சங்களை ஒரே நாளில் அறிந்து கொள்ள ஒரே வழி அந்தந்த நாடுகளில் அரங்கேறும் கலாச்சார நடன நிகழ்வுகளைப் பார்ப்பதேயாகும். முன்னர் கம்போடியாவில் இவ்வாறானதொரு நிகழ்வை ரசித்ததை உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். கம்போடிய அனுபவத்தின் மூலம் தாய்லாந்துக்குப் போன போதும் தாய்லாந்து கலாச்சார அமைப்பை இப்படியானதொரு நடன விருந்தினைப் பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள ஒரு தினத்தை ஒதுக்க வேண்டும் என்றும் மனதுக்குள் தீர்மானித்தேன்.


கம்போடியாவில் ஒரு சில பெரிய உணவகங்களில் இரவு உணவோடு கலாச்சார நடனங்களையும் இணைத்த நிகழ்வு இருக்கும். அப்படியான ஒரு அமைப்பில் தாய்லாந்திலும் இருக்குமா என்று தாய்லாந்து சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புக்களை அலசினேன். அதில் கிட்டியது Prativati என்றதொரு உணவகம். ஒரு நாள் மாலை கொஞ்சம் சீக்கிரமாகவே அந்த உணவகம் சென்று இரவு உணவையும் ஓர்டர் பண்ணி விட்டுக் காத்திருந்தேன். நடன நிகழ்வுகள் ஆரம்பமாக இன்னும் ஒரு மணி நேரமாகுமாம். ஒவ்வொரு சோற்றுப் பருக்கைகளையும் நிதானமாகச் சாப்பிட்டும் அந்த ஒரு மணி நேரத்தை எட்டவில்லை. என்னைத் தவிர இன்னும் ஒரு சிலர் தான் அங்கே இருந்தார்கள். நடன ஒத்திகைகள் நடந்து கொண்டிருந்தன. உணவகத்துக்குப் பக்கமாக ஓடும் நீரோடையில் பயணிக்கும் படகுகளையும் தூரத்தே தெரியும் கட்டிடங்களையும் வேடிக்கை பார்த்துப் பொழுதைப் போக்கினேன். நடன நிகழ்வு ஆரம்பமானது. முரசம் ஒலித்து ஆரம்பித்த அந்த நிகழ்வில் ஒரு சிறுமி கீபோர்ட் ஐ வாசித்து முடித்ததும், உடற்பயிற்சி விளையாட்டுக்களை ஆரம்பித்தார்கள். ஒரு சேலையை கூரையின் மேற் கட்டி அதில் ஆடியாடி விளையாடுக் காட்டினார்கள். அதற்குப் பிறகு ஒப்புக்கு ஒரு அம்மணி தாய்லாந்து கலாச்சார நடனம் ஒன்றை வழங்கி விட்டுப் போனாள். எனக்குக் கிட்டியது ஏமாற்றமே.

தாய்லாந்தின் கலாச்சார நடனங்கள் தவிர தாய்லாந்தில் Ramakien என்றழைக்கப்படும் இராமாயண இதிகாசக் கதையை அவர்களின் பாணியில் சொல்லும் நடன நிகழ்வுகள் வெகு பிரசித்தம். இதற்காக ஒவ்வொரு இரவு தோறும் இந்த இராமாயண நடன நிகழ்வைக் காட்சிப்படுத்தும் அரங்கங்களும் உண்டு. தாய்லாந்தின் மன்னர் முதலாம் இராமா அவர்கள் தாய்லாந்து நாட்டில் நிலவும் இராமாயணத்தை விரிவான நூலாக ஆக்கியிருக்கின்றார். அதை நான் நாடு திரும்பும் போது வாங்கியிருந்தேன். தாய்லாந்து நாட்டின் இராமாயணக் கதையை அறிந்து கொள்ள. இது தவிர இப்போது இன்னொரு நடனமும் அங்கே பிரபலமாகியிருக்கிறது. அதுதான் கணேஷ் என்றழைக்கப்படும் விநாயகரின் பிறப்பு. தாய்லாந்து நாட்டில் இப்போது விஷ்ணுவுக்கு நிகராக விநாயக வழிபாடும் பரவலாகப் பின்பற்றப்படுகின்றது என்பதற்கு ஆங்காங்கே உருவெடுத்திருக்கும் விநாயக விக்கிரகங்கள் மட்டுமல்ல, இவ்விதமான நடன அரங்கேற்றங்களும் புலப்படுத்தியது. அந்த விநாயகர் பிறப்பு குறித்த நடன நிகழ்வுக்கு நான் செல்லாவிட்டாலும் குறித்த நிகழ்வு குறித்த கையேட்டைப் பார்த்த போது விநாயகரின் பிறப்பு குறித்த சுருக்கமான வரலாற்றுக் குறிப்பு இருந்தது. அது நாம் அறிந்து கொண்ட (சக்தியினால் உருவாக்கப்பட்ட விநாயகர் தோற்றம்) மூலத்தினை ஒத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நான் தங்கியிருந்த ஹோட்டலின் முகாமையாளரின் என் தாய்லாந்து கலாச்சார நடனம் காணும் அவாவைச் சொன்னேன். அவர் நமுட்டுச் சிரிப்புடன் “ஒவ்வொரு நாளும் இரவு நடக்கும் காபரே நடனம் காண ஆசையா? கலக்கலாக இருக்கும்” என்றார். மனுஷன் நான் கலாச்சார நடனம் என்று ஏதோ சங்கேத மொழியில் கேட்டது இந்த காபரே நடனமாக்கும் என்று நினைத்து விட்டார் போல. “இல்லையில்லை நான் கேட்டது இங்குள்ள கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நடனங்கள்” என்று மேலும் விளக்கவே, அவர் தன்னுடைய சுற்றுலாக் கையேட்டை விரித்துப் பக்கங்கள் புரட்டி ஒரு இடத்தில் வந்து நின்றார். அந்தப் பக்கத்தில் தாய்லாந்து கலாச்சார நடனங்களை விதம்விதமான புகைப்படங்களாகக் காட்டிய ஒரு இடத்தின் விபரம் போடப்பட்டிருந்தது. அடுத்த நாள் காலை சுற்றப்போகும் இடங்களோடு இணைந்த சுற்றுலாவில் மாலை நேர நிகழ்ச்சியாக இதைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று தங்குமிட முகாமையாளர் சொன்னார். அதன்படி ஒழுங்கு செய்து பார்த்து ரசித்தது இந்த தாய்லாந்து கலாச்சார நிகழ்வுகளை.
கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் அவர்களது வாழ்வியலில் எந்த விதமான வித்தியாசங்களையும் காண முடியாது ஒத்திருந்தது தாய்லாந்தில் நான் கண்ட அவர்களின் நடன நிகழ்வு. வயலில் வேலை செய்வோர் பாடி ஆடும் காட்சிகளோடு , தாய்லாந்துக்கே தனித்துவமான குத்துச்சண்டையையும் நடத்திக் காட்டினார்கள். பாங்கொக்கில் வாரத்தின் பெரும்பாலான நாட்களின் மாலை வேளைகளில் குத்துச்சண்டைப் போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதை நான் வேறெந்த ஆசிய நாடுகளிலும் காணவில்லை.

ஆண்கள் கீழே உட்கார்ந்திருந்து கழிகளை வைத்து ஆட்டி அசைக்க அந்த ஆட்டத்தின் இடைவெளியில் ஆணும் பெண்ணுமாகச் சோடியிட்டு அந்தக் கழிகளுக்கு இடையில் இலாவகமாக ஆடும் நடனம், சிரட்டைகளைத் தட்டிக் கொண்டே மகளிர் ஆடும் ஆட்டம், சிலம்பைச் சுற்றி ஆணும் பெண்ணும் ஆடும் வீர விளையாட்டு, தாய்லாந்துக் கிராமங்களில் பயணிக்கும் மாட்டு வண்டிச் சவாரிகளும் யானைச் சவாரிகளும், இவற்றோடு அந்த நாட்டுக்கே தனித்துவமான மரபு முறை வாத்தியக் கருவிகளை இசைத்தவாறே பண் பாடும் சிறுவர்கள் என்று கலவையாக அமைந்த அந்த நிகழ்வின் இறுதியாக அமைந்தது தாய்லாந்தின் திருமணச் சடங்கு அமையும் விதம். மணமகளின் பெற்றோர் மணமகனின் கை பிடித்துத் தம் பெண்ணைத் தாரை வார்ப்பதில் இருந்து முழுமையானதொரு திருமணச் சடங்கைக் கண் முன் கொண்டு வந்து காட்டினார்கள். தாய்லாந்தின் பண்பாட்டு அமைப்பை ஒரே நிகழ்வில் கண்டு கொண்ட திருப்தியோடு , பங்கு கொண்ட கலைஞர்களோடு இணைந்து படம் எடுத்து விட்டு அரங்கைக் காலி செய்தது கூட்டம்.

12 responses so far

12 Responses to “தாய்லாந்து கலாச்சார நடனம் கண்டேன்”

 1. noreply@blogger.com (ஆயில்யன்)on 02 Jan 2010 at 10:49 am

  ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தினையும் அவர்களுக்கே உரிய சிறப்புக்களையும் வெளிப்படுத்துகின்ற நிகழ்வாக அமைந்திருக்கும் நடனநிகழ்வுகளினை புகைப்படங்களின் மூலம் உணரமுடிகிறது!

  சமூகத்தில் தங்கள் வாழ்க்கை முறையினை – விளையாட்டு திருமணம் போன்ற விசயங்களை – நடனத்தில் மூலம் வெளிப்படுத்தியமையும் உணர உதவி செய்கிறது தங்களின் புகைப்படங்கள்!

  நன்றி!

 2. noreply@blogger.com (ஆயில்யன்)on 02 Jan 2010 at 10:50 am

  //கலைஞர்களோடு இணைந்து படம் எடுத்து விட்டு அரங்கைக் காலி செய்தது கூட்டம்./

  சுற்றுலா போகுற இடங்களில் இது ஒரு முறையாகவே மாறிவிட்டது!

  ஆமாம் அப்படி நீங்க எடுத்துக்கொண்ட போட்டோ எப்ப ரீலிசு ஆகும்? 🙂

 3. noreply@blogger.com (கானா பிரபா)on 02 Jan 2010 at 1:37 pm

  வருகைக்கு நன்றி ஆயில்ஸ்

  சுற்றுலா போகுற இடங்களில் இது ஒரு முறையாகவே மாறிவிட்டது!//

  ;-)))

  ஆமாம் அப்படி நீங்க எடுத்துக்கொண்ட போட்டோ எப்ப ரீலிசு ஆகும்? :)//

  போட்டோ ரிலிஸ் ஆகுறதுக்கு மான்யம் ஏதாவது கொடுப்பீங்களா 😉

 4. noreply@blogger.com (சின்ன அம்மிணி)on 03 Jan 2010 at 12:53 am

  விநாயகர் கதையும் அவங்க காப்பியடிச்சாச்சா 🙂

 5. noreply@blogger.com (கானா பிரபா)on 03 Jan 2010 at 6:53 am

  வாங்க சின்ன அம்மிணி

  விநாயகரைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை 😉

 6. noreply@blogger.com (Jeeves)on 03 Jan 2010 at 10:53 am

  நானும் போயிருந்தேன் – அதே இடம் அதே ஆட்கள். மணமக்களைத் தவிர்த்து. நல்ல பதிவு பெரிபாண்டி

 7. noreply@blogger.com (cheena (சீனா))on 03 Jan 2010 at 11:21 am

  அன்பின் கானாபிரபா

  நல்ல புகைப்படங்கல் விளக்கத்துடன்

  பொறுமையாக படம் எடுத்து விளக்கியது நன்று

  மிகவும் அருமை

  காப்ரே நடனம் பார்த்தீர்களா

  நல்வாழ்த்துகள் கானாபிரபா

 8. noreply@blogger.com (கானா பிரபா)on 03 Jan 2010 at 11:31 am

  புகைப்படக் கவிஞர் ஜீவ்ஸ்

  நீங்களும் தாய்லாந்து போய் வந்திருக்கீங்க போல

  வணக்கம் சீனா சார்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, காபரே நடனம் பார்க்கவில்லை 😉

 9. noreply@blogger.com (Dr.எம்.கே.முருகானந்தன்)on 03 Jan 2010 at 12:38 pm

  அவர்களின் கலாச்சாரத்தின் சிறப்புக்களை வெளிப்படுத்துகின்ற உங்கள் பதிவும் புகைப்படங்களும் அற்புதமாக இருந்தன.

 10. noreply@blogger.com (கானா பிரபா)on 04 Jan 2010 at 11:41 am

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டொக்டர்

 11. noreply@blogger.com (கோபிநாத்)on 04 Jan 2010 at 10:38 pm

  \\ ஆயில்யன் said…
  ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தினையும் அவர்களுக்கே உரிய சிறப்புக்களையும் வெளிப்படுத்துகின்ற நிகழ்வாக அமைந்திருக்கும் நடனநிகழ்வுகளினை புகைப்படங்களின் மூலம் உணரமுடிகிறது!

  சமூகத்தில் தங்கள் வாழ்க்கை முறையினை – விளையாட்டு திருமணம் போன்ற விசயங்களை – நடனத்தில் மூலம் வெளிப்படுத்தியமையும் உணர உதவி செய்கிறது தங்களின் புகைப்படங்கள்!

  நன்றி!
  \\

  ரீப்பிட்டே ;))))

 12. noreply@blogger.com (நிகழ்காலத்தில்...)on 08 Mar 2010 at 12:01 pm

  புகைப்படங்கள் நிகழ்வை கண்முன்னே நிறுத்திவிட்டன !!!

  பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

Trackback URI | Comments RSS

Leave a Reply