Archive for February, 2009

Feb 18 2009

நிறைவான கம்போடிய உலாத்தல்

Published by under Uncategorized

மார்ச் 19, 2008 மாலை 3 மணி

நான் தங்கியிருந்த அறையில் திசைக்கொன்றாய் கிடந்த பொருட்களை அடுக்கிப் பயணப்பொதியின் வாயில் திணித்து விட்டு, மீண்டும் அந்த அறையை ஒரு முறை சுற்றும் பார்க்கின்றேன். ஹோட்டல் அங்கோரியானாவில் இருந்த வரவேற்பாளர்களிடம் விடை பெறும் போது “இனி எப்போது வருவீர்கள்?” என்று கேட்கிறாள் வரவேற்பாளினி.

“நிச்சயம் மீண்டும் வருவேன்” என்றவாறே “இது நாள் வரை எனக்குப் பலவகையிலும் சுற்றுலாத் தகவல்களையும் தந்ததோடு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றிகள்” என்று விடைபெறுகின்றேன்.

என் கம்போடியப் பயணத்தில் முதல் நாள் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்ததில் இருந்து தொடர்ந்த உலாத்தலில் என்னோடு பயணித்த வாகனச் சாரதி/உரிமையாளர் Keo Yan எனக்காகக் காத்து நிற்கின்றார். காரில் பயண மூட்டையை ஏற்றி விட்டு முன் இருக்கையில் அமர்கின்றேன். விமான நிலையம் போகும் பாதை ஏனைய நாடுகளின் விமான நிலையப் போக்குவரத்துப் பாதை போல அவ்வளவு நெரிசல் இல்லை. சீக்கிரமாகவே விமான நிலையத்தை வந்தடைகின்றோம். என்னை வழியனுப்பத் தயாராக இருந்த சாரதி Keo Yan என் இருகைகளையும் இறுகப் பற்றிக் கொள்கின்றார். “உங்களைப் போன்ற நண்பரை நான் சந்தித்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சி” என்று நெகிழ்கின்றார் அவர். “உங்களை நான் என்றும் மறவேன், மீண்டும் வருவேன், தொலைபேசியிலும் பேசுகின்றேன், உங்களுடைய எல்லா உதவிக்கும் நன்றி” என்று அவரின் கைகளை இறுகப் பற்றியவாறே சொல்லிப் பிரியாமல் பிரிந்தேன். இந்த இடத்தில் நான் ஒன்று சொல்ல வேண்டும்.என்னுடைய இந்தக் கம்போடியப் பயணத்தில் இவ்வளவு உரிமையோடு நிறைய உதவிகளையும் கொடுத்து, எதிர்பார்த்ததற்கும் மேலாகச் சிறப்பான சுற்றுலாவாக அமைய‌ வைத்தவர்கள் என் ஹோட்டல்காரர்களும், சுற்றுலா வழிகாட்டியும், இந்தக் சாரதியும். மீண்டும் அவர்களை நோக்கி இன்னொரு முறை மனதார நன்றி சொல்லிக் கொள்கின்றேன். உண்மையிலேயே எதிர்பாராதவிதமாக அமைந்த இந்தக் கம்போடியப் பயணத்தில் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்புகளின் தொடர்ச்சியாக அமைந்த நிகழ்வுகள் போல இந்த உலாத்தல் அமைந்து விட்டது.

சியாம் ரீப் விமான நிலையத்தில் இருக்கும் புத்தகக் கடைக்குள் நுளைந்து கம்போடியாவின் இருண்ட காலத்து நூல்களை மேய்ந்தேன். மண்டை ஓட்டுக் குவியலும், சித்திரவதை முகாம்களின் கொடூரப் புகைப்படங்களும் மனதை ஏதோ செய்தன.

சிங்கப்பூர் செல்லத் தயாராக வந்து நிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இல் ஏறி உட்கார்ந்து கொள்கிறேன். சிங்கப்பூரில் இருந்து மலாக்கா செல்லும் என் அடுத்த உலாத்தலுக்கான தயார்படுத்தலாக மலாக்கா பயண வழிகாட்டியை எடுத்து பிரிக்கின்றேன். கம்போடியாவிற்குப் பிரியாவிடை கொடுத்து விட்டுப் பறக்கிறது மனம்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
கடந்த கம்போடிய உலாத்தல்கள் வெறுமனே பயண அனுபவங்களைக் கடந்து தென்னாசியாவில் நிலைபெற்று விளங்கிய இந்தியத் தொன்மங்களைத் தேடிய வரலாற்று பகிர்வாகவும் அமைய வேண்டும் என்று நான் நினைத்ததால் உங்களில் சிலருக்கு அது திகட்டியிருக்கலாம். கம்போடியாவில் இந்திய வரலாற்றுச் சுவடுகளைப் படங்களோடும், செய்திகளோடு முழுமையான ஆவணப்படுத்தலாகத் திரட்ட வேண்டும் என்ற எண்ணமே என்னுடைய இந்த முயற்சிக்குக் காரணம். உண்மையைச் சொலப் போனால் என் கம்போடியப் பயணத்தின் நோக்கமும் அதுதான். இங்கே நான் சொல்லிய ஆலயங்களைத் தவிரவும் விடுபட்டவை ஏராளம். அவை பற்றி இன்னொரு சமயம் கம்போடியப் பயணம் வாய்க்கும் போது தொடரலாம் என்று நினைக்கின்றேன்.

எனது கம்போடிய உலாத்தல் வெகு விரைவில் “வடலி” வெளியீடாகப் பயண நூலாகத் தவழ இருக்கின்றது. அச்சில் நூலாக வரும் என் முதல் படைப்பும் இதுவே. இந்தத் தொடரில் பின்னூட்டம் வாயிலாகத் தமது கருத்தை அளித்தோரின் தேர்ந்தெடுத்த பின்னூட்டங்களும் அச்சில் வர இருக்கும் கம்போடிய பயண நூலில் வர இருக்கின்றது.

இது நாள் வரை என் உலாத்தலில் கூடவே பயணித்து அவ்வப்போது கருத்திட்டவர்களுக்கும், கருத்திடாவிட்டாலும் வாசித்துக் கொண்டே இருந்தவர்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்.

மீண்டும் சந்திப்போம்
நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா

கம்போடிய உலாத்தலில் வழித்துணையாய் வந்தவர்களில் சிலர்
இடமிருந்து வலம் வாகனச் சாரதி Keo Yan மற்றும் சுற்றுலா வழிகாட்டி Sib Chnong

அங்கோரியானா ஹோட்டல் வரவேற்பாளியும், வரவேற்பாளனும்

ருக் ருக் வண்டிக்காரர்

கம்போடிய உலாத்தலில் உசாத்துணையாய் இருந்தவை

1.”தென் இந்திய வரலாறு”, டாக்டர் கே.கே.பிள்ளை (ஆறாம் பதிப்பு 1994, முதற்பதிப்பு 1958)
2. “தென்னாடு”, கா.அப்பாத்துரை, எம்.ஏ,எல்.டி (முதற்பதிப்பு செப் 1954, மூன்றாம் பதிப்பு 1957)
3. “தமிழக வரலாறும் பண்பாடும்”, வே.தி.செல்லம் (முதற்பதிப்பு 14, ஏப்ரல், 1995, நான்காம் பதிப்பு ஜூலை 2003)
4. கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புகள்
5. Ancient Angkor by Michael Freeman & Claude Jacques
5. விக்கிபீடியா
6. Asianinfo.org

13 responses so far

Feb 17 2009

கம்போடியாவில் பார்க்கவேண்டிய இன்னுஞ் சில

Published by under Uncategorized


இந்த இடத்துக்குப் போகும் போது நீங்கள் தனியாகப் போகக் கூடாது என்று என்னை எச்சரித்து, வாகனச் சாரதியை நோக்கி இவரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தாள் நான் தங்கியிருந்த ஹோட்டலின் வரவேற்பாளினி. நாங்கள் சென்ற இடம் West Baray என்ற சமுத்திரத்தின் நடுவே இருக்கும் சிறு தீவான West Mebon.
இது கி.பி 11 ஆம் நூற்றாண்டில் பிரபலம் பெற்று விளங்கிய தீவாகும். ஒரு குறுகிய படகுப் பயணத்துடன் West Mebon தீவை அடைகின்றோம். மிகவும் பின் தங்கிய வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் வாழும் பிரதேசம் என்பதை அங்கே இருக்கும் மக்களின் தோற்றத்தை வைத்தே எடை போட முடிகினறது. அத்தோடு ஈக்களின் பரவல் அந்தப் பிரதேசத்தை விட்டு எப்படா நகர்வோம் என்று படுத்தியது.

Baray என்பதற்கு நீர்த்தேக்கம் என்று அர்த்தம் கொள்ளப்பட்டும், கம்போடியாவில் நான்கு பெரிய நீர்த்தேக்கத் திட்டங்கள் இவ்வாறு உள்ளன.

இந்தத் தீவில் முற்றாக அழிந்து கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஆலயங்களின் எச்சங்களைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளைக் கூட விரல் விட்டு எண்ணி விடலாம். சூர்ய வர்மன் மற்றும் இரண்டாம் உதயாதித்த வர்மன் காலத்தில் இந்தப் பிரதேசத்தில் ஆலயங்கள் எழுப்பப்பட்டதை வரலாறு சொல்கின்றது.மேலே படத்தில் தூரத்தே தெரியும் தீவு

மேலே படத்தில் தீவில் குடியிருப்போர்


மேலே படங்களில் எஞ்சியிருக்கும் ஆலயத்தின் தோற்றம்
தீவில் இருக்கும் பெளத்த ஆலயம்Angkor National Museum


நான் கம்போடியப் உலாத்தல் பதிவுகளில் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று எந்த நாட்டுக்குச் சென்றாலும் தவறாது செல்லவேண்டிவை அருங்காட்சியகங்கள். அந்தவகையில் அங்கோர் தேசிய அருங்காட்சியகமும் கட்டாயம் பார்க்க வேண்டிய சிறப்புக் கொண்டது. வெறுமனே கம்போடிய நாட்டின் அரும்பொருட்கள் மட்டுமன்றி, பல்லூடக வசதியோடு இந்தக் காட்சியகம் இருப்பது வெகு சிறப்பு. கம்போடியா செல்லத் திட்டமிடுவோர் முதலில் இந்த நூலகத்தில் இருந்தே தமது பயணத்தை ஆரம்பித்தால் தொடர்ந்து செல்ல இருக்கும் இடங்கள் குறித்த முழுமையான பார்வை கிடைக்கும். இந்த அருங்காட்சியகத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் சியாம் ரீப்பில் இருக்கும் ஆலயங்களில் இருந்து எடுத்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் தெய்வங்கள் இன்ன பிற உருவச் சிலைகள் காணக் கிடைக்கின்றன. நுழைவுக் கட்டணமாக 12 அமெரிக்க டொலர் அறவிடப்படுகின்றது. காலை 9 மணியில் இருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும் இவ் அருங்காட்சியகம் தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற http://www.angkornationalmuseum.com/

Royal Palace
மேலே படத்தில் அரண்மனை (Royal Palace)

கம்போடிய தற்போதைய மன்னரின் வாசஸ்தலம் சியாம் ரீப் நகரின் மையத்தில் இருக்கின்றது. சுழவும் ஐந்து நட்சத்திர விடுதிகளும், பூங்காவும் என்று இருக்கும் இந்தப் பகுதிக்கும் சாவகாசமாக வந்து போகலாம்.
மேலே உள்ள படங்கள் நான் தங்கியிருந்த ஹோட்டலில் காணப்பட்ட கம்போடிய பாரம்பரிய வாத்தியங்கள்

மேலே படங்கள் கம்போடியாவில் விளையும் பழவகைகள் வீதியோரக் கடையில்

Angkor Night Market

கம்போடியாவிற்குச் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் ஊருக்குப் போகக்கூடாது, அத்தோடு கம்போடியாவில் தயாராகும் கைவினைப் பொருட்களையும் வாங்க வேண்டும் என்றால் மிகச் சிறந்த தேர்வு இந்த இரவுச் சந்தை. மிகவும் மலிவாக அதேநேரம் தரமுயர்ந்த கண்கவர் கைவினைப் பொருட்கள் கைப்பைகள், டிவிடிகள், நகைகள், புத்தகங்கள், சின்னதாகச் செய்த தெய்வ உருவச் சிலைகள், உடுபுடைவைகள், சால்வைகள், ஓவியங்கள், துணிவேலைப்பாடுகள், உணவுச் சாலைகள் என்று நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் இங்கே இருக்கின்றன. மாலை நேரத்தில் இருந்து நள்ளிரவு வரை திறந்திருக்கும் இந்தக் கடைகளோடு, விதவிதமான களியாட்ட நிகழ்வுகளும் சந்தையின் உள்ளே நடக்கின்றது.
மாலை நேரத்தில் வந்து பொருட்களை ஆறுதலாகத் தேர்ந்தெடுத்து பேரம் பேசி வாங்கி விட முடிகின்றது இங்கே.
மேலே படத்தில் சியாம் ரீப் நகரின் ஒரு மாலைப் பொழுது

7 responses so far

Feb 16 2009

கடலின் நடுவே மிதக்கும் கிராமம் (Floating Village)

Published by under Uncategorized


கம்போடியாவிற்குச் சென்றால் வெறுமனே ஆலயங்களின் தரிசனம் மட்டுமன்றி கீழைத்தேய நாடு ஒன்றின் வாழ்வியல் அமைப்பையும் கண்டு வரலாம். எனக்குக் கிடைத்த கொஞ்ச நாட்களில் கோயில்கள் பலவற்றைப் பார்த்து முடித்ததால் எஞ்சிய இரண்டு நாட்களில் பார்க்கக் கிடைத்தவற்றைப் பார்த்துவிடலாம் என்று முடிவு கட்டினேன். அந்த வகையில் என் பயண நாட்களில் கூடவே வந்த வாகனச் சாரதி பரிந்துரைத்த இடம் தான் மிதக்கும் கிராமம் (Floating Village).

சியாம் ரீப் நகரினை அண்மித்ததாக இருக்கும் இந்த மிதக்கும் கிராமத்தைப் பார்த்து விடுவோம் என்று ஒரு நாள் மதியவேளை கிளம்பினோம். பெருந்தெருவைக் கடந்து, அப்பால் போனால் ஒழுங்கற்ற தார் போடாத கற்களை மட்டுமே நிரவிய சாலை அது. கொடும் வெயிலும் சுட்டெரித்தது.
இந்த மிதக்கும் கிராமத்துக்கான ஒரே வழிச்சாலை அது என்பதால் வாகனங்கள் வரிசை வீதியை நிறைத்திருந்தது. அதுவும் மாலை வேளையில் இந்தப் பகுதிக்கு வருவதற்கே பல சுற்றுலாப் பயணிகள் விரும்புவார்கள் என்பதால் கூட்டத்துக்குக் குறைவில்லை. வழியின் இருமருங்கும் பொத்தல் சட்டைகள் போல உடைந்த மரத்துண்டுகளோடு குடிசைகள் இருமருங்கும். ஒழுங்கற்ற பாதையில் ஆங்காங்கே மறித்து, முன்னே வரும் வாகனங்களுக்கும் வழி விட்டு படகுத்துறையைச் சென்றடைவதற்குள் ஒரு மணி நேரத்துக்கு மேல் கடந்து விட்டது. காரை ஓரமாக நிறுத்தி விட்டு படகு ஒன்றைப் பிடிப்பதற்காகச் சென்றோம் நானும் சாரதியும்.

Chong Khneas என்ற பகுதியிலேயே இந்த மிதக்கும் கிராமம் இருக்கின்றது. படகொன்றில் பயணிப்பதற்கான கூலியைக் கொடுத்து விட்டு அதில் ஏறி உட்கார்ந்தால் இந்த மிதக்கும் கிராமத்தின் எழிலையும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வியலையும் பார்த்து வரலாம். சராசரியாக 15 பயணிகளை ஏற்றிக் கொள்ளும் ஒரு படகு கட்டணமாக பத்து அமெரிக்க வெள்ளிகளைக் கொடுக்க வேண்டும். இரண்டு மணிப் பிரயாணம் அது.

மிதக்கும் கிராமத்தின் பள்ளிக்கூடம்

மிதக்கும் கிராமத்தில் உள்ள கடையொன்று

மேலே படங்களில் மிதக்கும் கிராமத்தில் வாழ்க்கை நடத்தும் மனிதர்கள்

இந்த மிதக்கும் கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்கட் பிரிவினர் இருக்கின்றார்கள். அவரவர் தராதரத்திற்கேற்ப வசதியான வீடுகளையும் இந்த வாவியின் நடுவே அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள். பெரும்பாலும் சீனர்கள் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்தவர்களாக இருப்பதைக் காட்டி நிற்கின்றன அவர்தம் வீடுகள். தனியே குடியிருப்புக்கள் மட்டுமன்றி, பாடசாலை, தேவாலயம், கடைகள் என்று எல்லாமே இந்தக் கடலில் எழுப்பப்பட்டிருக்கின்றன. இந்த இடங்களுக்குப் போவதற்கு ஒவ்வொருவர் வீட்டிலும் அவரவர்க்கெனத் தனியான படகுகளும் உண்டு. அவை இந்த வீடுகளின் முன் புறத்தே கட்டப்பட்டிருக்கும். கம்போடியர்கள், வியட்னாமியர்கள், சீனர்கள் ஆகிய மக்கட் பிரிவினர் இங்கே தலைமுறைகளாக வாழ்ந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

தற்காலிக ஓய்விடம்

எமது இரண்டு மணி நேரப் பயணத்தில் இடையில் தரிப்பிடமாக ஒரு நிலையம் முன்னே வந்து நிற்கின்றது. மற்றைய படகுகளில் வந்தோரும் ஒருங்கே இளைப்பாறிப் போகும் இடமாக இது விளங்குகின்றது. சாப்பாடு, கழிப்பறை வசதி, புத்தகசாலை என்பனவற்றோடு குறித்த சில கடல் வாழ் உயிரினங்களை காட்சிப்படுத்தும் அமைவிடமாகவும் இது திகழ்கின்றது. அரைமணி நேர ஓய்வின் பின்னர் மீண்டும் நகர்கின்றது படகு.

உயர்ரக ஜப்பானிய உணவகம்

மாலை நேரத்தில் வந்து உணவருந்திச் செல்ல உயர் ரக நட்சத்திர உணவகமும் இங்கே முளைத்திருக்கின்றது.

உயிருள்ள மலைப்பாம்பைக் கழுத்தில் போட்டவாறே யாசிக்கும் சிறுவன் படகில் வந்து வாழைப்பழ விற்பனை

வேறு படகுகளில் வந்து அதில் வாழைப்பழத்தைப் பரப்பி விட்டு விற்பனை செய்வோர், சின்னஞ்சிறு குழந்தையின் கழுத்தில் உயிருள்ள மலைப்பாம்பை மாட்டிப் பிச்சை எடுப்போர் என கடல் நடுவே வாழ்வாதாரத்தினைத் தேடி வரும் கம்போடியர்களையும் பார்க்கலாம். ஒரு காலத்தில் மாட மாளிகைகளையும், பெரும் எடுப்பிலான கோயில்களையும் கட்டி வாழ்ந்த சமூகத்தின் இன்றைய நிலையை இந்தக் கடலின் நடுவே காணும் இந்த ஏழ்மை வருத்தத்தை மனதில் விதைக்கின்றது.


ஏழையின் வீடு ஒன்று

இது கொஞ்சம் பணக்கார வீடு


வாழைப்பழ வரிசைகளோடு விற்பனை

கை நீட்டி யாசிக்கும் குழந்தை

5 responses so far

Feb 15 2009

கைமர் பேரரசு தோற்றம் பெற்ற Kulen மலையிலே

Published by under Uncategorized

நான் முன்னர் சொன்னது போல நான்காம் நாட் பயணம் நானும், வாகனச்சாரதியும் மட்டுமே செல்லத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த வாகனச் சாரதி தான் என்னை விமான நிலையத்தில் இருந்து முதன் முதலில் தங்குமிடத்துக்கு அழைத்துச் சென்றவர். அவர் முன்னர் சிறிது காலம் சுற்றுலா வழிகாட்டியாகவும் இருந்தவராம். இப்போது சொந்தமாக கார் வைத்து இப்படியான பயணங்களுக்கு உதவியாக இருக்கின்றார். மிகவும் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதோடு, நட்போடு கம்போடியாவின் நாட்டு நடப்புக்களையும் சொல்லிக் கொண்டே இவர் செல்வது சிறப்பு. இனிவரும் காலத்தில் கம்போடியாவின் சியாம் ரீப் நகருக்குச் செல்ல இருப்பவர்களுக்காக இவரை நான் நம்பிக்கையோடு பரிந்துரைப்பேன்.

அன்று Phnom Kulen எனப்படும் மலைப்பிரதேசம் செல்வதாகத் தான் ஏற்பாடு. இந்த மலைப் பகுதிக்கு நண்பகல் 12 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி உண்டு. எனவே அதற்கு முன்னர் சென்று திரும்பினால் தான் உண்டு. அத்தோடு சியாம் ரீப் நகரில் இருந்து போக 50 கிலோ மீட்டர் தூரம் பிடிக்கும். எனவே சீக்கிரமாகவே நமது பயணத்தை ஆரம்பிக்க எண்ணி காலை ஏழு மணிக்கெல்லாம் Nokor Kok Thloek நட்சத்திர ஹோட்டலில் அமைந்திருந்த சுற்றுலாப் பணியகம் சென்று இந்த இடத்துக்குச் செல்வதற்கான 20 அமெரிக்க டொலர் செலவிலான ரிக்கெட் எடுத்து விட்டுப் பயணத்தை ஆரம்பித்தோம். வார நாள் என்பதால் அலுவலகத்துக்குப் பயணிப்போர் தொகை மெல்ல மெல்ல பெருந்தெருக்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. சியாம் ரீப்பில் இருக்கும் பெரும் பொது மருத்துவமனையான ஏழாம் ஜெயவர்மன் International Hospital ஐயும் கடந்து நம் பயணம் தொடர்ந்தது. நவீன பாலங்கள் எங்கணும் கூட ஐந்து தலை நாகங்களின் உருவத்தலைகளைப் பொறித்திருக்கின்றார்கள். மாமரங்களின் விளைச்சல் வீதியின் இருமருங்கும் தென்படுகின்றது.

மேலே படங்கள், காட்டுவழிப் பாதையில் எம் பயணம்

அதிகம் வெயிலற்ற கணச்சூட்டில் எமது கார் Kulen மலைப்பிராந்தியத்தில் தாவியது. திடீரென்று எம் காரை மறித்து கற்பூரச் சூடம் காட்டிப் பிரார்த்தித்தார்கள் வழியில் தென்பட்ட மக்கள். இன்று காலை நாம் தான் முதலில் மலைக்குப் பயணிக்கும் வாகனம் அதனால் தான் இப்படிச் சூடம் காட்டிப் பிரார்த்திக்கின்றார்கல். இது ஒவ்வொரு நாளும் தொடரும் வழக்கம் என்றார் சாரதி.

மேலே படத்தில் Kulen மலையில் இருக்கும் லிங்க வடிவங்கள்
இருபக்கமும் புதர் மண்டிய காட்டின் நடுவே ஒழுங்கற்ற பாதையினூடாக நீண்டதொரு பயணமாக அமைந்து மலை முகட்டைத் தொட்டோம். எமது காரை நிறுத்தியதும் தாமதம், பாசிமணி மாலைகள், கம்போடிய கைவினைப் பொருட்கள் சகிதம் வறுமைப்பட்ட கம்போடிய சிறுவர்கள் எம்மை மொய்த்தனர். அவர்களை ஒருவாறு சமாளித்து ஒரு புதர்ப் பக்கமாக என்னை சாரதி கூட்டிக் கொண்டு போனார். அங்கே தென்பட்டது சிறு ஓடை கலக்க மேடாக இருந்த பாறைகள் எங்கணும் தென்பட்ட லிங்க வடிவங்கள்.

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் ஜெயவர்மன் காலத்தில் தான் இந்த Kulen மலை ஆன்மீக மையமாக உருவாக்கப்பட்டது. இது ஆரம்பத்தில் இந்து மதத்துக்கான ஒரு இடமாகவே ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கோர் எனப்படும் 500 வருச கால வரலாற்றின் ஆரம்பம் இங்கேயே ஆரம்பித்ததாகச் சொல்லப்படுகின்றது. கி.பி 802 ஆம் ஆண்டளவில் இரண்டாம் ஜெயவர்மன் அரசனின் கடவுள் (God of the King) என்ற அர்த்தம் பொதிய இவ் இலிங்கச் சின்னங்களை இங்கே அமைத்து ஒரு முழுமையான கைமர் என்ற தேசிய அரசினை இவன் அமைத்துக் கொண்டான். இதற்கு முன்னர் ஜாவா நாட்டின் கட்டுப்பாட்டிலேயே கம்போடியா இருந்து வந்திருந்தது. இந்த Phnom Kulen பிரதேசத்தில் இருந்து பின்னர் Roluos என்ற பகுதிக்கு இவன் தலைநகர் பின்னர் மாற்றப்பட்டது.

நாம் முன்னர் பார்த்த பொல்பொட்டின் கைமரு படையணியின் 1979 இல் இறுதியாக எஞ்சியிருந்த பிரதேசமாக இது திகழ்ந்திருக்கின்றது. இந்த இடத்தில் என்னைத் தவிர வேற்று ஆட்கள் யாருமே இல்லை. முழுமையாக கம்போடியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இடமாக இருந்ததால் உள்ளுர எனக்கு இலேசான பயமும் இருந்தது. காரணம் முன்னர் சென்ற இடங்களில் எல்லாம் வேற்று நாட்டு சுற்றுலாப் பயணிகள் தான் குவிந்திருப்பார்கள். இங்கோ நிலைமை தலைகீழ். எப்படா மலையை விட்டுக் கீழே இறங்குவோம் என்றும் அப்போது யோசித்தேன்.

இலிங்கங்களைக் கண்டு விட்டு அவ்விடத்தை விட்டகன்று மலையுச்சியிலே விளங்கிய ஒரு பெரும் ஆலயம் நோக்கிச் சென்றோம்.

மேலே படத்தில் Preah Ang Thom இல் இருந்த லிங்கம்
இங்கே பார்க்கவேண்டிய இன்னொரு விஷயம் Preah Ang Thom எனப்படும் பெளத்த மையம். கி.பி 16 ஆம் நூற்றாண்டில் பெளத்த மதம் இங்கே செழுமையுடன் திகழ்ந்த வேளை அமைத்த 8 மீட்டர் நீளமான பரி நிர்வாண நிலை கொண்ட புத்த விக்கிரகம் உண்டு. இந்த ஆலயத்தைச் சூழவும் பெளத்த மடாலயங்களும், அத்தோடு பெரும் லிங்க விக்கிரகமுமாக இருந்தது.
இவற்றை எல்லாம் பார்த்து விட்டு சற்றுத் தள்ளி இருந்த நீர்வீழ்ச்சி நோக்கி நடந்தோம். குறுகலான தொங்கு பாதை ஒன்று இந்த நீர்வீழ்ச்சி போகும் வரை அமைக்கப்பட்டிருந்தாலும், அதில் போவதே சவாலாக இருந்தது. ஆனாலும் அந்த வேதனையும் கடந்து போனால் அழகிய நீர்வீழ்ச்சி ஒன்றின் இல்லையில்லை இரண்டு நீர்வீழ்ச்சிகள் தரிசனம் கிட்டும். ஒன்று நான்கிலிருந்து ஐந்து மீட்டர் உயரமும் 20 இலிருந்து 25 மீட்டர் குறுக்களவும் கொண்டது. இன்னொன்று 15 இலிருந்து 20 மீட்டர் நீளமும் 10 – 15 மீட்டர் அகலமும் கொண்டது.
இந்த இயற்கை எழிலை அள்ளிப் பருகிவிட்டு மீண்டும் பாறைகளில் தாவி வரும் போது ஒரு பாசிபடர்ந்த பாறை காலை வாரி விட்டது. சறுக்கிக் கொண்டே போய் விழுந்தேன். முன்னால் போன சாரதி திரும்பவும் பாய்ந்து வந்து கைலாகு கொடுத்து ஏற்றி விட்டார். அங்கேயிருந்த உணவுச் சாலை ஒன்றுக்குச் சென்றோம். எனக்கு கோக் மட்டும் போதுமாக இருந்தது ;). முழங்காலில் ஏற்பட்ட சிராய்ப்பு ரத்தத் திட்டுக்களாகத் தெறித்திருந்தது. வாகனச் சாரதி அந்த உணவுச் சாலையில் இருந்த பெண்ணை அழைத்து ஏதோ பேசினார். அவள் எங்கே போய் விட்டு வரும் போது இலையில் ஏதோ வெள்ளைக் களிம்புடன் வந்து என் காலில் இருந்த காயத்தின் மேல் களிம்பினைப் பரவ விட்டாள். அவளுக்கு நன்றி சொல்லி விட்டு கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்து விட்டு நகர்ந்தோம்.


திரும்ப வரும் வழியெங்கும் அந்த மலைப்பிரதேசத்தில் விளையும் காய், கனிகள் மூலிகைகளாகக் கடைத் தொகுதிகள் நிரம்பியிருந்தன.உசாத்துணை:
கம்போடிய சுற்றுலாக் கையேடு
விக்கிபீடியா

12 responses so far

Feb 13 2009

கம்போடிய போர்த்தளபாடக் காட்சியகம் (Civil War Museum)

Published by under Uncategorized

நட்பு, பகைமை, குரோதம், நம்பிக்கைத் துரோகம், ஆட்சிக் கவிழ்ப்பு, நில ஆக்கிரமிப்பு, அரச பயங்கரவாதம் இவையெல்லாம் விளைந்த ஏனைய யுத்தபூமிகளுக்கு கம்போடியா எந்த வகையிலும் சளைத்தது இல்லை. ஒரு காலத்தில் இரத்தம் தோய்ந்த இம்மண்ணில் எழுதியதற்கான வினையை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதல பாதாளத்தில் போன கம்போடிய நாணத்தின் வீழ்ச்சியும் அதனால் எல்லாப் பொருட்களையும் குத்துமதிப்பாக ஒரு அமெரிக்க டொலரில் இருந்து பாவிக்கும் வழக்கமும், வாழ்க்கைத் தர வீழ்ச்சியும், கை கால் முடமான சந்ததியும், அப்பா, அம்மா, உற்றார் உறவினர்கள் யாரென்றே தெரியாத பரம்பரையுமாக போரின் வடுக்களை இன்னமும் சுமந்து கொண்டு தான் இருக்கின்றது இந்த கம்போடிய சமூகம். பதவி வெறியும், என்னை விட்டால் யாரிங்கே உண்டு என்று எகத்தாளம் இட்ட ஆட்சியாளரும் அவர் தம் அடிப்பொடிகளும் இன்று காணாமல் போனோர் பட்டியலிலும், சிறைக்கதவுகளின் பின்னாலும். கொடுமையான போர் என்ற அரக்கன் ஓய்ந்தாலும் வினை விதைத்தோர் மட்டுமன்றி வினையற்றிருப்போரும் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்குக் கண் முன்னே சாட்சியமாக நிற்கின்றது இப்போது தான் ஓரளவு அமைதிச் சுவாசத்தை ஏற்றி கொண்டிருக்கும் கம்போடிய மண்.

கி.பி முதலாம் நூற்றாண்டில் Funan பேரரசோடு ஆரம்பித்த கம்போடிய மன்னராட்சி கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் ஜெயவர்மனின் கைமர் பேரரசுக் காலத்துக்கு மாறி கம்போடியாவின் ஆளுகையை வந்தேறி வென்றார்களிடம் கைமாற்றுகின்றது, இந்து மதத்தின் பரம்பலையும் கோயில்கள் மடாலயங்கள் மூலம் விதைக்கின்றது. அதனைத் தொடர்ந்து வந்த கி.பி 13, 14 ஆம் நூற்றாண்டுகளில் தேரவாத பெளத்தத்தின் ஆளுகை அண்டை நாடான தாய்லாந்து மன்னர்களின் கம்போடியா மீதான படையெடுப்பால் வீரியம் பெற்று வளர்கின்றது. அத்தோடு கி.பி 19 ஆம் நூற்றாண்டு வரை இரு பக்கமும் இருந்த வியட்னாம், தாய்லாந்து நாடுகளின் படையெடுப்பும், அதன் விளைவாக ஏற்பட்ட ஸ்திரத்தன்மையும் கம்போடியாவின் கறை படிந்த நாட்கள். குறிப்பாக 1890 ஆண்டு இந்த நாடு பெரும் பேரவலத்தைப் போர் மூலம் சந்தித்தது. ஒரு காலத்தில் வீரம் விளைந்த மண்ணாக விளங்கிய கம்போடியப் பேரரசு பின்னாளில் வீரியம் குறைந்து ஆட்டம் காணத் தொடங்கியது. பக்கத்து நாடுகளும் ஆளுக்காள் இந்த நாட்டைக் கூறு போட முனைந்தன. எதிரிகளுக்கு செக் வைக்க கம்போடிய மன்னன் Norodom சரணாகதி அடைந்த பிரான்ஸ் நாடு காவலன் என்ற பேரில் கள்ளத்தனம் புரிந்து தொடர்ந்து 90 ஆண்டுகள் கம்போடிய மண்ணில் இருந்ததோடு நாட்டின் வளங்களையும் சூறையாடிக் கடல் கடந்து கொண்டு சேர்த்தது.

1953 ஆம் ஆண்டில் Sihanouk என்ற மன்னனின் காலத்தில் கம்போடியா பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றது. கூடவே இம்மன்னன் People’s Socialist Community (Sangkum Reastr Niyum) என்ற அரசியல் கட்சியையும் ஸ்தாபித்து 1955 இல் குடியாட்சி மூலம் வெற்றி பெற்றான் பின்னாளில் அரசுத் தலைவர் ஆனான். 1960 களில் நிலவிய வியட்னாமிய யுத்தத்தின் போது சோவியத் மற்றும் அமெரிக்க சார்பற்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் பின்னர் அமெரிக்காவுடனான இராஜ தந்திர உறவினை வெட்டி விட்டு வியட்னாமிய கம்யூனிஸ்ட் போராளிகளுக்குத் தன் ஆதரவுக் கரத்தை நீட்டினான். வியட்னாமியப் போராளிகளின் பாசறைகள் கம்போடியா மண்ணில் பரவின. ஆனால் அன்றைய காலகட்டத்தில் அதல பாதாளத்தில் போன கம்போடியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப எண்ணி மீண்டும் இவன் அமெரிக்காவுடன் கை குலுக்கினான். அத்தோடு வியட்னாமியப் போராளிகளின் பாசறைகளை அமெரிக்க விமானங்களுக்கு இரையாக்கித் தன் எட்டப்பன் நிலைப்பாட்டை நிலை நிறுத்தினான்.

1970 இல் Sihanouk வெளிநாட்டில் தங்கியிருந்த தருணம் பிரதமராக இருந்த General Lon Nol இவனைக் கவிழ்த்து விட்டு ஆட்சிப் பீடம் ஏறக் கிடைத்த வாய்ப்பைப் சட்டெனப் பற்றிக் கொண்டான். Sihanouk சீனாவில் அடைக்கலம் புகுந்து அங்கிருந்து கொண்டே தன் ஆட்சிக்கு ஆப்பு வைத்த General Lon Nol இற்குப் பாடம் படிப்பிக்கும் வகையில் கைமருப் படையணி (Khmer Rouge) என்ற ஒரு விஷப்பாம்பிற்குப் பால் வார்த்தான். Saloth Sar என்ற கைமருப் படையணித் தலைவன், இவன் தான் பொல் பொட் என்று அழைக்கப்பட்ட கொடுங்கோலன் கையில் கம்போடியாவின் ஆட்சியதிகாரம் மாறுகின்றது. குழிக்குள் விழுந்த Sihanouk இற்கும் குழி பறித்த General Lon Nol இற்கும் இல்லாமல் பொல் பொட்டின் கையில் குரங்கின் கைப் பூமாலையாகப் போய்ச் சேர்ந்த கம்போடிய மண் தொடர்ந்து Democratic Kampochea (DK)என்ற பொல் பொட்டும் , படிப்பறிவற்ற கிராமப்புறத்து இளைஞர் படையணியோடும் மானபங்கப்படுத்தப்படுகின்றது.

அறிவுஜீவிகள், சமயப்பற்றுள்ளோர் எல்லோருமே பொல் பொட்டின் ஆட்சியில் வேண்டப் பொருட்களாகின்றன. மதச் சுதந்திரத்திற்கும் தடை விதிக்கப்படுகின்றது. சனத்தொகையில் ஏறக்குறைய 26% மான கம்போடியர்களை அதாவது 750,000 இலிருந்து 1.7 மில்லியன் மக்களை அதாவது குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பொல்பொட் பல்வேறு காரணங்களால் கொடூரமாக இவன் கொன்று குவித்தான். இவனின் கொலைக்களம் (Killing Field) இன்றும் தலைநகரான Phnom Penh இல் மண்டையோடுகள் கொண்ட காட்சியகமாக விளங்குகின்றது. பல கம்போடியாவில் ஒரு அனாதைச் சந்ததியை உருவாக்கி வைத்து விட்ட கொடுங்கோலன் இவன்.

அத்தோடு சும்மாயிருக்கவில்லை. பக்கத்து நாடான வியட்னாமோடு போர் தொடுத்துச் சீண்டினான். சோவியத் யூனியனின் பலத்தோடு விளங்கிய வியட்னம் இதுதான் தருணம் என்று தன் பெரும்படையணியோடு 1975 இல் வியட்னாம் தொடுத்த போரினால் பொல்பொட்டின் படையணி அலறியடித்துக் கொண்டு கம்போடிய – தாய்லாந்து எல்லை வரை ஓடியது. அப்போது வியட்னாமின் எதிரியாக விளங்கிய தாய்லாந்து பொல்பொட்டிட்டிற்கும், அவன் கூட்டாளிகளுக்கும் ஆதரவுக் கரம் நீட்டியது. காடுகளில் மறைந்திருந்த பொல் பொட் 1988 இல் சுற்றி வளைப்பின் போது கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கின்றது. இல்லையில்லை அவன் இன்னும் உயிரோடு தான் எங்கோ இருக்கின்றான் என்றும் இன்னமும் நம்பும் கம்போடியர் கூட்டமும் இருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் கம்போடியாவிற்கு வெளியே வியட்னாமை எதிர்த்து உருவாக்கிய Democratic Kampochea (DK)என்ற கைமரு ஆதரவு அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்தனர். பொல் பொட்டில் கையாட்களில் ஒருவராக இருந்த Hun Sen என்பவரே தான் ஜனநாயக வழிக்குத் திரும்பி விட்டோம் என்ற பெயரோடு இந்தக் கட்சியை கொண்டு நடாத்துகின்றார்.

1989 வரை வியட்னாமின் ஆளுகையோடு விளங்கிய கம்போடியாவின் விடுதலை சோவியத் யூனியனின் சிதறலோடு கைவிடப்பட்டு Hun Sen ஐ பிரதமராகக் கொண்ட ஆட்சியோடு இப்போது பயணிக்கின்றது. கொடுமை என்னவென்றால் இந்த நாட்டின் மன்னர் Norodom Sihanouk இனால் வியட்னாமுக்கு எதிராக வளர்த்து விடப்பட்ட கைமரு இயக்கம் இன்று ஜனநாயக வழியில் வந்ததாகச் சொல்லி மன்னர் மகன் Norodom Ranariddh ஐக் கூட ஆட்சியேற விடாமல் செய்தது பின்னாள் வரலாறு.

தான் இப்போது பொல்பொட்டின் ஆள் இல்லை என்று Hun Sen வெளிப்படையாகச் சொன்னாலும், பொல்பொட்டின் படையணியில் இருந்தவர்களுக்கு ராஜமரியாதையோடு கெளரவங்களும் பதவிகளும் வழங்கப்பட்டு இவரால் இன்று வரை வழிநடத்தப்படுவது கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம். முன்னர் கைமருப் போராளிகளாக இருந்தவர்கள் இரத்தினக் கல் விளையும் பிரதேசமொன்றில் குடியமர்த்தப்பட்டு இன்று கெளரவமாக வாழ்கின்றார்கள் என்றார் என் வழிகாட்டி. ஆக, பொல் பொட்டால் உருவாக்கப்பட்ட அமைப்பு இன்று அவன் இல்லாவிட்டாலும் இன்னொரு வடிவில் ஆட்சி செலுத்துகின்றது.

1975 இல் நடந்த வியட்னாமிய கம்போடிய யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட இராணுவத் தளபாடங்களை சியாம் ரீப்பில் Civil War Museum என்ற பெயரில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள். ஒரு நாள் எனது வாகனச் சாரதி இந்த இடத்துக்குப் போவோம் வாருங்கள் என்றழைத்து அங்கே கொண்டு போய்க் காட்டினார். வரலாறுகள் எல்லா இடங்களிலும் ஒரே விதமான விதைகளைத் தான் போட்டு விட்டுப் போயிருக்கின்றன. வெளிக்கிளர்ந்த பெருமூச்சுடன் ஒவ்வொரு ஆயுதத் தளபாடங்களைப் பார்த்து விட்டு வெளியேறினேன்.


கம்போடிய வரலாற்றுக் குறிப்புக்கள் உசாத்துணை:
Asianinfo.org
wikipedia.org
Civil War Museum படங்கள்: என் கமரா வழியே எடுத்தவை
ஆட்சியாளர் படங்கள்: பல்வேறு இணையத்தளங்கள்

10 responses so far

Next »