Aug 21 2006

படகு விருந்து

Published by at 9:55 am under Uncategorized

மே 28, மதியம் 1.00 மணி (இந்திய நேரம்)


நான் பயணப்பட்ட கடற்கழி, நன்னீர் ஏரி என்று குறிப்பிட்டார்கள். இரு மருங்கிலும் குடியிருப்பை அமைத்து வாழும் மக்களின் வாசலை இந்த ஏரி தான் முற்றமாக நிறைக்கின்றது. பெண்கள் இந்த ஏரியின் கரையில் நின்று குளிப்பதும், துணிகளைத் துவைப்பதுமாக இருந்தார்கள். ஆண்கள் வழக்கம்போல் குளிப்பதோடு மட்டும் நிற்கிறார்கள். நான் போன காலம் பெருமழைகாலம் ஆரம்பமாகிவிட்டதை முன்னரே சொல்லியிருந்தேன். டிசம்பர் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை இப்படியான கடற்கழிச்சுற்றுலாவிற்கு உகந்த மாதங்களாகக் கடலோடி நண்பர்கள் சொன்னார்கள். வயிறுமுட்டசாப்பிட்டவனைப் போல ஆடி அசைந்து மெதுவாகப் பயணப்படுகின்றது படகு வீடு. மெதுவான இப்பயணம் ஆங்காங்கு காணும் காட்சிகளை உள்வாங்கவும் வசதியாக இருக்கின்றது. கரைமருங்கில் அசோகா மரங்களும் கண்ணுக்குத் தப்பவில்லை. வாழைமரங்கள் கூட உள்ளேன் ஐயா என்கின்றன. கல் வீடுகளும், குடிசைகளுமாக மாறி மாறித் தென்பட்டது கடலுக்கும் வர்க்க ஏறத்தாழ்வு இருப்பதைக் காட்டியது.இந்த நீரோட்டம் நடுவே கொல்லம் 83KM சம்புக்குளம் 13 KM என்று தூரவழிகாட்டிகள் காட்டிநிற்கின்றன. ஒருபக்கக் கரையைப் பார்க்கின்றேன். அக்கரையில் கடலை மறித்து நெற்பாசனம் செய்யப்படுகின்றது. மறுபுறத்தே விரிந்த பரப்பில் இயற்கையாக அமைந்த ஆயிரம் தாமரை மொட்டுகளோடு தடாகப் பரப்பு.

மதியம் 1. 30 ஐத் தொடுகின்றது கடிகாரமுள். மதிய உணவுப் பரிமாறலுக்காக நங்கூரம் பாய்ச்சப்படுகின்றது. படகு ஓட்டும் முதியவர், அவருக்கு உதவியாக நடுத்தரவயசுகாரர், மற்றவர் சமையலையும் தங்கும் உல்லாசப்பயணிகளையும் கவனிக்கும் 25 வயதான சிஜீ என்ற இளைஞன். படகுவீட்டுப் பயணத்தில் நான் இயற்கைக் காட்சிகளை இரசித்துக்கொண்டே வரும் போது படகு வீட்டின் சமையற் பகுதியில் சிஜி சமைத்தவாறே அவ்வப்போது எனக்கு அருகில் வந்து இந்தப்படகுவீட்டும் பயணத்தின் தன் அனுபவங்களையும் மேலும் சுவையான செய்திகளையும் சொல்லச்சொல்ல நானும் கேட்டுக்கொண்டே அதுவரை வந்திருந்தேன். சரளமாக ஆங்கிலத்திலும் அவன் பேசியது எனக்கு வியப்பாக இருந்தது. வெறும் கேள்விஞானத்தின் மூலமே இப்படிச் சரளமாக அவன் ஆங்கிலம் பேசக்கற்றுக்கொண்டான். அவ்வப்போது மலையாளத்தில் அவன் பேசும் போது அவற்றை உள்வாங்கி எனக்குத் தெரிந்த சொற்களை வைத்துச் சமாளித்தேன்.மலையாள மொழிப்படங்களைப் பற்றிப் பேசும் போது “என்னென்னும் கண்ணட்டான்டே” (தமிழில் வருஷம் 16 என்று வந்தது) படம் பற்றி ரொம்பவே சிலாகித்துப் பேசினான். கடலோரம் வாங்கிய காற்றும், படகு அலைச்சலும் இயல்பாகவே வயிற்றைக் கிளற்ப் பசியை வா என்று சொல்லும் வேளை அது. சிஜியின் கைவண்ணத்தில் மணம் குணம் நிறைந்த மீன்பொரியல் குண்டு குண்டாய் வெள்ளைச் சோறு, நறுக்கிய வெண்டைக்காய்த் துவையல், தக்காளிச்சாலட், என்று பெருவிருந்தே படைக்கப்படுகின்றது. வெள்ளை முத்துக்களாய் நம்மூர் அரிசியின் நான்கு மடங்கு பருமனில் குண்டு குண்டாய் அரிசிச்சோறு கோப்பையை நிறைத்திருந்தது. வகையான காய்கறிகளின் சேர்க்கையில் ரஜினி வாய்ஸ் கொடுத்தபோது இருந்த தி.மு.க, த.மா.க கூட்டணி போல அமர்க்களமாக இருந்தது. எனக்கும் பேச்சுக்கொடுத்துத் திறமையான சமையலையும் செய்து முடித்த சிஜியை வாயாரப் புகழ்ந்தேன் மீன் பொரியலைச் சுவைத்தவாறே. மதிய உணவின் பின்னர் ஒருமணி நேர ஓய்வு. கிடைத்த அந்த நேரத்தில் கடலோடி நண்பர்கள் தரை விரிப்பை விரித்து மதியத்தூக்கம் கொள்கின்றார்கள். நானும் என் படுக்கை சென்றமர்ந்து “ஆச்சி பயணம் போகிறாள்” நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்கின்றேன். ஒரு மணி நேர ஓய்வு கழிகின்றது. இப்பொது மழையும் ஒதுங்கிக்கொண்டது. அரை வட்டமடித்தது போன்ற நீர்ப்பரப்பில் மீண்டும் பயணப்படுகின்றது படகுவீடு.

உண்டமயக்கம் கண்ணைக்கட்டியது, கொஞ்சம் கண்ணயரலாம் என்று நினைத்துக்கட்டிலில் சாய்ந்தேன். சேவல் ஒன்று கூவிக்கேட்டது. “அட, மதிய நேரத்திலே சேவல் கூவல்” என்று ஆர்வமாகப் படுக்கையின் அருகே இருந்த சாரளம் வழியே பார்க்கின்றேன். பாதி கட்டப்பட்ட கொங்கிறீற் தடுப்புடன் கூடிய குடியிருப்பில் நின்று சேவல்கள் சில நிரையாக நின்று கூவித் தீர்க்கின்றன. யாத்ரா காணாம்……..

22 responses so far

22 Responses to “படகு விருந்து”

 1. noreply@blogger.com (கொங்கு ராசா)on 21 Aug 2006 at 12:24 pm

  ம்..ம்.. 🙂

 2. noreply@blogger.com (சின்னக்குட்டி)on 21 Aug 2006 at 12:38 pm

  //வாழைமரங்கள் கூட உள்ளேன் ஐயா //

  நல்ல வர்ணனை கான பிரபா…. உள்ளேன் ஜயா என்று சொல்லும்போது தான ஞாபகம் வருகிறது …படிக்கிற காலத்தில் வாத்தியார் டாப்பு மார்க் பண்ணிற நேரம் கூப்பிடும்போது..வகுப்பிலை இல்லாத ஆக்களுக்கும் சேர்த்து உள்ளேன் ஜயா சொன்னது

  போட்டோக்கள் நல்ல தத்துரூவமாக உள்ளது..என்ன வகையான கமராவாலை எடுத்தனீங்கள்…(சொல்ல முடியும் என்றால்)

 3. noreply@blogger.com (நெல்லைகிறுக்கன்)on 21 Aug 2006 at 1:29 pm

  கேரளாவுக்கு கடந்த மாசி மாசம் தான் போய்ட்டு வந்தேன். உங்க படத்தையெல்லாம் பாத்ததும் இந்தியா போனதும் ஒரு தடவ கேரளா போகப்போறேன். கேரளா ஸ்பெஷல் பொரிச்ச மீனக் காட்டி ஆசய உண்டு பண்ணிட்டீரு. அப்புறம் புட்டு கேரளாவில புட்டு கெடைக்கலன்னு ஒரு பதிவுல எழுதியிருந்தீரு, ஆச்சரியமா இருந்தது. புட்டு, பப்படம், கடலைக் கறி எல்லாம் சின்ன சின்ன ஓட்டல்ல கூட கெடைக்கும்ய்யா…

 4. noreply@blogger.com (Johan-Paris)on 21 Aug 2006 at 1:43 pm

  பிரபா!
  பச்சை பசேல் என்று இருக்கு!இப்படி ஓடைகள் எங்க யாழ்ப்பாணத்தில் இருந்தால் எப்படி இருக்கும்!
  கேரளாவில் குழம்புக் கறி இல்லையா? மீனுக்கு அரைச்சகுழம்பொன்று நல்லா இருக்குமே! அங்கே தெரியாதா?? குழம்பு; பால்க்கறி சொதி எனப்பழக்கப்பட்ட எனக்கு; இது ஐரோப்பிய இந்திய உணவகத்தைத் தான் நினைவுக்குக் கொண்டுவருகிறது.
  யோகன் பாரிஸ்

 5. noreply@blogger.com (Anonymous)on 21 Aug 2006 at 6:10 pm

  Cooooooooolllll…!!

  feeling so jealous of u, bro..:-)

 6. noreply@blogger.com (துளசி கோபால்)on 21 Aug 2006 at 9:56 pm

  படங்கள் அருமையா இருக்கு பிரபா.
  பேசாம அங்கே ஒரு வீட்டுக்குப் போயிரலாம் போல இருக்கு.

  வீட்டு வாசப்படியிலே தண்ணி. ஆஹா…………:-))))0

 7. noreply@blogger.com (கார்திக்வேலு)on 22 Aug 2006 at 4:23 am

  //ஒருமணி நேர ஓய்வு. ……….. இப்பொது மழையும் ஒதுங்கிக்கொண்டது.//

  ஒரு விவரணப்படம் பார்த்த மாதிரி இருக்கிறது.கொடுத்து வைத்தவர் ஜயா 🙂

  கேரள அரிசியோடு ,கேரள அப்பளத்தையும் [பப்படம் ??] சேர்த்துக் கொள்ள வேண்டும் .

  மேலும் கேரள அரிசி மற்றும் தட்பவெப்பத்துக்கு சீக்கிரம் பசி எடுப்பது இயல்பே.

 8. noreply@blogger.com (கானா பிரபா)on 22 Aug 2006 at 11:02 am

  ராசா

  பதிவில் எதையோ பார்த்துவிட்டு ம் கொட்டுகிறீர்கள், இருக்கட்டும் :-))

  வணக்கம் சின்னக்குட்டியர்

  தங்கள் கருத்துக்கு என் நன்றிகள். இந்தப்படங்கள் Sony DSC-P73 digital camera ஆல் தான் எடுக்கப்பட்டது. விசேடமான வேறு கமரா அல்ல.

 9. noreply@blogger.com (கானா பிரபா)on 22 Aug 2006 at 11:05 am

  வணக்கம் நெல்லைக்கிறுக்கன்

  அடுத்தமுறை நான் அங்கு வரும் போது கேரளப்புட்டு கிடைக்கும் ஓட்டலைக் காட்டவேண்டியது உங்க பொறுப்பு:-)
  உங்களுக்கு தானே பக்கத்தில் கேரளா, ஒவ்வொரு வார இறுதியில் கூடப்போயிடலாமே?

 10. noreply@blogger.com (கானா பிரபா)on 22 Aug 2006 at 11:08 am

  // Johan-Paris said…
  பிரபா!
  கேரளாவில் குழம்புக் கறி இல்லையா? மீனுக்கு அரைச்சகுழம்பொன்று நல்லா இருக்குமே!//

  வணக்கம் யோகன் அண்ணா

  கறி மீன் வறுவலும் உண்டு, மீன் குழம்புக்கறியும் உண்டு கேரளாவில். ஆனால் படகு வீட்டில் கிடைத்தது இவ்வளவு தான். வறும் மீன் குழம்பைத் தொட்டு என்ர அம்மா சுட்டுத்தந்த ரொட்டி சாப்பிட்ட ஞாபகம் வருகுது இப்ப.

 11. noreply@blogger.com (கானா பிரபா)on 22 Aug 2006 at 11:09 am

  //Anonymous said…
  Cooooooooolllll…!!

  feeling so jealous of u,
  bro..:-) //

  வணக்கம் அநாமோதய நண்பரே

  இதுக்கெல்லாம் என் மேல் பொறாமைப்படலாமா, அடுத்த பிளைட் பிடிச்சு கேரளா போகவேண்டியது தானே:-)

 12. noreply@blogger.com (கானா பிரபா)on 22 Aug 2006 at 11:11 am

  //துளசி கோபால் said…
  படங்கள் அருமையா இருக்கு பிரபா.
  பேசாம அங்கே ஒரு வீட்டுக்குப் போயிரலாம் போல இருக்கு.

  வீட்டு வாசப்படியிலே தண்ணி. ஆஹா…………:-))))0 //

  வணக்கம் துளசிம்மா

  எனக்கும் அதே நினைப்புத் தான். இனி ஒவ்வொருவருஷமும் தாயகம் செல்லும் போது கேரளாவிலும் சில நாள் டோரா அடிக்கலாமோன்னு தோணுது.

 13. noreply@blogger.com (கானா பிரபா)on 22 Aug 2006 at 11:15 am

  // கார்திக்வேலு said…

  கேரள அரிசியோடு ,கேரள அப்பளத்தையும் [பப்படம் ??] சேர்த்துக் கொள்ள வேண்டும் .

  மேலும் கேரள அரிசி மற்றும் தட்பவெப்பத்துக்கு சீக்கிரம் பசி எடுப்பது இயல்பே. //

  வணக்கம் கார்திக்

  தங்கள் கருத்துக்கு என் நன்றிகள். ஆமாம் கேரளத்தின் தட்பவெட்பமும், சமையல் பக்குவமும் சாப்பாட்டின் மேல் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன.

 14. noreply@blogger.com (Kanags)on 26 Aug 2006 at 12:34 am

  பிரபா, கேரளா சுத்தி வந்த கையோட சொல்லாம கொள்ளாமல் சிட்னியில ஒரு வலைப்பதிவாளர் மாநாட்டையும் வச்சுப் போட்டியள்:))

 15. noreply@blogger.com (கானா பிரபா)on 27 Aug 2006 at 3:52 am

  வணக்கம் சிறீ அண்ணா

  அவசர சந்திப்பு என்பதால் முறையாக அறிவிக்கவில்லை. அடுத்த சந்திப்பை பகிரங்கமாய் வைத்தால் போச்சு:-)

 16. noreply@blogger.com (G.Ragavan)on 27 Aug 2006 at 6:57 am

  பேசாம கேரளாவுல இந்த ஹவுஸ் போட்டுல சமைக்கப் போயிரலாம். பொறுமையான அலைச்சல் இல்லாத நிம்மதியான வாழ்க்கை. எனக்கும் ஓரளவு நல்லாவே சமைக்க வரும்.

  அதென்ன பொரிச்ச மீனா? நல்ல பெரிய பெரிய துண்டாயிருக்கு. அதோட தலையில எலுமிச்சம்பழம் வேற. ம்ம்ம்…அதென்ன வெள்ளச்சோறு? செஞ்சோறு போடுவாங்களே மலையாளிகள். நீங்க தமிழர்னு வெள்ளச்சோறு போட்டுட்டாரோ!

  சரி..இந்த எடத்துக்கு எந்த மாதம் பொறது நல்லது?

 17. noreply@blogger.com (கானா பிரபா)on 27 Aug 2006 at 8:03 am

  // G.Ragavan said…
  பேசாம கேரளாவுல இந்த ஹவுஸ் போட்டுல சமைக்கப் போயிரலாம்.//

  வணக்கம் ராகவன்

  அதைத்தான் நானும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

  டிசம்பர் முதல் ஏப்ரல் வரையான இதமான காலநிலை தழுவியகாலத்தில் இக்கடற்கழிச்சுற்றுலா நல்லதென்றார்கள் கடலோடி நண்பர்கள்.

  பொரிச்சமீனும், வெள்ளைச்சோறும் தான் நமக்குக்கிடைச்சது:-)

 18. noreply@blogger.com (Ilackia)on 15 Sep 2006 at 4:13 pm

  வர்ணப்படங்கள் வரலாற்றுப் பதிவுகள் அல்லவா.

 19. noreply@blogger.com (Anonymous)on 22 Sep 2006 at 7:31 am

  பதிவுகள் நல்லா இருக்கு ராசா

  சி.சி.சி.சி.சின்னப்பு

 20. noreply@blogger.com (கானா பிரபா)on 22 Sep 2006 at 12:26 pm

  வருகைக்கு நன்றிகள் இலக்கியா

  எட எங்கட சின்னப்புவும் உலாத்தலுக்கு வந்திருக்கிறியளே:-) வாங்கோ வாங்கோ

 21. noreply@blogger.com (ENNAR)on 22 Sep 2006 at 1:46 pm

  எந்த அனியன் சுகந்தன்னே சுப்பர் மலையாளம் நீங்களது வீடு அவ்விட உண்டோ பின்னே ஞான் அவிட வந்தால் எந்து கிட்டும் …ஆ.. கொள்ளம்

 22. noreply@blogger.com (கானா பிரபா)on 22 Sep 2006 at 1:56 pm

  Ennar சாரே சுகமானோ

  ஞான் ஒரு வல்லிய திவசம் கேரளம் வந்தல்லோ

Trackback URI | Comments RSS

Leave a Reply