Archive for July, 2019

Jul 21 2019

ஆசியா எனும் பணக்கார நாடுகளின் குப்பைத் தொட்டி

Published by under Uncategorized

“இங்கிலாந்திலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையம் சேர்ந்த மருத்துவக் கழிவுக் கொள்கலன்கள் (biomedical waste)”

இந்த வாரம் இலங்கைச் செய்திகளில் முக்கிய இடத்தைப் பிடித்த ஒன்று. இந்தச் செய்தியை வைத்து நேற்று வரை சமூக வலைத்தளங்களில் களமாடி விட்டு ஓய்ந்து விட்டார்கள் இணையப் போராளிகள். ஆனால் இந்த மாதிரியானதொரு செயற்பாடு இன்று நேற்றல்ல ஆண்டுக் கணக்காக தென்னாசியா மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் கரையொதுங்கியதும் அந்தந்த நாடுகள் மனமொத்து இதுவரை காலமும் அவற்றை ஏற்றுக் கொண்டதும் தான் உறைக்கும் உண்மை. ஆனால் இந்தக் கழிவுகள் மறுசுழற்சிக்கான (recycling) உள்ளீடுகள் என்ற போர்வையிலேயே இதுவரை காலமும் கடல் கடந்து பயணித்து வந்துள்ளன.

இந்த மாதிரித் தம் கழிவை ஆசிய நாடுகளுக்கு அனுப்பும் வகையில் ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாடுகள் முதல் நிலையில் இருப்பதாக BBC செய்தி ஸ்தாபனம் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால் உலகளாவிய அளவில் ஒற்றை நாடாகப் பிற நாடுகளுக்குக் குப்பையைக் கடத்தும் முதல் நிலை நாடாக ஹிஹி வேறு யார் இந்த உலகப் போலீஸ்காரன் அமெரிக்காவே விளங்குகிறது.

இலங்கைக்கு மட்டும் 12 தடவைகள், 130 கொள்கலன்களில், 27, 685 மெட்ரிக் தொன் தொழிற்சாலைக் கழிவுகள் இந்த முறைமை மூலம் அனுப்பப்பட்டுள்ளவாம். இவையெல்லாம் நாடுகளுக்கிடையில் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு, பரஸ்பர புரிந்துணர்வுடன் இலங்கை போன்ற நாடுகளின் தலையில் கொட்டப்படும் குப்பைகள்.

இம்முறை வசமாகப் பிடிபட்ட மருத்துவக் கழிவுக் கொள்கலனை இலங்கையில் பொறுப்பேற்ற நிறுவனம், வழக்கமாக இங்கிலாந்திலிருந்து மறு சுழற்சிக்காக மெத்தைகள், விரிப்புகளை வழக்கமாக இறக்குமதி செய்யும் நிறுவனமாம். தேசிய சூற்றாடல் சட்ட விதி 47, 1980 இன் பிரகாரம், அச்சுறுத்தல் மிகுந்த கழிவுகளை இறக்குமதி செய்வோர் “சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தை (Environmental Protection License பெற்றிருக்க வேண்டும். எனவே பிடிபட்ட கொள்கலன்களைத் திருப்பி அனுப்புவதோடு , பிடிபட்ட தனியார் நிறுவனம் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை நிலவரம் இவ்வாறிருக்க நம்மைச் சுற்றியிருக்கும் ஆசிய நாடுகளின் அரசாங்கங்கள் உசார் அடைந்து அறிக்கை விடுமளவுக்கு இந்தக் குப்பை கூழ விவகாரம் சூடு பிடித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேசியாவுக்குச் சென்றடைந்த 210 மெட்ரிக் தொன் மறுசுழற்சிக் கழிவு திருப்பி அனுப்பப்படத் தயாராகிறது. காரணம், இவை காகிதங்கள் என்ற போர்வையில் காகிதத்தில் Toxic Waste (நஞ்சுக் கழிவுகள்) சுற்றப்பட்டு எட்டுக் கொள்கலன்களில் அனுப்பப்பட்டிருக்கின்றன.

“இந்தோனேசியா ஒன்றும் உங்கள் குப்பைத் தொட்டி அல்ல” என்று முகத்தில் அடித்தாற் போலச் சொல்லியிருக்கிறது. இது மட்டுமல்ல அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, ஹொங்கொங் ஆகிய நாடுகளில் இருந்து மொத்தம் 49 கொள்கலன்களில் அனுப்பப்பட்டதில் நச்சுக் கழிவுகளை இறக்குமதி செய்யும் இந்தோனேசிய சட்ட திட்டங்களை மீறியிருப்பதாக 38 கொள்கலன்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இந்தோனேசிய நாட்டுச் சுங்க அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார்கள். வேறு வழியில்லை திருப்பி அனுப்பத் தான் போகிறோம் என்று உறுதியாக நிற்கிறார்கள்.

2017 ஆம் ஆண்டில் இனிமேல் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய அனுமதியில்லை என்று சீனா சொல்லியதைத் தொடர்ந்து தென் கிழக்கு ஆசிய நாடுகள் மேல் இந்த மேற்கத்தேய மற்றும் அவுஸ்திரேலிய முதலாளித்துவ நாடுகள் தம் பாதத்தை வெகுவாக ஊன்றியுள்ளனர்.

இந்தியாவும் தன் பங்குக்கு பிளாஸ்டிக் கழிவு இறக்குமதியை இப்போது தடை செய்திருக்கிறது.

பசுமைக் கழிவுகள் என்ற போர்வையில் இந்தோனேசியா தவிர, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளடங்கலாக இந்தக் குப்பைக் கொள்கலன்கள் பயணிக்கின்றன. இதில் கொடுமை என்னவென்றால் தென் கொரியாவும் தன் பங்குக்கு நச்சுக் குப்பையை மூடி மறைத்து 51 கொள்கலன்களில் பிலிப்பைன்ஸுக்குக் கடந்த ஜனவரி மாதம் அனுப்பியிருக்கிறது.

‪அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மறு சுழற்சிக் குப்பைகளுக்கான தனியான குப்பைத் தொட்டிகளை வீட்டிலிருந்து, அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று நிறுவியிருந்தாலும் அவற்றை அதிகம் பொருட்பொடுத்துவோர் குறைவு. எல்லாக் குப்பை கூழங்களோடும் கலந்து விடுவர். மருத்துவக் கழிவுகளுக்கான தொட்டிகள் கூடப் பாதுகாப்பான வழிமுறைகளில் கையாளப்பட்டாலும் அவற்றை எடுத்துச் செல்லும் முகவர் நிறுவனங்கள் எப்படி அவற்றைப் பாதுகாப்பான வழியில் அழிக்கிறார்கள் என்பது குறித்த வெளிப்படைத்தன்மையும் குறைவு.‬

இது இவ்வாறிருக்க, எங்களுக்கு உங்க பொங்கச் சோறும் வேணாம், உங்க பூசாரித்தனமும் வேணாம் என்று மலேசியா தன் வேட்டியை வரித்துக் கட்டிக் கொண்டு அவுஸ்திரேலியா அனுப்பிய 100 கொள்கலன்களைத் திருப்ப நடவடிக்கை எடுத்ததோடு, 3000 கொள்கலன்களில் பல்வேறு நாடுகளில் இருந்து பயணித்த மறுசுழற்சிக் குப்பை என்ற போர்வையில் மருத்துவக் கழிவுகள், நச்சுக் கழிவுகள் தென்பட்டதாக அச்சம் தெரிவித்திருக்கிறது.

உண்மையில் இந்தப் பிரச்சனை இருபாற்பட்டது.

ஒன்று, முறையாக வகைப்படுத்தாது நச்சுக் கழிவுகளை மறுசுழற்சிக் காகிதாதிகள், பசுமை உற்பத்திக் கழிவுகள் (Green waste) கொண்ட கொள்கலன்களில் புதைத்து அனுப்பும் போது அவற்றைப் பெற்றுக் கொள்ளும் வளர்முக நாடுகளின் இறக்குமதியாளர்கள் முறையான செயன்முறை இல்லாது அவற்றைக் கையாளும் போது எழும் நோய்த் தொற்று போன்ற அபாயகரமான விளைவுகள் பெருகும் விபரீதம்.

இன்னொன்று, பிளாஸ்டிக் கழிவுகளை எந்த வித மறுப்பின்றி ஏற்கும் இந்த ஆசிய நாடுகள் இவற்றை மறு சுழற்சி செய்யாத விடத்து அப்படியே புதைக்கும் போது அவை மண்ணுக்குள் தேங்கி மக்காது அந்த நிலபுலங்களைப் பாழடிக்கப் போகிறது.

மேற் சொன்னவை தவிர இன்னும் எத்தனை எத்தனை கொள்கலன்கள் அடையாளம் காணப்படாது ஆசியாவில் தரையிறங்கிப் பிரிக்கப்பட்டிருக்குமோ என்ற அச்சம் இன்னும் பன்மடங்கு.

இது ஆசியாவைப் பொறுத்தவரை மேற்குலகம் தொடுக்கும் நவ குடியேற்ற வாதம் எனலாம்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட ஏராளம் மெற்றிக் தொன் குப்பைக் கொள்கலன்கள் ஆசியாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்.

கானா பிரபா

21.07.2019

No responses yet