Archive for February, 2009

Feb 12 2009

கம்போடியாவில் கிட்டிய லிங்காபிஷேகம்

Published by under Uncategorized

நான் முன்னர் உலாத்திய Beng Melea ஆலயத்தைத் தொடர்ந்து அதே நாள் பயணத்தில் பார்க்க வேண்டிய தல யாத்திரையாக இருப்பது Koh Ker என்ற ஆலயங்களின் தொகுதி. இந்த Koh Ker ஆலயத்தொகுதிக்கு வருவதற்கு Siem Reap நகரில் இருந்து Damdek என்ற பிரதேசத்துக்கான கிழக்கு வழித்தடம் உபயோகப்படுக்கின்றது. இங்கே வருவதற்கான பாதைகள் இன்னமும் சீரமைப்பில் இருப்பதனால் கொஞ்சம் மேலதிக எச்சரிக்கையுடனும், முன் கூட்டிய நேர ஒழுங்கிலும் வருவது நல்லது. எனவே ஒரு நாட் பயணமாக இந்தத் தல யாத்திரையை வைத்துக் கொள்ளலாம்.

Koh Ker என்ற கோயிற் தொகுதி சியாம் ரீப் நகரில் இருந்து வடகிழக்கு நோக்கிய பிரதேசத்தில் இருக்கின்றது. கி.பி 928 ஆம் ஆண்டில் இருந்து கி.பி 944 ஆம் ஆண்டு வரையான கைமர் பேரரசின் தனித்துவமான ஆட்சிக் காலத்தின் எச்சங்களாக இந்த ஆலயங்கள் விளங்கி நிற்கின்றன கி.பி 928 இல் நான்காம் ஜெயவர்மன் அங்கோர் வாட்டில் இலிருந்து 100 கிலோ மீட்டர் தள்ளி Koh Ker என்ற இடத்தில் போட்டி இராசதானியாக அமைத்திருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. இந்த அரசன் மிகுந்த செல்வாக்கும் செல்வமும் கொழித்த இராச்சியத்தைக் கொண்டு நடாத்தியதால் இந்த Koh Ker நகரத்தைச் சூழவும் பரந்து விரிந்த பரப்பில் இந்து ஆலயங்களையும், மடாலயங்களையும் Rahal எனப்படும் பாரிய நீர்த்தேக்கத்தையும் அமைத்திருக்கின்றான்.


மேலே படத்தில் Koh Ker ஆலயத் தொகுதிகளில் ஒன்று

இந்த நான்காம் ஜெயவர்மன் கி.பி 941 ஆம் ஆண்டில் இறக்கும் வரை 20 ஆண்டுகள் Koh Ker ஐத் தலைநகராகக் கொண்ட ஆட்சியை நடாத்தியிருக்கின்றான். அவனைத் தொடர்ந்து வந்த அவன் மகன் இரண்டாம் ஹாஷாவர்மன் தொடர்ந்து இதே நகரினை மூன்றாண்டுகள் தலைநகராக வைத்து ஆட்சி நடாத்தி விட்டுப் பின்னர் அங்கோர் நகரத்துக்கு தனது தலைநகரை மாற்றிக் கொண்டான். Koh Ker இன் ஞாபகச் சின்னங்களாக விளங்கும் முக்கிய ஆலயங்கள் நீர்தேக்கத்தை அண்டிய பாதை வழியே தொடர்ந்து அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது Prasad Thom எனப்படும் ஆலயம் 7 அடுக்குகள் கொண்ட பிரமிட் வடிவினதான ஆலயமே இந்த Prasad Thom ஆகும்.

Prasad Thom

மேலே படங்கள் Prasad Thom ஆலயம்

முதலில் நாங்கள் சென்றது Prasad Thom இற்குத் தான். முப்பது மீட்டர் நீளமான நீண்ட பெரிய ஏழு அடுக்குகளோடு பிரமிட் வடிவினதாக இருந்தது இவ்வாலயம். மேலே பார்த்தால் கழுத்தைச் சுழுக்கி விடும் போல இருந்தது. நாங்கள் போன கெட்ட நேரம் இந்த ஆலயத்தின் திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் மேல் உச்சிக்குப் போக முடியவில்லை.
ஆவென்று இந்தக் கோயிலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு பிக்குவும், அவரைச் சூழச் சிலருமாக ஏதோ பேசிக் கொண்டே கடந்தார்கள். சுற்றுலா வழிகாட்டி என்னைச் சுரண்டிச் சொன்னார், அந்தப் பிக்குவோடு போகின்றவர்களில் ஒருவர் முன்னர் பொல் பொட்டின் படையில் இருந்தவராம்,வியட்னாமுக்கும் பொல் பொட்டின் படைகளுக்கும் சண்டை நடந்த போது இந்தக் கோயிலின் மேல் உச்சியில் தாங்கள் மறைந்திருந்ததாக அவர் பிக்குவுக்குச் சொல்கிறார் என்று சொல்லிச் சிரித்தார். முன்னர் நாங்கள் போன Beng Melea போன்ற ஆலயங்களின் பிரமாண்டமும், உறுதியான கட்டிட வேலைப்பாடுகளும், மக்களால் பல ஆண்டுகளாகக் கைவிடப்பட்ட நிலையில் புதிர் மண்டிப் போய் பொல் பொட்டின் படைகளின் மறைவிடமாகப் பயன்பட்டிருக்கின்றன. பின்னர் யுத்தம் ஓய்ந்து பொல் பொட்டின் ஆட்சி களையெடுக்கப்பட்டதும் அவனோடு பணியாற்றிய படையணிகள் இயல்பு வாழ்க்கைக்கு மாறி விட்டனர். 2002 ஆம் ஆண்டு வரை சன நடமாட்டமோ, புழக்கமோ இல்லாந்த இப்பிரதேசம் அவர்களால் தான் இந்த ஆலயங்கள் பலவும் உலகுக்குக் கண்டு பிடிக்கப்பட்டு சொல்லப்பட்டன. இன்று சுற்றுலா வருவாயை இந்த ஆலயங்கள் அள்ளிக் கொடுக்க இந்த பொல் பொட்டின் ஆட்கள் ஒருவகையில் காரணமாகி விட்டார்கள்.

மேலே படங்கள் வெள்ளை யானைச் சமாதி

Prasad Thom கோயிலின் பின்புறத்துக்கு அழைத்துச் சென்றார் வழிகாட்டி அங்கே ஒரு மலை போன்ற திட்டியும், உச்சியில் ஏதோ சிறு பீடமும் தெரிந்தது. அரசனின் பிரியத்துக்குரிய வெள்ளை யானை ஒன்று இறந்த கவலையில் அந்த யானையை இவ்விடத்தில் சமாதியாக்கி விட்டு நினைவிடமாக ஆக்கிவிட்டான். எதுவிதமான வழித்தடங்களும் இல்லாமல் அகப்படும் சிறு சிறு செடிகளைப் பற்றியவாறே இந்தச் சமாதியின் மேல் உச்சியை அடைவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. ஆனாலும் தன் யானை மேற் கொண்ட பிரியத்தின் வெளிப்பாடாக அமைந்த இந்த இந்தச் செயலை நினைத்து வியந்தேன் அப்போது.

அங்கிருந்து நானும் வழிகாட்டியும் அகன்று எமது வாகனச் சாரதியைத் தேடினோம். எங்கே போனார் இவர் என்று தேடினால் அங்கே கோயில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பெண்களிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார் இவர். கம்போடியாவின் எல்லாக் கோயில்களுக்குமே சீருடை தரித்த காவலாளிகள் ஆணோ பெண்ணோ இருக்கின்றார்கள். நமது சாரதி பெண் காவலர்களை விடமாட்டார் போல என்று என்று கிண்டலடித்தார் வழிகாட்டி. சாரதி கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டார்.

வாகனச் சாரதி கடலை போட்ட பெண் காவலர்கள் இவர்கள் தான் 😉

மேலே படத்தில் கோயிலைக் காக்கும் காவலர்கள்

நாம் இருந்த அந்தப் பிரதேசம் கம்போடியாவுக்கும் தாய்லாந்து நாட்டுக்கும் இடையேயான எல்லைக் கிராமம். இங்கிருந்து வெறும் 70 கிலோ மீட்டரில் தாய்லாந்தை அடைந்து விடலாம். தாய்லாந்து போவது சிரமமான காரியமா என்று கேட்டேன் நம்மவரிடம். தாய்லாந்து எல்லைக் காவலர்களுக்குச் சம்திங் வெட்டினால் எல்லாம் சுலபம் என்று சொல்லிச் சிரித்தார் வழிகாட்டி.


மேலே படங்கள் கண்ணி வெடிப்பிராந்தியம்

நாம் வந்திருந்த இந்தப் பிரதேசம் எங்கும் க்டந்த வியட்னாமிய படையெடுப்பின் போது விதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படாத பல காணிகள் இருக்கின்றன. அதை உறுதி செய்யுமாற் போல கண்ணிவெடிகள கவனம் என்ற எச்சரிக்கைப் பலகைகள் முளைத்திருக்கின்றன.

Koh Ker ஆலயங்கள் விஷ்ணுவுக்கும் சிவனுக்குமாக அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வூர் மக்கள் சித்திரையில் வரும் தமது புதுவருஷக் கொண்டாட்டங்களை கொண்டாடுவதற்கு ஏற்பாக அவர்களுக்கு அண்மித்த பகுதியிலேயே இவ்வாலயங்களை நான்காம் ஜெயவர்மன் அமைத்துப் புண்ணியம் தேடிக் கொண்டான் என்று சொல்லப்படுகின்றது.

ஆலயமொன்றில் பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுச் சாசனங்கள்

Prasat Balang மற்றும் Prasat Thneng ஆகிய சிறு சிறு ஆலயங்களில் இன்னமும் பிரமாண்டமான சிவலிங்க விக்கிரகங்கள் இருக்கின்றன. இவ்வகையான பன்னிரண்டு ஆலயங்கள் இந்தப் பகுதியில் மட்டுமே எழுப்பப்பட்டிருப்பது ஆச்சரியத்தை உண்டு பண்ணுகின்றது. Prasat Balang இருக்கும் சிவலிங்க விக்கிரகத்தைப் பார்த்தவாறே உறைந்து நின்ற என்னைத் தட்டி கையில் இருந்த உடைக்காத தண்ணீர்ப் போத்தலைக் கொடுத்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யுமாறு சொன்னர் என் வழிகாட்டி. நானும் ஆவல் மேலிட தண்ணீர்ப் போத்தலை வாங்கி அந்த லிங்கத்தின் உச்சியில் எல்லாப் பக்கமும் நீரைச் சிதற விட்டேன். உள்ளத்தில் ஆண்டவனை ஒருகணம் நினைத்துப் பிரார்த்தித்தேன். தூரத்தில் நின்ற வழிகாட்டி கைகள் இரண்டையும் கூப்பியவாறே கண்களை மூடிப் பிரார்த்தித்துக் கொண்டார்.

மேலே படத்தில் Prasat Chreng என்ற ஆலயம்
மேலே படத்தில் Prasat Pram ஆலயம்
மேலே படத்தில் Prasat Thneng ஆலயம்
மேலே படத்தில் முற்றாக அழிந்த ஆலயம் ஒன்று புதருக்குள்

இந்த நாள் பயணத்தோடு என்னோடு இதுவரை நாள் பயணித்த சுற்றுலா வழிகாட்டி Sib Chong விடைபெறும் நேரம் வந்தது. எனது கம்போடியப் பயணத்தில் நான் திட்டமிட்டதற்கு மேலாக பலவகையிலும் வழிகாட்டி என்ற வரையறைகளைக் கடந்து கிளிப்பிள்ளை போல எனக்கு வரலாற்றுப் பாடம் சொல்லித்தந்த அவரைப் புகழ்ந்து நன்றி சொல்லி அவரின் மின்னஞ்சலையும் பெற்று வழியனுப்பி வைத்தேன். அடுத்த நாள் நானும் கார்ச்சாரதியுமாக மட்டுமே உலாத்தலைத் தொடரவேண்டும்.உசாத்துணை:
சுற்றுலா வழிகாட்டி
கம்போடிய சுற்றுலாக் கையேடு

14 responses so far

Feb 09 2009

கம்போடியாவில் இந்திய உணவைத் தேடிய அபலை ;)

Published by under Uncategorized

எல்லாம் சரியாகத்தான் நடந்தது, நடுவில் ஏதோ ஒன்று வந்து எல்லாவற்றையும் குழப்பி விட்டது என்பது போலத் தான் சாப்பாட்டு விஷயத்தில் எனக்கும் நடந்தது. நான் தங்கியிருந்த அங்கோரியானா ஹோட்டலில் பெரும்பாலும் எல்லா ஹோட்டல்கள் போல காலை உணவையும் சேர்த்தே கட்டணம் அறைவிட்டிருந்தார்கள் என்பதால் முதல் நாட் காலை ஆறு சீக்கிரமாகவே உணவாராய்ச்சி செய்ய ஹோட்டலின் உணவு பரிமாறும் இடம் போனேன்.

அங்கோரியானா ஹோட்டலின் உணவு பரிமாறும் இடம்

எங்கள் ஊரில் வரும் நாட்டுக் கோழி முட்டைகளின் சுவையே தனி, அதே வகை முட்டைகளை பல வருஷங்கள் கழித்து அங்கே கண்டதும் காதல் மேலிட்டது. பக்கத்தில் பாண் (பிரெட்) துண்டங்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் தட்டில் போட்டு, முட்டைகளை அங்கே நின்ற சமையற்காரரிடம் உடன் பொரிக்க வைத்து சாப்பிடுவது இதமாகத் தான் இருந்தது. கம்போடியப் பாணும் மெதுமெதுப்பாகவும் பதமாகவும் இருந்தது. அங்கே பரிமாறிய காலை உணவில் பாண் துண்டங்கள், முட்டை தவிர்த்து, சீரியலும், பழவகைகளும், தேனீரும் மட்டுமே இருந்தன. எனவே அதிகம் ஆசையும் வைக்க முடியாமல் கிடைத்ததை வைத்து வயிற்றை நிரப்பிக் கொண்டேன்.

அந்த நாள் காலை முழுவதும் அங்கோர் வாட் எல்லாம் ஏறி இறங்கிக் களைப்பாகி எங்காவது வயிற்றை நிரப்பலாம் என்று நானும், சுற்றுலா வழிகாட்டியும், ருக் ருக் வண்டிக்காரரும் ஒதுங்கியது ஒரு பாரம்பரிய கம்போடிய உணவகத்தில். உணவுப்பட்டியலில் புரியாத உணவை ஓடர் செய்து ரிஸ்க் எடுக்காமல் பச்சை மிளகாய் கலந்த கோழிக்கறியையும், வெள்ளை அரிசிச் சோற்றையும் ஓடர் செய்தேன். என்னோடு வந்த வழிகாட்டியும் ஏதோ ஒன்றை தன் மொழியில் கடைச்சிப்பந்திக்குச் சொல்லி வைத்தார். உணவும் வந்தது. பார்க்க அம்சமாகத்தான் இருந்தது கோழிக்கறி. எனது வழிகாட்டியின் உணவுத்தட்டைப் பார்த்தேன் வாழைப்பூவியில் பச்சடி செய்தது போல ஏதோ ஒரு கறியும், அரிசிச்சாதமும் அவர் தட்டில். பேசாமலேயே இருந்திருக்கலாம், என் ஆர்வக்கோளாறு அது என்னவென்று கேட்டுத் தொலைத்து விட்டேன். அவரும் மிகவும் இயல்பாக “இது! கரப்பான் பூச்சியில் செய்த துவையல்” என்று விட்டு அதைக் குழைத்தவாறே சுவைக்க ஆரம்பித்தார். எனக்கு சப்த நாடியும் ஒருகணம் அடங்கிப் போனது போல பிரமை. ஆடு, கோழி , மீன்வகையறாக்கள் என்று பறப்பது, நடப்பது, பாய்வது என்று ஒன்றும் விடாமல் சாப்பிடும் என்னையே உலுக்கிப் போட்டது நான் கண்ட காட்சி. என் உடம்பெல்லாம் ஓராயிரம் கரப்பான் பூச்சிகள் நெளிவது போல ஒரு பிரமை. இராணுவ முகாமில் அகப்பட்ட கைதியைப் போல சோற்றையும், கோழிக்கறியையும் அவுக் அவுக் என்று சாப்பிட்டேன் இல்லையில்லை விழுங்கினேன். அப்போதே மனதில் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டேன். இனிமேல் பாரம்பரிய கம்போடிய உணவகத்தின் வாசற்படியே மிதிப்பதில்லை என்று.

கம்போடியர்களைப் பொறுத்தவரை கரப்பான் பூச்சி தவிர, தவளை, நத்தை போன்றவற்றின் அருமை பெருமையையும் தெரிந்து தம் பாரம்பரிய உணவாக மாற்றிக்கொண்டவர்கள். இதுக்கு மேல் என்ன சொல்ல 😉

எனவே கம்போடியாவிற்கு வருபவர்கள் முன் கூட்டிய பாதுகாப்பு வேலைகளோடு களம் இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சைவ உணவு மட்டும் உண்போர் மேற்கத்தேய அல்லது இந்திய உணவகங்களில் தயார் செய்தவற்றை வாங்கிப் பத்திரப்படுத்தி அந்தந்த நாள் உண்டு களிக்கலாம்.

மேலே படத்தில் மஹாராஜா உணவகம்

மதியம் திருப்தியில்லாத சாப்பாடு சாப்பிட்ட கொடுமை மாலையில் வயிற்றில் கொடும்பசி என்னும் துன்பத்தைக் கொடுத்தது. சுற்றுலாக் கையேட்டினை விரித்து ஏதாவது இந்திய உணவகங்கள் அண்மித்ததாக இருக்கின்றதா என்று தேடினால் வந்தது மகாராஜா என்னும் இந்திய உணவகம். ருக் ருக் வண்டியொன்தைப் பிடித்து அந்த உணவகம் சென்றேன். உணவுப் பட்டியலில் வட இந்திய உணவுக்குவியலில் போனாப் போகுது என்று ஒரு சில தென்னிந்திய உணவும் இருந்தன. மகாராஜா ஸ்பெஷல் புரியாணி என்ற சொல்லில் என் கண் பதிந்து வாய் வழியே ஓடர் செய்தது. ஹோட்டல் உரிமையாளர் பாகிஸ்தானியாம் ஐந்து வருஷத்துக்கு மேலாக இதை நடத்துகிறாராம். அரை மணிக்கு மேல் சமையல் அறையில் ஏதோ போராட்டம் நடந்து ஒரு வழியாக வந்த போது என் பசியும் பறந்து விட்டது. இரண்டு கரண்டியை மட்டும் வாயில் வைத்து விட்டு மீதியை பார்சல் செய்து ஹோட்டலில் வந்து சாப்பிட ஆரம்பித்தால் புரியாணியில் இருப்பது அரிசியா? உப்பா? என்று சாலமன் பாப்பையாவை அழைத்துப் பட்டிமன்றம் வைக்கச் சொல்லலாம் போலிருந்தது. முன்னர் பசியோடு சாப்பிட்டதால் சுவை தெரியவில்லை.

மேலே படத்தில் தாஜ் இந்தியா உணவகம்

அடுத்த நாள் மாலைக்கு மஹாராஜா வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு நான் போன இடம் தாஜ் இந்தியா என்ற உணவகம். அங்கே போய் இருக்கையில் இருந்தும் பதினைந்து நிமிடத்துக்கு மேல் மயான அமைதி. வெளியே இருந்து ஒரு இந்தியர் போல தோற்றமளித்தவர் ஆங்கிலமும் கம்போடிய மொழியும் கலந்து சமையலறையில் இருப்பவரைக் கூவி அழைத்தார். அவர் தான் உரிமையாளர், பங்களாதேஷ் நாட்டவராம். (என்ன கொடும சார் இந்திய உணவகங்களில் ஒன்று பாகிஸ்தானி மற்றது பங்களாதேஷியா?)
உள்ளேயிருந்து அலறியடித்துக் கொண்டே ஓடிவந்தாள் ஒரு கம்போடிய மங்கை. அரிசிச் சாதமும், சிக்கன் டிக்காவும் ஓடர் செய்தேன். ஓடர் செய்து சாப்பிட்டு முடியும் வரைக்கும் தன் கடையில் வேலை செய்யும் அந்த கம்போடிய மாதை திட்டித் தீர்த்துக் கொண்டேயிருந்தான் அந்த பங்களாதேஷி. எனக்கு ஆச்சரியமாக இருந்தது, இந்நேரம் பொல்பொட்டில் ஆட்சியென்றால் இவனைக் கூறு போட்டு சிக்கன் டிக்காவாக அவள் மாற்றியிருப்பாள். இங்கும் என் சாப்பாடும் திருப்திப்படவில்லை, சூழ்நிலையும் சரிப்படவில்லை.
மேலே படத்தில் காமசூத்ரா உணவகம்

சற்றுத் தள்ளி காமசூத்ரா என்னும் இந்திய உணவகம் தென்பட்டது. அது இந்திய உணவகம் என்பதை விட மேற்கத்தேய நடனங்களும், மதுவும் கலக்கும் இடம். எனவே காமசூத்ராவுக்கும் “கா”. காமசூத்ரா உணவகத்தை நடத்துவது மூன்றாம் தலைமுறை இந்தியராம் யாரோ சொன்னார்கள்.மேலே படத்தில் அங்கோரியானா ஹோட்டலுக்குப் பக்கத்தில் இருந்த Coffee Shop

அடுத்த நாட் காலையும் பயணம், ஊர் சுற்றும் இடங்களில் எல்லாம் வெளிநாட்டு உணவகங்கள் மருந்துக்கும் இல்லை. எனவே என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே நான் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பக்கமாக இருந்த நடைபாதையில் நடக்கத் தொடங்கினேன். அடுத்த கட்டிடத்திலேயே Coffee Shop ஒன்று பல்லிளித்து வரவேற்றது.
உள்ளே போனால் அரை மணி நேரத்துக்கு ஒரு அமெரிக்க டொலர் என்று இன்ரநெட் வசதியுடன் மேற்கத்தேய காபி ஷாப் அது. உள்ளே இருந்த அலங்காரங்களும் பக்காவாக இருந்தன. அங்குள்ள சிப்பந்தி ஒரு பதினெட்டு வயசு மதிக்கத்தக்க பையன், பாவாடை போன்ற ஒரு வஸ்தை ஆடையாகப் போட்டிருந்தான்,தலையை கீழே சாய்த்து வரவேற்றான்.
அரைமணி நேரம் இணையத்தில் தமிழ் மணம் பக்கம் வலம் வந்து கொண்டே மதியத்துக்குத் தேவையாக சாண்ட் விச் பொட்டலங்களை ஓடர் செய்தேன். அந்தப் பையன் என் பக்கத்தில் வந்து பேச்சுக் கொடுத்தான். எனக்கு விஷயம் மெல்லப் புரிந்தது. இந்த மாதிரி அனுபவம் எனக்கு முன்னர் சீனப்பயணத்தின் போதும் ஏற்பட்டது. அதாவது இப்படியான நாடுகளில் இருக்கும் இளம் பிள்ளைகள் வெளிநாட்டவரைக் கண்டதும் தாமாகவே பேச்சுக் கொடுத்து சம்பாஷணையை வளர்ப்பதன் மூலம் ஆங்கில மொழியறிவை விருத்தியாக்க விரும்புகின்றனர். நானும் அவனுக்கு என் சொந்த ஊரில் இருந்து ஆதியோடந்தமாக சம்பாஷித்தேன். அவன் கூட கம்போடிய கிராமம் ஒன்றிலிருந்து வறுமையின் கொடுமையால் நகரத்துக்கு வந்தவனாம். இரவுப்பள்ளியும், வேலையுமாகத் தன் இளமையைக் கழிக்கின்றான் இவன். நான் கம்போடியாவில் தங்கிருந்த அடுத்த சில நாட்களுக்கு அவன் தான் எனக்கு நல்ல பேச்சுத் துணையாக இருந்தான்.

28 responses so far

Feb 08 2009

இரண்டாம் சூர்யவர்மனின் Beng Mealea ஆலயம்

Published by under Uncategorized


நான் முன்னர் சொன்ன பதிவில் சொன்னது போல சியாம் ரீப் நகரைக் கடந்து கிராமப்புறங்களை அண்டியதான கோயில்களுக்கு எமது உலாத்தல் தொடர்ந்தது. பொதுவாக கம்போடியாவிற்கு வருபவர்கள் பலர் செய்யும் தப்பு இங்கேயுள்ள அங்கோட் வாட் ஆலயத்தையும், அதனைச் சூழவுள்ள ஒரு சில ஆலயங்களையும் பார்த்தால் போதுமென்று. ஆனால் நாலைந்து நாட்கள் மேலதிகமாகச் சிரமமெடுத்தால் இந்தக் கம்போடிய நாட்டின் வரலாற்றுத் தொன்மை மிக்க இன்னும் பல ஆலயங்களைக் காணும் பாக்கியம் பெறுவதோடு, அந்தக் காலத்தில் நம் இந்து மதத்தின் செழுமையையை இவ்வகையான வரலாற்றுச் சுவடுகளினூடே கண்டு வியக்கவும் முடியும்.

அந்த வகையில் நாம் அடுத்துச் சென்ற ஆலயம் இரண்டாம் சூர்யவர்மனால் கி.பி 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட Beng Mealea. சியாம்ரீப் நகரில் இருந்து 77 கி.மீ தொலைவில் இருக்கும் இவ்வாலயம் ஒரு இந்துக் கோயிலாக நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு பெரும் புதர் நடுவே இருக்கும் இவ்வாலயப் பிரதேசம் சுற்றுலாப் பயணிகளின் மிகக் குறைந்த கவனத்தையே ஈர்த்துள்ளது. அழிந்த சுவடுகளோடு பெரும் பற்றைகளுக்கு மத்தியில் இடிபாடுகளாய், மரஞ்செடிகள் முளைத்தெழுந்த ஆலயமாக இருக்கின்றது.

மேலே படத்தில் ஆலயத்தினை அண்டிய நீர்ச்சுனையில் விளையாடும் பன்றிகள்
மேலே படத்தில் ஆண்டவனுக்கு ஷம்பெயின் போத்தல்களைக் காணிக்கையாக்கியிருக்கிறார் அன்பர் ஒருவர்.

மேலே படத்தில் புதரும், ஜேர்மனி உதவியோடு மிதிவெடி அகற்றும் பணித்திட்டம் குறித்து அறிவிப்புப் பலகையும்

இந்த ஆலயத்துக்கான தனி நுழைவுக்கட்டணமாக ஐந்து அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்றன. முழுமையாக விஷ்ணு பகவானுக்கான கோயிலாகவும், அங்கோர் வாட் கட்டிட வகைக்குள் கட்டிட வல்லுனர்களால் இது வகைப்ப்படுத்தப்பட்டிருக்கின்றது. முன்னர் பொல் பொட்டின் படைகளுக்கும், வியட்நாமுக்கும் இடையிலான போரின் போது மிதிவெடிகள் பல புதைக்கப்பட்டு இப்போது தான் அவற்றை ஜேர்மன் நாட்டின் உதவியோடு அகற்றியிருக்கின்றார்கள். நான்கு நூலகங்கள் அமைக்கப்பட்டிருந்திருக்கின்றன.

மேலே படத்தில் மிதிவெடி அகற்றிய பகுதி ஒன்று
மேலே படத்தில் நாகதலைகள் கொண்ட சிலை
மேலே படத்தில் கிருஷ்ண பகவான்
மேலே படத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் காட்சி
மேலே படத்தில் வெள்ளையானையின் மேல் இந்திரன் சிற்பம்

பாற்கடலைக் கடையும் காட்சி, இந்திரன், கருட பகவான் உருவங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. நீர்த்தடாகம் ஒன்றும் ஆலயச்சூழலில் இருந்திருக்கின்றது. இப்போது வெறும் வரண்ட பிரதேசமாகவே இருக்கின்றது.

மேலே படத்தில் பிரஞ்சுக்காரர்களால் களவாடப்பட்ட நகைப்பெட்டகம் சிதைந்த நிலையில்

நகைகள் போன்ற ஆபரணங்களைப் புதைத்து ஆலயத்தினை எழுப்பும் வழக்கம் இங்கேயும் பின்பற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் பின்னாளில் ஆட்சி செய்த பிரஞ்சுக்காரர்கள் இவ்வாலயத்தைக் கண்டு பிடித்தபோது அந்தப் புதையலைத் திருடி விட்டார்கள்.

மேலே படத்தில் கோயில் காவற்பணியில் இருக்கும் பெண் நீர்ச்சுனையில் அகப்பட்ட தவளையைக் கையில் ஏந்தித் தன் உணவாக்கக் காத்திருக்கிறாள்

மேலே படத்தில் இடமிருந்து வலம், எமது கார்ச்சாரதி, அவருக்குப் பக்கத்தில் சுற்றுலா வழிகாட்டி

Beng Mealea ஆலயத்தின் தரிசனம் முடிந்து எமது அடுத்த உலாத்தலுக்கு முன்னர் ஆலயச் சூழலில் இருந்த உணவு விடுதியில் மதிய உணவை எடுத்துக் கொண்டோம். சுற்றுலா வழிகாட்டி நூடில்ஸை சுவைத்துக் கொண்டே சொன்னார் “இந்தப் பகுதி தாய்லாந்து நாட்டின் எல்லைக்கு அண்மித்ததாக இருப்பதால் அந்த நாட்டில் தயாராகும் உணவுவகைகள் இங்கே தாராளமாகக் கொண்டு வரப்பட்டு விற்பனையாகின்றன. இந்த நூடில்ஸும் வழக்கத்தை விட மிகவும் சுவையாக இருப்பதற்குக் காரணம், இவை தாய்லாந்திலிருந்து வந்திருப்பதால் தான்” என்று சொல்லிக் கொண்டே உறிஞ்சினார் நூடில்ஸ் கலவையை.

Beng Mealea ஆலயச் சூழலைக் காட்டும் மேலும் சில படங்கள்உசாத்துணை:
கம்போடிய சுற்றுலாக் குறிப்புகள்
கம்போடிய சுற்றுலாவழிகாட்டி

5 responses so far

Feb 07 2009

ஹரிஹரா நகரின் சிவன் ஆலயங்கள்

Published by under Uncategorized

மூன்றாம் நாட் காலை சுற்றுலா தொடங்கியது. இந்த நாள் நீண்ட தூரப்பயணமாகவும், அடுத்த நாள் சுற்றுலா வழிகாட்டி தனது மனைவியின் தங்கை திருமணத்துக்காக சொந்தக் கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் இன்றே அதிகப்படியான ஆலயங்களைப் பார்த்துவிடுவோம் என்று சொன்னார். எனவே வழக்கத்தை விட இன்னும் சீக்கிரமாகவே எழுந்து காலை ஆறரை மணிக்கெல்லாம் தயாராகி விட்டேன். ஏழுமணியளவில் வாடகைக்காரும், சுற்றுலா வழிகாட்டியும் வந்து சேர, எம் பயணம் ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட கம்போடிய – தாய்லாந்து எல்லை வரை செல்லப்போகும் பயணம் இதுவென்பதால் அந்த வழித்தடத்தை ஒட்டிய கோயில்களைக் கண்டு செல்லலாம் என்பதே எமது தீர்மானம்.

அங்கோரியர்களின் சகாப்தமான கைமர் பேரரசின் முதன்மையான தலைநகராகிய ஹரிஹராலயாவில் இருக்கும் ஞாபகச் சின்னங்கள், ஆலயங்களின் தொகுப்பை Roluos Group என்று வகைப்படுத்துகின்றார்கள். மிகவும் நவீனமயமாக அந்தக் காலகட்டத்தில் எழுப்பப்பட்ட இந்த நகர் சிவன், விஷ்ணு ஆகிய உயர் தெய்வங்களை ஞாபகப்படுத்தும் விதத்திலேயே ஹரிஹராலயா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்ரது. அங்கோர் வாட் காலத்துக்கு முன்னதான இக்காலப்பகுதியில் ஹரிஹராலயா என்ற நகரை உருவாக்கி எழுபது வருஷங்கள் ஆட்சி செய்தவன் இரண்டாம் ஜெயவர்மன். அடுத்த நான்கு நூற்றாண்டுகளின் போக்கை எடுத்துக் கொண்டால் இந்த ஹரிஹராலயாவில் எழுப்பப்பட்ட Bakong, Preah Ko, Lolei, Baray (நீர்த்தேக்கம்) ஆகியவை முக்கிய இடம் பெறுகின்றன. இந்த ஹரிஹராலயா நகரில் ஆட்சி செய்த இறுதி மன்னன் முதலாம் யசோவர்மன், இவன் தான் அங்கோர் பகுதியில் எழுப்பப்பட்ட முதல் பெரும் ஆலயமான Phnom Bakheng ஐ நிறுவியவன். இந்த Roluos Group சியாம் ரீப் நகரில் இருந்து 13 கி.மீட்டர் தொலைவில் அதாவது 20 நிமிட நேரத் தூரத்தில் இருக்கின்றது. இந்த நகரில் இருக்கும் ஆலயங்களுக்கான நுழைவுக் கட்டணம் ஏற்கனவே அங்கோர் சுற்றுலாவுக்கான மூன்று நாள் பாஸ் இல் அடக்கப்பட்டிருக்கின்றது எனவே மேலதிக கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.

Roluos Group இல் முதலில் நாங்கள் சென்றது Preah Ko என்ற ஆலயம்.

முதலாம் இந்திரவர்மன் எழுப்பிய Preah Ko ஆலயம்

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் இந்திரவர்மனால் எழுப்பப்பட்ட இவ்வாலயம் ஓர் இந்துக் கோயிலாகும். இவ்வாலயத்தின் கட்டிட அமைப்பினையும் Preah Ko என்ற வகுப்புக்குள்ளேயே கட்டிட வல்லுனர்கள் வகைப்படுத்துகின்றார்கள்.

ஆறு கோபுர அடுக்குகளைக் கொண்ட, சிறந்ததொரு சிற்பவேலைப்பாடுகள் அமைந்த இவ்வாலயம் கைமரின் முதன்மையான தலைநகராகிய ஹரிஹராலயாவில் எழுப்பப்பட்ட ஆலயங்களில் முதன்மையானதொன்றாகும். Preah Ko என்பதன் அர்த்தம் Sacred Bull என்பதாகும். இந்த ஆலயத்தின் மத்திய கோபுரங்களின் முகப்பில் எருதுகளின் சிலைகள் இந்தப் பெயரினை உறுதி செய்கின்றன.


அழகிய செதுக்கோடு இருக்கும் கல் சன்னல்


மேலே படத்தில் லிங்கத்தின் அடிப்பாகம் மட்டும் எஞ்சிய நிலையில்

இவ்வாலயம் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் அதாவது கி.பி 879 இல் முதலாம் இந்திரவர்மனால் சிவபக்தர்களான தனது குடும்ப உறுப்பினர்களை கெளரவிக்கும் பொருட்டு எழுப்பட்டது இவ்வாலயம். எருது என்பது சிவ சிந்தனையோடு நிதமும் சிவன் பால் தொடர்ந்திருக்கும் ஒரு உயிரினம். அதே போல இவ்வரசனின் குடும்ப உறுப்பினர்களும் சிவபெருமான் மீது கொண்ட தீராத பக்தியைக் குறிப்பால் உணர்த்துகின்றது என்று நான் நினைக்கின்றேன்.

ஆறு கோபுரங்களில் மையக் கோபுரம் கைமர் பேரரசை உருவாக்கிய இரண்டாம் ஜெயவர்மன் ஞாபகார்த்தமாகவும், இடது புறக் கோபுரம் இரண்டாம் ஜெயவர்மன் தந்தை பிரிதிவிந்திரேஸ்வரா ஞாபகார்த்தமாகவும், வலப்புறக்கோபுரம் அவனின் பாட்டனார் ருத்ரேஸ்வரா ஞாபகார்த்தமாகவும் பின்னால் உள்ள கோபுரங்கள் அவர் தம் மனைவியர் ஞாபகார்த்தமாகவும் எழுப்பப்பட்டிருக்கின்றன. மையப்பகுதியில் இருக்கும் கோபுரங்களில் சிவபெருமானின் இலட்சணைகளும், உருவங்களும், துவாரபாலகர் சிலையும் இருக்கின்றன.

மேலே படத்தில் துவாரபாலகர் சிலையொன்று

கம்போடியாவின் வடமேற்கு மாகாணமான Banteay Meanchey என்ற இடத்தில், அங்கோர் வாட்டில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் இவ்வாலயச் சூழல் அமைந்த ஹரிஹ்ராலயா என்ற நகரம் இப்போது் Roluos என்றே அழைக்கப்படுகின்றது.

முதலாம் இந்திரவர்மன் எழுப்பிய Bakong ஆலயம்
Preah Ko ஆலயத்தைத் தரிசித்து விட்டு, அதே சூழலில் இருந்த Bakong ஆலயம் நோக்கிச் சென்றோம். இந்த ஆலயமும் சமகாலத்தில் முதலாம் இந்திரவர்மனால் எழுப்பப்பட்டது. அதாவது ஒரு சிவனாலயமாக கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் (கி.பி 881 இல்) எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவ்வாலயத்தின் கட்டிட அமைப்பை முன்னர் நாம் பார்த்த Preah Ko என்ற கட்டிட அமைப்பில் வகைப்படுத்தியிருக்கின்றனர் கட்டிட வல்லுனர்கள்.

மேலே படத்தில் ஆலய மேற்பகுதி

Bakong 15 மீட்டர் உயரத்தில் 650 X 850 மீட்டர் வெளிச்சுற்றிலும் அடங்குகின்றது. அடுத்த நானூறு ஆண்டுகளுக்கான கைமர் கட்டிடக் கலையின் செழுமையின் முன்னோடியாக, ஒரு மலைக் கோயிலாக எழுப்பப்பட்டிருக்கும் இவ்வாலயம் மிகத் தொன்மையான கட்டிடக்கலையின் கூறாக செங்கற்களுக்குப் பதிலாக கற்களை மட்டுமே உபயோகித்து எழுப்பப்பட்டிருக்கின்றது.

ஆலய மேற்பகுதியில் இருக்கும் யானைச் சிலைகள்மேலே படத்தில் அகழியைச் சுற்றிப்படுத்திருக்கும் நாகம்
மேலே படத்தில் ஆலயத்தினை ஒட்டிய நீர்த்தடாகம்

முதலாம் ஜெயவர்மனால் இவ்வாலயத்திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் மேலதிக கட்டுமானங்களும், வேலைப்பாடுகளும் பின்னாளில் வந்த அரசர்களாலும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக மேல் உச்சியில் இருக்கும் கோபுரத்தினை கி.பி 12 ஆம் நூற்றாண்டிலேயே சேர்த்திருக்கின்றார்கள். வனப்புமிகு அகழியும், பசுமையான சூழ்நிலையும் இந்த ஆலயச் சூழலாக அமைந்திருப்பது சிறப்பு. ஆலய முகப்பில் இருக்கும் அகழியின் சுவராக நாகத்தின் கிடை உருவம் இருக்கின்றது.

மேலே படத்தில் வழிபாட்டுப் பொருட்களோடு மூலவர் கர்ப்பக்கிருகம்


மேலே படத்தில் நந்திச் சிலையொன்று
மேலே படத்தில் சிதைந்து போன நந்திச் சிலையின் சிதைவுகளைப் பொருத்தியிருக்கின்றார்கள்.

Bakong ஆலயம் 900 X 700 மீட்டர் பரப்பில் விளங்குகின்றது. ஐந்து அடுக்குகள் கொண்ட பிரமிட் வடிவமாக இருக்கும் கோபுரங்களில் இந்த ஐந்து அடுக்குகளும் முறையே நாகா, கருடன், சிங்கம், பீமன், கடவுள் (சிவன்) அகியோருக்கான அர்ப்பணமாகவே விளங்கி நிற்கின்றன. முதலாம் இந்திரவர்மன் இந்த நாட்டின் சமுதாய சமயப் பணிகளைச் செய்த முக்கிய மன்னர்களுள் ஒருவராகக் கொள்ளப்படுகின்றான். இவரின் புரோகிதர் சிவசோமாவின் (Sivasoma) வழிகாட்டலில் இவற்றைச் செய்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த முதலாம் இந்திரவர்மன் இறந்தபின் இஸ்வரலோகா/ஈஸ்வரலோகா (Iswaraloka) என்று பெயர்சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.இவ்வாலயத்தைத் தரிசித்து விட்டு எமது பயணம் கம்போடிய தாய்லாந்து எல்லையை நோக்கி நகர்ந்தது.

உசாத்துணை:
கம்போடிய சுற்றுலாக் குறிப்புகள்
விக்கிப்பீடியா
Ancient Angkor – Michael Freeman and Claude Jacques

12 responses so far

« Prev