Dec 28 2008

இரண்டாம் சூர்யவர்மன் எழுப்பிய Banteay Samré ஆலயம்

Published by at 10:47 am under Uncategorized

Banteay Srey ஆலயத்தைத் தரிசித்து விட்டு நாம் காரில் பயணித்துக் கொண்டே அடுத்த ஆலயத்தைப் பார்க்கப் போனோம். வழியில் என் காமிராக் கண்களில் சிறைப்பிடிக்கப்பட்டது கம்போடியக் கல்யாணம் ஒன்று. இன்றும் நம்மூரில் காணும் கல்யாணங்களில் குலை தள்ளிய முழு வாழை மரங்களை முகப்பில் நட்டுப் பந்தர் போட்டு ஊரையே கூட்டி நடத்தும் வழக்கம் இருக்கின்றது. என்னதான் காலம் தன் கோலத்தை மாற்றி இந்து கலாசாரத்தில் இருந்து கம்போடிய மண்ணைப் பிரித்து வைக்க எண்ணினாலும் அங்குள்ள மதச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஏன் பழக்கவழக்கங்களுமே இந்தியப் பண்பாட்டுப் பின்னணியில் இருந்து விலக முடியாமல் இருக்கின்றன என்பதற்கு என் பயண வழியில் தென்ப்பட்ட ஒரு கம்போடியக் கல்யாணமும் உதாரணமாக இருந்தது.

உயிருள்ள வாழையை வெட்டி செயற்கையான தங்கக் குலைகளை அந்த வாழைக் கழுத்தில் செருகி முகப்பில் நிறுத்திப் பந்தல் போட்டு அயலார் புடைசூழக் கம்போடியக் கல்யாணம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. என் சுற்றுலா வழிகாட்டியிடம் நான் பேச்சுக் கொடுக்கவும், வீடு குடிபுகுதல், இறந்தவர்களுக்கான ஈமைச் சடங்குகள், நோய்வாய்ப்பட்டோரைக் குணமாக்கும் நேர்த்திக்கடன், திருமணச் சடங்குகள் எல்லாமே இந்துமதப் பிரகாரம் இன்றும் கைக்கொள்வதாகச் சொன்னார். என்னதான் பெரும்பான்மை சமூகம் பெளத்தமதத்துக்குத் தாவினாலும் இன்றும் இந்த திரிசங்கு நிலை தொடர்வதாகவும், கம்போடிய மக்கள் இப்படிக் கண்மூடித்தனமாக ஆங்கில மருந்துவகைகளில் நம்பிக்கை இன்றி நேர்த்திக்கடன் மூலமே நோய்களுக்கான பரிகாரம் தேடுவதைக் கண்டு கவலை அடைந்த கம்போடிய அரசு கவலை அடைந்து புதுமாதிரியான தொலைக்காட்சிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாம். அந்தப் பிரச்சாரப் படத்தில் தேவதூதன் மருந்துப்புட்டியுடன் வந்து மக்களைப் பார்த்து “இதுதான் நான் உங்களுக்குப் பரிந்துரை செய்யும் நோய்ப் பரிகாரம்” என்னுமளவுக்கு தீவிர மத நம்பிக்கைகள் இருப்பதாகச் சொல்லிச் சிரித்தார்.


நம் கார் Banteay Samré ஆலயத்தைக் கண்டதும் தன் ஓட்டத்தை நிறுத்தி நின்று நிதானித்தது. Banteay Samré ஆலயம் இரண்டாம் சூர்யவர்மனால் கி.பி 12 ஆம் நூற்றாண்டின் மத்தில் எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இரண்டாம் சூர்யவர்மன் கைமர் பேரரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேரரசர்களில் ஒருவனாகக் கொள்ளப்படுகின்றான். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் (Malay Peninsula) ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான். இவ்வாலயத்தின் கட்டிடப்பணி இரண்டாம் யசோவர்மனாலேயே நிறைவுற்றது. Samré என்பது இந்தோசீனாவின் பூர்வீகக் குடிகளின் பெயராகும். முழுமையாக விஷ்ணு ஆலயமாகவே எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டிடமுறையை Angkor Wat என்னும் வகைக்குள் ஆராய்ச்சியாளர்கள் வகைபடுத்தியிருக்கின்றார்கள். நீண்டதொரு சமநிலைப்படுத்தப்பட்ட கட்டிட அமைப்போடு Angkor Wat ஆலயத்தின் கட்டிடங்களை நினைவுபடுத்தும் கட்டிட அமைப்போடும், கலை அமைப்போடும் உருவாக்கப்பட்டிருப்பதை ஒப்பு நோக்க முடிகின்றது.

Anastylosis (“to erect (a stela or building)”) is an archaeological term referring to a reconstruction technique where a ruined monument is restored after careful study and measurements using original architectural elements where possible – wikipedia)என்ற கட்டிடநுட்பத்தின் பிரகாரம் பெரும் சீர்திருத்தங்களுக்கு இவ்வாலயம் உட்பட்டிருக்கின்றது. அங்கோர் வாட் ஆலயம் எழுப்பப்பட்ட அதேகாலகட்டத்திலேயே இவ்வாலயமும் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. கட்டிடத்தின் தூண்கள் மற்றும் balustrades(small posts which support the upper rail of a railing)ஆகியவை அங்கோர்வாட்டின் தூண்களோடு பொருதி நோக்கும் அதேவேளை தாய்லாந்து நாட்டின் Phimai என்ற கைமர் ஆலயத்தோடும் ஒப்பு நோக்கப்படுகின்றது. பெரும்பாலான சித்திரவேலைப்பாடுகள் அதே தரத்தோடு இருக்கின்றன.

உசாத்துணை: கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புக்கள்

15 responses so far