Archive for March, 2008

Mar 29 2008

கம்போடியாவில் காலடி வைத்தேன்

Published by under Uncategorized

மாலை 6.25(கம்போடிய நேரம்) மார்ச் 14, 2008

நான் இடம் மாறி இறங்கியிருந்தது வியட்னாமின் Da Nang என்ற சர்வதேச விமான நிலையத்தில். இது வியட்னாமின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாகும். ஏற்கனவே சிட்னியில் இருந்து புறப்பட்ட விமானம் தாமதமாக இறங்கியது, அடுத்த விமானத்தைப் பிடிக்க இன்னொரு உள்ளக ரயில் எடுத்தது என்று நேரவிரயமாகி இந்தக் குளறுபடிக்குக் காரணமாகி விட்டது. இந்த விமானம் வியட்னாமில் தரித்து அங்குள்ள பயணிகளை ஏற்றிக் கொண்டு போகும் என்று நான் இந்த விமானத்தில் ஏற முன்னரேயே அறிவித்தல் விடப்பட்டிருக்கக் கூடும். ஆனால் எனது விமானச் சீட்டிலோ அல்லது, பயண விபரப் பத்திரத்திலோ (Itinerary) இது பற்றி எந்தத் தகவலும் இல்லை. போதாக்குறைக்கு இந்த Silk Air விமானத்தில் ஒவ்வொரு பயணிக்கும் பிரத்தியோகமான காட்சித் திரையும் இல்லை.

விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிப் பெண் அந்த ஆஜனுபாகு பொலிஸ்காரரிடம் பேசியதைத் தொடர்ந்து அவர் என்னை மீண்டும் ஓடுபாதைக்குச் செல்லும் பஸ் மூலம் மீண்டும் நான் வந்த விமானத்தில் சேர அனுப்பிவைத்தார். அசட்டுச் சிரிப்போடு என் இருக்கையில் அமர்ந்தேன். எனக்குள் ஏதேதோ விபரீதக் கற்பனைகள் செய்து உண்மையில் நான் பயந்து போனேன். ஏறக்குறைய எல்லா ஆசிய நாடுகளுக்கும் முன்னர் பயணித்த அனுபவம் இருந்தாலும் ஒவ்வொரு நாட்டின் விமான நிலையக் குடிவரவுப் பகுதியை அண்மித்தால் தானாகவே ஒரு அலர்ஜி எனக்கு வந்துவிடும்.

மேலதிகமாக புஷ் நாட்டுப் பயணிகள் பலர் ஏறி அமர விமானம் Siem Reap நோக்கிப் பயணித்தது. கம்போடியாவுக்குப் பயணம் செய்யும் மேற்குலகத்தவர்கள் பலர் முதலில் வியட்னாமுக்கும் சென்றே வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

Siem Reap-Angkor சர்வதேச விமான நிலையத்தில் கொஞ்சம் ஓடிப் போய், பின்னர் நிதானமாகத் தன் கால்களைப் பதித்தது Silk Air விமானம். விமானத்தின் இருக்கைச் சன்னல் வழியே அந்த விமான நிலையத்தைப் பார்க்கின்றேன். முன்னர் இருந்த நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முகப்புக் கூரை போல கூம்பு வடிவக் கூரையுடன் கலையழகோடு கூடிய புத்தம் புதிய விமான நிலையமாகக் காட்சியளிக்கின்றது. விமான ஒடுபாதையில் வைத்தே ஆளாளுக்குப் புகைப்படமும் எடுக்கக்கூடிய சுதந்திரத் திருநாடு போல இருக்கின்றது. குடிவரவுப் பகுதியிலும் அதிக கூட்டமில்லை. விசா எடுக்காமல் வந்தவர்களுக்குக்குக் கூட உடனேயே அந்தக் குடிவரவுப் பகுதியில் வைத்தே அனுமதிப் பத்திரத்தில் பதியவைத்து நாட்டின் உள்ளே அனுமதிக்கின்றார்கள். பத்து நிமிடத்துக்குள்ளாகவே எல்லாவிதச் சோதனையும் முடிந்து வெளியேறுகின்றேன். விமான நிலைய உட்புறமே அங்கோர் வாட் பாணியில் சிற்பச் சிலைகளோடு காட்சியளிக்கின்றது. வெளியில் பயணப்பையைப் பறித்து இழுத்துக் கொண்டே வாருங்கள் நம் டாக்ஸியில் போகலாம் என்ற பிக்கல் பிடுங்கல்காரகள் ஒருவரையும் காணோம். அட..ஒன்றிரண்டு பொலிசார் கூட தேமேயென்று பேசாமல் இருக்கின்றார்கள். அதிகார தோரணையையும் காணோம். கையேந்தும் பிச்சைக்காரர்கள் இல்லவேயில்லை.விமான நிலையச் சுற்றுப்புறந்தோறும் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாக இருந்தது.

பெரும்பாலான தங்குமிடங்கள் தம் விருந்தினர்களை அழைக்க வாடகைக் காரை ஒழுங்கு செய்துவிடுவார்கள். அதே போல் நான் தங்கவிருக்கும் ஹோட்டலின் சார்பில் வாடகைக்கார்க்காரர் என் பெயர் பொறித்த அட்டையோடு காத்து நின்றார். காரில் அமர்ந்ததும் என் வழமையான சுபாவம் போல் சாரதியிடம் பேச்சுக்கொடுக்க முனையும் போது அவராகவே பேச்சை ஆரம்பித்தார். இந்த விமான நிலையம் போன ஆகஸ்ட் 2006 இல் தான் புதிதாகக் கட்டப்பட்டது. இப்போதெல்லாம் இந்த சியாம் ரீப் நகரைச் சுற்றுலாப் பயணிகள் மொய்க்கின்றார்கள். கடந்த மூன்றாண்டுக்குள் மட்டுமே சின்னதும் பெரியதுமாக ஏறக்குறைய 200 ஹோட்டல்கள் வரை திடீரென்று முளைத்துவிட்டன என்றார். அவரின் கூற்றை மெய்ப்பிப்பது போல விமான நிலையத்தில் இருந்து போகும் வழியெங்கணும் சின்னதும் பெரியதுமாக இருமருங்கிலும் ஹோட்டல்கள்….ஹோட்டல்கள் தான். வேறெந்த வர்த்தக நிறுவனங்களினதும் வானளாவிய கட்டிடங்கள் கண்ணில் தென்படவில்லை. கம்போடிய நாட்டின் முதலிடத்தில் இருக்கும் வருவாயே இந்தச் சுற்றுலாத் தொழில் என்பதை இவை கட்டியம் கூறியன. ஒவ்வொரு ஹோட்டல்களுமே அவை சிறிதோ, பெரிதோ தம் முகப்பில் மட்டும் அங்கோர் காலத்து கட்டிடக்கலையை நினைவுபடுத்துமாற்போல கற்சிலைகளையும் கட்டிட அமைப்பையும் தாங்கி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. Angkor என்ற சொல்லை வைத்தே 99% வீதமான ஹோட்டல்களுக்கும், நுகர்வுப் பொருட்களுக்கும் பெயரிட்டிருக்கின்றார்கள். கம்போடியாவில் ஏகபோக பியர் பானத்தில் பெயர் Angkor Beer.
கம்போடியா குறித்த அறிமுகத்தை புதிதாக வரும் பயணிக்குச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டே வந்தார் சாரதி. நான் தங்கவிருக்கும் ஹோட்டலை அண்மித்தது கார்.

ANGKORIANA Hotel இதுதான் நான் தங்க ஏற்பாடு செய்திருக்கும் ஹோட்டல். பயணத்துக்கு முன்னரே Lonely Planet கையேட்டின் உதவியோடு ஒவ்வொரு ஹோட்டலாக ஆய்ந்து கடைசியில் சிக்கிய மீன் இது. காலை உணவுடன் தங்கும் கட்டணமாக 45 அமெரிக்க டொலரை நாளொன்றுக்கு அறவிடுகின்றார்கள். இதை விட மலிவான தங்கும் இடங்களும் இருக்கின்றன. ஆனால் கொடுக்கும் காசு குறையக் குறைய, தங்குமிடத்தின் வசதி குறைந்து, பாதுகாப்பின்மை அதிகரிக்கும் என்பது பின்னர் நான் கண்டு தெரிந்த உண்மை. கம்போடியாவில் நாளொன்றுக்கு 10 அமெரிக்க டொலரில் இருந்து 2000 அமெரிக்க டொலர் வரையிலான பலதரப்பட்ட வாடகையோடு தங்குமிடங்கள் இருக்கின்றன. நாளொன்றுக்கு 2000 அமெரிக்க டொலர் கட்டித்தங்கும் Raffles Grand Hotel D’Angkor இன் படம் இதோ. (நமக்கெல்லாம் படத்தில் மட்டுமே பார்க்கலாம் 😉

பொதுவாக நம் தங்குமிடத்தைத் தேர்ந்தெடுக்கும் போது அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஓரளவு சிறப்பாகவும், இயன்றவரை நாம் சுற்றிப்பார்க்கப் போகும் இடங்களுக்கு அல்லது நகரப்பகுதிக்கு அண்மித்ததாகவோ இருந்தால் சிறப்பாகவிருக்கும். நான் தங்கியிருந்த ANGKORIANA ஹோட்டலுக்கு நேர் எதிரே Angkor தேசிய நூதனசாலை இருந்ததும், பதினைந்து நிமிடத் தொலைவில் Siem Reap பட்டணம் இருந்ததும் எனக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. எனது ஹோட்டலின் உட்புறம் தோறும் கலைநயம் விளையும் ஓவிய, சிற்ப அலங்காரங்களுடன் கொடுத்த காசுக்கு மேலாகவே இந்த ஹோட்டல் அமைந்திருந்தது. இந்த ஹோட்டல் குறித்த மேலதிக விபரங்களை அறிய: ANGKORIANA Hotel


ஹோட்டலின் உள்ளேயிருந்த சில காட்சிப்பொருட்கள்
நான் பயணப்படுவதற்கு முன்னர் சிட்னியில் வைத்தே நானூறு அமெரிக்க டொலர்களாக மாற்றிக் கொண்டேன். அதில் ஐம்பது டொலரில் மட்டும் ஒரு டொலர் நோட்டுக்களாக ஐம்பதை எடுத்துக் கொண்டேன். பணம் மாற்றும் போது வங்கியில் இருந்தவர் கொடுப்புக்குள் சிரித்தவாறே தந்திருந்தார். ஆனால் இது எவ்வளவு தூரம் கைகொடுக்கும் என்பது கம்போடியா போய் வந்தவருக்குத் தான் தெரியும். கம்போடியாவின் நாணயம் ரியால். ஒரு அமெரிக்க டொலர் என்பது சராசரியாக 4000 கம்போடிய ரியாலுக்கு சமன். இந்தக் கணக்கில் பார்த்தால் பயணம் போகும்போது கூடவே ஒரு லாரியை ஒழுங்குசெய்தால் தான் கம்போடிய நோட்டுக்கட்டுக்களை அடுக்க இலகுவாக இருக்கும். இந்த நிலையை வெகுவாக உணர்ந்த கம்போடியர்கள் இப்போதெல்லாம் தேனீர்ச்சாலையில் தேனீர் குடிப்பதில் இருந்து எல்லாவற்றுக்குமே அமெரிக்க டொலரையே புழக்கத்தில் கொண்டுவந்து விட்டார்கள். கழுதை பசித்தால் கூட கம்போடிய நோட்டைத் தொடாது போல. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீப் போத்தல் என்றால் ஒரு டொலருக்கு இரண்டு, பத்து நிமிஷ சவாரி என்றால் ஒரு டொலர். மீட்டர் சார்ஜ் எல்லாம் கிடையாது. எல்லாமே குத்துமதிப்பில் அமெரிக்க டொலராகக் கேட்கின்றார்கள். ஒரு லீட்டர் பெட்ரோலே 4200 கம்போடிய ரியாலுக்கு மேல் போகின்றது. ஹோட்டலில் நிமிடத்திற்கு மூன்று அமெரிக்க டொலரை தொலைபேசும் கட்டணமாக அறவிடுகின்றார்கள். இதுதான் கொஞ்சம் சூடு.

ஹோட்டல் வந்ததும் முதல் வேலையாக வரவேற்புப் பகுதிச் சேவையாளர்களை நட்புப் பாராட்டி வைக்கிறேன். மேற்கொண்டு நான் செய்யப்போகும் பயண அலுவல்களுக்கு இவர்களிடம் ஆலோசனை கேட்க இலகுவாக இருக்கும் என்ற ஒரு சுயநலம் இருந்ததும் ஒரு காரணம். பின்னர் அது மிகவும் கைகொடுத்தது.

36 responses so far

Mar 25 2008

கம்போடிய உலாத்தல் ஆரம்பம்

Published by under Uncategorized


பத்து நாள் குறுகிய கால விடுமுறையாக ஈஸ்டரை ஒட்டி எனக்கு வாய்த்தது. இரண்டுவருட இடைவெளியாகி விட்டது. வெளிநாடு எங்காவது கிளம்பலாம் என்றால் எனக்கு முதலில் தோன்றியது கேரளாவில் கடந்தமுறை விடுபட்ட பகுதிகள் தான். ஆனால் இருக்கும் பத்து நாளுக்கு இதுவெல்லாம் தேறாதென்று திடீரென்று முடிவு கட்டி கம்போடியா, சிங்கப்பூர், மலாக்கா போன்ற இடங்களுக்கு என் விடுமுறையை மாற்றிக் கொண்டேன். ஏற்கனவே கம்போடியாவுக்குச் சென்று திரும்பியவர்களிடமும் சில தகவல்களைப் பெற்றுக் கொண்டேன். தனியே கம்போடியா பயணம் என்றால் முழுமையான வரலாற்றுச் சுற்றுலாவாக வந்துவிடும் என்று நினைத்து, இடையே கொஞ்சம் நம் கேளிக்கைகளுக்கும், பொழுதுபோக்கிற்கும் உதவும் மலேசியா, சிங்கப்பூரையும் சுற்றுலாப் பட்டியலில் சேர்த்துக் கொண்டேன். நான் செல்லவிருக்கும் நாடுகளுக்கு விசாச் சிக்கல் என்பதும் பெரியதாக இல்லை என்பதும் இந்தக் குறுகிய காலப் பயணத்துக்கு உதவியாக இருந்தது.

மலேசியா, சிங்கப்பூருக்கு மேலதிக விசா தேவையில்லாமல் இருந்தது. கம்போடியாவுக்கு மட்டுமே விசா எடுக்கவேண்டியிருந்தது. அதிலும் இன்ப அதிர்ச்சி ஒன்று கிடைத்தது. கம்போடியாவுக்கான விசாவினை அந்த நாட்டின் குடிவரவு இணையத்தளத்தில் விண்ணப்பித்தே எடுக்கமுடியும். கம்போடியாவின் இந்த e-Visa வினை எடுக்க ஒரு பாஸ்போர்ட் அளவு உங்கள் புகைப்படமும், இணைய மூலம் பணம் கட்டும் வசதியும் ( 25 அமெரிக்க வெள்ளிகள்) இருந்தால், அவர்களின் இணையத்தளத்திலேயே பத்து நிமிடங்களுக்குள் விண்ணப்பித்து, படத்தையும் அந்த இணைய விண்ணப்பத்திலேயே இணைத்தும் விடலாம். இதை நான் ஒரு நாள் இரவு பத்துமணிக்கு விண்ணப்பித்தபோது அடுத்த நாட்காலை ஒன்பது மணி வாக்கில் என் மின்னஞ்சலைப் பார்த்தபோது விசாவை என் புகைப்படம் இணைத்து அனுப்பியிருந்தார்கள். இந்தத் துரிதமான செயற்பாடே இந்த நாட்டுக்குப் பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகள் இன்றைய காலகட்டத்தில் பயணிப்பதற்கு ஒரு காரணமும் கூட. இந்தப் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு கூட இணையத் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு இதுவோர் உதாரணம். ஆனால் விதிவிலக்காக இந்த நாடுகளின் பாஸ்போர்ட் உள்ளவர்கள் அந்தந்த நாட்டில் இருக்கும் கம்போடிய தூதுவராலயம் மூலமே விசாவினை விண்ணப்பிக்க முடியும்: Afghanistan, Algeria, Arab Saudi, Bangladesh, Iran, Iraq, Pakistan, Sri Lanka, Sudan.

மேலதிக விபரங்களுக்கு

அடுத்த வேலையாக Lonely Planet இன் கம்போடியா குறித்த சுற்றுலா வழிகாட்டி நூலை வாங்கிக் கொண்டேன். இணையமூலமாக எத்தனையோ தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதிலும், இந்த நூலின் வசதி என்னவென்றால் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த ஒரு தகவல் களஞ்சியமாக ஒருக்கின்றது. கூடவே அந்தந்த நாடுகளில் உலாவும் போதும் கையோடு எடுத்துச் சென்று மேலதிக விபரங்களையும், மற்றவர்களைக் கேட்காமலேயே பெற்றுக் கொள்ள முடியும்.

பொதுவாக கம்போடிய பயணம் மேற்கொள்வோர் தம் பயண ஏற்பாட்டைச் செய்யும் போது விமானச் சீட்டு முகவர்கள் அந்த நாட்டுத் தலைநகர் Phnom Penh என்ற இடத்தையே சேருமிடமாகப் போட்டு விடுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை என் பயணம், கம்போடியக் கோயில்கள் நோக்கிய உலாத்தல் என்பதால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும்/கட்டாயம் போகும் Siem Reap என்ற இடத்தையே சேருமிடமாக உறுதிப்படுத்திக் கொண்டேன். Siem Reap இல் தான் தொன்மை மிகு ஆலயங்களும், வரலாற்று நினைவிடங்களும் கொட்டிக் கிடக்கின்றன.

காலை 8.50 மணி, மார்ச் 14, 2008

சிங்கப்பூர் விமான சேவையின் புதிய Air bus A380 என்ற மகா வானூர்தியில் செல்லப் போகின்றோமே என்ற சந்தோஷமும் உள்ளுர ஒட்டியிருந்தது. இருபது நிமிடத் தாமதிப்பில் விமானம் தரையை விட்டு வானுக்குத் தாவியது. எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருந்து சுற்றும் முற்றும் பார்க்கின்றேன். அவ்வளவு பெரிய மாற்றம் ஒன்றையும் காணவில்லை. ஊத்தை படியாத Remote control கருவியைத் தவிர.
வர்த்தக, மற்றும் முதற்தர வகுப்பு ஆசனங்களில் இருப்போருக்கு மேலதிக வசதிகள் இருக்கும் போல.யாரோ ஒரு புண்ணியவான் பரிந்துரையில் வேல், மருதமலை, மலைகோட்டை போன்ற மூன்றாந்தரக் குப்பைகள் ஓடும் திரையில் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு ஹெட்போனை மாட்டி விட்டு சீனி கம் பாடல்களை ராஜா இசைய வைக்க, உள்ளூர் நூலகத்தில் எடுத்த சுஜாதாவின் “புதிய பக்கங்களை” பிரித்துப் படிக்கின்றேன்.

ஏற்கனவே தாமதித்து விமானம் கிளம்பியதால் Siem Reap இற்கு போகும் அடுத்த விமானத்துக்கான நேரம் நெருங்கிவிட்டது. சிங்கப்பூரில் இறங்கி Siem Reap செல்லும் விமானத்தை எங்கே பிடிப்பது என்று கணினித் திரையில் பார்த்தால், அடுத்த Terminal இற்கு உள்ளக ரயில் மூலம் தான் செல்லவேண்டுமாம். பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு கழுத்தில் கொழுவியிருந்த பயணப் பொதியுடன் ஓட ஆரம்பித்தேன். ரயில் பிடிக்கும் இடத்திற்கு இளைக்க இளைக்க ஓடிவந்து எதிர்ப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பணிப்பெண்ணிடம் ” என் விமானம் கிளம்ப 10 நிமிடம் தான் பாக்கி, ஏதாவது செய்யமுடியுமா? ” என்று கேட்டேன். தன்னிடம் இருக்கும் வயர்லெஸ் கருவி மூலம் அவர்களுக்கு என் வருகையைத் தெரியப்படுத்துவாள் என்ற நப்பாசை தான் காரணம். அவளோ “ரயில் பிடித்துப் போய் முயற்சி செய்த்து பார்” என்று சொல்லிவிட்டு தன் செல்லில் யாரோடோ கிசுகிசுக்க ஆரம்பித்தாள். திரும்பவும் நற..நற..

என்னைப் போலவே இன்னும் சில பேதைகளும் தாமதமாகவே சேர்ந்ததால், Siem Reap செல்லும் விமானம் எமக்காகக் காத்திருந்து தாமதித்தே கிளம்பியது. சிங்கப்பூர் விமான சேவையின் Silk Air என்ற சேவை அது. அதில் வீடியோவும் கிடையாது, பாட்டும் இல்லை. சுஜாதாவின் “நில்லுங்கள் ராஜாவே” யை எடுத்துப் படிக்கின்றேன்.
“வியட்னாமில் போதைப் பொருட்களைக் கடத்துவோருக்குக் கடும் தண்டனை கிடைக்கும்” என்ற அறிவித்தலை ஒரு பணிப்பெண் ஒலிபெருக்கி மூலம் விடுக்கின்றாள்.
“உவளென்ன Siem Ream செல்லும் விமானத்துக்கு வியட்னாம் எண்டு சொல்லுறாள், வியட்னாம்காரி போல ” என்று எனக்குள் சிரித்துக் கொண்டே படிப்பதைத் தொடர்கின்றேன்.
விமானம் தரையைத் தொடுகின்றது. போன 2006 இல் ஊருக்குப் போனபோது போன இரத்மலானை விமான நிலையம் போல ஒரு தோற்றத்தில், ஆங்கிலமில்லாத ஏதோ ஒரு மொழியில் விமான நிலையத்தில் சுற்றும் முற்றும் எழுதியிருக்கின்றது. பக்கத்தில் ஒரேயொரு வியட்னாம் விமானம் மட்டும் தரித்து நிற்கின்றது. வியட்னாமுக்கு பக்கத்தில் கம்போடியா இருப்பதால் அதன் செல்வாக்கு அதிகம் போல என்று நினைத்துக் கொண்டே விமானத்தில் இருந்து இறங்கி, விமான நிலைய குடிவரவுப் பகுதிக்கான பஸ் பிடித்துப் போய் குடிவரவுப்பகுதிக்கான வரிசையில் முதல் ஆளாக ஓடிப் போய்ச் சென்று அங்கிருந்த பெண் அதிகாரியிடம் என் பாஸ்போர்ட்டையும், e-Visa பிரதிகளையும் ஒப்புவிக்கின்றேன். எல்லாவற்றையும் திரும்பத் திரும்பப் பார்க்கின்றாள். “என்ன கோதிரிக்கு இவள் கன நேரம் மினக்கெடுத்துறாள்” என்று உள்ளுக்குள் பயணக்களைப்பில் புழுங்கினேன்.

தூரத்தே இருந்த ஆஜனுபாகுவான ஒரு போலிஸ்காரரை அழைத்தாள். இரண்டு பேரும் தம் மொழியில் ஏதோ பேசுகின்றார்கள். அவர்கள் சாதாரணமாகப் பேசினாலே சண்டை பிடிப்பது போலிருக்கின்றது. தன் பேச்சை அவனிடம் இருந்து துண்டித்து என்னிடம் அரைகுறை ஆங்கிலத்தில் ” நீங்கள் இறங்கியிருப்பது வியட்னாம் நாட்டில்” என்றாள்.
எனக்கு உடம்பெல்லாம் ஒரே நேரத்தில் வியர்க்க ஆரம்பித்தது.

36 responses so far