Archive for January, 2009

Jan 22 2009

கம்போடியக் கலாச்சாரக் கிராமம் கண்டேன்

Published by under Uncategorized

அந்த நாள் காலையில் ஆரம்பித்து தொடர்ச்சியாக ஆலயங்களைக் கண்ணாரக் கண்டு மாலை சிவப்புக் கொடி காட்டியும் எனக்கோ களைப்பு மட்டும் வரவில்லை. வழிகாட்டியும், கார்க்காரரும் என்னை தங்குமிடத்தில் விட்டு விட்டு அவரவர் வழியில் போனார்கள். ஓட்டல் வரவேற்பாளினி பற்பசை விளம்பரம் போல அகல விரித்த பாற்பல் சிரிப்புடன் கைக்கூப்பினாள். கையில் இருந்த கமராவை அவளுக்கு முன்னால் வைத்து விட்டு சிரித்தேன். இன்றைய பயணம் எப்படியிருந்தது என்றாள். நானும் துண்டுச் சீட்டில் குறித்து வைத்த இடங்களை சின்னப்பிள்ளை போல ஒப்புவித்தேன். “அட! நானே பார்க்காத இடமெல்லாம் போயிருக்கிறீர்களே” என்று சொல்லிச் சிரித்தவாறே என் கமராவின் பொதியை அகற்றி சேமித்த படங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து இலயித்தாள்.
“சரி! இன்று மாலை என்ன செய்வதாய் உத்தேசம்?” என்று அவள் கேட்கவும்
” எங்கே போகலாம்” என்று மீண்டும் ஆர்வக் கோளாறாய் நான் கேட்டேன்.
“இங்கே வருபவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம் கம்போடிய கலாச்சாரக் கிராமம் (Cambodian Cultural Village), நான் ருக் ருக்கிற்கு ஒழுங்கு செய்கிறேன், நீங்கள் ஷவர் எடுத்து விட்டு வாருங்கள்” என்றாள்.
2 வருஷம் முன் சித்திரை வெயிலில் மவுண்ட் ரோட்டில் அலைந்த களைப்பு மீண்டும் வந்து எட்டிப்பார்த்தது. ஆனால் சில்லென்ற தண்ணீர் மழையில் குளித்து உடம்பிற்கு சுதி ஏற்றிக் கொண்டு மீண்டும் வரவேற்பறை வந்தேன்.
“உங்களுக்காக ருக் ருக் காத்திருக்கிறது, இரண்டு அமெரிக்க டொலர் மட்டும் கொடுத்தால் போதும்” என்றாள் வரவேற்பாளினி.

வெளியே வந்து பார்த்தேன். “ஹலோ சேர்” என்று சலாம் போட்டான், சுமார் பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு பிஞ்சு பையன். அவன் தான் இந்த ருக் ருக் வண்டியை வலிப்பதற்காகக் காத்திருப்பவன். வண்டியின் பின்புறத்தில் நான் ஏறி அமரவும், ருக் ருக் வண்டி, ஓரம்போ ஒரம்போ ருக்குமணி வண்டி வருது என்று பாடாத குறையாக சியாம் ரீப் நகரப் பக்கமாக ஓரமாக நகர்ந்தது. ஒரு இருபது நிமிடத்துக்கும் குறைவான தூரத்தில் கம்போடிய கலாச்சாரக் கிராமத்துக்கு வந்து சேர்ந்தோம். முன்னரேயே பேரம் பேசிய காசை வாங்கிவிட்டுப் போகத் தயாராக இருந்த அவனிடம் இன்னொரு பேரம் பேசினேன். ‘நான் பத்து டொலர் தருகின்றேன். நான் வரும் வரை இருப்பாயா? என்றேன். காரணமில்லாமல் இல்லை. இது புதிய இடம் மாலை நேரமும் ஆகிவிட்டது. இந்த வேளை இந்தப் பையன் ஏனோ ஒரு உபகாரி போல இருப்பான் என்று என் மனம் சொல்லியது. என் பேரத்துக்கு அவன் மறுபேச்சில்லாமல் உடன்பட்டு தன் ருக் ருக்கை ஓரம் கட்டினான்.

Phirum Ngoy என்ற கம்போடிய பாரம்பரிய இசைக்கலைஞர், வாழ்ந்த காலம் 1865 to 1936

கம்போடிய கலாச்சாரக் கிராமம் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு சிறிய அறிமுகம். நான் பயணித்த சீனா, இந்தியா உட்பட பெரும்பாலான கீழைத்தேய நாடுகளில் இருக்கும் ஒரு சிறப்பான கூறே இந்த கலாச்சாரக் கிராமம் ஆகும். ஒரு நாட்டில் வாழும் பூர்வ குடிகள், வந்தேறு குடிகள் போன்றேரின் கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை போன்றவற்றை ஆதி தொட்டு இன்று வரை காட்சிப்படுத்தும் ஒரு செயற்கையான கிராமமே இந்த கலாச்சாரக் கிராமமாகும். முன்பு சீனா சென்றிருந்தபோது அதுவரை ஒரேயொரு கலாச்சாரக் கூறே சீனாவில் இருக்கின்றது என்ற என் நினைப்பை மாற்றியது அங்கிருந்த கலாச்சாரக் கிராமம். சீனாவில் எத்தனை விதமான உட்பிரிவுகள் இருக்கின்றன என்பதைப் புட்டுப் புட்டு வைத்திருந்தது அது. அதே போல தமிழகத்திற்கு வந்தபோது தக்க்ஷண் சித்ராவும் ஓரளவுக்கு இந்தக் கலாச்சாரக் கிராமத்துக்கு நல்லுதாரணத்தைக் காட்டியது. அதே போலத் தான் நான் கம்போடியாவில் நான் கண்ட கலாச்சாரக் கிராமமும். எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டுச் சுற்றுலாத்துறை பகிரங்கப்படுத்தும் பிரபல்யமான இடங்களோடு, தவறாமல் அந்தந்த நாட்டின் அருங்காட்சியகம், மற்றும் இப்படியான கலாச்சாரக் கிராமம் போன்றவற்றைத் தவற விடாதீர்கள்.
கம்போடியா தன் யுத்த வடுக்களுக்கு மருந்திட்டு ஓரளவு தேறிய போது துளிர்த்த விஷயங்களில் ஒன்று தான் இந்தக் கலாச்சாரக் கிராமமும். 2001 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் 2003 இல் முழு நிறைவு பெற்றது இது. 11 மாதிரிக் கிராமங்கள், 19 கம்போடிய இனப்பிரிவுகள் குறித்த வாழ்வியல், பண்பாட்டு அம்சங்கள் என்பவற்றை ஒருங்கே கொண்டிருக்கின்றது என்பதை வைத்தே இந்த இடத்தின் முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்.

வெளிநாட்டவர் என்றால் ஒன்பது அமெரிக்க வெள்ளிகள் கட்டணமாக அறவிடுகின்றார்கள். நுளைவுச் சீட்டை வாங்கிக் கொண்டே போகிறேன். என்னைத் தவிர எங்கெங்கு காணினும் கம்போடியர்களடா என்று கத்தத் தோன்றியது. ஓட்டல் வரவேற்பாளினி சொன்னது ஞாபகம் வந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் தொடர்ந்த ஆறு நாட்கள் வேலை செய்து, ஓய்வையும், களிப்பையும் நாடும் கம்போடியர்கள் தேர்ந்தெடுப்ப்பது இந்த இடத்தைத் தானாம்.
தனியே நான் மட்டும் வேற்று நாட்டவனா என்று நினைக்கையில் உள்ளுரப் பயம் வந்தது. கமராவை யாராவது பிடுங்கிக் கொண்டு ஓடுவானா? காற்சட்டையில் இருக்கு மணிபர்சை யாராவது பதம் பார்ப்பானா? என்று மனச்சாட்சி ஆயிரம் கேள்விகளைக் கேட்டது. ஆனாலும் மனச்சாட்சிக் கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்காமல், என் போக்கை காணும் காட்சிகளில் ஓட விட்டேன். காணும் இடமெங்கும் கம்போடிய வாழ்வியலைக் காட்டும் சிற்பங்கள், கடவுளரின் உருவச் சிலைகள் என்று வியாபித்திருந்தன.
உள்ளே ஒரு கட்டிடம் அமைத்து கம்போடியாவின் வரலாற்றினை ஆதி தொட்டுக் கால வரிசைப்படி மெழுகு பொம்மைகளாகத் தத்ரூபமாக வடிவமைத்திருக்கின்றார்கள். அவற்றை ஒன்று விடாமல் கமராவில் சேமித்துக் கொண்டேன்.
Lieou ye என்று அழைக்கப்பட்ட கம்போடியாவினை ஆண்ட முதல் பெண் மகாராணி, இவரது காலம் கி.பி முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதி
கம்போடிய வரலாற்றினைச் செதுக்கிக் காட்டிய மொழுகுச் சிலைகளும், சுவர் ஓவியங்களும்.

மிதக்கும் கிராமத்தில் இருந்த படகுகள்
பழைய காலத்து கைவண்டி
கைமர் இன மக்களின் கிராமத்தின் நுளைவாயில்
இவரைத் தெரியும் தானே, இவர் மெழுகு சிலை இல்லை, உண்மையான மாடு
Kroeung Village என்ற தென் கிழக்கு கம்போடிய கிராமத்தின் மாதிரி
கம்போடியாவின் உருவச் சிலைகளின் தலைகளை களவாடிய மேற்கு நாட்டவருக்கு பழிக்குப் பழி போல சூப்பர் மேனின் தலை இல்லாத சிற்பம்


மேய்ச்சல் முடிந்து வீடு திரும்பும் நிஜமான மாடுகள், இதுவும் உள்ளேயே

முப்பது மீட்டர் நீளமான் புத்தர் சிலை, இது சியாம் ரீப்பிற்கு அருகில் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட சிலையை ஞாபகப்படுத்துகின்றது.

Wat Preah Keo Morokat எனப்படும் வெள்ளியிலானா பெளத்த மதத்தவருக்கான பகோடா எனும் வழிபாட்டிடம்Royal Palace எனப்படும் மன்னரின் வாசஸ்தலம், இன்றும் கம்போடிய மன்னரின் இருப்பிடமாக சியாம் ரீப்பில் இருக்கின்றது. அதை இந்த மாதிரி கட்டிடம் ஞாபகப்படுத்துகின்றது


Millionaire House எனப்படும் பழைய பெரும் செல்வந்தர்கள் இருந்த வீடுகளின் மாதிரி வடிவம்
ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட காலத்தில் கம்போடியாவில் வந்து குடியேறிய சீன மக்களின் வீடுகளின் முன் மாதிரி.
கலாச்சாரக் கிராமத்துக்குள்ளே நடக்கும் கம்போடிய பாரம்பரிய நடனங்கள், பெருந்திரளானோர் கூடி நிற்க இவை நடப்பது வழக்கம்.
Kroeung Village என்ற தென் கிழக்கு கம்போடிய கிராமத்தின் மாதிரி
Tonle Sap Lake எனப்படும் நீர்ப்படுக்கையில் இருக்கும் மிதக்கும் கிராமத்தின் (Floating and Fishing Village) முன்மாதிரி


அருங்காட்சியகம் ஒன்று
எல்லாம் சுற்றிப் பார்த்து இரண்டு மணி நேர அலைச்சலுக்குப் பின் வெளியே வருகின்றேன். தடல்புடலான ஒரு கல்யாண விருந்து அந்த மாலை நேரத்தில் நடக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு ஓரமாக இருந்து விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்த ருக் ருக் பையனை அழைத்து வண்டியில் அமர்ந்தவாறே, அன்று பார்த்த காட்சிகளை அசை போட்டுக் கொண்டே வண்டியின் மெதுவான ஓட்டத்தோடு மனதை அலைபாய விடுகின்றேன்.

கம்போடிய கலாச்சாரக் கிராமம் குறித்து மேலதிக விபரங்கள் அறிய http://www.cambodianculturalvillage.com/

16 responses so far

Jan 20 2009

ஏழாம் ஜெயவர்மனின் தந்தைக்கோர் ஆலயம் Preah Khan

Published by under Uncategorized

“sacred sword” என்று அர்த்தம் கொள்ளப்படும் Preah Khan என்ற ஆலயம் ஏழாம் ஜெயவர்மனால் கி.பி பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுப்பட்டதாகும். “sacred sword” என்பது Nagara Jayasri (holy city of victory) என்ற மூலத்தில் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகின்றது.இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பு Bayon என்ற ஆலயத்தினை ஒத்ததால் Bayon வகைக்குள் அடக்குகின்றார்கள் தொல்பொருள் வல்லுனர்கள். இந்த Bayon ஆலயத்தினை முன்னர் என் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேனே.

முன்னர் நான் கம்போடிய அரசர்கள் பட்டியலில் குறிப்பிட்டது போல இந்த ஏழாம் ஜெயவர்மன் தனது மனைவி ஜெயதேவி இறந்தபின் அவளின் சகோதரி இந்திரதேவியை மணம் முடித்தான். இரண்டாவது மனைவியான இந்திரதேவி பெரும் புத்த பிரச்சாரகி. எனவே ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் முன்பை விட பெளத்த மதத்தின் ஆதிக்கம் பெரும் எழுச்சி கொண்டு விளங்கியது. அதன் தாக்கம் இன்று வரை தொடர்கின்றது. இவன் காலத்தில் மஹாஜன பெளத்தம் என்ற பிரிவே பின்பற்றப்பட்டது. எனவே ஏழாம் ஜெயவர்மன் இப்படியான பெளத்த ஆலயங்களின் திருப்பணிகளில் ஈடுபட்டது வியப்பேதும் இல்லைத்தானே?


Preah Khan ஆலயம் மிகவும் பிரமாண்டமான மடாலய அமைப்பில் நீண்டதொரு கட்டிட அமைப்பைக் கொண்டது. முழுமையான சித்திரச் செதுக்குவேலைகள் நிரம்பிய கட்டிடங்களும், பாதைகளுமாக கொள்ளை அழகினைப் பொத்தி வைத்திருக்கும் ஆலயம் இது. ஆயிரத்துக்கு மேற்பட்ட பெளத்த துறவிகளுக்கான பாடசாலையும், மடாலயத்தையும் ஒருங்கே கொண்டு இது அமைக்கப்பட்டிருக்கின்றது. Angkor Thom பகுதியில் தனது அரண்மனையை அமைக்கும் காட்டத்தில் மன்னன் ஏழாம் ஜெயவர்மனின் வாசஸ்தலமாகவும் சிறிது காலம் இந்த Preah Khan இருந்ததாம்.

முன்னர் நான் சொன்ன Ta Prohm ஆலயத்தினை ஏழாம் ஜெயவர்மன் தன்னுடைய தாய்க்கு அர்ப்பணித்தது போன்று இந்த Preah Khan ஆலயத்தை இவன் தந்தைக்காக அர்ப்பணித்திருக்கின்றான். பின்னாளின் வந்த இந்து மத ஆதிக்கத்தினால் இங்கே இருக்கும் புத்தர் சிலைகள் பதம்பார்க்கப்பட்டிருக்கின்றன. கட்டிடத்தின் மத்திய பகுதியில் அமைத்திருக்கும் புத்தர் சிலைகளும் நாசகார செயல்களால் உருக்குலைந்திருக்கின்றன.

உருளையான தூண்களைக் கொண்ட கட்டிடமொன்று இந்த ஆலயத்தின் மேற்குப் புறத்தில் இருக்கின்றது. இந்தக் கட்டிடம் எதற்காக எழுப்பப்பட்டது என்பது இன்று வரை புரியாத புதிர். இந்தக் கட்டிடம் கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டின் இரண்டாவது காலகட்டத்தில் எழுப்ப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

தூண்களில் காணப்படும் சிங்க உருவங்கள், போதிசத்துவர், பெரிய அளவிலான கருடன், ஆடும் அப்ஸராக்கள், தேவதைகள், விஷ்ணுவின் சாய்ந்த நிலைச் சிற்பம், கட்டிட மேற்புறத்தில் வளைந்திருக்குமாற்போல நிற்கும் கருடன் என்று விதவிதமான சிற்ப வேலைப்பாடுகளைத் தன்னகத்தே கொண்டு அழிந்தும் அழியாது, ஒரு கிழட்டுச் சிங்கம் போன்று கம்பீரமாக நிற்கின்றது இந்த Preah Khan.

உசாத்துணை:
கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புகள்
Ancient Angkor by Michael Freeman & Claude Jacques

10 responses so far

Jan 15 2009

நீர்த்தேக்கம் நடுவே East Mebon சிவன் கோயில்

Published by under Uncategorized

Eastern Baray என்னும் பெரும் வாவியின் நடுவே குடி கொண்டிருப்பது East Mebon என்னுமோர் சிவனாலயம். இன்றோ நீர் வற்றிய திடலாகவே இந்த வாவி ஒப்புக்கு மட்டும் இருக்கிறது. யசோதபுர/அங்கோர் (Yashodapura/Angkor) என்ற பிரதேசத்தை ஆட்சி செய்த இரண்டாம் ஜெயவர்மனின் காலத்திலேயே இவ்வாலயம் எழுப்பப்பட்டிருக்கின்றது. அதாவது கி.பி பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி என்று சொல்லப்படுகின்றது. மூன்று அடுக்குகள் கொண்டு ஐந்து கோபுரங்கள் தாங்கிய பிரமிட் வடிவை ஒத்த இவ்வாலயம் சிவனுகே உரித்தான மேரு மலையினைப் பிரதிபலிக்கும் வண்ணம் எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

ஒரு காலத்தில் யசோதபுர என்னும் இராசதானிக்கே நீர்வழங்கும் ஆற்றல் கொண்டதாக இருந்த Eastern Baray 7.5 கி.மீ தூரமும் 1830 மீட்டர் அகலமும் கொண்டது. 55 மில்லியன் கியூபிக் மீட்டர் நீர் வழங்கலை கொண்ட ஆற்றல் படைத்திருந்ததாம் இது. அத்தோடு “யசோதரதத்தக” (யசோதர நீர்த்தேக்கம்) என்றும் பெயர் வழங்கப்பட்டதாம். இந்தப் பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும் சமஸ்கிருத எழுத்துக்கள் “புனித கங்கையின் பாதுகாப்பின் பிரகாரம்” என்று சொல்லுகின்றன. எனவே இந்தியாவின் கங்கை நதியை ஒத்த வகையில் இது கருதப்பட்டிருக்கின்றது.

East Mebon ஆலயத்தினை முற்று முழுதான சிவனுக்குரிய ஆலயமாக அர்ப்பணித்து இவ்வாலயத்தின் கட்டிட அமைப்பை Pre Rup என்ற வகைக்குள் அடக்குகின்றார்கள். காரணம் முன்னர் நாம் பார்த்த Pre Rup ஆலயத்தை ஒத்த கட்டிட அமைப்பைக் கொண்டதாகவே இது சொல்லப்படுகின்றது. Pre Rup என்பதற்கு ‘turning the body’ என்று அர்த்தம் கொள்ளப்பட்டு பாரம்பரிய சடங்குகள் பிரகாரம் Pre Rup ஆலயத்தில் இறந்தவருக்கு ஈமைக்கிரிகைகள் செய்வதாக முன்னர் சொல்லியிருந்தேன். இவ்விரண்டு ஆலயங்களுமே சிவபக்தனான இரண்டாம் இராஜேந்திர வர்மனால் எழுப்பப்பட்டிருப்பது சிறப்பு.


யானைச் சின்னம் கண்டால் அது East Mebon (இரண்டாவது அடுக்கில் இருக்கிறது)

கோயிலின் உட்புறம் நீர்ப்பரப்பில் இருப்பதால் நில மட்டத்துக்கு மேல் நடைபாதையும் நடுவே நீர் தேங்க வசதியும்

ஐந்தாம் ஜெயவர்மன் தன்னுடைய ராஜதானியை அங்கோரில்(Angkor) இருந்து Koh Ker என்ற பகுதிக்கு கி.பி 928 இல் மாற்றிக் கொண்டான். பதினாறு வருஷங்கள் கழித்து ஆட்சிக்கு வந்த இரண்டாம் இராஜேந்திரவர்மன் மீண்டும் அங்கோரினை(Angkor) தனது இராஜதானியக்கி விட்டு Eastern Baray என்ற வாவிக்கு நடுவே எழுப்பினான் இந்த East Mebon ஆலயத்தைக் கட்டியெழுப்பினான். தன்னுடைய பெற்றோர்கள் சிவபெருமானைக் கெளரவிக்கும் முகமாக என்ற அர்த்தத்திலேயே இவ்வாலயத்தைக் கட்டியெழுப்பினான் என்று சொல்லப்படுகின்றது. கம்போடியக் கோயில் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில்

அத்தோடு கல்வெட்டுச் சாசனங்களின் பிரகாரம் அங்கோரில் (Angkor) இருந்து Koh Ker இற்கு மாற்றி ஸ்திரமற்ற அரசாட்சி முன்னர் நிலவிய நிலை இன்னும் தொடராது அங்கோரில் (Angkor) மீண்டும் நிலையான ஆட்சி தொடரவேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டவனின் அருளை வேண்டியும் இது எழுப்பப்பட்டதாகச் சான்று பகிர்கின்றன. மேலும் கல்வெட்டுக் குறிப்புக்களின் அடிப்படையில் இது கி.பி 947 இல் இவ்வாலயத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டாலும் கி.பி 952 இலேயே இது முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

கோயிலின் தரிசனம் முடிந்து வருகின்றேன். வழியில் வாவியினை ஊடறுத்துப் போகும் பயணப்பாதையின் இருமருங்கும் வாசுகி என்னும் மலைப்பாம்பை மத்தாய் உபயோகித்து தேவர்களும் அசுரர்களும் கடையும் பாற்கடல் காட்சியை நினைவாக்கி எழுந்திருக்கின்றன தலை களவு போன சிற்பங்கள் பென்னாம் பெரியதாய் நீண்ட தூரத்துக்கு.

உசாத்துணை:
கம்போடிய சுற்றுலாக் குறிப்புக்கள் கையேடு
Ancient Angkor by Michael Freeman & Claude Jacques

6 responses so far