Archive for August, 2006

Aug 21 2006

படகு விருந்து

Published by under Uncategorized

மே 28, மதியம் 1.00 மணி (இந்திய நேரம்)


நான் பயணப்பட்ட கடற்கழி, நன்னீர் ஏரி என்று குறிப்பிட்டார்கள். இரு மருங்கிலும் குடியிருப்பை அமைத்து வாழும் மக்களின் வாசலை இந்த ஏரி தான் முற்றமாக நிறைக்கின்றது. பெண்கள் இந்த ஏரியின் கரையில் நின்று குளிப்பதும், துணிகளைத் துவைப்பதுமாக இருந்தார்கள். ஆண்கள் வழக்கம்போல் குளிப்பதோடு மட்டும் நிற்கிறார்கள். நான் போன காலம் பெருமழைகாலம் ஆரம்பமாகிவிட்டதை முன்னரே சொல்லியிருந்தேன். டிசம்பர் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை இப்படியான கடற்கழிச்சுற்றுலாவிற்கு உகந்த மாதங்களாகக் கடலோடி நண்பர்கள் சொன்னார்கள். வயிறுமுட்டசாப்பிட்டவனைப் போல ஆடி அசைந்து மெதுவாகப் பயணப்படுகின்றது படகு வீடு. மெதுவான இப்பயணம் ஆங்காங்கு காணும் காட்சிகளை உள்வாங்கவும் வசதியாக இருக்கின்றது. கரைமருங்கில் அசோகா மரங்களும் கண்ணுக்குத் தப்பவில்லை. வாழைமரங்கள் கூட உள்ளேன் ஐயா என்கின்றன. கல் வீடுகளும், குடிசைகளுமாக மாறி மாறித் தென்பட்டது கடலுக்கும் வர்க்க ஏறத்தாழ்வு இருப்பதைக் காட்டியது.இந்த நீரோட்டம் நடுவே கொல்லம் 83KM சம்புக்குளம் 13 KM என்று தூரவழிகாட்டிகள் காட்டிநிற்கின்றன. ஒருபக்கக் கரையைப் பார்க்கின்றேன். அக்கரையில் கடலை மறித்து நெற்பாசனம் செய்யப்படுகின்றது. மறுபுறத்தே விரிந்த பரப்பில் இயற்கையாக அமைந்த ஆயிரம் தாமரை மொட்டுகளோடு தடாகப் பரப்பு.

மதியம் 1. 30 ஐத் தொடுகின்றது கடிகாரமுள். மதிய உணவுப் பரிமாறலுக்காக நங்கூரம் பாய்ச்சப்படுகின்றது. படகு ஓட்டும் முதியவர், அவருக்கு உதவியாக நடுத்தரவயசுகாரர், மற்றவர் சமையலையும் தங்கும் உல்லாசப்பயணிகளையும் கவனிக்கும் 25 வயதான சிஜீ என்ற இளைஞன். படகுவீட்டுப் பயணத்தில் நான் இயற்கைக் காட்சிகளை இரசித்துக்கொண்டே வரும் போது படகு வீட்டின் சமையற் பகுதியில் சிஜி சமைத்தவாறே அவ்வப்போது எனக்கு அருகில் வந்து இந்தப்படகுவீட்டும் பயணத்தின் தன் அனுபவங்களையும் மேலும் சுவையான செய்திகளையும் சொல்லச்சொல்ல நானும் கேட்டுக்கொண்டே அதுவரை வந்திருந்தேன். சரளமாக ஆங்கிலத்திலும் அவன் பேசியது எனக்கு வியப்பாக இருந்தது. வெறும் கேள்விஞானத்தின் மூலமே இப்படிச் சரளமாக அவன் ஆங்கிலம் பேசக்கற்றுக்கொண்டான். அவ்வப்போது மலையாளத்தில் அவன் பேசும் போது அவற்றை உள்வாங்கி எனக்குத் தெரிந்த சொற்களை வைத்துச் சமாளித்தேன்.மலையாள மொழிப்படங்களைப் பற்றிப் பேசும் போது “என்னென்னும் கண்ணட்டான்டே” (தமிழில் வருஷம் 16 என்று வந்தது) படம் பற்றி ரொம்பவே சிலாகித்துப் பேசினான். கடலோரம் வாங்கிய காற்றும், படகு அலைச்சலும் இயல்பாகவே வயிற்றைக் கிளற்ப் பசியை வா என்று சொல்லும் வேளை அது. சிஜியின் கைவண்ணத்தில் மணம் குணம் நிறைந்த மீன்பொரியல் குண்டு குண்டாய் வெள்ளைச் சோறு, நறுக்கிய வெண்டைக்காய்த் துவையல், தக்காளிச்சாலட், என்று பெருவிருந்தே படைக்கப்படுகின்றது. வெள்ளை முத்துக்களாய் நம்மூர் அரிசியின் நான்கு மடங்கு பருமனில் குண்டு குண்டாய் அரிசிச்சோறு கோப்பையை நிறைத்திருந்தது. வகையான காய்கறிகளின் சேர்க்கையில் ரஜினி வாய்ஸ் கொடுத்தபோது இருந்த தி.மு.க, த.மா.க கூட்டணி போல அமர்க்களமாக இருந்தது. எனக்கும் பேச்சுக்கொடுத்துத் திறமையான சமையலையும் செய்து முடித்த சிஜியை வாயாரப் புகழ்ந்தேன் மீன் பொரியலைச் சுவைத்தவாறே. மதிய உணவின் பின்னர் ஒருமணி நேர ஓய்வு. கிடைத்த அந்த நேரத்தில் கடலோடி நண்பர்கள் தரை விரிப்பை விரித்து மதியத்தூக்கம் கொள்கின்றார்கள். நானும் என் படுக்கை சென்றமர்ந்து “ஆச்சி பயணம் போகிறாள்” நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்கின்றேன். ஒரு மணி நேர ஓய்வு கழிகின்றது. இப்பொது மழையும் ஒதுங்கிக்கொண்டது. அரை வட்டமடித்தது போன்ற நீர்ப்பரப்பில் மீண்டும் பயணப்படுகின்றது படகுவீடு.

உண்டமயக்கம் கண்ணைக்கட்டியது, கொஞ்சம் கண்ணயரலாம் என்று நினைத்துக்கட்டிலில் சாய்ந்தேன். சேவல் ஒன்று கூவிக்கேட்டது. “அட, மதிய நேரத்திலே சேவல் கூவல்” என்று ஆர்வமாகப் படுக்கையின் அருகே இருந்த சாரளம் வழியே பார்க்கின்றேன். பாதி கட்டப்பட்ட கொங்கிறீற் தடுப்புடன் கூடிய குடியிருப்பில் நின்று சேவல்கள் சில நிரையாக நின்று கூவித் தீர்க்கின்றன. யாத்ரா காணாம்……..

22 responses so far

Aug 03 2006

படகுவீட்டுப்பயணம் ஆரம்பம்

Published by under Uncategorized

மே 28, மதியம் 12.00 மணி (இந்திய நேரம்)
நான் முன்னர் சொன்னது போல ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த படகு வீட்டுப் பயணத்துக்கான நேரமும் வந்தது. நான் தங்கியிருந்த அறையைப் பூட்டி என் சூட்கேசை கெளரி ரெசிடென்ஸ் இன் பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டுக் காத்திருந்தேன். அந்த விருந்தினர் விடுதி இளைஞர்கள் ஓடி ஓடிப் படகுப் பயணத்துக்காகக் காத்திருந்த என்னைப் போன்ற விருந்தினர்களை பொருத்தமான படகுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்து பதிவேட்டில் குறிக்கின்றார்கள். இங்கே வங்கி அட்டைப் பணக்கொடுப்பனவு இல்லாததால் 3,500 ரூபாவிற்கான இந்திய நோட்டுக்களை நீட்டுகின்றேன். தன் ஈரக்கைகளைத் தன் கட்டிய வேட்டியில் தடவி விட்டுச் சுறுக்காகப் பணத்தை வாங்கிப் பெட்டியில் போடுகின்றார் கெளரி ரெசிடென்ஸ் மேலாளரான அந்த இளைஞர். ஆட்தொகைக்கு ஏற்ப கார்களிலும் ஜீப்பிலும் படகு வீடு காணப் போகும் விருந்தினர்களை அள்ளியேற்றிவிட்டுப் பயணப்படுகின்றார்கள்.
குறுகலான சந்துக்குள்ளால் பயணப்பட்டுப் பின் ஒரு வேலிப் பொட்டுக்கு முன்னால் ஜீப் நின்றது. என் படகுவீட்டுக்குப் பொறுப்பான கடலோடி நண்பர்கள் எனக்காகக் காத்திருக்கின்றார்கள். கொட்டும் மழைச் சாரல் வழிந்தோடும் தம் முகத்தைப் புறங்கையால் துடைத்து எறிந்துகொண்டே வாயெல்லாம் பல்லாக வரவேற்கின்றார்கள், இவர்களில் ஒரு கிழவனார், ஒரு நடுத்தர வயதுக்காரர், ஒரு இளைஞன் அடக்கம்.
மழைவெள்ளத்தில் புதையாமல் இருக்க என் சப்பாத்துக்களைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டே வருமாறு பணித்தார் ஒருவர். குச்சொழுங்கை இருபக்கமும் வேலி மறைக்கக், செம்பாட்டுத் சதுப்பில் கால்கள் பொத்துப் பொத்தென வெள்ள நீருக்குள் புதைய நடப்பதும் இனிமை. நான் சின்னப் பிள்ளையாக இருக்கும் போது பள்ளிக்கூடம் விட்டுவரும் போது வெள்ளம் காணும் பக்கம் எங்கும் என் கால்கள் அலைந்து அலைந்து வெள்ள நீரைத் துளாவியதும், வீட்டுக்கு வந்ததும் பாட்டா செருப்பிலும் என் காற்சட்டையிலும் ஒட்டிக் கிடந்த சேற்றுப் படலங்களையும் கண்ட என் அம்மா தந்த கிள்ளுப் பரிசும் ஞாபகத்துக்கு வந்து உள்ளுரச்சிரித்தேன்.
ஒருவாறு படகுத்துறையை வந்தடைந்தோம், இதற்கு ஐந்து நிமிட நேரமும் பிடித்திருக்காது. ஆலப்புழாவின் பிரசித்திபெற்ற அந்தத்துறையில் பரந்த கரையெங்கணும் படகு வீடுகள், போருக்குத் தயாராகக் காத்து அணிவகுத்து நிற்கும் வீரர்கள் போலக் கம்பீரமாக நிற்கின்றன. எல்லாப்படகுகளுமே மதியம் 12 மணிக்குத் தான் புறப்படுமாம். உங்களின் வசதிக்கேற்ப அரை நாள் அல்லது முழு நாள் வாடகைக்கு இவற்றை நீங்கள் ஒழுங்கு செய்யலாம். அரை நாள் வாடகைக்குக் கட்டணமும் பார்க்கும் இடங்களும் குறைவு. நான் ஒரு நாள் வாடகையாக இப்படகுவீட்டை ஒழுங்கு செய்திருந்தேன். அதாவது முதல் நாள் நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த நாட் காலை 10 மணி வரை. இப்படகு வீடுகள் அழகான நேர்த்தியான கைவேலைப்பாடுகளுடன் உள்ளன. நடுத்தர வயதுக்காரர் எட்டிப் பாய்ந்து படகினுள் ஏறிவிட்டு என்னைக் கை தூக்கி உள்ளே அனுப்புகின்றார். நான் ஒப்பந்தம் செய்த படகு வீடு காதலர்களும் புதிதாகக் கல்யாணமாகித் தேனிலவு வருபவர்களும் விரும்பித் தேர்தெடுப்பதாம். படகு வீட்டு இளைஞன் இதைச் சரளமாக ஆங்கிலத்தில் சொல்லியவாறேப் படகின் அருமை பெருமைகளை அள்ளிவிட்டான், இங்கு சமையல் செய்பவரும் கூட இவன் தான். சுத்தமான ஒற்றைப் படுக்கையும், கழிப்பறையும் கொண்டதாக இருந்தது என் புகலிடம். ஹோர்ண் அடித்துச் சல்யூட் செய்தவாறே பக்கத்துப் படகுக்காரர்களும் இணையப் பயணம் ஆரம்பமாகின்றது. இளைஞர்கள் சைக்கிள்களில் சம பயணத்தில் இரட்டைச் சவாரி செய்வது போல இருக்கிறது. உற்சாகமும் மகிழ்ச்சியும் எனக்குள் பரவ, ஒரு குழந்தை போல எட்டிக் கடலைப் பார்க்கின்றேன். அரைகுறை ஆடை பூண்டு இருக்கும் காட்டு ராணிகள் போலக் கடற் தாவரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதக்கின்றன. கரையெங்கணும் தென்னை, விலாட் மா மரங்கள், வாழை, பூவரச மரங்கள் சாமரம் வீசுவதுபோல நிரையாக நிற்கின்றன. அட… கடந்து போன கடலை ஒட்டிய குட்டிச்சுவர்களைக் கூட அரசியல்வாதிகளின் சுவரொட்டிகள் நிரப்பியிருக்கின்றன. பாலத்துறை பொலிஸ் ஸ்டேசன் B டிவிஷன் தெரிகின்றது. கரைப் பாதையில் எழுந்து நிற்கும் மின்சாரத்தூண்கள் இந்தக் கடற்கழிப் பிரதேசத்திலும் மின்சாரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்தக் கடற்கழிப் பரப்பு நன்னீர் ஓடையாக உள்ளதாம். சந்தன நிற வேட்டிகளோடு தூரத்தே புள்ளிகளாகக் கேரளத்துச் சேட்டன்கள். கரையை ஒட்டிய வீட்டு முற்றங்களை சுங்க இலாகா அதிகாரிகள் போலச் சல்லடை போடுகின்றன அவர்களின் வளர்ப்புப் பிராணிகளான வாத்துகளும் கோழிகளும். கடற்கழியை ஒட்டிய கிராம வாழ்க்கையைக் கைபிடித்துக் கொண்டு காட்டும் சுற்றுலா வழிகாட்டி போலப் படகும் மெதுவாகத் தள்ளாடியவாறே அமைதியாகப் பயணிக்கின்றது.


ஞான் இவிடே வரும்…..

9 responses so far