Archive for January, 2010

Jan 06 2010

பாங்கொக் மாரியம்மன் ஆலயத்தில் மாயவரத்தான் தரிசனம்

Published by under Uncategorized


நான் தாய்லாந்து உலாத்தலைத் திட்டமிட்டபோது அதன் ஒரு அங்கமாக அங்கிருக்கும் நம் பதிவர்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தபோது நண்பர் ஆயில்யன் தான் என்னை விட முனைப்பாக தாய்லாந்தில் இருக்கும் பதிவர்களைத் தேடத் தொடங்கினார். அப்படியாக முதலில் வந்தவர் தான் வலைப்பதிவுலகில் நீண்ட காலம் இருந்து வரும் நண்பர் மாயவரத்தான். இன்னொருவர் அபி அப்பாவின் நண்பர் நிஜாமுதீன். நிஜாமுதீனுக்கு கானா பிரபா என்ற பெயரில் ஒரு பதிவரே இருப்பது நான் அவரைத் தொடர்பு கொண்டு பேசிய நாள் வரை தெரியாது. “நீங்க அபிஅப்பா ஊரா, உங்க பேச்சு சிலோன் தமிழ் மாதிரி இருக்குல்ல” என்று சிபிஐ ரேஞ்சுக்குப் போய் விட்டார் ;-). ஒருவாறு என்னைப் பற்றி தமிழ் மண நட்சத்திர வாரத்தில் கொடுத்த சுய அறிமுகம் கணக்காகச் சொல்லிப் புரியவைத்தேன். நான் அங்கே போன நேரம் நோன்பு காலம் என்பதால் இருவரும் பல தடவை நேரங்களை மாற்றி மாற்றி நம் சந்திப்புக்கு ஒதுக்கி இருந்தாலும் இறுதி வரை அது கை கூடவில்லை. பின்னர் அடுத்த முறை தாய்லாந்து வரும் போது சந்திக்கலாம் என்று முடிவெடுத்துக் கொண்டோம்.

நண்பர் மாயவரத்தானைத் தொடர்பு கொண்ட போது அவர் தன் தேசத்துக்கு வந்தவரை நேசத்தோடு வரவேற்றதோடு எப்போது சந்திக்கலாம் என்று ஆர்வப்பட்டார். அதற்கு முன்பு வரை மாயவரத்தானோடு அதிகம் தொடர்பில் இருக்காத எனக்கு அவரின் நட்பின் நேசம் கண்டு உண்மையிலேயே மனதுக்குள் மகிழ்ந்து போனேன். நாம் சந்திக்கப் போகும் இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாய்லாந்தின் இந்து ஆலயமான பாங்கொக் மஹா மாரியம்மன் ஆலயமாக அமைந்தது இன்னொரு சிறப்பு ;-).

மஹாமாரியம்மன் ஆலயத்துக்கு காலையில் சீக்கிரமாகவே கிளம்பி வந்து விட்டேன். காலைப் பூசையைப் பார்க்கலாமே என்ற ஆர்வக் கோளாறு வேறு. ஏழு வருஷங்களுக்கு முன்னர் தாய்லாந்துக்கு வேலை விடயமாக வந்தபோது பார்த்த ஒரே சுற்றுலாத்தலமாக இந்த ஆலயம் மட்டுமே இருந்தது. கோயில் சுற்றில் பூக்கடைகள் தமிழ்ப்பெயர்களோடு தென்பட்டதைக் கண்டு கண் குளிர்ந்தேன். கோயிலில் அறிவிப்பு பலகைகள் எல்லாம் தாய் மொழியில் தான் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து வந்த நாதஸ்வர, மேளக் குழுவினர் காலைப் பூசையில் கலந்து இசைபரப்புகின்றார்கள்.

Silom என்ற பகுதியில் இருக்கும் இந்த மாரியம்மன் ஆலயம் Wat Khaek என்று தாய்லாந்து மொழியில் அழைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் இருந்து வணிகம் செய்ய வந்த யாதவ சமூகத்தின் வழி வந்தவரால் 1879 ஆம் ஆண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டது. இன்று அவரின் தலைமுறையில் வந்தவரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தசரா எனப்படும் நவராத்திரி கழிந்த பத்தாவது நாளை மையப்படுத்தி ஆலயத்தில் பத்து நாள் வருடாந்த மகோற்சவம் இடம்பெறும். அப்போது இந்தியாவில் இருந்து கலைஞர்கள் இந்த மகோற்சவ காலத்தில் இங்கு வந்து தம் கலை நிகழ்ச்சிகளை வழங்குவார்கள். ஆலயத்தின் மூலவர் தெய்வம் உமா தேவி தவிர சிவன், விஷ்ணு, பிள்ளையார் என்று பரிவார மூர்த்திகளுக்கும் சிறு சிறு உட்பிரகாரங்கள் உண்டு. இந்துக்கள் என்னும் போது தாய்லாந்தின் இந்து மதத்தைப் பின்பற்றும் தாய் மக்களும் இந்த ஆலயத்திற்கு நிதமும் வந்து போகின்றார்கள்.

இந்த ஆலயம் பற்றி நண்பர் மாயவரத்தான் பின்னூட்டம் வழி பகிர்ந்த வரலாற்றுக் குறிப்புக்களைத் தருகின்றேன்.

மாரியம்மன் ஆலயத்தைக் கட்டியவர் மாயவரத்திற்குப் பக்கத்தில் இருந்து வந்த செட்டியார் ஒருவர். வைத்தி செட்டியார் என்ற அவர் மாடு வியாபாரம் செய்து வந்தார். செட்டியார் எப்படி மாடு வியாபாரம் – அதுவும் அந்தக் காலத்தில் என்றெல்லாம் குழம்ப வேண்டாம். அவர் உண்மையில் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர். மாடு வியாபாரம் நிமித்தம் ரங்கூனுக்கு அடிக்கடி சென்று வந்தார். அந்தக் காலத்தில் அங்கே ரங்கூனில் செட்டியார் சமூகத்தினர் அதிகம் அல்லவா? எனவே அவரையும் ரங்கூன் மக்கள் செட்டியார் ஆக்கிவிட்டார்கள் என்றுக் கேள்வி. இந்த வைத்தி செட்டியார் அவர்கள் மாடுகளோடு கப்பலில் ரங்கூன் சென்ற போது புயலடித்து இங்கே தாய்லாந்தில் கரை ஒதுங்கி காடாகக் கிடந்த சிலோம் சாலையில் மாரியம்மன் ஆலயத்தைக் கட்டினார். மாரியம்மன் ஆலயம் இருக்கும் சாலையின் ஒரு பக்கம் இன்றும் ‘சோய் வைத்தி’ என்று அவர் பெயரால் அழைக்கப்படுகிறது. ‘சோய்’ என்றால் ‘தெரு’ என்று அர்த்தம்.

கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே இறை தரிசனத்தில் மூழ்கினேன். காலைப் பூசை வழக்கம் போல நடந்து முடிகிறது. எல்லோருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு கூட்டம் கலைகிறது. நான் ஆலயத்தின் ஒரு பக்கமாக நின்று கொண்டிருக்கிறேன். ஒருவர் குந்து ஒன்றில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பார்த்தால் அவர் ஈழத்தில் இருந்து வந்தவர் போல இருந்தது. என்னை அறிமுகப்படுத்திப் பேச்சுக் கொடுத்தேன். என் கணிப்பு சரியாகத் தான் இருந்தது. ஈழத்தின் மட்டுவில் பிரதேசத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்னர் தாய்லாந்து வந்ததாகச் சொன்னார். அவரோடு ஊர்ப்புதினங்களைப் பேசிக் கொண்டிருந்த போது அவரின் நண்பர் ஒருவரும் வந்தார். அவர் கரவெட்டியாம். இன்னொரு தேசத்தில் இப்படி நம் நாட்டவர்களை திடீர் சந்திப்பில் கண்டது மகிழ்வாக இருந்தது. தாய்நாட்டின் அவல வாழ்வில் இருந்து தப்பிப் பிழைக்கக் கடல் கடப்போருக்கு தாய்லாந்தும் ஒரு தற்காலிகப் புகலிடமாகின்றது. ஆனால் அங்கேயும் எம்மவருக்குப் பலவிதமான சோதனைகள். பத்து வருஷங்களுக்கு முன் ஈழமுரசு பத்திரிகையில் இந்த அவலங்கள் தொடராக வந்ததைப் பலர் படித்திருக்கக் கூடும். பாங்கொக்கின் புற நகர்ப்பகுதிகளில் ஈழ அகதிகள் பலர் வாழ்வதாகச் சொன்னார்கள். ஈழத்தவர்களால் காட்டு அம்மன் கோயில் என்றொரு கோயிலும் நிறுவப்பட்டிருக்கிறதாம். எவ்வளவோ முயற்சி செய்தும் அங்கு போக வேளை வாய்க்கவில்லை.

மாயவரத்தானை இன்னும் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த போது எம்மை தூரத்தில் நின்று ஒருவர் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். மெதுவாக எம் பக்கம் வந்து என்னைப் பார்த்து “நீங்களா பிரபா?” என்றார். “நானே தான் நண்பா” என்று அவரின் கையை இறுகப் பற்றிக் கொண்டேன். “உங்க பிளாக்ல போட்ட போட்டோவைப் பார்த்தது அந்தக் கணிப்பில் வந்தேன். ஆனா உருவ அமைப்பு வித்தியாசமா இருக்கே” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் மாயவரத்தான்.

மாயவரத்தானும் மடத்துவாசல் பிள்ளையாரடியும்

வலைப்பதிவுலகம், நாட்டு நடப்புக்கள் என்று சுற்றிவிட்டு, தாய்லாந்துக்குப் படையெடுக்கும் சினிமா ஷூட்டிங்குகளில் நடந்த சுவாரஸ்யமான அவலங்கள், தாய்லாந்தில் தமிழ் முயற்சிகள் குறிப்பாக தமிழ்ப்பாடசாலை பற்றியும், தான் எடுக்க இருக்கும் எதிர்கால முயற்சிகுறித்தும் ஆர்வத்தோடு பேசினார்.

தமிழ்நாடு ரெஸ்டாரண்ட் முபாரக் உடன் மாயவரத்தான்
மாயவரத்தானின் அலுவலகம் போய் விட்டு பின்னர் நாம் சென்றது தமிழ்நாடு ரெஸ்டாரண்ட். இதனை பாண்டிச்சேரியைச் சேர்ந்த முஸ்லீம் அன்பர் நடத்துகின்றார். பாங்கொக்குக்கு வந்து தமிழ்ச்சாப்பாட்டைத் தேடுவோருக்கு வாய்க்கு ருசியாகச் சமைத்துக் கொடுக்கிறார்கள். நாம் போன போது உணவகத்தின் உரிமையாளரின் உறவினர் முபாரக் இருந்தார். அவரோடு பேசிக் கொண்டே காலை உணவை முடித்தோம். பின்னர் மாயவரத்தானின் அப்பார்ட்மெண்ட் சென்று தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். விகடனில் மாணவப்பத்திரிகையாளனாகச் சேர்ந்த நாள் முதல் இது நாள் வரை தான் எழுதிய கட்டுரைகளைச் சேர்த்த தொகுப்பைக் காட்டினார். முதல் பக்கத்தில் “தலைவர் ரஜினி” படத்தோடு 😉 1990 களில் இருந்து அவரின் ஆக்கங்கள் சேமிக்கப்பட்டிருந்தன. மாயவரத்தான் யார் என்று தெரியாத நாட்களில் அவரின் ஆக்கங்களை விகடனில் படித்த நினைவுகளை மீண்டும் அந்தத் தொகுப்பைப் புரட்டியபோது மீள நினைவு படுத்தியது. வீட்டில் கிடைத்த பழரசம், சமோசாவோடு அடுத்து நாம் சென்றது மாயவரத்தானின் நண்பர் ஒருவரின் அலுவலகத்துக்கு. அவர் நண்பர் கோவையில் இருந்து வந்திருந்தார். அங்கும் நம் பேச்சுக் கச்சேரி தொடர்ந்தது.

புதிய சென்னை உணவகத்தின் நண்பர்களுடன் நான்
மதிய உணவு நேரம் நாம் சென்ற இடம், ஈழத்தவர்களால் நடத்தப்படும் புதிய சென்னை உணவகம். உள்ளே அச்சு அசல் யாழ்ப்பாணக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
“அண்ணை என்ன சாப்பிடப் போறியள்” என்று எங்கள் முன்னால் வந்து நின்றார் ஒரு இளைஞன். அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த சொரூபன். ஊர்ப்புதினங்களை அவரோடு ஆசை தீரப் பேசிக் கொண்டே மதிய உணவைச் சாப்பிட்டோம். ஈழத்தவர்கள் பலர் இங்கே மாலை வேளைகளில் வருவதாகச் சொன்னார். சொரூபனோடு அங்கே இருந்த யாழ் நண்பர்களையும் சந்தித்துப் பேசினேன். மாயவரத்தான் எங்கள் மொழி புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்.

மதியம் கடந்து பள்ளிக்கூடம் விடும் நேரமாகி விட்டது.மாயவரத்தான் தன் மூத்த மகனை அழைப்பதற்காகச் செல்ல வேண்டும். “நீங்களும் வாங்க பிரபா, என்று என்னையும் அழைத்துக் கொண்டே அவர் மகனின் பள்ளிக் கூடம் போனோம். தகப்பனின் வருகைக்காகக் காத்திருந்தார் ஜீனியர் மாயவரத்தான், வயசு எட்டு. அழகாகத் தமிழ் பேசுகிறான்.

மாயவரத்தான் தன்னுடைய சகோதரி அவுஸ்திரேலியாவில் இருப்பதை வைத்து இந்தக் கேள்வியை மகனிடம் கேட்கிறார்.
“இந்த அங்கிள் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறார், ஆஸ்திரேலியாவில் வேறு யாரெல்லாம் இருக்காங்க சொல்லு பார்ப்போம்?”
“இவங்களை மாதிரி இன்னும் நிறையப் பேர் அங்கே இருக்காங்க” – இது ஜீனியர் மாயவரத்தான்.

பாங்கொக் பயணம் மாயவரத்தான் என்ற நல்ல நண்பரைச் சம்பாதித்தது.

23 responses so far

Jan 02 2010

தாய்லாந்து கலாச்சார நடனம் கண்டேன்

Published by under Uncategorized

ஆசிய நாடுகளுக்குப் பயணித்து அவர்களின் கலை பண்பாட்டு அம்சங்களை ஒரே நாளில் அறிந்து கொள்ள ஒரே வழி அந்தந்த நாடுகளில் அரங்கேறும் கலாச்சார நடன நிகழ்வுகளைப் பார்ப்பதேயாகும். முன்னர் கம்போடியாவில் இவ்வாறானதொரு நிகழ்வை ரசித்ததை உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். கம்போடிய அனுபவத்தின் மூலம் தாய்லாந்துக்குப் போன போதும் தாய்லாந்து கலாச்சார அமைப்பை இப்படியானதொரு நடன விருந்தினைப் பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள ஒரு தினத்தை ஒதுக்க வேண்டும் என்றும் மனதுக்குள் தீர்மானித்தேன்.


கம்போடியாவில் ஒரு சில பெரிய உணவகங்களில் இரவு உணவோடு கலாச்சார நடனங்களையும் இணைத்த நிகழ்வு இருக்கும். அப்படியான ஒரு அமைப்பில் தாய்லாந்திலும் இருக்குமா என்று தாய்லாந்து சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புக்களை அலசினேன். அதில் கிட்டியது Prativati என்றதொரு உணவகம். ஒரு நாள் மாலை கொஞ்சம் சீக்கிரமாகவே அந்த உணவகம் சென்று இரவு உணவையும் ஓர்டர் பண்ணி விட்டுக் காத்திருந்தேன். நடன நிகழ்வுகள் ஆரம்பமாக இன்னும் ஒரு மணி நேரமாகுமாம். ஒவ்வொரு சோற்றுப் பருக்கைகளையும் நிதானமாகச் சாப்பிட்டும் அந்த ஒரு மணி நேரத்தை எட்டவில்லை. என்னைத் தவிர இன்னும் ஒரு சிலர் தான் அங்கே இருந்தார்கள். நடன ஒத்திகைகள் நடந்து கொண்டிருந்தன. உணவகத்துக்குப் பக்கமாக ஓடும் நீரோடையில் பயணிக்கும் படகுகளையும் தூரத்தே தெரியும் கட்டிடங்களையும் வேடிக்கை பார்த்துப் பொழுதைப் போக்கினேன். நடன நிகழ்வு ஆரம்பமானது. முரசம் ஒலித்து ஆரம்பித்த அந்த நிகழ்வில் ஒரு சிறுமி கீபோர்ட் ஐ வாசித்து முடித்ததும், உடற்பயிற்சி விளையாட்டுக்களை ஆரம்பித்தார்கள். ஒரு சேலையை கூரையின் மேற் கட்டி அதில் ஆடியாடி விளையாடுக் காட்டினார்கள். அதற்குப் பிறகு ஒப்புக்கு ஒரு அம்மணி தாய்லாந்து கலாச்சார நடனம் ஒன்றை வழங்கி விட்டுப் போனாள். எனக்குக் கிட்டியது ஏமாற்றமே.

தாய்லாந்தின் கலாச்சார நடனங்கள் தவிர தாய்லாந்தில் Ramakien என்றழைக்கப்படும் இராமாயண இதிகாசக் கதையை அவர்களின் பாணியில் சொல்லும் நடன நிகழ்வுகள் வெகு பிரசித்தம். இதற்காக ஒவ்வொரு இரவு தோறும் இந்த இராமாயண நடன நிகழ்வைக் காட்சிப்படுத்தும் அரங்கங்களும் உண்டு. தாய்லாந்தின் மன்னர் முதலாம் இராமா அவர்கள் தாய்லாந்து நாட்டில் நிலவும் இராமாயணத்தை விரிவான நூலாக ஆக்கியிருக்கின்றார். அதை நான் நாடு திரும்பும் போது வாங்கியிருந்தேன். தாய்லாந்து நாட்டின் இராமாயணக் கதையை அறிந்து கொள்ள. இது தவிர இப்போது இன்னொரு நடனமும் அங்கே பிரபலமாகியிருக்கிறது. அதுதான் கணேஷ் என்றழைக்கப்படும் விநாயகரின் பிறப்பு. தாய்லாந்து நாட்டில் இப்போது விஷ்ணுவுக்கு நிகராக விநாயக வழிபாடும் பரவலாகப் பின்பற்றப்படுகின்றது என்பதற்கு ஆங்காங்கே உருவெடுத்திருக்கும் விநாயக விக்கிரகங்கள் மட்டுமல்ல, இவ்விதமான நடன அரங்கேற்றங்களும் புலப்படுத்தியது. அந்த விநாயகர் பிறப்பு குறித்த நடன நிகழ்வுக்கு நான் செல்லாவிட்டாலும் குறித்த நிகழ்வு குறித்த கையேட்டைப் பார்த்த போது விநாயகரின் பிறப்பு குறித்த சுருக்கமான வரலாற்றுக் குறிப்பு இருந்தது. அது நாம் அறிந்து கொண்ட (சக்தியினால் உருவாக்கப்பட்ட விநாயகர் தோற்றம்) மூலத்தினை ஒத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நான் தங்கியிருந்த ஹோட்டலின் முகாமையாளரின் என் தாய்லாந்து கலாச்சார நடனம் காணும் அவாவைச் சொன்னேன். அவர் நமுட்டுச் சிரிப்புடன் “ஒவ்வொரு நாளும் இரவு நடக்கும் காபரே நடனம் காண ஆசையா? கலக்கலாக இருக்கும்” என்றார். மனுஷன் நான் கலாச்சார நடனம் என்று ஏதோ சங்கேத மொழியில் கேட்டது இந்த காபரே நடனமாக்கும் என்று நினைத்து விட்டார் போல. “இல்லையில்லை நான் கேட்டது இங்குள்ள கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நடனங்கள்” என்று மேலும் விளக்கவே, அவர் தன்னுடைய சுற்றுலாக் கையேட்டை விரித்துப் பக்கங்கள் புரட்டி ஒரு இடத்தில் வந்து நின்றார். அந்தப் பக்கத்தில் தாய்லாந்து கலாச்சார நடனங்களை விதம்விதமான புகைப்படங்களாகக் காட்டிய ஒரு இடத்தின் விபரம் போடப்பட்டிருந்தது. அடுத்த நாள் காலை சுற்றப்போகும் இடங்களோடு இணைந்த சுற்றுலாவில் மாலை நேர நிகழ்ச்சியாக இதைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று தங்குமிட முகாமையாளர் சொன்னார். அதன்படி ஒழுங்கு செய்து பார்த்து ரசித்தது இந்த தாய்லாந்து கலாச்சார நிகழ்வுகளை.
கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் அவர்களது வாழ்வியலில் எந்த விதமான வித்தியாசங்களையும் காண முடியாது ஒத்திருந்தது தாய்லாந்தில் நான் கண்ட அவர்களின் நடன நிகழ்வு. வயலில் வேலை செய்வோர் பாடி ஆடும் காட்சிகளோடு , தாய்லாந்துக்கே தனித்துவமான குத்துச்சண்டையையும் நடத்திக் காட்டினார்கள். பாங்கொக்கில் வாரத்தின் பெரும்பாலான நாட்களின் மாலை வேளைகளில் குத்துச்சண்டைப் போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதை நான் வேறெந்த ஆசிய நாடுகளிலும் காணவில்லை.

ஆண்கள் கீழே உட்கார்ந்திருந்து கழிகளை வைத்து ஆட்டி அசைக்க அந்த ஆட்டத்தின் இடைவெளியில் ஆணும் பெண்ணுமாகச் சோடியிட்டு அந்தக் கழிகளுக்கு இடையில் இலாவகமாக ஆடும் நடனம், சிரட்டைகளைத் தட்டிக் கொண்டே மகளிர் ஆடும் ஆட்டம், சிலம்பைச் சுற்றி ஆணும் பெண்ணும் ஆடும் வீர விளையாட்டு, தாய்லாந்துக் கிராமங்களில் பயணிக்கும் மாட்டு வண்டிச் சவாரிகளும் யானைச் சவாரிகளும், இவற்றோடு அந்த நாட்டுக்கே தனித்துவமான மரபு முறை வாத்தியக் கருவிகளை இசைத்தவாறே பண் பாடும் சிறுவர்கள் என்று கலவையாக அமைந்த அந்த நிகழ்வின் இறுதியாக அமைந்தது தாய்லாந்தின் திருமணச் சடங்கு அமையும் விதம். மணமகளின் பெற்றோர் மணமகனின் கை பிடித்துத் தம் பெண்ணைத் தாரை வார்ப்பதில் இருந்து முழுமையானதொரு திருமணச் சடங்கைக் கண் முன் கொண்டு வந்து காட்டினார்கள். தாய்லாந்தின் பண்பாட்டு அமைப்பை ஒரே நிகழ்வில் கண்டு கொண்ட திருப்தியோடு , பங்கு கொண்ட கலைஞர்களோடு இணைந்து படம் எடுத்து விட்டு அரங்கைக் காலி செய்தது கூட்டம்.

12 responses so far