Archive for September, 2018

Sep 20 2018

மேற்குத் தொடர்ச்சி மலை

Published by under Uncategorized

சொல்ல வார்த்தைகள் இன்றிப் பிரமித்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளச் சிறு இடைவேளை எடுத்துக் கொண்டேன். இவ்வளவு தூரம் மனம் ஒன்றிப் போய்ப் பார்த்த படங்கள் அரிது. என்னளவில் இதுவரை பார்த்த படங்களில் உச்சம் இதுதான் என்பேன்.
“எனக்கெல்லாம் தனியாகச் சுயசரிதை எழுத வேண்டியதில்லை, நான் எழுதிய பாடல்கள் எல்லாம் என் சுயசரிதை தான்” என்று சமீபத்தில் இசைஞானி இளையராஜா குறிப்பிட்டிருந்தார். இதன் ஆழ்ந்த பொருளை எவ்வளவு தூரம் உய்த்துணர்ந்திருப்போமோ தெரியவில்லை. இந்தப் படமும் அப்படித் தான்.
படத்தில் ரங்கசாமி என்ற நாயகன் இருக்கிறான் ஆனால் அவன் ஒரு கதை நகர்த்தி தான். அவனோடு சேர்ந்தியங்கும் மேற்குத் தொடர்ச்சி வாழ் மக்களின் வழியாக அவர்களின் வாழ்வியலைப் பேசுகிறது, ஏன் அந்த வாழ்வியலோடு ஒன்றியிருக்கும் அரசியலைக் கூடப் பேசுகிறது.
இந்த எளிய கதை வழியே இன்று அரசியல் சூதாட்டங்களால் நிகழும் நில அபகரிப்பும் உருவகப்படுத்தபடுகிறது. இதை ஈழத்திலும் பொருத்திப் பார்க்க முடிகிறது.
சினிமாத் தளத்தில் இருந்து வெளியே வந்து கிராமியத்தில் புதுமை படைத்த பாரதிராஜா, அவரைக் கடந்து “பரதேசி” வழியாக அந்த மக்களின் அவல வாழ்வியலைக் காட்சிப்படுத்திய பாலா இவர்கள் கொடுத்த பிரமிப்பைக் கடந்து இன்று லெனின் பாரதி கொடுத்த திரை மொழி என்பது உச்சமாகப் படுகிறது.
கி.ராவின் கரிசல் காட்டுக் கதைகளைப் படித்த நிறைவு இந்த ஒரு திரைப்படத்தில் நிகழ்ந்திருக்கிறது.
படத்தின் ஆரம்பித்தில் இருந்து இறுதி வரை உலாவும் பாத்திரங்கள் அரிதாரத்தை மட்டுமல்ல மிகை நடிப்பைக் கூடப் பூசிக் கொள்ளவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலை வரை சென்று எடுத்த ஒரு ஆவணப்படத்தின் நிகழ் நாயகர்களாகத் தான் தெரிகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், சிறப்புச் சத்தத்தைக் கையாண்ட பிரதாப் இந்த இருவரும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணத்தில் சுமை நோகா முதுகுகள்.
“ஒரு படத்தில் இன்ன இடத்தில் இசை வரக் கூடாது என்பதை அறிந்திருப்பது கூட ஒரு தேர்ந்த இசையமைப்பாளனின் இலக்கணம்” என்றார் இயக்குநர் செல்வராகவன் ஒருமுறை.
இங்கே அது நிகழ்த்திக் காட்டப்படுகின்றது. ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு காட்சியின் பின் புலத்தில் அந்தந்தச் சூழலுக்கேற்ப இயற்கையில் எழும் ஓசைகள் தான் பின்னணி இசையாக்கப்பட்டிருக்கின்றன. மின்மினிப் பூச்சிகளின் இரவிசை, காட்டுக் குருவிகளின் ஓசை, சேவல், கோழிகளின் கூவல் என்றும் மரங்களில் பட்டுத் தெறிக்கும் காற்றின் அசைவும் தான் படம் நெடுகக் கலந்திருக்கின்றன. இளையராஜாவும் இருக்கிறார் மன உணர்வின் வலி கிளர்ந்தெழும் போதெல்லாம் இங்கு மட்டுமே ஒலிப்பேன் என்று நியாயம் கற்பிக்கிறார்.
“கேட்காத வாத்தியம் கேட்குது
ஊரான ஊருக்குள்ள
பூவொன்னு மஞ்சச் சரட்டுக்குச்
சாய்ஞ்சாடப் பாக்குது பாக்குது”
இடை வேளை வரை பாடல்கள் இல்லாமல் பத்தியம் வச்ச ராஜா அந்தக் கல்யாணப் பாட்டைப் போட்டதும் பொருந்திப் போய் ரசித்தது மனம் நிறைய.
“அந்தரத்தில் தொங்குதம்மா” பாடலும் அப்படியே பொருந்திப் போய்.
ஒளிப்பதிவில் பறவைப் பார்வையில் மேற்குத் தொடர்ச்சி மலை வழியே நகரும் காட்சிப்படுத்தலில் இருந்து மக்கள் வாழ்விடங்கள் வழியே ஊடறுக்கும் கமரா பாசி படர்ந்த ஒளிக்கலவையில் இந்தப் படைப்புக்கு நிறம் பாய்ச்சுகிறது. ஒவ்வொரு கதைப்புலத்துக்கும் என்ன மாதிரியான ஒளிக்கலவை தேவை என்று அடையாளப்படுத்தும் பண்பு தான் ஒளிப்பதிவாளனை உண்மையான சிருஷ்டி கர்த்தா ஆக்குகிறது. தேனி ஈஸ்வர் அதைக் கடந்து விட்டார்.
மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் ஒலிப்பதிவை மட்டும் கேட்டாலேயே போதும் ஒரு உன்னதமான மக்கள் இலக்கியமொன்று ஒலி வடிவம் கண்டிருப்பது போல அமையும்.
இந்தப் படம் எனக்கு இவ்வளவு நெருக்கமாக இருப்பதற்கு பிறந்த நாள் தொட்டு என் பள்ளி செல்லு முன்பதான வாழ்க்கை இலங்கையின் மலையக மக்களோடு வாழ்க்கையோடு இருந்ததால் தானோ என்னமோ. அங்கே தேயிலைத் தோட்டத்து மக்கள் ஆசிரியர்களாகச் சென்ற என் பெற்றோர் மீது கொண்ட அளவற்ற குரு பக்தி, என்னைத் தம் பிள்ளை போல் ஏந்திக் கொண்டதெல்லாம் மங்கலாகத் தெரிந்தது மேற்குத் தொடர்ச்சி மலை பார்த்த போது.
தேயிலைத் தோட்டத்துக் கங்காணி போன்று இங்கும் ஏலக்காய்த் தோட்டத்துக் கங்காணி. இளையராஜா ஒருமுறை தன் தந்தையை நினைவுபடுத்திப் பேசிய போது கங்காணியாய்த் தன் அப்பா இருந்ததைச் சொன்னதும் நினைவுக்கு வந்தது.
“ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா”
மலையடிவாரத்தில் தகரக் கீற்றுத் தேநீர்க் கடையில் இருந்து எழும் P.B.ஶ்ரீநிவாசும், சரோஜினியும் பாடுவது அந்தக் காலத்து ராசைய்யாவை இளையராஜாவுக்கு நினைவுபடுத்தி இங்கு வைத்திருப்பாரோ?
மலையாள சினிமாக்களில் அதிகம் காணும் தொழிலாளர் வர்க்க உரிமை, செங்கொடியெல்லாம் தமிழுக்கு இவ்வளவு நேர்த்தியாக அமைந்ததில்லை. வலிந்திழுக்கும் அழுகை இல்லை.
மு.காசி விஸ்வநாதனின் படத் தொகுப்பில் தேவையற்ற நீட்டல் குறைத்தல் இல்லாக் கச்சிதம்.
வெள்ளாந்தி மனிதர்களின் வாழ்வியலை அவர்களின் மொழியில் பேசிய இந்தப் படைப்பை எடுத்து விஜய் சேதுபதி சினிமா கற்பவனுக்கொரு வழிகாட்டி நூலாகத் தந்திருக்கிறார்.
விலை பேசியிருக்கும் காணியைப் பேசாமல் ஆசையோடு எடுத்துக் கொடுக்கும் அந்த மூதாட்டி, சதா கிண்டலுக்கு ஆளாகிக் கோபப்படும் கங்காணி என்று நம் வாழ்வியலில் கண்டவர்களும் வருகிறார்கள்.
பாசாங்குத் தனமில்லாத மக்கள் சினிமா என்றால் இதுதான். மேற்குத் தொடர்ச்சி மலை பார்த்து முடித்த போது ஒன்று புரிந்தது. தமிழ் சினிமா இன்னும் திரையில் எழுத வேண்டிய இலக்கியங்கள் ஏராளம் இருக்குதென்று.
கானா பிரபா

No responses yet