Archive for October, 2007

Oct 26 2007

பெங்களூர் Kemp Fort இல் கண்ட சிவனாலயம்

Published by under Uncategorized
கர்னாடக உலாத்தலை ஆரம்பித்து விட்டுப் பாட்டுப் போட ஓடிவிட்டார் என்று நினைப்பவர்களின் கருத்தை மாற்ற என் கர்னாடக உலாத்தல் விட்ட இடத்தில் இருந்து தொடர்கின்றது. வேலைத்திட்டத்திற்காக பெங்களூர் அலுவலகம் வந்தாயிற்று. ஆனால் வேலை முடிந்த மாலை வேளைகளில் பொழுதைக் கழிக்க ஒரே வழி பெங்களூரின் உள்ளூர் அமைவிடங்களைப் பார்த்து முடித்துவிட வேண்டியது தான். அதுவும் அதிக தூரம் அற்ற இடங்களைத் தெரிவு செய்வோம் என்று நினைத்து உதவிக்கு எனக்காக நியமிக்கப்பட்ட வாகனம் ஓட்டும் நண்பரிடம் பேச்சும் கொடுத்தேன்.

அவர் பெயர் ஹனீப், வட நாட்டில் இருந்து இரண்டு தலைமுறைக்கு முன் பெங்களூருக்குப் பிழைப்புக்காக வந்தவராம். தமிழைச் சரளமாகப் பேசுகின்றார். அவ்வப்போது காரின் குறுக்கே ஹீரோ ஹொண்டாவை நுளைக்கும் ஐ.டி பசங்களையும், பொண்ணுகளையும் சம உரிமை கொடுத்து, இறக்கிய கார்க் கண்ணாடி இடுக்கால் எட்டிப் பார்த்துத் திட்டியவாறே, பெங்களூரில் இருக்கும் முக்கியமான பார்க்கவேண்டிய இடங்களைச் சொல்லிக் கொண்டே போகின்றார்.

அப்படி நாங்கள் முதலில் தேர்ந்தெடுத்தது பெங்களூர் விமான நிலையத்துக்குப் போகும் சாலையில் உள்ள Kemp Fort என்ற உடுபிடவை வணிக வளாகமும் அதனோடு ஒட்டியிருக்கும் சிவனாலயமும் ஆகும்.

Kemp Fort தன் பெயருக்கேற்றாற்போல் கோட்டை ஒன்றின் முகப்பு வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் நான்கு மாடி விற்பனை வளாகம். ஆடை ஆபரண இத்தியாதிகளுக்கு ஒரே கூரையின் கீழ் ஆண் பெண் இருபாலாருக்குமாக அமைக்கப்ப்ட்டிருக்கின்றது. அவுஸ்திரேலியாவில் இருக்கும் உடுப்பு விற்பனை நிலையத்துக்குச் சென்று, கவர்ந்திழுக்கும் நாலைந்து நல்ல சட்டைகளை எடுத்து விரித்தால் Made in India என்றிருக்கும். ஆனால் விலையோ நடிகர் ஜெயராம் வளர்க்கும் செல்லப்பிராணி விலை(அதாங்க ஆனை விலை)
டொலர் கணக்கில் கொட்டித் தீர்த்து, வயிறெரிந்து வாங்குவதை விட Kemp Fort இலேயே அள்ளிக் கொள்ளலாம் என்றால் என் ஆசையில் மண். அவுஸ்திரேலியாவில் விற்கும் விலைக்கு கிட்டும் அளவுக்கே Kemp Fort இல் இருக்கும் தரமான உடுபிடவைகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. எல்லாம் பில் கேட்ஸ் ஆளுங்க செய்யும் வேலை. பின்னே, அமெரிக்கர்கள் அதிகளவில் வந்து போகும் ஸ்தலமாக பெங்களூர் மாறிவிட்டதால், இப்பொது எல்லாமே அங்கு கொள்ளை விலை தான். ஒரு சில உடுப்பு வகைகளை வாங்கி விட்டு, வெளியில் கார் அருகே நிற்கும் ஹனீபிடம் போகின்றேன்.


“பிரபா சார், வாங்க டெம்பிள் போகலாம் என்கிறார் ஹனீப். அவருக்குப் பின் நான் தொடர, Kemp Fort விற்பனைக் கூடத்தோடு பின் பக்கமாக அமைந்திருக்கின்றது சிவனாலயம் ஒன்று.
வாயிலில் விளங்கும் விநாயகப் பெருமான் சிலையும், உள்ளே நுளையும் போது காணும்
மிகப் பெரும் சிவபெருமானின் சிலையும் கண்டதும் தானாகவே கைகளைக் கூப்பித் தொழ வைக்கின்றன. அமைதியான கூட்டுப் பிரார்த்தனை ஒன்று அந்த இரவுப் பொழுதைத் தூசி தட்டிப் பெருக்குகின்றது. சில மணித்துளிகள் அந்த இறைலயத்தில் ஒன்றி விட்டு மெல்ல நகர்கின்றேன் அவ்விடத்தை விட்டு.

பெங்களூர் வந்தால் தவற விடக்கூடாத இடங்களில் இதுவுமொன்று.

இப்பதிவில் இருக்கும் முதற் புகைப்படம் மட்டும் Douglas Whitby ஆல் எடுக்கப்பட்டு இணையம் வழி பெறப்பட்டது. மற்றயவை என் சொந்தத் தயாரிப்புக்கள்.

15 responses so far