Archive for March, 2014

Mar 01 2014

பலேரி மாணிக்கம் “ஒரு பாதிராக் கொலபாதகத்திண்டே கதா”

Published by under Uncategorized

“ஜீவிதம் மரணத்தின் முடிவில் தீரும்போள் அது அடுத்த நிமிஷம் தொட்டு கதையாம், கழிந்த காலத்திண்ட மற்றொரு பெயரானு கதா”

பலேரி மாணிக்கம் படம் வந்து 5 வருஷங்கள் கழிந்து விட்டது. ஒரிஜினல் டிவிடியைக் கூட எப்பவோ வாங்கி வைத்தாலும் ஏனோ இது நாள் வரை நான் பார்க்கவில்லை. இதை மட்டுமல்ல இன்னும் சில படங்களை நான் பார்க்காமல் வைத்திருப்பதற்குக் காரணம், இப்படியான படங்களைப் பார்ப்பதற்கேற்ற மனச்சூழலை என்னுள் ஏற்படுத்த வேண்டும் என்பதே. சும்மா கடமைக்காக இப்படியான படங்களைப் பார்த்துக் கழிக்கக் கூடாது. அந்த வகையில் நேற்றுத்தான் “பலேரி மாணிக்கம் ஒரு பாதிராக்கொல பாதகத்திண்டே கதா” படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. ஒரு படத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவாரம் நீட்டித்துப் பார்க்கும் எனக்கு, படத்தின் எழுத்தோட்டமே அப்படியே நிலைகொள்ள வைத்து விட்டது, முழுமூச்சாய் முடிவுப் புள்ளி வரை இந்தப் படத்தோடு ஒன்றிப்போனேன்.

சில மாதங்களுக்கு முன்னர் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட, சொக்கலிங்கம் என்ற வழக்கறிஞர் எழுதிய “புகழ்பெற்ற வழக்குகள்” என்ற நூலை வாசிக்கும் போது ஒரு புலனாய்வு அதிகாரியாக மனம் கூடு விட்டுக் கூடு பாய்ந்த உணர்வு ஏற்பட்டது அதே உணர்வு தான் இந்தப் படம் தந்த அனுபவமும். படத்தின் ஆரம்ப எழுத்தோட்டத்தில் வரும் பாடலே பலேரி என்ற ஊரில் உள்ள மாணிக்கம் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண் ஐம்பதுகளின் இறுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதைப் பற்றிப் பாடலோடு சோக ராகம் பாடுகிறது.

ஹரிதாஸ் (மம்முட்டி) என்ற புலனாய்வாளன் தன்னுடைய உதவியாளர் பெண்ணுடன் டெல்லியில் இருந்து ஐம்பது வருடங்கள் கழித்து இந்தக் கொலையின் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்காகப் பலேரி செல்கிறார். பலேரி என்ற அந்தக் கிராமத்தின் பழைய சுவடுகள் மறைந்து நாகரிகத்தின் உச்சங்கள் விளைந்திருக்கும் பூமியில் மாணிக்கம் என்ற அந்தப் பெண்ணின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் எல்லோருமே இறந்த சூழலில், வெறும் செவி வழிக்கதைகள் வாயிலாக உண்மையைத் தேடும் சவால் அவனுக்கு. ஒவ்வொரு செவி வழிக்கதையிலும் பொய்யும் உண்மையும் சரி சமமாகக் கலந்திருக்கிறது. அதிலிருந்து ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து ஈற்றில் அவன் முடிவைக் காணும் போது மிகப் பெரிய திருப்பத்திற்குக் கொண்டு போய் நிறுத்தி அவனை வழியனுப்பி வைக்கிறது அந்த பலேரி கிராமம்.

T. P.ராஜீவன் என்ற எழுத்தாளரின் நாவலை அடியொற்றி மலையாளத்தின் பிரபல இயக்குனர் ரஞ்சித் எடுத்த படம் இது. இயக்குனர் ரஞ்சித் இயக்கிய நந்தனம், Pranchiyettan and The Saint,Indian Rupee போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். இவரின் ஒரு சில பேட்டிகளைப் படித்த போது மலையாள சினிமா உலகத்தை விட்டுக்குடுக்காத அந்த ஓர்மம் எனக்குப் மிகவும் பிடித்திருந்தது. சரக்கு இருப்பவன் தானே கோபப்படுவான்?

மம்முட்டியைப் பொறுத்தவரை அவரின் சினிமா வாழ்வில் மறக்க முடியாத ஒரு படமாக இது இருக்கும். அடக்கமாக வந்து ஒவ்வொரு விஷயத்தையும் நிதானமாகக் கையாளும் அந்தப் புலனாய்வு அதிகாரி, பலேரிக் கிராமத்தின் பெருந்தனக்காரர் அஹமத் ஹாஜி என்ற மகா கொடூரர் என்ற இன்னொரு மம்முட்டி, இவர்களைக் கடந்து மூன்றாவதாக வரும் இன்னொரு ஆச்சரியம் என்று ஒரே படத்தில் ஒரே நடிகன் பல்வேறு பாத்திரங்களைக் கையாளும் போது ஒவ்வொரு பாத்திரப் படைப்பிலும் எவ்வளவு தூரம் வித்தியாசப்படுத்தி நடிக்க முடியும் என்பதை அழுத்தமாகப் பதிய வைக்கிறார். அதிலும் அந்தப் பணக்காரர் அஹமத் ஹாஜி (மம்முட்டி) துப்பலைக் கூட அலட்சியமாகத் தெறிக்கும் போது நடிப்பின் நுணுக்கம் புரிபடுகின்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக கேரளத்தின் சிறந்த நடிகராக மாநில விருது உட்பட இன்னும் பல விருதுகளைச் சேர்த்தாலும் தேசிய விருது கொடுக்கவில்லையே என்ற இயக்குனர் ரஞ்சித் இன் கோபத்தைப் படம் பார்த்தபின் எம்மிலும் சுமக்க முடிகின்றது.

கம்யூனிஸ சிந்தனைகளோடு ஐம்பதுகளில் வளர்ந்த அந்த இளைஞன் பின்னாளில் மனம் வெறுத்து ஒதுங்கிப் போகும் முதியவராக சீனிவாசன், சித்திக் என்ற குணச்சித்திரம் பாலன் நாயராகவும், கவர்ச்சிக்கு மட்டுமே தீனியாகப் பார்க்கப்படும் ஸ்வேதா மேனன் பயத்தை உள்ளே புதைத்து வைத்துக் கொண்டு நடிக்கும் அந்தக் கிழவியாகவும் என்று ஒவ்வொரு பாத்திரத் தேர்வும் கச்சிதமாக அமைந்திருக்கின்றது.

மலையாள சினிமாவைப் பொறுத்தவரை மர்மக் கதைகளைக் கையாள்வதில் இந்திய சினிமாவிலேயே முதல் இடத்தில் வைக்கப்படவேண்டிய கதை சொல்லிகள். ஐம்பதுகளின் இறுதியிலே நடந்ததாகவும், கேரளத்தின் முதல் கொடூரக் கொலையாகவும் பதிவாகியிருக்கும் இந்த உண்மைச் சம்பவத்தைப் படமாக எடுக்கும் போது அந்தக் கதை மாந்தருக்குள்ளேயே மம்முட்டியை உள்ளே விட்டுக் கதை சொல்ல வைத்த உத்தி அருமையானது.

இசையமைப்பாளர் சரத், பிஜ்பால் ஆகியோர் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல், படத்தின் முகப்புப் பாடல் மட்டும் தான் அதற்குப் பின்னால் வரும் கதையோட்டம் வெறும் மெலிதான பின்னணி இசையோடு நகர்கின்றது.

“எத்தனை வருஷங்கள் ஆனாலும் குற்றம் செய்தவன் தண்டிக்கப்படுவான் இது எப்படி நிகழும் என்று எனக்குத் தெரியாத இயற்கையின் நியதி என்று ஹரிதாஸ் (மம்முட்டி) என்ற அந்தப் புலனாய்வாளர் சொல்லி முடிக்கிறான் “பலேரி மாணிக்கம் ஒரு பாதிராக்கொல பாதகத்திண்டே கதா”யை.

“ஜீவிதம் மரணத்தின் முடிவில் தீரும்போள் அது அடுத்த நிமிஷம் தொட்டு கதையாம், கழிந்த காலத்திண்ட மற்றொரு பெயரானு கதா” என்று ஹரிதாஸ் சொல்வது போலத்தான் வாழ்வியலும், அது கழிந்த நிமிஷத்தை முற்றுப்புள்ளியாக நிறுத்தும் போது கதையாக முடிக்கின்றது, நாமும் எத்தனை கதைகளைச் சுமந்து கொண்டு போகின்றோம், சில கதைகளின் உண்மைகள் தெரிந்தும் பல கதைகளின் உண்மைகள் தெரியாமலும்.

 

One response so far

Mar 01 2014

பாலித்தீவில் இந்தியத் தொன்மங்களைத் தேடி

Published by under Uncategorized

இலங்கையிலிருந்து வெளியாகும் “சுடர் ஒளி” பத்திரிகையில் என் முதல் பயணத்தொடராக “பாலித்தீவில் இந்தியத் தொன்மங்களைத் தேடி” வரும் ஞாயிறு பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் வெளிவருகின்றது. பத்தாண்டுகளுக்கும் மேலான என்னுடைய எழுத்துப் பகிர்வு இன்று தாயகத்தில் இயங்கும் ஒரு பத்திரிகை வழியாக என் பெற்றோரின் கையை எட்டப் போகின்றது என்றால் இதை விட என் எழுத்துக்கு வேறென்ன அங்கீகாரம் வேண்டும்?

அடிக்கடி ” நீங்கள் எழுதிறதை எனக்கும் அனுப்பி வையுங்கோ பிரபு” என்று கேட்கும் என் அப்பாவுக்கும் பதில் சொல்ல இந்தப் பயணத்தொடர் உதவப்போகிறது. 

பாலித்தீவில் கண்டதும் கேட்டதுமாக இல்லாமல் வரலாற்றுப் புத்தகங்களின் ஆதாரபூர்வமான தகவல்களோடு பாலித்தீவை எழுத்து வழியாக இரண்டாம் முறையாக உலாத்தப் போகிறேன். இதற்காக நூலகங்களில் இருந்தும், பாலித்தீவு பேசும் வரலாற்று மூலாதாரம் தாங்கிய புத்தகக் கொள்வனவு மூலமும் என் தேடலை ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு அத்தியாயமும் மூன்று மணி நேரத்துக்கும் மேலான உழைப்பைப் பங்கு போடுவதால் நிதானமாக கடந்த ஐந்து வாரங்களாக ஏழு அத்தியாயங்களைச் செதுக்கியிருக்கிறேன். 
நான் பாலித்தீவில் இருக்கும் போதே சுடர் ஒளி பத்திரிகையில் இருந்து நண்பர் வர்மா இந்தத் தொடரை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். மனம் சோர்ந்து போகும் போதெல்லாம் அவரை நினைத்துக் கொண்டுதான் அடுத்த அத்தியாயத்தைக் கிளப்புவேன். அந்த வகையில் இந்தத் தொடரை ஈழத்து வாசகர் கையில் எடுத்துச் செல்ல வழி வகுத்த வர்மா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
“பாலித்தீவில் இந்தியத் தொன்மங்களைத் தேடி”உங்களுக்கும் எனக்கும் இது நாள் வரை பாலித்தீவில் புதைந்திருக்கும் இந்துப் பண்பாட்டு விழுமியங்களை எழுத்தின் வழியே உலாத்தலாகத் தரிசிக்கப் போகின்றது. 

No responses yet

Mar 01 2014

North 24 Kaatham (மலையாளம்) – வழித்துணை

Published by under Uncategorized

இப்பொழுதெல்லாம் மனதுக்கு நிறைவு தரக்கூடிய நல்ல சினிமாவைப் பார்க்க வேண்டும், குறிப்பாக மலையாள சினிமா என்ற எண்ணம் வரும் போதெல்லால் ஃபாகத் ஃபாசில் இன் படங்களைத் தான் முதலில் தேட ஆரம்பிக்கிறேன். படத்துக்குப் படம் இந்த மனிதர் என்னமாய் ஒவ்வொரு படத்தோடும் ஒட்டிக் கொண்டு பயணிக்கிறார் என்பதை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறது North 24 Kaatham

ஓ.சி.டி (Obsessive compulsive personality disorder) என்ற விநோதமான மன உணர்வுக்கு ஆட்பட்டவர் மிகுந்த சுத்தபத்தமாகவும், எச்சரிக்கை உணர்வோடு இருப்பார் என்பதை அனுபவத்தில் கண்ட உண்மை. இதைப்பற்றி என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த அனுபவம் ஒன்றையும் சமயம் வாய்க்கும் போது சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் ஹரிகிருஷ்ணன் என்ற நாயகன் பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஃபாகத் ஃபாசிலுக்கும் இதே பாங்கான மனவுணர்வோடு, இயல்பு வாழ்க்கையில் இருந்து தன்னை விலக்கி வாழ நடக்க முற்படுபவர். காலையில் எழுந்து தன் காலைக் கடனைக் கழிப்பதில் இருந்து அலுவலகப் பணி தாண்டிப் பொது இடங்களில் கூடத் தன்னுடைய இந்த விநோதமான சுபாவத்தில் இருந்து சமரசம் செய்து கொள்ளாத தொழில் நுட்பவியலாளன் இந்த ஹரிகிருஷ்ணன். எவரும் தன்னோடு வீண் அரட்டைக் கச்சேரி வைப்பதைத் தவிர்ப்பவர். தன்னைச் சுற்றி மட்டுமல்ல தன்னுடைய தொழிலிலும் இதே ரீதியான பூரணத்துவத்தோடு நடப்பதால் இவரின் சக பணியாளர்கள் வெறுப்போடு இவர் மீது கூறும் புகார்களையெல்லாம் தாண்டி, இவரின் மேலதிகாரிகளின் நேசத்தைப் பெற்றிருப்பவர்.

ஹரிகிருஷ்ணனுக்கு முக்கியமான ஒரு அலுவலகப் பணிக்காகத் திருவனந்தபுரத்துக்கு ரயில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. கூடப்பயணிக்கும் பயணிகோபாலன் (நெடுமுடி வேணு) என்ற முதியவர் தன்னுடைய மனைவி திடீர் நோய் வாய்ப்பட்டிருக்கிறார் என்ற தொலைபேசி அழைப்பால் தன் பயணத்தை இடை நிறுத்தித் கோழிக்கோடுவில் இருக்கும் தன் வீட்டுக்கு ரயில் எடுக்க வேண்டிய அவசரத் தேவை ஏற்படும் வேளையில் அதே ரயிலில் பயணிக்கும் இன்னொரு பயணி நாராயணி (ஸ்வாதி) கோபாலனை அவர் வீட்டில் சேர்ப்பிக்க முடிவெடுக்கிறாள். இந்தச் சிக்கலில் எதிர்பாராத விதமாக அகப்படுகிறார் ஹரிகிருஷ்ணன் (ஃபாகத் பாசில்). கேரளமே முழு நாள் ஹர்த்தாலை அனுஷ்டிக்க, இந்த மூவரும் கோழிக்கோடு எப்படிப் போய்ச் சேர்ந்தார்கள், ஹரிகிருஷ்ணனுக்கு இந்தப் பயணம் எந்த விதமான மன மாற்றத்தைக் கொண்டு வருகின்றது என்ற சாராம்சத்தில் வெகு இயல்பாகப் போரடிக்காமல் நகர்த்திச் செல்கின்றது இந்தப் படம்.

முதற்பந்தியில் சொன்னது போல ஃபாகத் ஃபாசிலுக்கு இது பொற்காலம். கிடைக்கும் படங்களெல்லாம் முத்து முத்தாக இவருக்கு அமைகின்றன. ஒவ்வொரு படத்திலும் எழுத்தோட்டத்துக்குப் பின்னர் ஃபாகத் ஃபாசில் என்ற நடிகனைக் காணமுடியவில்லை. அந்தந்தப் பாத்திரமாகவே மாறிவிடுகின்றார். இந்தப் படத்திலும் அதே அலைவரிசை தான். படத்தின் முதற்காட்சிகளில் ஹரிகிருஷ்ணன் என்ற அந்த விநோத சுபாவம் கொண்ட இளைஞனாகத் தன்னை மாற்றுவது அவ்வளவு சுலபமானதல்ல. அந்தச் சவாலை இவர் எளிதாகக் கடக்கிறார். இதுவரை எந்த ஹீரோயிச நிழலும் இவர் மேல் படாததால் இப்படியான பாத்திரங்களுக்கான திறமையான மூலப்பொருளாக அமைகின்றது இவரின் நடிப்பு.
சுப்ரமணியபுரம் ஸ்வாதிக்கு கேரளம் கொடுத்திருக்கும் இன்னொரு சிறப்பான படம் இது. இந்த நாயகி பாத்திரம் தமிழிலோ தெலுங்கிலோ படைக்கப்பட்டிருந்தால் அரை லூசாகவோ, நாயகனை ஏதாவது பண்ணி வளைக்க முற்படும் காமுகியாகவோ மாற்றிவிடுவார்கள். ஆனால் ஆர்ப்பாட்டமில்லாத அந்த நாராயணியாக ஸ்வாதியின் நடிப்பு வெகு திறம். அதிலும் குறிப்பாக, கோபாலன் மாஸ்டர் வீட்டிலுருந்து விடை பெற்ற பின்னர் ஹரிகிருஷ்ணனும், நாராயணியும் தனியே தத்தமது வீடுகளுக்குப் போகும் பயணத்தில் கிட்டும் உணவு போசனத்தில், நாரயணி ஹரிகிருஷ்ணனோடு பேச்சுக் கொடுக்கும் போது வழக்கம் போல அவன் சிடுசிடுப்பதும், பின்னர் அவனின் விநோத சுபாவத்தை விஷமத்தனமாக எள்ளல் செய்து அவனைச் சிரிக்க வைக்கும் கட்டத்தில் ஆகா அந்தக் “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்”.

நெடுமுடி வேணு பற்றி என்ன சொல்ல, சினிமாவில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தவர்கள் படிப்படியாகக் குணச்சித்திர பாத்திரமேற்று நடிக்க முனையும் போது அதிலும் வித்தியாசத்தைக் காண்பித்து நிலைத்திருப்போரும் உண்டு. நெடுமுடி வேணு அந்த ரகம். வயதான அந்தக் குண்டுக் கிழவராக இந்த இரண்டு இளசுகளும் இழுத்துப் போகும் வழியெங்கணும் தானும் தம் கட்டிப் பயணிப்பதாகட்டும், தன் ஊரை அண்மித்ததும் ஒவ்வொரு இடமாகக் காண்பித்துப் பெருமை பேசுவதாகட்டும், இவரின் வீட்டில் நடந்த துன்பியல் நிகழ்வை அறியாது தன் வீட்டை நோக்கி நடை போடும் போது எதிர்ப்படும் மனிதர்களைக் கண்டு குசலம் விசாரிப்பதாகட்டும், வீடு வந்தததும் அந்த அதிர்ச்சியை நிதானமாகத் தாங்கிக் கொண்டு தன் மனைவி கொண்ட கொள்கைக்கு இணங்க இறுதி மரியாதை செய்வதாகட்டும் எல்லாமே இவரின் தேவையை இந்தப் படத்தில் உணர்த்தி நிற்கின்றன.

பிரேம்ஜி அமரனும் நடித்திருக்கிறார், ஒரு சின்ன வேடத்தில் ஆனால் என் பார்வையில் இவருக்குக் கிடைத்த உருப்படியான அலட்டல் இல்லாத வேடம் இது, “எவ்வளவோ பண்ணிட்டோம்” என்ற வழக்கமான பஞ்ச் ஐ இந்தப் படத்தில் சொல்லும் போது கூட. தலைவாசல் விஜய் மலையாளக் கரையோரம் கரை ஒதுங்கிவிட்டார். கீதாவும் உண்டு.

படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் இருந்தும் சமீபகாலமாக மலையாள தேசத்தை ஆக்கிரமித்திருக்கும் மேற்கத்தேய வாத்திய மோகத்தால் இசைக்கருவிகளை உருட்டி விளையாடுகின்றார்கள். கிடைத்த வாய்ப்பில் நல்ல மெலடிப் பாடல்களைச் சேர்த்திருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்கும்.

கோழிக்கோடு நோக்கிய இந்த மூவரின் பயணத்தில் ரயில், பஸ், ஜீப், ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள், மீன் படகு எல்லாத்திலும் ஏறி, கேரளத்தின் திக்குத் தெரியாத திசைகளிலும் பயணிக்கும் கதைக்கு ஒளிப்பதிவு பலம் சேர்க்கின்றது. கதை, இயக்கத்தைக் கவனித்த இயக்குனர் அனில் ராதா கிருஷ்ண மேனனுக்குத் தான் மேற் சொன்ன அத்தனை பலத்திலும் பாதி போய்ச் சேரவேண்டும். அவ்வளவு நேர்த்தியாக நெறியாண்டிருக்கிறார்.

பயணம் என்பது எத்தனையோ புது மனிதர்களையும், இடங்களையும் சந்திப்பதன்று, பயணியை புத்துருவாக்க அது உறுதுணையாகின்றது மனிதர்களையும் அவர் தம் வாழ்வியலையும் படிக்க முடிகின்றது, நாயகன் ஹரிகிருஷ்ணனுக்கு மட்டுமல்ல, இம்மாதிரி அரிய படைப்பைப் பார்க்கும் ரசிகனுக்கும் கூட.

No responses yet