Archive for June, 2006

Jun 30 2006

தங்குமிடம் தந்த சுகம்

Published by under Uncategorized

மே 27, மாலை 5.00 (இந்திய நேரம்)

கெளரி ரெசிடென்ஸ் (Gorwri Residence), இது தான் நான் ஆலப்புழாவில் இருக்கும் வேளை தங்குவதற்காகத் தேர்ந்தெடுத்த இடம். இணையம் மூலமாக இந்தத் தங்குமிடம் பற்றி அறிந்து, அதில் கொடுக்கப்பட்ட தொலைபேசி மூலமாக நான் அவுஸ்திரேலியாவில் இருந்து புறப்பட முன்னதாகவே முற்பதிவு செய்துவிட்டேன்.

ஒரு அறை தனிப்பாவனைக்கான நவீன வசதிகொண்ட கழிப்பறை குழியலறை ஆகியவற்றோடு சேர்த்து ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? வெறும் 500 இந்திய ரூபாய் மட்டுமே. இவ்வளவு மலிவாகக் கிடைக்கிறதே ஏதேனும் கோளாறு இருக்குமோ என்று தான் இந்தத் தங்குமிடம் போகும்வரை சந்தேகத்துடன் இருந்தேன். ஆனால் கிடைத்ததோ ஒரு இன்ப அதிர்ச்சி.

துடிப்பான நாலைந்து இளைஞர்களின் பராமரிப்பில், சுத்தமான, அப்பழுக்கற்ற நல்ல தங்குமிடமாக கெளரி ரெசிடென்ஸ் இருந்தது. எப்போது பார்த்தாலும் சிரித்தமுகத்தோடு உதவி தரும் அந்த இளைஞர்கள் 24 மணி நேரமும் அடுப்பெரித்து நளபாகம் செய்து தரவும் தயாராக இருக்கிறார்கள். சாப்பாடு தனிக்கட்டணம்.

ஒரு முன்மாதிரியான கேரளப் பண்பாட்டில் அமைந்த பெரிய வீடு அது. 24 இன்ரநெற் வசதியும் உண்டு. கட்டணம் வெறும் 40 ருபா. அந்தப்பெரிய வீட்டில் பகுதி பகுதியாக 2, 3 அறைகளாகப் பிரித்து தனி வாசலும், பிரத்தியோக நவீன வசதி செய்யப்பட்ட கழிப்பறையுடன் கூடிய குழியல் அறையும் உண்டு. அவுஸ்திரேலியாவிலிருந்து சில வெள்ளையர்களும் வந்து தங்கியிருந்தார்கள். மிகச்சுத்தமாகச் சுற்றாடல் இருக்கின்றது. நான் தங்கியது அந்த வீட்டின் பின்னே கட்டப்பட்ட தனிஅறையுடன் கூடிய வசதிகள். வீட்டின் முகப்பில் கிடுகால் அமைந்த பாதுகாப்புக் கொட்டிலின் முதிய காவலாளி இருக்கிறார். ஓய்வில் இருக்க வசதியாக முன்முகப்பில் தனிக்கொட்டகை அமைந்திருக்கிறது. பக்கத்து மாமரத்தில் ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கிறது. பகலில் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் அதில் விளையாடி மகிழ்கிறார்கள். பின் வளவில் பல தென்னை மரங்கள் இருக்கின்றன.

காலையில் இந்தத் தென்னை மரங்களில் ஏறிக் கள் இறக்கிக் கொண்டுபோகிறார் ஒரு வாலிபர். கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது, ஈரம் படிந்த அந்தத் தென்னைமரங்களில் சரசரவென ஏறி அவர் செய்யும் கள் இறக்கும் ஜாலத்தைப் பார்க்கவேண்டும் நீங்கள். ஒவ்வொரு மரமாக ஏறிச் சேர்த்த கள்ளைத் கொண்டுவந்த பீப்பாயில் நிறைத்தவாறே நகர்கிறார் அவர்.

இந்தத் தங்குமிடம் அமைந்த காணியே நம் கலாச்சார நூதனசாலையோ என எண்ணுமளவிற்கு, தற்போது பயன்பாட்டில் அருகிப் போகும், ஆட்டுக்கால், கப்பிக்கிணறு, துளசிமாடம், பழைய சாய்மனைக்கதிரை, நுணுக்கமான வேலைப்பாடமைந்த கதிரைகள், இருக்கைகள், அலுமாரிகள்,1900 ஆம் ஆண்டுகாலப் புகைப்படங்கள், இலாந்தர் விளக்கு என்று இந்த வீட்டில் அணிசெய்கின்றன. நல்ல சித்திரத் தொகுப்புக்களும், சிலைகளும் கூட இங்கிருக்கின்றன.


காற்சட்டை போட்ட இருபதின் விளிம்பில் இருக்கும் பையன், விருந்தினர் மனம்கோணாதபடி தன் உதவிகளைச் செய்கின்றார்.
இங்குள்ள முகாமையாளராக இருக்கும் முப்பத்து வயதுக்குள் இருக்கும் இளைஞன், நான் முன் சொன்ன உடன்படிக்கையோடு ஒத்து மலையாளத்தில் சில ஆங்கிலச் சொல்லத் தூவியவாறே சொன்னர். ” துபாயில் இருக்கும் முதலாளியின் ஆசை, விருந்தினராக இங்கு வரும் யாரும் நிறைவான சந்தோஷத்துடனே போகவேண்டும், பணம் இரண்டாம் பட்சம் தான்”
உண்மை, அந்த முதலாளி காணும் கனவை நனவாக்குகிறார்கள் இந்த இளைஞர்கள்.

இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களில் யாராதல் ஆலப்புழா சென்றால் தங்குவதற்கு நான் 100% சிபார்சு செய்வேன் இந்த கெளரி ரெசிடென்ஸ் ஐ. எத்தனையோ ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருந்தும் கிடைக்காத திருப்தி இங்கு எனக்குக் கிடைத்தது.

கெளரி ரெசிடென்ஸ் இன் இணைய முகவரி இதோ.
http://www.gowriresidence.com/

இன்றுவரை எனக்கிருக்கும் கேள்வி இதுதான்.
“துபாய்வாசியாகிப் போய்விட்ட கெளரி ரெசிடென்ஸ் உரிமையாளரே! இந்த அழகான வீட்டையும், நல்ல இடத்தையும் விட்டுப் போக எப்படி மனசு வந்தது உங்களுக்கு?”

பின்ன பறயான்…….

9 responses so far

Jun 27 2006

ஆலப்புழாவில் காலடி வைத்தேன்

Published by under Uncategorized

மே 27, மதியம் 1.00 (இந்திய நேரம்) திருவனந்தபுரம் Highland ஹோட்டலில் இருந்து மதியம் 1.00 மணிக்கு ஆலப்புழா நோக்கிக் காரில் பயணித்தேன். போகும் பாதை நன்கு சீரமைக்கப்பட்ட பெருந்தெருவாக இருந்தது. அடூர் (Adoor) என்ற கிராமத்தை நெருங்குகையில் போத்தீஸ் துணிக்கடை விளம்பரத்தில் நம்மவர் ஒலிபரப்பாளர் அப்துல் ஹமீத் சர்வாணியுடன் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். பயணிக்கும் போது தென்படும் ஊர்ப்பலகைகள் பல கேரளக்கலைஞர்களை ஞாபகப் படுத்துகின்றன. கேரளக் கலைஞர்கள் பலர் தம் ஊரின் பெயரையும் இணைத்துச் சொல்வது நீங்கள் அறிந்ததே.

ஹரிபட் (Haripad) என்ற இடத்தில் இறங்கி, நானும் கார்ச்சாரதியுமாக சூடான நெஸ்கபே அருந்திவிட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்தோம். வழிநெடுகக் காணும் கிராமியக் காட்சிகள், தாம் தம் பழைமை நிலையை மாற்றமாட்டேன் என்று அடம் பிடிப்பது போல எனக்குப் பட்டது. ஆலப்புழாவைக் கார் அண்மித்தபோது மாலை 5.00 ஐக் கைக்கடிகாரம் காட்டியது.

ஆலப்புழா என்ற பெயர்க்காரணம் இதன் புவியியல் அமைப்பைக் கொண்டே ஏற்பட்டது. ஒருபக்கம் கடலையும், மற்றோர் பக்கம் பல்வேறு ஆற்றுக்கூட்டங்களைக்கொண்ட நிலப்பரப்பே ஆலப்புழா என்ற பெயர்க்காரணம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இது அலப்பி (Alleppy) என்றும் அழைக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் தேசாதிபதி கேர்ஸன் பிரபுவால் (Lord Curzon) என்பவரால் கிழக்கின் வெனிஸ் (Venice of the East) என்று சிறப்பிக்கப்பட்டது இந்தப் பிரதேசம். மலையாளத்தில் புழா என்றால் ஆறு என்று குறிக்கப்படும். ஆலப்புழா மாவட்டம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி 1957 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது, சேர்த்தலை (Cherthala), அம்பாலபுழா (Ambalappuzha), குத்தநாடு (Kuttanad),கார்த்திகபள்ளி (Karthikappally), செங்கனூர் (Chengannur), மாவிலேக்கரை (Mavelikkara), ஆகிய ஆறு தாலுகாக்களைக் (நிர்வாகப் பிரிவு) கொண்டு 1414 சதுர கீ.மீ பரப்பளவில் உள்ளது.இதன் மேற்குப் பகுதி லட்ஷ தீவுகளை அணைக்கின்றது. மணிமாலா, பம்பை, அச்சன்கோவில் ஆகிய பேராறுகள் இந்தமாவட்டத்தை யொட்டியுள்ளன. இதில் பம்பை ஆறு கேரளாவின் மூன்றாவது பெரிய ஆறு ஆகும்.

தென்னை உற்பத்திகள் (தேங்காய், கொச்சி, மட்டை, ஈர்க்கு), பாக்கு, நெற்செய்கை, கரும்பு போன்றவை முக்கிய விளைபொருட்களாகவும். தவிர இங்குள்ள மண் தன்மையும் அதிக வருவாய ஏற்படுத்தும் வல்லமையை வழங்கியுள்ளது. குறிப்பாக சீனக் களிமண், lime shell போன்றவை அதிக வருவாயைப் பெற்றுத் தரும் கனியவளங்களாகும்.

கடற்கழி (Backwater) பலவும், ஆழமற்ற களப்பு, நீர்நிலைகள்,பெரிய மலைகள் அற்ற ஆனால் அதிகப் படியான மேட்டு நிலப்பரப்பையும், குன்றுகளையும் கொண்டுள்ளது. வருடத்தில் மார்ச் தொடங்கி மே மாதம் வரை அதிகப்படியான வெப்பத்தையும், யூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றையும்,ஒக்டோபர் தொடங்கி நவம்பர் வரை வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றையும், டிசம்பர் தொடங்கி பெப்ரவரி மாத காலப் பகுதி வரட்சியானதாகவும் அமைந்த காலநிலையை இப்பிரதேசம் கொண்டது.

மக்கட் தொகை 2,105,349 பேர், கல்வியறிவு விகிதாசாரம்: 93.66 % (கேரளாவின் 3 வது நிலையில் இருக்கும் விகிதாச்சாரம்),(தகவல்: கேரளா சுற்றுலாத்துறை)

கிட்டத்தட்ட 4 மணி நேரம் பிடித்த இப்பயணத்தைச் சுருக்கவேண்டுமென்றால் நீங்கள் செய்யவேண்டியது கொச்சினில் இருந்து ஆலப்புழா நேக்கிவருவது. கொச்சினிலும் சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. கொச்சினிலிருந்து ஆலப்புழாவிற்கு வெறும் ஒன்றரை மணிநேரம் மட்டுமே பிடிக்கும். திருவனந்தபுரத்திலிருந்து ஆலப்புழாவிற்குப் புகையிரத்திலும் வரலாம். புகையிரத சேவை மாலை 5 மணிக்கு மட்டுமே உண்டு. தவிர சொகுசு பஸ் சேவைகளும் உண்டு. எனக்கு வாடகைக் கார் செலவு ரூ 2200 ஆயிற்று (திரும்பும் செலவு உட்பட). அதிக பயணப் பொதியோடு செல்பவர்களுக்கு வாடகைக்காரே உகந்த வழி. திருவனந்தபுரத்திலிருந்து வாடகைக்கார் மூலம் வந்தால் திரும்பிப் போகும் வாடகைக் கட்டணமும் கொடுக்கவேண்டும். எது வசதியென்று நீங்களே முடிவெடுங்கள்.

ஆறு தாலுகாவைக் கொண்ட தலைநகராக ஆலப்புழா இருந்தாலும் இது ஒரு சிறு நகரமே. கேரளப் பாரம்பரிய அமைப்பில் கோயில்கள் இருக்கும் அதே வேளை நவீன காலக் கோயில்களும் உள்ளன. ஆலப்புழாவில் தங்கிய நாட்களில் அங்குள்ள உடுப்பி சிறீ கிருஷ்ணா ஆலயம், புவனேஸ்வரி அம்மன் ஆகிய கோயில்களுக்குப் போனேன். முகப்பில் தமிழும் மலையாளமும் இணைந்த அறிவிப்புக்கள் புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் உண்டு. ஆலபுழா நகரவீதிகளில் அதிகம் தென்படுவது வாழைக்குலை தொங்கும் கடைகள். ஓவ்வொரு வாழைக் குலைகளும், மம்முட்டியினதும், ஜெயராமினதும் உடல் வாகை நினைவுபடுத்துமளவுக்குப் பென்னான் பெரியவை.

முன்னதாகவே நான் இணையம் மூலம் தகவல் பெற்று முன் பதிவு செய்த கெளரி ரெசிடன்ஸ் ( Gowri Residence) என்ற தங்குமிடத்தில் கார் தரித்து நின்றது. எதிர்பாராத இன்ப அதிர்ச்சியும் காத்திருந்தது.

திருச்சு வரும்……….

14 responses so far

Jun 18 2006

திருவனந்தபுரமே! போய் வருகிறேன்.

Published by under Uncategorized

மே 27, மதியம் 12.00 மணி (இந்திய நேரம்)திருவனந்தபுரத்திலிருந்து ஆலப்புழா, கொச்சின் நோக்கிய உலாத்தலைத் தொடர்வதற்கு முன் திருவந்தபுரத்தில் எஞ்சிய, பார்த்த சில விடயங்களைத் தருகின்றேன்.
பொதுவாகவே எந்த ஒரு இடத்திற்கும் சென்றால் நான் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று விரும்பும் அம்சங்களில் ஒன்று இந்த நூதனசாலைகள் (Museum). கலையும், மொழியும் ஒரு இனத்தின் இரண்டு கண்கள் என்பார்கள். மொழியின் சான்றாக நூலகமும், கலை மற்றும் பண்பாட்டின் சான்றாக நூதனசாலையும் ஒருகே அமைந்திருக்கின்றது. எனவேதான் ஒரு பிரதேசத்தின் வரலாற்று விழுமியங்களைக் கண்டு தரிசிக்க, நம் பயண ஏற்பாட்டில் நூதனசாலைக்கும் கட்டாயம் நாம் நேரம் ஒதுக்கவேண்டும்.

அந்தவகையில் திருவனந்தபுரத்தில் அடுத்து நான் முற்றுகையிட்டது கேரள நூதனசாலை. வழக்கமாக நான் முன் சென்ற இடங்களின் நூதனசாலைகள் வெள்ளையனிடம் அடி வாங்கிய சுதேசி போல நொந்து நூலானது போல் இருந்திருக்கின்றன. ஆனால் திருவனந்தபுர நகரமத்தியிலேயே விசாலமான காணிக்குள் இந்த நூதனசாலை இருக்கின்றது. பண்டைய சித்திரக்கூடம், நூதனசாலை பணிக்கர் காட்சிச்சாலை, சிறீ சித்ரா மாடம் என்று இந்த நிலப்பரப்பில் பங்கு போட்டவாறே இருக்கும் இடத்தில், ரூ 5 கட்டணத்திலேயே முன்சொன்ன அனத்துக்குமான பொதுவான நுளைவுச்சீட்டு இருக்கின்றது. அதோடு ஒரு இயற்கைப்பூங்காவும் இருக்கின்றது. செவ்வாய் முதல் ஞாயிறு வரை, காலை 10 மணி முதல் மாலை 4.45 வரை திறந்திருக்கும்.

இந்த நிலப்பரப்பில் நடுநாயகமாக இருக்கும், 1880 இல் கட்டப்பட்ட Napier Museum அழகு கொஞ்சும் கட்டிட அமைப்போடு இருக்கின்றது. சிறீ சித்ரா கலைக்கூடத்தில் தஞ்சாவூர், முகலாய, ராஜபுத்திரர்களின் சிறந்த சித்திர வேலைப்பாடுகள் மற்றும் ரவி வர்மா போன்றோரின் ஓவியச் செல்வங்களும் இருக்கின்றன. தவிர தாவிரவியற்பூங்காவும் விஞ்ஞானத் தொழில்நுட்பக்காட்சிச் சாலையும் மாணவர்களை இலக்கு வைத்து அமைந்துள்ளன. இங்கு பாம்பு, பல்லி இத்தியாதிகளின் கண்காட்சியைப் பார்க்கலாம். பணியாளர்கள் மிகுந்த பண்புடன் நடந்து கொள்கின்றார்கள். சில காட்சியறைகளுக்குள் நுளைய வேண்டுமென்றால் பாதணியுடன் செல்லமுடியாது. வாசலில் செருப்பைக் கழற்றிப் பாதுகாப்பிடத்தில் வைத்துப் போகுமாறு கட்டளையிடுகிறாள் ஒரு அனியத்தி (தங்கச்சிங்கோ). எனக்கு முன்னே வந்த குடும்பத்தின் தலைவர் “நாங்க தமிழ்நாட்டுக்காரங்கம்மா! புரியும்படி சொல்லு” என்று சொல்லவும், அதுவரை மலையாளத்தில் விளித்த அவள் மலையாளத்தில் சிரித்தவாறே தமிழில் கட்டளையிடுகின்றாள், மீராஜாஸ்மின் தமிழ் பேசியதுபோலிருக்கிறது.
இவ்வளவு பரந்த நிலப்பரப்பில் அழகான ஒரு அமைவிடமாக இந்த நூதனசாலை இருந்தும் என்ன பயன்? தமிழ்நாடு, ஆந்திரா போன்ற இடங்களில் இருக்கும் நூதனசாலைகள் ஏற்படுத்திய பிரமிப்பை இது ஏற்படுத்தவில்லை. ஒப்பீட்டளவில் மிகச்சொற்பமான கலைப்பொருட்களே இருக்கின்றன. கேரளா முழுவதுமே ஒரு அரியகலைச்சொத்து என்று நினைத்தோ என்னவோ, சேகரித்துக் காட்சிக்கு வைத்திருக்கும் பொருட்கள் அவ்வளவாக இல்லை. வெறும் ஜூஜூபி. சேட்டன்கள் இதற்கு ஏதாவது செய்யணும்.
கேரள சட்டமன்றத்தைப் பார்க்கின்றேன். அழகே உருவானதாக எந்தவித உச்ச பாதுகாப்புக் கெடுபிடிகளும் அற்று ஒரு சாதாரண கம்யூனிஸ்ட் தொண்டரைப் போல எளிமையாக நிற்கின்றது. கேரளா தலைமைச்செயலகத்தை எம் கார் கடக்கும் போது அங்கும் அதே நிலை.அதனாலோ என்னவோ மக்கள் கூட்டமும் அதிகப்படியாக அங்கு நிறைந்திருக்கின்றது.ஒருவாறாகத் திருவனந்தபுர வலம் நிறைவுற்ற நிலையில் நான் தங்கிருந்த Highland ஹோட்டலுக்குப் போய் உணவருந்திவிட்டு என் அடுத்த பயணத்தை ஆரம்பிக்கலாம் என்றெண்ணுகின்றேன். இது ஒரு சைவ உணவகத்தோடு கூடிய நல்ல உயர்தர ஹோட்டல். இந்த ஹோட்டலுக்கு நேர் எதிரே இவர்களே அசைவ உணவகத்துடன் கூடிய தங்குமிடத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் சைவ உணவகத்துடன் கூடிய தங்குமிடம் இப்போதுதான் புதிதாகக் கட்டப்பட்ட தரமானதாக இருக்கின்றது. என் அறை வாடகை நாளொன்றுக்கு ரூ 1050 வரிகள் தனி (24 மணி நேர வசதி உண்டு). இணையம் மூலமாக இந்த ஹோட்டல் பற்றிய விபரம் பெற்று முன்னதாகவே எனக்கான அறையைப் பதிந்து வைத்திருந்தேன். ஏசி வசதியும்,சமாளிக்கக் கூடிய தரத்தில் குளியலறையும் இருக்கின்றன.

வாசலில் வீற்றிருக்கும் அந்த ஹோட்டல் முகாமையாளர்
“சாரே! ஆகாரம் கழிச்சோ” என்று அன்புடன் கேட்கின்றார். இந்த இடத்தில் எனது கேரள விஜயத்தில் எப்படியான மொழியாடலை நான் மேற்கொண்டேன் என்று சொல்லிவிடுகின்றேன்.
நான் கேரளத்துக்கான பயணத்தின் போது எடுத்த விசித்திரமான முடிவுகளில் ஒன்று இது. நான் சம்பாஷிக்கும் மலையாளிகளை அவர்கள் போக்கிலேயே மலையாளத்தில் பேசவிட்டு, என்னால் அதைப் புரிந்துகொள்ளமுடிகிறதா என்று பார்ப்பது. முதல் நாள் ஹோட்டலுக்கு நான் வந்தபோதே அதன் முகாமையாளரிடம் நான் இலங்கைத் தமிழன் என்றும் எமது தமிழுக்கும் மலையாளத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் சொல்லிவைத்தேன். அதையே நான் கேரளாவில் பயணித்த இடங்களில் சந்தித்த கார்ச்சாரதிமார், படகு வீட்டுக்காரர்கள், ஹோட்டல்கார்களுக்கும் சொன்னேன். அவர்கள் முழுமையாக மலையாளத்தில் சம்சாரிக்கும் போது, எனக்குத் தெரிந்த மலையாள பாஷையுடன் ஆங்கிலத்தையும் கலந்துகட்டி மலையாங்கிலத்தில் உரையாடுவேன். நீங்கள் நம்புகிறீர்களோ என்னவோ, இந்தக் கேரளவிஜயத்தில் மொழி ஊடாடல் எனக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவேயில்லை. இதற்காக நான் கடந்த 10 வருடங்களாகப் பார்த்து வரும் பாசில், சத்தியன் அந்திக்காடு, சிபி.மலயில் ஆகிய இயக்குனர் படங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன்.

கொஞ்சம் யாழ்ப்பாணத்துத் தமிழைக் குழைவாகப் பேசினால் மலையாளத்தாரிடம் சமாளிக்கலாம் போலிருக்கிறது.மலையாள எழுத்துவடிவையும் ஊன்றிக் கவனித்தால் சில சொற்பதங்கள் தமிழின் வரிவடிவைக்கொண்டிருக்கின்றன. தமிழில் முறித்து எழுதும் எழுத்துக்கள் மலையாளத்தில் வளைத்தும் நெளித்தும் எழுதப்பட்டிருக்கின்றன.
எனது ஹோட்டல் போய் உடை மாற்றிவிட்டு முன்னே அமைந்துள்ள அசைவ உணவகம் சென்று கடலுணவுக் கலப்பு அரிசிச் சோறுடன், கேரளாவிற்கே தனித்துவமான கறிமீன் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கின்றேன். நல்ல மலிவான விலையில் சுவையான சாப்பாடு.

Hotel highland இடமிருந்து விடைபெற்று காரில் அமர்கின்றேன். கண்டே இராத காதலியைக் காணும் ஆவலில் பறக்கிறது என் மனம் ஆலப்புழாவை நோக்கி.

வீண்டும் காணாம்……..

14 responses so far

Jun 08 2006

கோவளக் கடலோரக் கவிதைகள்

Published by under Uncategorized

மே 27, காலை 11.00 மணி (இந்திய நேரம்)

என் பயண அட்டவணையில் இருந்த அடுத்த சுற்றுலா கோவளம் கடற்கரை நோக்கியதாக அமைந்தது.

கோவளம் என்றால் “தென்னை மரங்கள் அடர்ந்த சிறிய சோலை” என்று பொருள்படும். அதற்கேற்றாற் போல, வழமையான கடற்கரைகளிலிருந்து மாறுபட்டு விளங்குகின்றது இந்தக்கோவளம். திருவனந்த புரத்திலிருந்து 16 கீ.மீ தொலைவில் உள்ள இந்தக் கடற்கரைக்கிராமம் 1930 களில் இருந்தே சுற்றுலாப்பயணிகளின் பார்வையில் ஈர்க்கப்பட்டு இன்று உலகில் பேசப்படும் சிறந்த கடற்கரைகளில் ஒன்றாக விளங்குகின்றது. (ஆதாரம்: கேரளா சுற்றுலாத்துறை)

அழகான , சுத்தமான கடற்கரையாகவும், கடல் அலையின் வேகமும் குறைவானதாகவும், நல்ல மன அமைதியைத்தருவதாகவும் இது விளங்குகின்றது. அதோடு கடற்கரையை அண்டி நல்ல உணவகங்கள், உயர்தரத் தங்குமிடங்கள், கலைப்பொருட்கள் வாங்குவதற்கான களஞ்சியமாகவும் இருக்கின்றது. உடன் பிடிக்கப்பட்ட கடல் உணவுகளும் கிடைக்கின்றன. இது ஒரு இளைப்பாறுதலுக்கான கடற்கரையாக மட்டுமன்றி, மீனவரின் வாழ்வியலை அருகே இருந்து பார்க்கும் வாய்ப்புக்கும் வசதி செய்கின்றது. நீங்கள் கேரளா போய்க் கோவளம் பார்க்காவிட்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும், அவ்வளவு அபிமானத்தை ஏற்படுத்திவிட்டது இது.

நான் போன நேரம் மழைக்காலம் சீக்கிரமாகவே வந்துவிட்டது. வருடாந்தம் யூன் முதல் செப்டெம்பர் வரை மொன்சூன் பருவகாலம் ஆரம்பமாகி மழையும் பெய்ய ஆரம்பித்துவிடும்.
தண்ணிர்ப்பிரச்சனையில் அவதிப்படும் ஹோட்டல் குளியறை போற் காலையில் மெதுவாகப் பொழிந்த வானம், நான் கோவளம் கடற்கரையை அண்மித்ததும், காற்றுப் பெருங்குரலெடுக்கப் பலமாகப் பொழியத்தொடங்கியது. செயற்கைத்தனமற்ற சூழலில் தென்னை மரங்கள் புடைசூழ இருக்கும் இந்த கடற்கரையைக் கண்டபோது , அடைமழை எனக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.

காரை விட்டு இறங்கிக் கடற்கரை மணலில் தடம் பதிக்கின்றேன். கால்கள் ஈரமணலுக்குள் புதையப் புதைய என் கடற்கரை தாகம் சற்றும் குறையாமல் அலைபடும் கரைவரை விறுவிறுவென நடக்கின்றேன் நான்.பெரும் மழையில் ஓடியோடித் தம் கடற்கலன்களை கிடுகால் வேய்ந்த மறைப்பு விரிப்பாற் பாதுகாக்குகிறார்கள் மீனவ நண்பர்கள். ஜீன்ஸ் கால்களை மேல் உயர்த்திவிட்டுக் கடல்நீர் முழங்காலுக்கும் சற்றுக் குறைவான வேகத்தில் தொடும் அளவில் இன்னும் இறங்கி நடக்கின்றேன். வெள்ளக்குருமணற் சதுப்பில் என் கால்கள் இன்னும் வேகமாகப் புதைந்து இறுகி நிற்கவும், அதை விறுக்கென்று விடுவித்து இன்னும் நகர்கின்றேன். கடல் அலைகள் அடிக்கடி என் கால்களில் முத்தமிட்டு ஹலோ சொல்கின்றன.

கடல்நீர் சூழ்ந்த பாறைப்பரப்பில் ஏறிக் கரையைப் பார்ர்க்கின்றேன். கரையெங்கும் கடற்கரை விருந்தாளிகளுக்கான உயர்தரக் கடல் உணவு விருந்தகங்கள். இதுவே வெயில் நாளாக இருந்தால் கடற்கரையில் அரை நாள் டோரா போட்டுவிடுவேன். இந்தப் பெருமழைச்சாரல் என் உடம்பிற்கும் கெடுதலை உண்டாக்கிவிடுமே, இன்னும் கேரளாவில் பல சுற்றுலாவைக் களிக்கவேண்டுமே என்ற எச்சரிக்கை உணர்வில் வேண்டாவெறுப்போடு கோவளத்தை விட்டு நகர்கின்றேன் நான்.

கோவளம் கடற்கரையில் ஜீன்ஸ் போட்ட ஒற்றைக்கால் கொக்கு ஒன்று (அட…. அது நான்:-))
கேரளப்பண்பாட்டில் அமைந்த, கிடுகால் வேய்ந்த கடற்கரை உணவகம் ஒன்று.
படகை மறைக்கின்றது கிடுகுப்போர்வை
கயிற்றைக் காக்கும் கொட்டில்கள்
கடற்கரை நுளைவு

கரையொதுங்கும் காதலர்கள்.

வானத்தைப் பாருங்கள், கம்பிபோல் வளையங்கள்(கிடுகுக்) குடைக்குள் மழை(பெரிதாகப் பார்க்கப் படங்களை அழுத்தவும்)

வரும்……..

19 responses so far

Jun 05 2006

கேரளத்தலைநகர் இன்னொரு சுற்று!

Published by under Uncategorized

மே 27, காலை 9.30 மணி (இந்திய நேரம்)

திருவனந்தபுர வலத்தில், அடுத்து சிறப்பாகப் புகழப்பெறும் கோயில்களில் ஒன்றான ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயத்தை வெளியே நின்று பார்த்துத் தரிசனை செய்கின்றேன்.
அந்த இடத்தை விட்டு நகர்ந்து, இன்னும் சில சந்து போல (குச்சொழுங்கையிலும் கொஞ்சம் பெரிது), உள்ள பாதைகளுக்குள்ளால் பயணப்படுகின்றது நம் கார். காலையில் இருந்தே வானம் அடிக்கடி சிணுங்கிச் சிணுங்கி ஒண்ணுக்குப் போனது, பெரிய, பெரிய துளிகளாய் மழைத் துப்பல்கள் கார்க்கண்ணாடியில் விழுந்து தெறித்து ஒலியையும் எழுப்புகின்றது. மழைச்சாரல் எழுப்பும் ஒலி, ஒரு தகரக்கொட்டகையில் மணலை வாரியிறைப்பதுபோல இருக்கிறது.
அடுத்ததாக நான் சென்ற சுற்றுலாப் பகுதி, வேலி சுற்றுலாக் கிராமம் (Veli Tourist village). வேலி என்ற கடல் நீரேரியும் , அராபியன் கடலும் சூழ அமைந்திருக்கும் இந்த சுற்றுலாத்தலம் திருவனந்தபுரம் நகரத்திலிருந்து 8 கீ.மீ தூரத்தில் உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையாளர் நேரம்.உள்ளே மலர்ப்பூங்காவும், சிறுவருக்கான களியாட்ட உபகரணங்களும், கொண்டு ஒரு நீர்ப் படுக்கையின் ஓரத்தில் அமைந்திருக்கின்றது. அதோடு அந்த நீர்நிலையில் குறுகிய தூரப்படகுச் சவாரி செய்யவும் வசதிகள் உண்டு. யாழ்ப்பாணத்தில் பார்த்த பெரிய பூவைப் பூக்கும், செவ்வரத்தம் மரங்கள், இன்னும் சில மரங்கள், தென்பட்டன.

மூன்று முடிச்சு படத்தில் வரும் ” வசந்தகால நதிகளிலே”, மற்றும் வெள்ளை ரோஜாவில் வரும் ” சோலைப்பூவில் மாலைத்தென்றல்” போன்ற பாடற்காட்சிகளை அந்தப் படகுச்சவாரிச் சூழ்நிலை ஞாபகப்படுத்தியது.
அழகிய தாமரைக்குளத்திற்குள் பிளாஸ்டிக் போத்தல்.


திருவனந்தபுரத்துக்கு வந்ததும் அடுத்ததாக என் வழக்கமான வேலையையும் தொடங்கிவிட்டேன். அது வேறொன்றுமில்லை , நான் தேடிக்கொண்டிருக்கும் சில மலையாளப் CD படங்களை வாங்கும் வேலை தான், கார்ச்சாரதியை மலையாளப் படங்கள் அதிகம் விற்கும் பகுதிக்குக் கொண்டுபோகுமாறு பணித்தேன். அவரும் பீமபள்ளி என்ற இடத்துக்குக் கொண்டுபோனார். இதுவும் அவ்வூரில் மிகவும் புகழ்பெற்ற ஒரு தர்கா ஆகும்.
பீமபள்ளியில் பிரபலமான பள்ளிவாசல் இருக்கின்றது. அந்தப் பள்ளிவாசலை அண்டிய கடைத்தெருக்கள் வெறும் திரைப்படப் பாடல், படங்களின் CD கடைகளை இருபுறமும் கொண்டதாக இருக்கின்றது. சென்னையின் பர்மா பஜார் போல இந்தப் பகுதி திரைப்பட CD களுக்கு வெகு பிரசித்தமானது. ஆனால் என்ன ? நான் தேடிக்கொண்டிருக்கும் மம்முட்டியின்”மதிலுகள்”, அடூர் கோபாலகிருஷ்ணின் “நிழல் கூத்து”, போன்ற நல்ல படங்களைப் பற்றி ஒவ்வொரு கடையிலும் விசாரித்தபோது என்னை ஒரு டைனோசர் போன்ற ஜந்து போலப் பார்த்துவிட்டு அதெல்லாம் இல்லை என்றார்கள்.

இந்தக் கடைகளும் சரவெடிகளுடன் விஜய் “சிவகாசி”க்காகவும், மொட்டைத்தலை சூர்யா “கஜினி”க்காகவும் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மலையாள தேசத்தில் தமிழ்ப்பட CDக்கள் விரவிக்கிடக்கின்றன. கண்ணில் பட்ட மோகன் லாலின் ” தன்மத்ரா”வையும், மம்முட்டியின் “ஒரு வடக்கன் வீரக்கதா”வையும் (எம்.டி.வாசுதேவன் நாயரின் திரைக்கதை, 1989 சிறந்த திரைக்கதைக்கான தேசியவிருது பெற்றது) வாங்கிவிட்டு நகர்கின்றேன்.ஒரு CD இன் விலை ரூ 20 மட்டுமே. தயாரிப்பாளர் சார்பில் என் வயிறெரிந்தது. வரும் வழியெங்கும் கார்ச்சாரதி, பாடகர் யேசுதாஸின் புகழைப் பாடிகொண்டேவந்தார். கேரளத்துக்காரர்கள் ஜேசுதாஸிற்குக் கோயில் கட்டாததுதான் பாக்கி. இந்த மது பாலகிருஷ்ணன் காலத்திலும், ஒவ்வொரு மலையாளப் படத்திலும் ஜேசுதாஸ் பாடல் ஒன்றாவாது வரவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். முன்பு தமிழ்ப்படவிநியோகஸ்தர்கள் ஒரு சிலுக்கு டான்ஸ் போட்டால்தான் பெட்டியை வாங்குவேன் என்று தயாரிப்பாளரை மிரட்டுவதுபோல இது ஒரு வர்த்தக சமாச்சாரமாக இருக்கிறது.

Honda, Toyota, Nissan என்று நவீனகார்கள் வந்து மாருதிக்கார்களின் தனிக்காட்டுராஜாத்தனம் ஒதுக்கப்பட்ட இந்தியாவாக வந்துவிட்டாலும், திருவனந்தபுரத்தில் இன்னும் வெள்ளைவெளேர் அம்பாஸிடர் கார்கள் தான் அதிகம் தென்படுகின்றன.

தெருக்களில் தென்படும் அறிவிப்புப் பலகைகள் மலையாளம், தமிழ் தாங்கியவாறும் இருக்கின்றன. ஆனால் அங்கு குறிப்பிடப்பட்ட சில தமிழ்ப்பெயர்கள் ஈழத்தமிழர் மட்டுமே அதிகம் புழக்கத்தில் வைத்திருக்கும் சொற்களாக இருக்கின்றன. உதாரணமாக Toilet ஐ கழிப்பறை என்றே தமிழ் நாட்டில் அதிகம் எழுத்துத்தமிழில் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் கேரளாவில் நான் அவதானித்த இந்தக் கழிப்பறைகளின் பெயர்கள் தமிழில் “கக்கூஸ்” என்றே எழுதப்பட்டிருக்கின்றன.

“கக்கூஸ்” என்ற சொல் டச்சுக்காரர்களால் ஈழத்தமிழில் புகுத்தப்பட்டு ஒரு திசைச்சொல்லாக் த் தமிழ் இலக்கணத்தில் புகுந்துள்ளது. இதே சொல் கேரளத்திலும் பயன்படுவது, டச்சுக்காரரின் மொழி ஈழத்தமிழிலும் மலையாளத்திலும் சமகாலத்தில் கலந்திருப்பது தெரிகின்றது. கிராம்பு, அலுமாரி, சாவி, பாதிரி போன்ற போர்த்துக்கீசச்சொற்களே தமிழ் நாடு மொழிவழக்கில் விரவியுள்ளன. டச்சு மொழியின் ஆதிக்கம் தமிழ்நாட்டுத் தமிழைப் பொறுத்தவரை அரிதே என்று கொள்ளவேண்டியிருக்கிறது.
ஈழத்தமிழ் (குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழ்) மற்றும் மலையாளத் தமிழ் குறித்த ஒப்பீடை இன்னொருபதிவில் தருக்கின்றேன். இதற்காக சில இலக்கண நூல்களையும் வாங்கிருக்கிறேன். நிறைய வாசிக்கவேண்டும்.

நகரப்புறத் தெருக்களிலும் கூட பழுப்புவெள்ளை, அல்லது காவி நிறவேட்டிகளை அணிந்த இளைஞர்களையே அதிகம் காணமுடிகின்றது. இவர்கள், யாராவதுஜீன்ஸ் போட்ட பையன்களைக் கண்டால், “என்னய்யா! சுத்த நாகரீகம் தெரியாதபயலாக இருப்பாய் போலிருக்கே என்று கேட்டாலும் கேட்பார்கள். இந்த வேட்டி கட்டிய சேட்டன்கள் தம் வேட்டியை இடுப்பில் தரித்து, நடக்கும் போது வேட்டி நுனியைக் கையால் வரிந்துகொண்டு வீதியில் போகும் அழகோ அழகு.

தொடங்கும்……

16 responses so far

Next »